Sunday, October 09, 2005

92] புஷ்ஷின் சாய்ஸ், மம்மூத் அப்பாஸ்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 92

கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தை முயற்சி அடைந்த தோல்வி, பில் க்ளிண்டனுக்குத் தனிப்பட்ட முறையில் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்கியது. அவரது அரசியல் எதிரியாக, எப்போதும் எதுடா சாக்கு என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு, விழிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ஜார்ஜ் புஷ், இந்தப் பேச்சுவார்த்தைத் தோல்வியை ஒரு மிகப்பெரிய சரிவாக முன்வைத்து, அமெரிக்காவெங்கும் க்ளிண்டனுக்கு எதிரான அதிருப்தி அலையை உருவாக்குவதில், மிகவும் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.

வேறு பல காரணங்களுக்காகவும் க்ளிண்டனின் மீதிருந்த மதிப்பு சரியத் தொடங்கியிருந்த நேரம். தோதாக, ஒரு மிக முக்கியமான சர்வதேசப் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு, உருப்படியான தீர்வு எதுவும் காண முடியாமல் போனது, மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கைக் கணிசமாகக் குறைக்கும் என்று புஷ் குற்றம் சாட்டினார். தான் பதவிக்கு வந்தால், கண்டிப்பாக பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு சுமுகத் தீர்வு காணமுடியும் என்று அடித்துச் சொன்னார்.

ஆனால், பெரும்பாலான அரசியல் வல்லுநர்கள், பாலஸ்தீன் விஷயத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கான நேரம் கூடிவரவில்லை என்றுதான் அப்போது சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிரச்னையை முழுமையாக யாருமே புரிந்துகொள்ளவில்லை என்று திரும்பத்திரும்ப எழுதியும் பேசியும் வந்தார்கள். புஷ், அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. கண்டிப்பாகத் தன்னால் ஒரு சரியான தீர்வை முன்வைக்க முடியும் என்று அடித்துச் சொன்னார்.

அது என்ன தீர்வு?

அதையெல்லாம் ஜெயித்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான், உண்மையில் அவர் அப்போது நினைத்தார். வாக்குறுதிகள் அளிப்பதில் பிரச்னை என்ன? தாராளமாக என்ன வேண்டுமானாலும் அள்ளி வழங்கத் தடையே இல்லை. ஆட்சிக்கு வந்தபின் நிதானமாகப் பார்த்துக்கொண்டால் போகிறது.

ஆனால், புஷ்ஷின் ஆலோசகர்கள், மற்ற விஷயங்கள் போல் பாலஸ்தீன் பிரச்னையில் அலட்சியம் காட்டவேண்டாம் என்று திரும்பத்திரும்ப வலியுறுத்தியதன் விளைவாக, பாலஸ்தீன் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் திட்டம் ஒன்றை புஷ் வகுத்தார். முன்னதாக, அமெரிக்கத் தரப்பில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு, உதவாமல் கிடந்த ஒன்றிரண்டு பழைய திட்டங்களை (டெனட் ப்ளான் என்று அழைக்கப்பட்ட ஒரு திட்டம். மிட்ஷெல் ரிப்போர்ட் என்றொரு அறிக்கை போன்றவை. இவை அனைத்துமே முன்னர் பார்த்த தாற்காலிகத் தீர்வுகளிலேயே, சில மாற்றங்களை மட்டும் சொல்லும் திட்டங்கள். குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏதும் இவற்றில் கிடையாது.) தூசு தட்டி எடுத்து மறுபரிசீலனை செய்து பார்த்து, எதுவுமே நல்ல விளைவுகளைத் தரக்கூடியவை அல்ல என்று உறுதி செய்து தூக்கிப் போட்டுவிட்டுத்தான், புஷ் தனது திட்டத்துக்கு ஒரு வடிவம் கொடுத்தார்.

தனது திட்டம் என்னவென்பதை முதலில் சொல்லாமல், 2002-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பாலஸ்தீன் மக்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டார். 'என்னிடம் ஒரு திட்டம் தயார். கண்டிப்பாக உங்கள் பிரச்னையைத் தீர்க்கக்கூடிய திட்டம் இது. அரசியல் லாபங்கள் எதையும் பாராமல் முழுக்க முழுக்கப் பாலஸ்தீன் அமைதி என்பதை மட்டுமே நோக்கமாக வைத்து வரையப்பட்ட திட்டம். ஆனால், இந்தத் திட்டம் என்னவென்பதை என்னால் யாசர் அராஃபத்துடன் உட்கார்ந்து பேசமுடியாது. தீவிரவாதத்தின் நிழல் கூடப் படியாத ஒருவரை, உங்கள் தலைவராக முதலில் தேர்ந்தெடுத்தீர்களென்றால் அவருடன் உட்கார்ந்து நான் பேசுகிறேன். அவர் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருக்கவேண்டும். என்னுடைய சாய்ஸ், மம்மூத் அப்பாஸ். என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.

இந்தப் பகிரங்க வேண்டுகோளெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனுடன் கலந்து பேசிவிட்டுச் செய்யப்பட்டதுதான் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அராஃபத் அப்போது வீட்டுச் சிறையில் இருந்தார். எப்போது அவர் விடுவிக்கப்படுவார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் பதவி விலகித்தான் ஆகவேண்டும் என்று, ஏற்கெனவே இஸ்ரேல் மிகத் தீவிரமாக வலியுறுத்திக்கொண்டிருந்தது. மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தினசரி நூற்றுக்கணக்கான பாலஸ்தீன் போராளிகள் கைதுசெய்யப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நாடெங்கும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த அரேபியர் பகுதிகளையும் நிர்மூலப்படுத்திவிட்டுத்தான் இஸ்ரேல் ஓயும் என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, அமெரிக்க அதிபர் வெளியிட்ட இந்தப் 'புதிய திட்ட' அறிவிப்பு, பாலஸ்தீனியர்கள் மத்தியில் சட்டென்று ஓர் ஆர்வத்தை உண்டாக்கியது.

ஒருவேளை, உருப்படியாக ஏதேனும் இருக்குமோ?

ஆனால் அராஃபத், பதவி விலகினால்தான் வாயையே திறப்பேன் என்கிறாரே? இது உண்மையா அல்லது அராஃபத்தை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் சதியா?

இது ஒரு சந்தேகம். இன்னொரு சந்தேகம், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குத் தொடர்ந்து ஆளாகிவந்த யாசர் அராஃபத், உண்மையிலேயே பாலஸ்தீன் மக்களின் நலனை நினைப்பவரா, அல்லது - இஸ்ரேல் சொல்வதுபோல - பதவி ஆசை உள்ளவர்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு.

உண்மையில், அராஃபத்துக்கும் அப்போது வேறு வழியில்லை என்றுதான் சொல்லவேண்டும். அல் அக்ஸா மசூதி மீட்புக்கான தற்கொலைப் படைப்பிரிவு ஒன்று ஆயுதங்கள் வாங்குவதற்காக, இருபதாயிரம் டாலர் தொகையை, அராஃபத் வழங்கியதற்கான ஆதாரங்கள், தன்னிடம் இருப்பதாக அப்போது இஸ்ரேல் அறிவித்தது. அராஃபத் தாமாக முன்வந்து அதை ஒப்புக்கொள்ளாவிட்டால், மக்கள் மத்தியில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தயார் என்றும் ஷரோன் அறிவித்தார்.

நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கவே, வேறு வழியில்லாமல் அராஃபத், மம்மூத் அப்பாஸை பாலஸ்தீன் அத்தாரிடியின் பிரதமராக அறிவிக்க வேண்டிவந்தது. இது நடந்தது 2003-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி.

அமெரிக்கா இதை தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதியது. ஜார்ஜ் புஷ் உடனடியாக மம்மூத் அப்பாஸை வாஷிங்டனுக்கு அழைத்தார். மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாக, சர்வதேச மீடியா முன் தெரிவித்தார்.

ஜூலை 25-ம் தேதி மம்மூத் அப்பாஸ் வாஷிங்டனுக்குப் போனார். புஷ்ஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு நாள் இடைவெளியில் புஷ், ஏரியல் ஷரோனை அழைத்து 29-ம் தேதி பேசினார்.

இரு தலைவர்களுடன் தனித்தனிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு, அனைவரும் சேர்ந்து பேசுவதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்தார். தனது 'ரோட் மேப்'பை முன்வைத்துப் பேச்சுவார்த்தையை புஷ் தொடங்கினார்.

பாலஸ்தீன் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு ஏற்பட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வரைந்தளித்த 'ரோட் மேப்' (Road Map), மூன்று கட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்தில், சாத்தியமாகிவிடக்கூடிய திட்டம் அல்ல அது. பொறுமையாக, நிதானமாக, அக்கறையுடன் ஏற்றுப் பரிசீலிக்கும் பட்சத்தில், நீண்டநாள் நோக்கில் நிரந்தர அமைதிக்கான சாத்தியங்களை, அது அவசியம் வழங்கும் என்று ஜார்ஜ் புஷ் சொன்னார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமான ஜார்ஜ் புஷ்ஷின் அந்த 'ரோட் மேப்' குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஜார்ஜ் புஷ்ஷின் திட்டம், முன்பே சொன்னதுபோல், மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்பட வேண்டியது. இஸ்ரேல் – பாலஸ்தீன் என்கிற இரு தனித்தனி தேசங்களுக்கான அவசியத்தையும் சாத்தியத்தையும் முன்வைத்து வரையப்பட்டது. 'ஒவ்வொரு கட்டப் பணியையும் ஒழுங்காகச் செயல்படுத்துகிற பட்சத்தில், 2005-ம் ஆண்டுக்குள் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டுவிடலாம்' என்று புஷ் சொன்னார்.

இது 2005-ம் ஆண்டு. கிட்டத்தட்ட முடியப்போகிற ஆண்டும் கூட. இப்போதும் பாலஸ்தீன் பிரச்னை இழுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை மனத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை அணுகுவது நல்லது:

முதல் கட்டம் : தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, பாலஸ்தீன் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பது, உபயோகமான புதிய அமைப்புகளை நிறுவிப் பணிகளைத் துரிதப்படுத்துவது.

இதில் பாலஸ்தீன் அத்தாரிடியின் பொறுப்புகள் இவை:

தீவிரவாதத்தை எல்லா வகையிலும் தடுத்து நிறுத்துவது. அதற்கான வெளிப்படையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்ய, அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் திட்டமிட்ட, வெளிப்படையான செயல்பாடு தேவை.

புதுப்பிக்கப்பட்ட பாலஸ்தீன் பாதுகாப்புப் படையினரும் இஸ்ரேலிய ராணுவமும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

பாலஸ்தீன் என்கிற தேசத்தை உருவாக்குவதற்கு அடிப்படைத் தேவையான அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரதியை, உடனடியாக உருவாக்க வேண்டும். (கண்டிப்பாக ஜனநாயக தேசமாக மட்டுமே அது அமையும்.)

புனரமைப்புக்கான பணிகளைத் திறமையாகவும் துரிதமாகவும் செய்யக்கூடிய புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும்.

அதிகார மாற்றங்களுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்படவேண்டும். சட்டச் சீர்திருத்தங்கள் தேவைப்பட்டால் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும்.

இஸ்ரேல் அரசின் பொறுப்புகள் இவை :

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புகள், குடியிருப்புகளை இடிப்பது போன்ற காரியங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

செப்டம்பர் 28, 2000-ம் ஆண்டு தொடங்கி, நிறுவப்பட்ட அத்துமீறிய குடியிருப்புகளை படிப்படியாகக் காலி செய்து, அங்கே குடியமர்த்தப்பட்ட யூதர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.

பாலஸ்தீன் அதிகாரிகள், அமைச்சர்கள், இஸ்ரேலுக்குள் சுலபமாக வந்து போக, அனுமதி வழங்க வேண்டும்.

மனித உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில், நிலைமை சீராக உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மார்ச் 2001-க்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட, அத்துமீறிய யூதக் குடியிருப்புகளை உடனடியாக நீக்க வேண்டும்.

குடியேற்றம் தொடர்பான அத்தனை நடவடிக்கைகளையும், அப்படி அப்படியே நிறுத்திவிட வேண்டும். அரபுப் பிரதேசங்களில் புதிய யூதக் குடியேற்றங்கள் அமைப்பதோ, இருக்கும் குடியேற்றப் பகுதிகளில் அதிக மக்களைச் சேர்ப்பதோ, அவர்களது இருப்பைச் சட்டபூர்வமாக்க முயற்சிகள் மேற்கொள்வதோ கூடாது.

இவை சரியாக நடைபெறுகிற பட்சத்தில், பாலஸ்தீனின் அண்டை நாடுகளான எகிப்து மற்றும் ஜோர்டனுடன் இணைந்து, பாதுகாப்புப் பணிகளை அமெரிக்க ராணுவம் முன்வந்து ஏற்றுக்கொள்ளும்.

பாலஸ்தீன் தீவிரவாதிகளுக்குப் பிற அரபு தேசங்கள் வழங்கி வரும் ஆதரவு, முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். அமைதிக்கான விருப்பம் உள்ள அத்தனை தேசங்களும் இதனை மனமுவந்து செய்யத்தான் வேண்டும்.

புதிய தேசமாக உருக்கொள்ளப்போகிற பாலஸ்தீனின் தொழில் வளர்ச்சிக்காகத் தனியார்துறை ஊக்கப்படுத்தப்படும். இதற்கு சர்வதேச அளவில் நன்கொடை திரட்டப்பட வேண்டும்.

இதுதான் ஜார்ஜ் புஷ்ஷின் 'ரோட் மேப்' விவரிக்கும் முதல் கட்ட நடவடிக்கைகள். இன்னும் இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. அவை அடுத்த இதழில்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 9 அக்டோபர், 2005

No comments: