Tuesday, November 15, 2005

99] இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா?

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 99

ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்தாலும் திட்டமிட்டபடி, ஜனவரி 9_ம் தேதி பாலஸ்தீன் அதிபர் தேர்தல் நடக்கத்தான் செய்தது; மம்மூத் அப்பாஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் பிரச்னை ஏதும் வரவில்லை. ஹமாஸின் கோபம், அர்த்தமில்லாததல்ல. எங்கே மீண்டும் தமது மக்கள் ஏமாற்றப்படப் போகிறார்களோ என்கிற பதைப்பில் வந்த கோபம் அது. ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியினரும் பிற போராளி இயக்கங்களும் 'தேர்தல் முதலில் ஒழுங்காக நடக்கட்டும்; மற்றவற்றைப் பிறகு பேசிக்கொள்ளலாம்' என்று ஹமாஸ் தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்தியதன் விளைவாக, தேர்தல் நடந்தது.

வெற்றிபெற்ற கையோடு, அப்பாஸ், ஹமாஸ் உள்ளிட்ட அத்தனைப் போராளி இயக்கங்களுக்கும் ஒரு கோரிக்கை வைத்தார். தயவுசெய்து துப்பாக்கிகளைக் கீழே போடுங்கள். யுத்தத்தை நிறுத்துங்கள். இஸ்ரேலியப் படையிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவது என்னுடைய பொறுப்பு. அதேபோல், பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணுவதற்கும் நானே பொறுப்பு.

இந்தக் கோரிக்கை இஸ்ரேலுக்குப் பிடிக்கவில்லை. போராளிகளிடம் அப்பாஸ் கெஞ்சுகிறார் என்று விமர்சித்தது. கைது செய்து உள்ளே தள்ளுங்கள் என்று கத்தியது. அதுமட்டுமல்லாமல், அல் அக்ஸா தற்கொலைப் படையினர் மற்றும் ஹமாஸ் தலைவர்களுடன் அப்பாஸ் இருப்பது போன்ற பழைய புகைப்படங்களைத் தேடியெடுத்து, அப்பாஸ் தீவிரவாத இயக்கங்களுடன் வைத்திருக்கும் தொடர்பு கவலையளிக்கிறது என்று பேசினார் ஏரியல் ஷரோன். ஷரோனின் இந்தப் புதிய கவலைக்கு அமெரிக்காவிலிருந்து காலின் பாவெல் பக்கவாத்தியம் வாசித்தார்.

அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு, தீவிரவாதிகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்காதீர்கள் என்றார் அவர்.

சொல்லிவைத்தமாதிரி ஜனவரி 13_ம் தேதி காஸா முனையில் ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றது. ஆறு யூதர்கள் பலியான அந்தச் சம்பவத்தைக் காரணமாக வைத்து, ஏரியல் ஷரோன் மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 'இனி எக்காரணம் கொண்டும் பாலஸ்தீன் அத்தாரிடியுடன் பேச்சுவார்த்தை இல்லை. தீவிரவாதத்தை அப்பாஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தினாலொழிய அமைதிப்பேச்சு சாத்தியமில்லை. பாலஸ்தீன் அத்தாரிடியுடனான அத்தனை தொடர்புகளையும் அப்படி அப்படியே நிறுத்தி வைக்கிறோம்' என்று சொல்லிவிட்டார்.

இதெல்லாம் எப்பேர்ப்பட்ட நகைச்சுவை! அதிபராகத் தேர்வான மம்மூத் அப்பாஸ், இன்னும் ஒரு நாள்கூட பாராளுமன்றம் சென்று, நடவடிக்கை எதையும் தொடங்கியிருக்கவில்லை அப்போது! அதற்குள் உறவை முறித்துக்கொள்ள ஒரு சாக்கு. தான் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே, போராளி இயக்கங்களை அமைதி காக்க வேண்டுகோள் விடுத்த அப்பாஸுக்கு இன்னும் அதற்கான பதில் கூட வரவில்லை. அவரது கோரிக்கை, ஹமாஸ் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்களின் கரங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்குமா என்பது கூடச் சந்தேகமே. (அத்தனை தலைவர்களும் சிரியாவில் இருந்தார்கள். தேர்தலில் வென்றதற்கு மறுநாள் மாலை அதாவது, பத்தாம்தேதி மாலை அப்பாஸ் அறிக்கை வெளியிட்டார். பதிமூன்றாம் தேதி இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றது. ஒருவேளை இது முன்னமேயே திட்டமிடப்பட்டிருக்கலாம். அல்லது அப்பாஸின் அறிக்கைக்குப் பிறகே கூடத் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். சரியான விவரம் தெரியவில்லை.)

ஒரு வார அவகாசம் கூடத் தராமல் உறவு முறிவு என்று அறிவித்தால், என்ன அர்த்தம்? ஆனாலும் அப்பாஸ் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் உடனடியாக மேற்கொண்டார். பாலஸ்தீன் அத்தாரிடியின் காவல் துறையினரை, மொத்தமாகத் திரட்டி காஸாவுக்கு முதலில் அனுப்பினார். அங்குள்ள யூதக் குடியிருப்புகளுக்கு வலுவான காவல் ஏற்பாடுகளை முதலில் செய்துவிட்டு, போராளி இயக்கங்களின் ராக்கெட் தாக்குதலுக்குத் தடுப்பு அரண்கள் ஏற்படுத்தி, ராக்கெட் எதிர்ப்பு பீரங்கிகளையும் அங்கே கொண்டு நிறுத்தச் சொன்னார்.

இவற்றைச் செய்த கையோடு போராளி இயக்கங்களின் தலைவர்களுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். தயவுசெய்து அமைதி காக்கவேண்டும். எனக்குச் சற்று அவகாசம் கொடுங்கள். ஏதாவது நல்லது நடக்குமா என்றுதான் நானும் பார்க்கிறேன். உங்கள் ஒத்துழைப்புடன்தான் எதுவுமே சாத்தியம் என்று கெஞ்சினார். இஸ்ரேல் என்ன கிண்டல் செய்தாலும், எத்தனை அவமானப்படுத்தினாலும் இயக்கங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பாலஸ்தீனில் அமைதி இல்லை என்பது அப்பாஸுக்குத் தெரியும்.

அப்பாஸின் இந்த முயற்சிகள் ஓரளவு பலனளித்தன என்றுதான் சொல்லவேண்டும். எந்த அளவுப் பலன் என்றால், ஏரியல் ஷரோன் கொஞ்சம் இறங்கிவந்து, 'ஆமாம், நீங்கள் அமைதிக்கான முயற்சிகளை எடுக்கத்தான் செய்கிறீர்கள், உங்களுடன் உட்கார்ந்து பேசலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்' என்று சொல்லும் அளவுக்கு.

2005 பிப்ரவரி 8_ம் தேதி எகிப்தில் உள்ள ஷாம் அல் ஷேக் (Sharm al Sheikh) என்கிற இடத்தில் அந்தப் பிரசித்தி பெற்ற அமைதி மாநாடு நடைபெற்றது. எகிப்து அதிபர் ஹோஸினி முபாரக், ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் ஏரியல் ஷரோனும் மம்மூத் அப்பாஸும் கைகுலுக்கிக்கொண்டு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

இதனை அமைதி ஒப்பந்தம் என்று சொல்வதைக் காட்டிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். பாலஸ்தீன் தரப்பில், அனைத்துப் போராளி இயக்கங்களும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் என்று அப்பாஸும், அதே போல, பாலஸ்தீனிய இலக்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை இனி தாக்குதல் நடத்தாது என்று ஏரியல் ஷரோனும், ஒருவருக்கொருவர் உறுதிமொழி அளித்தார்கள்.

இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படக் காரணமாக இருந்தவர், எகிப்து அதிபர் ஹோஸினி முபாரக். மறுநாளே உலகெங்கும் உள்ள நாளிதழ்கள் இந்தச் சம்பவத்துக்கு சிறப்பிடம் கொடுத்து, முதல் பக்கத்தில் பெரிய அளவில் பிரசுரித்து சந்தோஷப்பட்டன. ஒரு வழியாக, பாலஸ்தீனுக்கு அமைதி வந்துவிட்டது என்று இனிப்பு கொடுத்துக் கொண்டாடினார்கள். ஏரியல் ஷரோனும் அப்பாஸும் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்துவிட்டு, முபாரக்குடன் கைகுலுக்கிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள்.

உண்மையில் நடந்தது என்னவென்பது, கடந்த எட்டு மாதகால சம்பவங்களைக் கவனமாகப் பின்பற்றி வரும் அனைவருக்குமே தெரியும்!

பாலஸ்தீன் போன்ற சிக்கல் மிக்க பிராந்தியத்தில், போராளி இயக்கங்களைக் கலந்தாலோசிக்காமல் அரசாங்கங்கள் எடுக்கும் எந்த முடிவாலும் பிரயோஜனமில்லை என்பதுதான், அத்தேசத்தின் கடந்த ஐம்பதாண்டுகால சரித்திரம் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற அமைப்புகளைத் தீவிரவாத இயக்கங்கள் என்று இடதுகையால் ஒதுக்கிவிட்டு, நாமாக ஒரு முடிவெடுக்கலாம் என்று நினைப்பது, உண்மையிலேயே முட்டாள்தனமானது. ஏனென்றால், அந்த அமைப்புகளுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு அங்கே ஆளும் வர்க்கத்தினருக்குக் கிடையாது என்பதை, நம்பமுடியாவிட்டாலும் ஜீரணித்துத்தான் ஆகவேண்டும்.

மேற்படி போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தவுடனேயே இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹமாஸ், 'இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய ராணுவமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; நாங்கள் எதற்காக இதைப் பொருட்படுத்த வேண்டும்?' என்று கேட்டது.

ஏரியல் ஷரோன் இதனை உடனடியாக மறுத்தாலும் பின்னர் நடந்த சம்பவங்கள், இதைத்தான் உண்மை என்று நிரூபித்தன. ஒரு பக்கம் இஸ்ரேல் அரசு எந்தத் தாக்குதல் நடவடிக்கையும் நடைபெறவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, காஸாவில் சில குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்படும். இங்கே மேற்குக்கரைப் பகுதியில், வழியோடு போகும் யாராவது நாலு பாலஸ்தீனியர்களை, இழுத்து வைத்துக் கட்டி உதைத்துக் கைது செய்துகொண்டு போய்விடுவார்கள். அந்தச் செய்தி வந்த மறுகணமே இந்தச் செய்தியும் சேர்ந்து வரும்!

இந்த அபத்தங்கள் தலைவர்களுக்குத்தான் உறைக்கவில்லையே தவிர, ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே இப்படித்தான் நடக்கும் என்று ஹமாஸ் சொல்லிவிட்டது!

ஹாஸன் யூஸுஃப் என்கிற ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர், அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், 'அப்பாஸின் போர் நிறுத்த அமைதி நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கவில்லை. கூடியவரை ஒத்துழைப்பு அளிக்கத்தான் பார்ப்போம். ஆனால், பாலஸ்தீனியர்கள் மீது எங்கெல்லாம் தாக்குதல் நடக்கிறதோ, அங்கெல்லாம் ஹமாஸ் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தத் தயங்காது' என்று சொன்னார்.

அப்படித்தான் தொடங்கியது. மூன்று மாதங்கள். மே, ஜூன் மாதங்களில் 'புதிய ஏற்பாடு'களெல்லாம் ஒதுக்கிவைக்கப்பட்டு, பழையபடி இருதரப்பிலும் அடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். பழையபடியே, ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு, பழையபடியே ஆக்கிரமிப்புகள் செய்துகொண்டு, பழையபடியே தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தி, பழையபடியே பஸ் குண்டுகள் வைத்து..

அராஃபத் இறந்தால் அமைதி என்று சொன்ன இஸ்ரேல் இப்போது என்ன சொல்கிறது?

இதைத்தான் உலகம் கேட்டது. இஸ்ரேலின் உயிர்த்தோழனான அமெரிக்காவே கேட்டது. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கேட்டது. அத்தனை முஸ்லிம் தேசங்களும் கேட்டன. அமைதிக்காக மாநாடு கூட்டி டிபன் காபி கொடுத்து, கைகுலுக்கி அனுப்பிவைத்த ஹோஸினி முபாரக் கேட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்ரேலில் நடக்கப்போகிற பொதுத்தேர்தல் கேட்டுக்கொண்டிருக்கும் மௌனக் கேள்வியும் இதுதான். என்ன செய்யப்போகிறார்கள்?

ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். ஆனால், நிரந்தரத் தீர்வுக்கெல்லாம் இப்போது சாத்தியமில்லை. அதாவது விருப்பமில்லை. ஆகவே, தாற்காலிகமாக அமைதியைக் கொண்டுவருவதற்கு ஷரோன் ஓர் உபாயம் செய்தார்.

பழைய ஒப்பந்தங்களை எடுத்து, தூசி தட்டிப் படித்துப் பார்த்தார். தனக்கு உடனடியாக நல்லபெயர் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய காரியம் எதுவாக இருக்கும் என்று யோசித்தார். வேறு வழியில்லை. பாலஸ்தீன் அத்தாரிடியின் அதிகார எல்லைக்குட்பட்ட இடங்களில் இருக்கும் யூதக் குடியிருப்புகளையெல்லாம் காலி செய்துவிடுகிறோம் என்று அறிவித்துவிட்டு, வேலையை ஆரம்பித்தார்.

அபாரமான முடிவுதான். அமைதிக்கான மிகப்பெரிய முயற்சியும் கூட. சந்தேகமே இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தச் செய்தியை அடிக்கடி செய்தித்தாள்களில் படித்துக்கொண்டும் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டும் இருந்திருப்பீர்கள். இந்தக் காலகட்டத்தில், பாலஸ்தீனில் போராளி இயக்கங்களின் தாக்குதல் நடவடிக்கைகளும் கணிசமாகக் குறைந்திருப்பதையும் கவனித்திருக்கலாம்.

திடீரென்று, இஸ்ரேல் இப்படியொரு நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன? பல்லாண்டுகளாக ஓரிடத்தில் வசித்துக்கொண்டிருக்கும் தமது மக்களை, அது அத்துமீறிய குடியேற்றமே என்றபோதிலும், அப்படிச் செய்ததும் இஸ்ரேல் அரசுதான் என்ற போதிலும் - வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஊரை காலிபண்ணிக்கொண்டு போகச் சொல்லுமளவுக்கு, இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா? உண்மையிலேயே அமைதியை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டார்களா? சுதந்திர பாலஸ்தீன் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறதா? இத்தனை ஆண்டுகாலப் போராட்டமெல்லாம் ஒரு முடிவுக்கு வரப்போகிறதா?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 நவம்பர், 2005

No comments: