Friday, April 29, 2005

30]

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 30

மூன்றாவது சிலுவைப்போரில் வெற்றி பெற்றபிறகு சுல்தான் சலாவுதீன் நெடுநாள் உயிர்வாழவில்லை. யுத்தத்தின்போது ஏற்கெனவே அவருக்கு விஷக்காய்ச்சல் கண்டிருந்தது. ஒருமாதிரி மனோபலத்தில் தாக்குப்பிடித்து யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் பெற்றிருந்தார். தாம் அதிகநாள் உயிர்வாழ மாட்டோம் என்று அவருக்குத் தெரிந்திருந்தது போலிருக்கிறது. ஜெருசலேம் சிம்மாசனத்தில் அந்த முறை அமர்ந்த நாளாக ஊரில் ஏராளமான கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் கட்ட ஆரம்பித்தார்.

வழிபாட்டிடங்கள் அவசியம்தான். ஆனால் கல்லூரிகளும் மருத்துவமனைகளும்தான் ஒரு சமூகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வல்லவை என்று சொல்லியிருக்கிறார் சலாவுதீன். யுத்தத்தில் ஒரு வெற்றி என்றால், அதன் அடையாளமாக ஒரு மசூதியாவது, தேவாலயமாவது எழுப்புவது அந்நாளைய மன்னர்களின் வழக்கம். சலாவுதீன் அந்த வெற்றிக்குப் பின் ஒரு மசூதியும் எழுப்பியதாகத் தெரியவில்லை. மாறாக இடிக்கப்பட்டிருந்த அரசுக் கட்டடங்கள் பலவற்றைச் சீரமைத்து கல்லூரிகளாகத்தான் எழுப்பினார். இந்த வகையிலும் அவர் மற்ற கலீஃபாக்கள், சுல்தான்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவராகவே இருந்திருக்கிறார்!

கொஞ்சநாள் ஓய்வெடுக்கலாம் என்று ஜெருசலேத்திலிருந்து புறப்பட்டு சிரியாவில் உள்ள டெமஸ்கஸுக்குப் (அந்நாளில் திமஷ்க்.) போனவர், அங்கேயே கி.பி. 1193-ம் ஆண்டு உயிர்நீத்தார். வயதொன்றும் அதிகமில்லை. ஐம்பத்தாறுதான்.

சலாவுதீனின் மரணம் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் நிலைகுலையச் செய்தது என்று பெரும்பாலான சரித்திர ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். இதில் மிகை ஏதுமில்லை. ஏனெனில், அன்றைய தேதியில் சிலுவைப்போர் வீரர்களுக்கு சவால் விடக்கூடிய வல்லமை பொருந்தியவராக அவர் ஒருவர்தான் இருந்தார். அச்சமூட்டுவதற்காகவே லட்சக்கணக்கான வீரர்களை ஐரோப்பாவிலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள் அப்போது. அந்தப் பெரும்படைகளைக் கண்டு மிரளாமல் எதிர்த்து நின்றவர் சலாவுதீன்.

போர்க்கள வீரம் மட்டுமல்ல காரணம். தனிவாழ்விலும் அப்பழுக்கற்ற சுல்தானாக அவர் இருந்திருக்கிறார். சுல்தான் இறந்தபிறகு அவரது சொத்து விவரங்களை ஆராய்வதற்காக ஓர் அரசுக்குழுவை நியமித்திருந்தார்கள். மன்னரின் தனிப்பட்ட வரவு செலவுக் கணக்குகள், அவர் தம் பெயரிலும் தமது உறவினர்கள் பெயரிலும் என்னென்ன அசையாச் சொத்துகள் வைத்திருக்கிறார் போன்ற தகவல்களைச் சேகரிக்கச் சென்ற அந்தக் குழு வியப்பில் மூர்ச்சையாகிப் போனது.

காரணம், எத்தனை தேடியும் மன்னரின் சொத்தாக அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது ஒரே ஒரு தினாரும் ஆறு திஹ்ரம்களும் மட்டுமே. நமது மொழியில் புரியும்படி சொல்லுவதென்றால் ஒரு ரூபாய் அறுபது காசு. இதில் மிகையே இல்லை. தமக்கென்று ஒரு பைசா கூட கடைசிவரை சேர்த்து வைக்காமலேயே வாழ்ந்திருக்கிறார் சலாவுதீன்! அவரது மனைவி உள்ளிட்ட பிற உறவினர்களுக்கு இது விஷயமாக வருத்தம் இருந்திருக்குமோ என்னவோ, ஆட்சி அதிகாரத்தை மேலாடையாகக் கூட இல்லை; ஒரு கைக்குட்டை மாதிரிதான் வைத்திருந்தார் அவர்.

சலாவுதீனின் மிகப்பெரிய சாதனையாகச் சொல்லப்படுவது, எகிப்துக்கு அவர் ஓர் அரசியல் முக்கியத்துவம் பெற்றுத் தந்ததைத்தான். மத்திய ஆசியாவின் எத்தனையோ பகுதிகள் அந்நியப் படையெடுப்புகளாலும் உள்நாட்டுக் குழப்பங்களாலும் சிதறுண்டுபோன காலகட்டத்தில் சிதறிக்கிடந்த எகிப்தை சில்லறை சேர்ப்பதுபோல ஒன்று சேர்த்து, ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து, மத்தியக் கிழக்கின் மிக முக்கியமான முஸ்லிம் சாம்ராஜ்ஜியங்களுள் ஒன்றென அதற்கொரு தனியடையாளம் பெற்றுத்தந்தவர் சலாவுதீன். பாலஸ்தீன், சிரியா வரை அந்த ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரித்து, வலுவான பாதுகாப்பு அரணாகத் தாமே முன்னின்று காத்தவர் அவர். தவிர, பாக்தாத் கலீஃபாவின் அரசுடன் எகிப்துக்கு நிரந்தரமான, நீடித்த நல்லுறவு ஏற்படவும் காரணமாக இருந்தவர்.

அவரது மரணம் எப்படி முஸ்லிம்களுக்கு மாபெரும் துயரத்தைத் தந்ததோ, அதே அளவு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஐரோப்பியர்களுக்குத் தந்ததையும் இங்கே குறிப்பிட்டுவிட வேண்டும்.

சலாவுதீன் இறந்து சரியாக இரண்டே ஆண்டுகளில் நான்காவது சிலுவைப்போருக்கான ஆயத்தங்களில் இறங்கிவிட்டது ஐரோப்பா. அப்போது போப்பாண்டவராக இருந்தவரின் பெயர் செல்ஸ்டின் 3. ‘ஒரு சரியான தலைவன் இல்லாத பிரதேசமாக இப்போது பாலஸ்தீன் இருக்கிறது. சலாவுதீனுக்குப் பிறகு அவரளவு திறமைசாலிகள் யாரும் அங்கே இன்னும் உதிக்கவில்லை. ஆகவே, தாக்குவதற்கு இதுவே சரியான தருணம்’ என்று ஐரோப்பிய மன்னர்களுக்கு அவர் கடிதம் எழுதினார்.

போப்பாண்டவர் சொல்லிவிட்டால் மறுபேச்சு பேசமுடியாது. இத்தனைக்கும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மானிய மன்னர்கள் முந்தைய சிலுவைப்போரின் இறுதிச் சமயத்தில் அவரவருக்கு ஏதோ ஓரளவில் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுதான் ஊர் திரும்பியிருந்தார்கள். ஆனால், அரசு ரீதியில் செய்துகொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் பற்றி மதகுருவான போப்பாண்டவரிடம் விளக்கிக்கொண்டிருக்க முடியாது. பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளிலெல்லாம் அரசர்கள் அளிக்கும் தீர்ப்புகளை போப்பாண்டவர்கள் மாற்றி எழுதும் வல்லமை பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்!

ஆகவே, மீண்டும் யுத்தம் ஆரம்பமானது. வேறென்ன? நேரே புறப்பட்டு பாலஸ்தீனை அடையும் நோக்கமுடன் ஒரு நெடும்பயணம். வழியில் அதே சிரியாவில் ஒரு கோட்டை முற்றுகை. இம்முறை பெய்ரூத் கோட்டை. பெய்ரூத்தை சிலுவைப் போர் வீரர்கள் கைப்பற்றிக்கொண்டதும் முஸ்லிம்களின் படை (சலாவுதீனின் வாரிசாக இந்தப் போரை முன்னின்று நடத்தியவரின் பெயர் மலிகல் ஆதில்.) ஜாஃபா என்ற இடத்திலிருந்த கிறிஸ்துவர்களின் கோட்டையை முற்றுகையிட்டு, கைப்பற்றிக்கொண்டார்கள். இந்த ஜாஃபா முற்றுகையின்போது ஏராளமான கிறிஸ்துவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிகிறது. தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு இழப்பு நேரிட்டதால் கிறிஸ்துவர்கள் உடனடியாகப் போர் நிறுத்தம் கோரினார்கள்.

சலாவுதீன் இறப்பதற்கு முன்னால் சொல்லிவிட்டுப் போனது அது. எதிரி போர் நிறுத்தத்துக்கு விருப்பம் தெரிவித்தால், எந்த நிலையிலிருந்தாலும் சம்மதித்துவிட வேண்டும்.

ஆகவே யுத்தம் நிறுத்தப்பட்டது. உண்மையில் சலாவுதீன் முன்னின்று நடத்திய அந்த மூன்றாவது சிலுவைப்போர்தான் கடைசிப் பேரழிவுப் போர். அப்புறம் நடந்த சிலுவைப்போர்களெல்லாம் விளையாட்டேபோல நடத்தப்பட்ட யுத்தங்கள்தாம். இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை! உண்மையிலேயே அப்படித்தான் நடந்திருக்கிறது.

உதாரணமாக, ஐந்தாவது சிலுவைப்போரை எடுத்துக்கொள்ளலாம். இன்னஸண்ட் 3 (Pope Innocent 3) என்னும் போப்பின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போருக்கு அடிப்படைக் காரணம் ஜெருசலேத்தைக் கைப்பற்றுவதல்ல. பணம் திரட்டுவதுதான்! முந்தைய யுத்தங்களினால் ஏற்பட்டிருந்த இழப்புகளைச் சரிக்கட்டுவதன்பொருட்டு, ஒரு சிறிய யுத்தத்தை ஆரம்பித்துவிட்டு, அதைச் சொல்லி ஐரோப்பா முழுவதும் வசூல் நடத்திக் குவித்துவிட்டார்கள்.

இந்தப் போரில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இங்கிலாந்து மன்னர் ரிச்சர்ட் தெரிவித்துவிட்டார். இன்னும் சில சிறு மன்னர்களும் இந்த ஐந்தாம் சிலுவைப்போரைப் புறக்கணிக்க (பின்னே? ஓயாமல் யுத்தம் என்றால் யாரால் முடியும்?), சாத்தியமுள்ள மன்னர்களின் உதவியுடன் யுத்தத்தை ஆரம்பிக்க ஏற்பாடு செய்தார் போப்.

ஆனால் நடந்தது மிகப்பெரிய நகைச்சுவை. ஐரோப்பாவிலிருந்து புறப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள் பாலஸ்தீனை நோக்கி முன்னேறாமல், நேரே கான்ஸ்டாண்டிநோபிளுக்குப் போய் அங்கே ஆட்சி புரிந்துகொண்டிருந்த கிரேக்க மன்னருக்கு எதிராகச் சண்டைபோட ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த கிரேக்க மன்னர், அவரது குடிபடைகள் எல்லோருமே கிறிஸ்துவர்கள்! கிறுக்குப் பிடித்து ஒரு கிறிஸ்துவ நகரின்மீதே தொடுக்கப்பட்ட இந்த யுத்தத்தைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டார் போப் இன்னஸண்ட் 3. ஆனால் நிலைமை கைவிட்டுப் போய்விட்டது. கான்ஸ்டாண்டிநோபிளைத் தாக்கிய சிலுவைப் போர் வீரர்கள், போரில் வென்றதோடு விடவில்லை. முழு நகரையும் தீவைத்துக் கொளுத்தினார்கள். தப்பியோடியவர்களை வெட்டி வீழ்த்தியும், அகப்பட்ட பெண்கள் அத்தனைபேர் மீதும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியும் வெறியாட்டம் போட்டார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு அவர்கள் சொன்ன காரணம் : “கான்ஸ்டாண்டிநோபிள்வாசிகள் சிலுவைப் போர் வீரர்களை முழு மனத்துடன் ஆதரிக்கவில்லை என்று நாங்கள் சந்தேகப்பட்டோம். அதனால்தான் தாக்கினோம்.’’

புகழ்பெற்ற கிறிஸ்துவ சரித்திர ஆய்வாளர் நிகிடாஸ் (ழிவீநீமீtணீs) என்பவர், “சலாவுதீனின் படைகள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது ஒரு கிறிஸ்துவப் பெண்ணின் மானமும் பறிபோகவில்லை. வெறிகொண்ட கிறிஸ்துவ வீரர்களுக்கு புத்திதான் மழுங்கியதென்றால் கண்களுமா இருண்டுபோயின?’’ என்று வெறுப்புற்று எழுதுகிறார்.

சிலுவையைத் தொழுவோர் மீதே நிகழ்த்தப்பட்ட இந்த ஐந்தாம் சிலுவைப்போர் இப்படியாக அபத்த முடிவை அடைந்தபிறகு, கி.பி. 1217-ல் போப் இன்னஸண்ட் 3 அடுத்த சிலுவைப்போருக்கான அழைப்பை விடுத்தார்.

இம்முறை ஐரோப்பாவின் கிழக்கு தேசங்கள் பலவற்றிலிருந்து பெரும்பான்மையான வீரர்கள் அணிதிரண்டார்கள். சுமார் மூன்று லட்சம் பேர் என்று ஒரு கணக்குச் சொல்கிறது. இரண்டிலிருந்து இரண்டே கால் லட்சம் வீரர்கள் என்று இன்னொரு கணக்கு. ஆனால் இரு தரப்புமே தவறாமல் ஒப்புக்கொள்கிற ஒரே விஷயம் இந்தப் படையில் கிழவர்கள், பெண்கள், குருடர்கள், கால் முடமானவர்களெல்லாம் இருந்தார்கள் என்பதைத்தான்!

அதாவது பெரியதொரு படையாகக் காட்டியாகவேண்டும் என்பதற்காக, அகப்பட்ட ஆட்களையெல்லாம் திரட்டிப் படையில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்கள்! கிட்டத்தட்ட காட்டுமிராண்டி யுத்தம் போல்தான் இப்போர் நடந்திருக்கிறது. எந்தப் போர் இலக்கணத்துக்குள்ளும் அடங்காமல் கொலைவெறி ஆட்டம் ஆடித் தீர்த்திருக்கிறார்கள். சலாவுதீனின் வம்சாவழியினர் பலம் குன்றியிருந்த நேரம் அது. அவரது பேரன்கள் இரண்டுபேர் சாம்ராஜ்ஜியத்தை இரண்டாகப் பிரித்துக்கொண்டு ஆண்டுகொண்டிருந்தார்கள். அவர்களால் சிலுவைப்போர் வீரர்களைத் தடுத்து நிறுத்த இயலவில்லை. ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்கள். கிறிஸ்துவர்கள் இந்தத் தாக்குதலில் கைப்பற்றிய புதிய இடங்களை விட்டுக்கொடுத்துவிட்டால், முன்னாளில் சலாவுதீன் கைப்பற்றிய கிறிஸ்துவக் கோட்டைகளை மீண்டும் அவர்களுக்கே தந்துவிடுவதாகச் சொல்லிப் பார்த்தார்கள்.

ஆனால், சிலுவைப்போர் வீரர்கள் இதற்கு உடன்படவில்லை. எகிப்து பலம் குன்றியிருக்கும் நேரத்தில் அதை நேரடியாகத் தாக்கி வெற்றி பெறுவது சுலபம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் சற்றும் எதிர்பாராவிதமாக நைல் நதியில் அப்போது வெள்ளம் பெருக்கெடுத்து, காரியத்தைக் கெடுத்தது. படைகள் தொடர்ந்து முன்னேற முடியாமல் ஆகிப்போனது. வேறு வழியின்றி, கிறிஸ்துவர்கள் ஊர் திரும்ப நினைத்தார்கள்.

ஜெருசலேத்தைக் கைப்பற்றுவது என்கிற ஆதார நோக்கமுடன் தொடங்கப்பட்டவை சிலுவைப்போர்கள். நடுவில் இந்த நோக்கம் சிலமுறை திசைமாறியிருக்கிறது. கணக்கு வழக்கே இல்லாமல் பல காலமாகத் தொடர்ந்த இந்த யுத்தங்களால் எந்தத் தரப்புக்கும் லாபம் இல்லை என்பதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம். பல ஐரோப்பிய நாடுகளின் மதவெறி, ஆள்பலம், பணபலம் என்ன என்பதை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியதுதான் சிலுவைப்போர்களால் ஆன பயன். மத்திய ஆசிய சுல்தான்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பதையும் பிற்கால கலீஃபாக்கள் செயல்திறன் அற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் கூட இந்த யுத்தங்கள் தெரியப்படுத்தியிருக்கின்றன.

ஒருவாறாக, போர்வெறி சற்று மட்டுப்பட்டு ஐரோப்பிய தேசங்கள், சொந்தக் கவலைகளில் மூழ்கத் தொடங்கிய பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடு வருடங்களில் மத்திய ஆசியா பதவிவெறி பிடித்த சுல்தான்களின் சுயலாப நடவடிக்கைகளின் மூலம் மேலும் வலிமை குன்றி, நலிவடையத் தொடங்கியிருந்தது.

தோதாக மங்கோலியர்கள் தம் படையெடுப்பை அப்போது துரிதப்படுத்தியிருந்தார்கள். எந்தக் கணமும் பாக்தாத்தை நோக்கி மங்கோலியப்படைகள் வந்துவிடலாம் என்கிற சூழ்நிலை. பாக்தாத்துக்கு வந்தால், பக்கத்து வீடுதான் பாலஸ்தீன். யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று அப்போது மூன்று தரப்பினருமே இணைந்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால்கூட செங்கிஸ்கானின் வம்சாவழியினரின் அசுரப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாது என்கிற நிலைமை.

பயத்தில் சுருண்டுகிடந்தது பாலஸ்தீன். அந்நியப் படையெடுப்பு மேகங்கள் மிகவும் கருமையாக அதன் மீது படர்ந்திருந்தன. அதுவரை ஏற்பட்டிருந்த இழப்புகளின் வலி அதைக்காட்டிலும் கொடுமையாகப் பாதித்திருந்தது வேறு விஷயம்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 6 மார்ச், 2005

No comments: