Friday, July 22, 2005

69] பாலஸ்தீன் விடுதலை இயக்கம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 69

பாலஸ்தீன் விடுதலைக்காக யாசர் அராஃபத் ஆரம்பித்த போராட்டங்களுக்குள் நுழைவதற்கு முன்னால் பி.எல்.ஓ.வைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் அவசியமாகிறது. ஏனெனில், சூயஸ் கால்வாய் விவகாரத்தை பி.எல்.ஓ. மிகவும் நுணுக்கமாக கவனித்து ஆராய்ந்ததற்குப் பிறகுதான் பாலஸ்தீனுக்கான போராட்டம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வடிவம் பெறத் தொடங்கியது. பி.எல்.ஓ. வடிவமைத்த அந்தப் போராட்டப் பாதையைத்தான் யாசர் அராஃபத் வேண்டிய அளவுக்குத் திருத்தி அமைத்து, போராட்டத்தைத் துரிதப்படுத்தினார். ஆகவே, இப்போது பி.எல்.ஓ.

பி.எல்.ஓ. என்கிற அமைப்பு 1964-ம் வருடம் ஜூன் மாதம் 2-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. பாலஸ்தீன் தேசிய கவுன்சில் (Palestinian National Council PNC) என்கிற அமைப்பின் அரசியல் பிரிவுதான் பி.எல்.ஓ. என்கிற பாலஸ்தீன் விடுதலை இயக்கம்.

இந்த பாலஸ்தீன் தேசிய கவுன்சில் என்கிற அமைப்பு, பாலஸ்தீனுக்கு வெளியே பல நாடுகளில் தஞ்சம் புகுந்து வசித்து வந்த பாலஸ்தீனியர்களால் உருவாக்கப்பட்டது. தங்களால் பாலஸ்தீனுக்குள் நுழைந்து போராட முடியாத காரணத்தால்தான் பி.எல்.ஓ.வை அவர்கள் தோற்றுவித்தார்கள். வாய்வார்த்தைக்கு 'அரசியல் பிரிவு' என்று சொல்லப்பட்டாலும், பி.எல்.ஓ. முழுக்கமுழுக்க ஒரு ராணுவ அமைப்புத்தான். பின்னால் இதற்கே தனியானதொரு அரசியல் பிரிவும் உண்டானது வேறு விஷயம்!

பாலஸ்தீன் தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் மே மாதம் 1964-ம் ஆண்டு ஜெருசலேத்தில் நடைபெற்றது. கவுன்சிலில் அப்போது மொத்தம் 422 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஜோர்டான், வெஸ்ட் பேங்க், கத்தார், ஈராக், சிரியா, குவைத், எகிப்து, லிபியா, அல்ஜீரியா மற்றும் காஸா பகுதிகளிலிருந்து இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அத்தனை பேருமே அடிப்படையில் பாலஸ்தீனியர்கள். சந்தர்ப்பவசத்தால் வெளிநாடுகளில் அகதிகளாக வசிக்க நேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதே கூட்டத்தில்தான் பி.எல்.ஓ.வைத் தோற்றுவித்ததும், அகமது அல் ஷக்ரி (Ahmed al shuquiry) என்பவரை அதன் தலைவராக நியமித்ததும் நிகழ்ந்தது.

இந்த அகமது அல் ஷக்ரி, லெபனானைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு பாலஸ்தீனியர். தாய் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெருசலேம் நகரில் சட்டம் படித்துவிட்டு ஐக்கிய நாடுகளுக்கான சிரியாவின் பிரதிநிதியாக 1949-லிருந்து 51 வரை பணியாற்றியவர். பிறகு அரபு லீகின் துணைச் செயலாளராகச் சில காலம் பணிபுரிந்துவிட்டு, ஐ.நா.வுக்கான சவுதி அரேபியாவின் தூதராக 1957-லிருந்து 62 வரை வேலை பார்த்திருக்கிறார். பெரும்பாலான அரபு தேசங்கள், ஷக்ரி தங்களுக்காகப் பணியாற்ற மாட்டாரா என்று ஏங்கும் அளவுக்கு அக்காலத்தில் அரேபிய தேசங்களின் மதிப்புக்குரிய அரசியல் வல்லுநராக விளங்கியவர் இவர்.

ஆகவே, பி.எல்.ஓ. தொடங்கப்பட்டபோது, அதன் தலைவராக இருக்கச் சரியான நபர் ஷக்ரிதான் என்று தீர்மானித்து அவரைக் கொண்டு வந்தார்கள்.

ஷக்ரி, பதவியேற்றவுடன் செய்த முதல் காரியம், பி.எல்.ஓ.வுக்கான முந்நூறு பேர் கொண்ட முதல்நிலை ஆட்சிக்குழு ஒன்றை அமைத்ததுதான். பிறகு, பதினைந்து பேர் கொண்ட செயற்குழு ஒன்றை அமைத்து, அதற்கு பாலஸ்தீன் தேசிய கவுன்சிலில் இருந்தே ஆள்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். மேற்சொன்ன முந்நூறு பேரும் ஓட்டுப் போட்டு, தேசிய கவுன்சில் உறுப்பினர்களான 422 பேரிலிருந்து 15 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஏற்பாடு.

பி.எல்.ஓ.வே ஒரு நிழல் ராணுவ அமைப்புத்தான் என்றபோதும், நிழலுக்குள் வெளிச்சமாக பி.எல்.ஏ என்று தனக்கென ஒரு தனி ராணுவப் பிரிவையும் பி.எல்.ஓ. ஏற்படுத்திக் கொண்டது.

எப்படி பல்வேறு அரசியல் சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் இணைந்து பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தைத் தோற்றுவித்தார்களோ, அதேபோல, பல்வேறு போராளிக் குழுக்களை ஒருங்கிணைத்தே பி.எல்.ஏ. என்கிற Palestine Liberation Army தோற்றுவிக்கப்பட்டது. அந்தந்தக் குழுக்களின் தனிப்பட்ட நோக்கமும் செயல்பாடுகளும் என்ன மாதிரியாக இருந்தாலும் 'அரபு தேசியம்' என்கிற கருத்தாக்கத்திலும் பாலஸ்தீனை விடுவிப்பது என்கிற நோக்கத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனையாக இருந்தது.

பி.எல்.ஓ.வின் தோற்றமும் ஆரம்ப வேகமும் பெரும்பாலான பாலஸ்தீனியர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. எடுத்த உடனேயே துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவர்கள் ஓடவில்லை. மாறாக, இஸ்ரேலுக்கு வெளியே அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய மக்கள் அத்தனை பேரையும் நேரில் சந்தித்துப் பேசினார்கள். இழந்த பாலஸ்தீனைப் போராடித்தான் பெறவேண்டும் என்பதையும் போராட்டத்துக்கு மக்கள் எந்தெந்த வகையிலெல்லாம் பங்களிக்கலாம் என்பதையும் விளக்கிச் சொன்னார்கள்.

பி.எல்.ஓ.வின் இந்த மக்கள் சந்திப்பு ரகசியத் திட்டம், மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கத் தொடங்கியது.

பெரும்பாலான பாலஸ்தீனிய இளைஞர்கள், உடனடியாகத் தங்களை பி.எல்.ஓ.வுடன் இணைத்துக்கொண்டார்கள். ஆயுதப் பயிற்சி உள்ள அத்தனை பேரும் பி.எல்.ஓ.வின் ராணுவத்தில் சேரத் தொடங்கினார்கள். அடிப்படைப் பயிற்சி இருந்தாலே போதும் என்று பி.எல்.ஏ. நினைத்தது. மேல் பயிற்சிகளைத் தாங்களே தர முடியும் என்று கருதி, துப்பாக்கி தூக்கத் தெரிந்த அத்தனை பேரையும் தங்கள் படையில் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இப்படி இணைந்த இளைஞர்கள் அத்தனை பேரும் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு எகிப்து, லெபனான், சிரியா போன்ற தேசங்களில் இருந்த பி.எல்.ஓ.வின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் துப்பாக்கி சுடுதல், குண்டு எறிதல் போன்ற பாடங்கள் கற்றுத்தரப்பட்டன.

இந்தப் பயிற்சிகளுக்கு உலகெங்கிலுமிருந்து, பல்வேறு விடுதலை இயக்கங்களின் தலைவர்களே நேரில் வந்திருந்து வகுப்பெடுத்தார்கள்.

இதற்கெல்லாம் தேவையான நிதியைத் திரட்ட தனியே ஒரு குழு அமைக்கப்பட்டது. பாலஸ்தீன் மக்களின் துயர் துடைப்பதற்காக நிதி சேகரிக்கப் புறப்பட்ட அந்தக் குழுவினர், மத்திய ஆசியா முழுவதும் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி நிதி சேகரித்தார்கள். பல தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் ஏராளமான நிதி அளித்தார்கள் என்பது உண்மையே என்றபோதும் பொதுமக்கள் அளித்த நிதிதான் பி.எல்.ஓ.வினரால் மிக முக்கியமாகக் கருதப்பட்டது.

தீவிரமாக, மிகத் தீவிரமாக இந்தப் பணிகள் நடைபெறத் தொடங்கியதும் 1968-ம் ஆண்டு பாலஸ்தீன் தேசிய கவுன்சில் தன்னுடைய முதல் பகிரங்க அறிக்கையை வெளியிட்டது. கிட்டத்தட்ட ஓர் அரசாங்க உத்தரவு போலவே காணப்பட்ட அந்த அறிக்கைதான், இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டம் குறித்த முதல் தகவல் அறிக்கை என்று சொல்லலாம்.

மிக நீண்ட, விவரமான, ஏராளமான பின்னிணைப்புகள் கொண்ட நூற்றுக்கணக்கான பக்கங்கள் உள்ள அந்த அறிக்கையின் பல பத்திகளில் 'இஸ்ரேல் ஓர் ஒழிக்கப்பட வேண்டிய தேசம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (பின்னால் 1993-ல் ஓஸ்லோ உடன்படிக்கை சமயத்தில் இந்தப் பத்திகளை வாபஸ் பெறுவதாக யாசர் அராஃபத் அறிவித்தது பிறகு வரும்.)

இதுதான் ஆரம்பம். இங்கிருந்துதான் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிரான பாலஸ்தீன் விடுதலைப் படையினரின் நேரடித் தாக்குதல்கள் ஆரம்பமாகின்றன.

பி.எல்.ஓ.வுக்கு அப்போதெல்லாம் கெரில்லாத் தாக்குதல் முறை தெரியாது. பரிச்சயம் கிடையாது. எங்கோ தொலைதூர குவைத்தில் ரகசிய அறை எடுத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த யாசர் அராஃபத்துக்குத்தான் கெரில்லா தாக்குதல் தெரியும். அராஃபத் பி.எல்.ஓ.வின் தலைவரான பிறகுதான் அத்தனைபேருக்கும் ஒளிந்திருந்து தாக்கும் கலை பயிற்றுவிக்கப்பட்டது. அதுவரை, நேரடித் தாக்குதலில்தான் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

நேரடித் தாக்குதல் என்றால் என்ன?

முதலில் ஓர் இலக்கை நிர்ணயிப்பார்கள். உதாரணத்துக்கு, டெல் அவிவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன். இலக்கு முடிவானதும் ஒரு பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அங்கே அனுப்புவார்கள். டெல் அவிவுக்கு அவர்கள் போய்ச் சேர்ந்ததும் 'நலமாக வந்து சேர்ந்தோம்' என்று யார் மூலமாகவாவது தகவல் அனுப்புவார்கள். இந்தத் தகவல் வந்ததும் இன்னொரு குழுவினர் மூலம் தாக்குதலுக்குப் போனவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் ரகசியமாக அனுப்பிவைக்கப்படும். பெரும்பாலும் சரக்கு லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். வாழைத் தார்கள், கோதுமை மூட்டைகளுக்கு அடியில் படுத்துக்கொண்டு துப்பாக்கிகள் தனியே பயணம் செய்து உரியவர்களிடம் வந்து சேரும்.

அதன்பிறகு ஒரு நேரம் குறித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எதிரே பதுங்கி நின்றுகொண்டு சுட ஆரம்பிப்பார்கள். நான்கைந்து காவலர்கள் இறந்ததும் உள்ளே போவார்கள். தேவைப்பட்டால் அங்கும் தாக்குதல் தொடரும். இல்லாவிட்டால் அங்கிருக்கும் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி வண்டி ஏறிவிடுவார்கள்.

குண்டு வைப்பதென்றாலும் இதே நடைமுறைதான். முதல் நாள் இரவே குறிப்பிட்ட இடத்துக்குப் போய் வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு, விடிந்ததும் குண்டு வைத்துவிட்டு பஸ் பிடித்துவிடுவார்கள். (மனித வெடிகுண்டுகள் புழக்கத்துக்கு வராத காலம் அது.)

மறுநாள் செய்தித்தாளில் விஷயத்தைப் பார்த்து, உறுதி செய்துகொண்டபிறகு கொஞ்சம் போல் கொண்டாடி விட்டு, அடுத்த வேலையில் ஈடுபடத் தொடங்குவார்கள்.

இஸ்ரேல் ராணுவம், பாதுகாப்புப் படை இரண்டும்தான் பி.எல்.ஓ.வினரின் பிரதானமான தாக்குதல் களமாக இருந்தது. சில சமயங்களில் பொதுமக்கள் மீதும் வன்முறை ஏவப்பட்டிருக்கிறது. 1968-ம் ஆண்டு டிசம்பரில் காஸா பகுதியில் ஒரு பேருந்தில் வெடித்த குண்டுதான் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும். (23 பேர் பலி.) அடுத்தடுத்து ஒரு நாள் தவறாமல் எங்காவது குண்டு வெடித்துக்கொண்டேதான் இருந்தது.

இஸ்ரேல் என்ன தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் பி.எல்.ஓ.வினரின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் அது ஒரு நிரந்தரத் தலைவலி என்று ஆகிப்போனது.

ஆகவே, இஸ்ரேல் அரசு பி.எல்.ஓ.வை ஒரு தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தது. அதுவரை ஒரு விடுதலை இயக்கமாக மட்டுமே அறியப்பட்டு வந்த பி.எல்.ஓ., அமெரிக்க மீடியாவின் உதவியுடன் பயங்கரவாத அமைப்பாக, தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் ஒரு ராட்சஸத் தொழிற்சாலையாகச் சித்திரிக்கப்பட்டது.

இஸ்ரேலும் தன் பங்குக்கு பி.எல்.ஓ. செய்ததுடன் நிறைய புனைவுகள் சேர்த்து உலகெங்கும் அனுதாபம் தேடத் தொடங்கியது.

பி.எல்.ஓ. ஒருபோதும் தனது தீவிரவாத நடவடிக்கைகளை அக்காலத்தில் நியாயப்படுத்தியதில்லை. 'வேறு வழியில்லாமல் ஆயுதம் தூக்கியிருக்கிறோம். உங்களால் அமைதி வழியில் பாலஸ்தீனை மீட்டுத்தர முடியுமானால் செய்யுங்கள்' என்றுதான் பி.எல்.ஓ. சொன்னது.

அமைதிக்கான எந்த சாத்தியத்தையும் அப்போது இஸ்ரேல் விட்டுவைக்காத காரணத்தால் ஆயுதம்தான் தீர்வு என்று அனைவராலுமே நம்பப்பட்டது.

ஆனால், பி.எல்.ஓ.வின் நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு மிகைப்படுத்தி மீடியாவுக்குத் தருகிறது என்று எடுத்துச் சொல்ல, பி.எல்.ஓ.வில் யாருக்கும் தெரியவில்லை. பிரசாரம் ஒரு வலுவான சாதனம். எதையும் திரும்பத்திரும்பச் சொல்லுவதன் மூலம் மக்கள் மனத்தில் ஆழமாகப் பதியவைத்துவிட முடியும். ஆகவே, இஸ்ரேலின் திட்டமிட்ட பிரசார உத்தி பி.எல்.ஓ.வுக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. நான்கு பேர் பலியானார்கள் என்பதை நானூறு பேர் பலி என்று சொன்னால் அதை இல்லை என்று மறுக்க வேண்டுமல்லவா?

அப்படி மறுத்து, மறு அறிக்கை விட பி.எல்.ஓ.வில் அன்று யாருக்கும் தெரியவில்லை. அப்படியே அவர்கள் எடுத்துச் சொன்னாலும் வெளியிடுவதற்கான ஊடக ஒத்துழைப்புகள் இல்லாமல் இஸ்ரேல் பார்த்துக்கொண்டது.

இது மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. போராட்டம் ஒழுங்காக நடந்தால் போதாது; நிர்வாகமும் சிறப்பாக இயங்கவேண்டும் என்று முதல் முதலில் அப்போது உணரப்பட்டது. ஒரு சரியான, திறமைமிக்க, அனுபவம் வாய்ந்த தலைவருக்காக பி.எல்.ஓ. ஏங்கியது.

1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி யாசர் அராஃபத் அந்தப் பொறுப்புக்கு வந்தார்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 21 ஜூலை, 2005

No comments: