Friday, April 29, 2005

41]

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 41

யூத தேசிய காங்கிரஸ் என்கிறோம். யூத நில வங்கிகள் என்கிறோம். யூத காங்கிரஸ் மாநாடு என்கிறோம். இதெல்லாம் பகிரங்கமாக நடந்திருந்தாலோ, அல்லது யார் மூலமாவது தியோடர் ஹெஸிலின் திட்டங்கள் வெளியே தெரிந்திருந்தாலோ என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இன்றைக்குப் பேச முடிகிறது. விலாவாரியாக அலசிப்பார்க்க முடிகிறது. ஆனால் இந்தச் சம்பவங்கள் நடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் காற்றுக்குக் கூடத் தெரியாத ரகசியமாகத்தான் இதையெல்லாம் வைத்திருந்தார்கள். யூதர்களிலே கூட, பொறுப்பில் இருக்கும் நபர்கள் தவிர, பொதுமக்கள் இதையெல்லாம் பகிரங்கமாகப் பேசவே மாட்டார்கள். எப்போதும் யூதர்களின் முகத்தில் ஒரு பயமும் ஏக்கமும் படர்ந்திருக்கும். அந்த பய உணர்ச்சியையும் ஏக்க உணர்ச்சியையும் அவர்கள் ஒருபோதும் மாற்றிக் காண்பித்ததே இல்லை. இத்தனை பெரிய திட்டங்களை அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள், நில வங்கியின் கிளைகளைத் திறக்க பாலஸ்தீனுக்குப் போயிருக்கிறார்கள், நிலவங்கியின் நோக்கமே பாலஸ்தீனின் நிலங்களை அபகரிப்பதுதான் என்பதையெல்லாம் ஒரு யூதர் கூட வெளியே பேசியதில்லை.

இத்தனைக்கும் பத்திரிகைகள் பெருகத் தொடங்கியிருந்த காலம் அது. ஆனால், எந்தப் பத்திரிகையின் நிருபருக்கும் அப்போது மூக்கில் வியர்க்கவில்லை. எந்த நாட்டின் அரசுக்கும் யூதர்களின் திட்டம் இதுதான் என்பது விளங்கவில்லை. எல்லா தேசங்களிலும் ஆட்சியில் இருப்போருக்கு யூதர்கள் பலர் நெருக்கமாக இருந்தார்கள். ஆனாலும் வரையறுக்கப்பட்ட நெருக்கம் அது. ஆட்சியாளர்களிடமிருந்து அவர்கள் செய்திகளையும் ரகசியங்களையும் பெறப் பார்ப்பார்களே தவிர, தமது ரகசியங்களை அவர்களிடம் மறந்தும்கூடப் பேசமாட்டார்கள்.

எல்லாமே இருப்பது போலத்தான் இருந்தது. எந்த மாற்றமும் இல்லை. யாருக்கும் எதுவும் கண்ணில் படவேயில்லை. ஆனாலும் அது நடக்கத்தான் செய்தது.

ஒட்டாமான் துருக்கியப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பாலஸ்தீனில் வசித்துக்கொண்டிருந்த சில பணக்கார யூதர்கள் திடீரென்று மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக ஆங்காங்கே நில வங்கிகளைத் தொடங்கினார்கள். யார் வேண்டுமானாலும் வந்து நிலம் வாங்குவதற்காக அங்கே கடன் பெறலாம். குறைந்த வட்டி விகிதங்கள். நிலங்களை விற்க விரும்புகிறீர்களா? தாராளமாக வந்து வங்கி மூலமாகவே நிலங்களை விற்கலாம். அதிகப் பணம் கொடுத்து நிலங்கள் வாங்கப்படும்.

வங்கிகளே நேரடியாகவும் நிலங்களை வாங்கும். அல்லது இடைத்தரகர் போலச் செயல்பட்டு யூதர்களுக்கு நிலங்களை வாங்கிக்கொடுக்கும்.

பாலஸ்தீனைப் பிரமாதமான விவசாய பூமி என்று சொல்லமுடியாது. அங்கு விவசாயம் இருந்தது. ஆனால் விவசாய நிலங்களைக் காட்டிலும் வறண்ட, பிரயோஜனமில்லாத பூமியே அதிகம்.

யூதர்கள் நில வங்கிகளைத் தொடங்கி, நிலங்கள் வாங்கத் தொடங்கியபோது, படிப்பறிவில்லாத கிராமப்புறத்து அரேபிய நிலச்சுவான்தார்கள், தம்மிடமிருந்த பாலை நிலங்களை அவர்களுக்கு விற்க விரும்பினார்கள். தண்டத்துக்கு வெறும் பூமியை வைத்துக்கொண்டு அவதிப்படுவானேன் என்று அவர்கள் கருதியிருக்கலாம். மேலும் நில வங்கிகள், அவர்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அந்த வறண்ட நிலங்களுக்குப் பணம் கொடுக்க முன்வந்தன. ஆகவே, இதனை ஒரு வாய்ப்பாகவே அவர்கள் கருதினார்கள்.

யூத வங்கிகள் எதற்காக இத்தனை பணம் கொடுத்து உருப்படாத நிலங்களை வாங்குகின்றன என்றெல்லாம் அவர்களுக்கு யோசிக்கத் தெரியவில்லை. ஆகவே, பாலஸ்தீன் முழுவதிலும் எங்கெல்லாம் விவசாயத்துக்குப் பயன்படாத தரிசு நிலங்கள் இருந்தனவோ, அவற்றின் உரிமையாளர்கள் எல்லோரும் அந்த நிலங்களை நில வங்கிகளுக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.

எத்தனை நிலம் கிடைத்தாலும் வங்கி வாங்கிக்கொள்கிறது என்பதைப் பார்த்து, அதிகப் பணத்துக்கு ஆசைப்பட்டு, தரிசு நிலங்களுக்கு நம்பமுடியாத விலைகளைச் சொல்லிப் பார்த்தார்கள் அரேபியர்கள். அப்போதும் நில வங்கிகள் தயங்கவே இல்லை. பத்துப்பைசா பெறாத நிலங்களுக்குக் கூட பல லட்சம் கொடுக்க அவை முன்வந்தன.

உண்மையில் அதிர்ஷ்டதேவதைதான் நில வங்கி ரூபத்தில் வந்திருப்பதாக அரேபியர்கள் மடத்தனமாக நினைத்தார்கள். தினசரி நூற்றுக்கணக்கான ஏக்கர்கள், இந்த வகையில் யூத நில வங்கிகளின் வசமாகிக்கொண்டிருந்தன.

வங்கி இப்படி கணக்கு வழக்கில்லாமல் பணம் கொடுத்து நிலம் வாங்குவதற்குப் பணம் எங்கிருந்து வரும்?

அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை. உலகெங்கிலுமிருந்து யூதர்கள் தினசரி லட்சக்கணக்கில் பணம் திரட்டி பாலஸ்தீனுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். உலகமெங்கும் வசித்துக்கொண்டிருந்த பல லட்சம் யூத வர்த்தகர்கள் தமது வருமானத்தில் கணிசமான பகுதியை இந்த நில வங்கிகளுக்கு நன்கொடையாக அளித்தார்கள். சாதாரண யூத மக்களோ, துண்டேந்திச் சென்று பணம் வசூலித்து அனுப்பினார்கள்.

கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் சேர்ப்பது, புத்தகம் விற்ற பணம், நாடகம் போட்ட பணம் என்று எந்த ஒரு சிறு வாய்ப்பையும் அவர்கள் தவறவிடவில்லை. எங்கோ, கண்ணுக்குத் தெரியாத தொலைவில், பாலஸ்தீன் என்கிற தமது மூதாதையர் தேசத்தில் தங்களுக்கென்று தங்கள் தலைவர்கள் நிலம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள், விரைவில் தாங்கள் அங்கே இடம் பெயர்ந்து நிம்மதியாக வசிக்கப்போகிறோம் என்கிற ஓர் உணர்ச்சி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதையும் ரகசியமாகவே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது.

மறுபுறம், யூதர்களின் இந்த மாபெரும் திட்டத்தின் ஒரு வரி கூடத் தெரியாத பாலஸ்தீனத்து அரேபியர்கள், வந்தவரை லாபம் என்று தங்களுடைய நிலங்களையெல்லாம் நில வங்கிக்கு அள்ளியள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அத்தனையும் தரிசு நிலம் தானே என்கிற அலட்சியம்.

ஆனால், நிலவங்கிகள் தரிசு நிலக் கொள்முதலோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் திட்டத்தின் இன்னொரு பகுதியாக, உள்ளூர் மக்கள் நிலம் வாங்குவதற்குக் கடன் கொடுக்கவும் அவர்கள் தவறவில்லை. கடன் வாங்கி, நிலம் வாங்கும் அரேபியர்கள், உரிய காலத்தில் வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், நோட்டீஸ் எல்லாம் அனுப்பிக்கொண்டிராமல் நேரடியாக அந்த நிலங்களைக் கையகப்படுத்தத் தொடங்கிவிடுவார்கள்.

இன்னொரு உத்தியையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள். கடன் வாங்க வரும் அரேபியர்களிடம் முதலில் எளிய வட்டி விகிதங்கள் மட்டுமே சொல்லப்படும். பெரிய கஷ்டம் ஏதும் வராது என்று நம்பும் அரேபிய முஸ்லிம்கள் நிறைய கடன் பெற்று, நிலங்களை வாங்குவார்கள். பத்திரங்களை வங்கியில் அடகு வைப்பார்கள்.

ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நீடிக்குமானால் வட்டி விகிதங்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஏற ஆரம்பித்துவிடும். பெரிய படிப்பறிவு இல்லாத பாலஸ்தீனத்து அரேபியர்களுக்கு, வங்கி முதலிலேயே வழங்கும் கடன் விதிமுறைகள் அடங்கிய தாளை முழுவதுமாகப் படித்துப் புரிந்துகொள்ளக்கூட ஒருநாளும் முடிந்ததில்லை.

இதன் விளைவு என்னவானது என்றால், ஏராளமான அரேபிய நிலச்சுவான்தார்கள் நில வங்கியில் கடன் பெற்றே ஓட்டாண்டியாகிப் போனார்கள். திருப்பிச் செலுத்தும் காலம் அதிகரித்துக்கொண்டே போக, வட்டி விகிதம் மலையளவு உயர்ந்து கழுத்தை நெரித்தது. வழியில்லாமல் அவர்கள் தமது நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வங்கியிடமே விற்றுவிட நேர்ந்தது. அப்படி விற்கப்படும்போது கூடுதலாகப் பணம் கேட்காமல், வாங்கிய கடன் தொகைக்கே சமமாக விலையை நிர்ணயித்து யூதர்கள் கழித்துவிடுவார்கள்! தர்மம்!

ஒரு விஷயம் சொல்ல வேண்டும். யூதர்களின் நில வங்கிக்கு, நிலம் வாங்குவது ஒன்றுதான் குறிக்கோளாக இருந்ததே தவிர, பணம் சம்பாதிப்பது அல்ல. வங்கிகள் விரும்பியிருந்தால் வட்டி மூலமே எத்தனையோ கோடிகள் லாபம் பார்த்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. மாறாக, ஒரு துண்டு நிலம் கிடைத்தாலும் விடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தார்கள். தமது நோக்கத்திலிருந்து இம்மியும் பிசகாமல் இருந்ததுதான் யூதர்களின் மிகப்பெரிய சாதனை. அது சரியான நோக்கம்தானா என்பதெல்லாம் அப்புறம் யோசிக்க வேண்டிய விஷயம்.

உலகில் வேறெந்த ஒரு இனமும் இத்தனை திட்டமிட்டு ஒரு காரியம் செய்ததாகச் சரித்திரமே இல்லை. அதுவும் ரகசியமாக. ஒரு ஈ, காக்கைக்குக்கூடத் தங்கள் நோக்கம் தெரிந்துவிடாமல்!

அரேபியர்கள் இப்போதாவது சற்று விழித்துக்கொண்டு யோசித்திருக்கலாம்.

ஏன் இந்த வங்கிகள் சந்தை விலையைவிட இரண்டரை மடங்கு அதிக விலை கொடுத்து நிலங்களை வாங்குகின்றன?

அப்படி வாங்கப்படும் நிலங்களிலெல்லாம் ஏன் யூதக்குடியிருப்புகள் மட்டுமே நிறுவப்படுகின்றன?

முயற்சி செய்தாலும் வங்கி வாங்கிய நிலத்தை ஒரு முஸ்லிம் ஏன் திரும்ப வாங்க முடிவதில்லை?

பாலஸ்தீனில் ஏற்கெனவே உள்ள யூதர்களின் எண்ணிக்கை எல்லாருக்கும் தெரியும். இப்படிப் புதிதாக வங்கி வாங்கும் நிலங்களில் வந்து குடியமரும் யூதர்களும் புதியவர்களாக இருக்கிறார்களே, இவர்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? வங்கி நிலம் வாங்கியது தெரிந்ததும் சொல்லி வைத்தமாதிரி வந்து குடியமர்கிறார்களே, இவர்களுக்காகத்தான் வங்கி நிலங்களை வாங்குகிறதா? அல்லது தற்செயலாக நடக்கிறதா?

இந்த வங்கிகளின் செயல்பாடுகள் முழுவதுமாக அரசுக்குத் தெரியுமா? இதுபற்றி அரசின் கருத்து என்ன?

ஏராளமாகப் பணம் கொடுத்து தரிசு நிலங்களை வாங்கும் வங்கிகளுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? யார் தருகிறார்கள்?

இவற்றில் எந்த ஒரு கேள்வியும் பாலஸ்தீனத்து அரேபியர்களுக்குத் தோன்றவேயில்லை என்பது மிகவும் வியப்பான விஷயம்.

சிலகாலம் இப்படியாக அவர்கள் பாலஸ்தீனில் நிலங்களை வாங்கிச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள் மாநிலம் முழுவதும் நில வங்கிகளுக்கு மிகப்பெரிய மதிப்பும் செல்வாக்கும் ஏற்பட்டிருந்தது. பாங்கர்கள் என்று சொல்லப்பட்ட வங்கி அதிகாரிகள் மிகப்பெரிய மனிதர்களாக மதிக்கப்பட ஆரம்பித்தார்கள். முஸ்லிம் பண்ணையார்கள் இருந்த இடங்களிலெல்லாம் யூதப்பண்ணையார்கள் தோன்றிவிட்டார்கள். பணம் அதிகம் இருப்போரே மதிக்கத்தகுந்தவர்கள் என்னும் பொதுவான கருத்தாக்கம் மிக வலுவாக அங்கே கடைப்பிடிக்கப்பட ஆரம்பித்தது. அதன் அடிப்படையில் பாலஸ்தீனில் யூதர்களுக்கு மீண்டும் செல்வாக்கு ஏற்பட ஆரம்பித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் யூதர்கள் இன்னொரு நடைமுறையை அறிமுகப்படுத்தினார்கள். மிரட்டல்கள் மூலம் நிலங்களைப் பெறுவது என்பதே அது.

அதுவரை தாமாக நிலங்களை விற்க முன்வரும் முஸ்லிம்களுக்கு அதிகப் பணம் கொடுத்து நிலங்களை வாங்கிக்கொண்டிருந்தது நில வங்கி. கொஞ்சம் இருப்பை ஸ்தாபித்துக் கொண்ட பிறகு, வேறு வகையில் இம்முயற்சியைத் தொடர ஆரம்பித்தார்கள்.

வங்கியின் சர்வேயர்கள், வண்டியெடுத்துக்கொண்டு நகர்ப்புறங்களையும் கிராமப்புறங்களையும் சுற்றி வருவார்கள். நூறு ஏக்கர் வங்கி நிலம் இருக்கும் இடத்தின் நடுவே பத்து ஏக்கர் அரேபியர் நிலம் இருக்குமானால் அந்த இடங்களை வங்கிக்கு விற்றுவிடும்படி சம்பந்தப்பட்ட நில உடைமையாளர் கேட்டுக்கொள்ளப்படுவார். உரிமையாளர் மறுத்தால், முதலில் மிரட்டல் ஆரம்பிக்கும். பிறகு அதுவே பரிமாணம் அடைந்து சில சந்தர்ப்பங்களில் கடத்தல் வரை கூடப் போயிருக்கிறது!

ஆனால், இத்தகைய காரியங்களை வங்கியே நேரடியாகச் செய்யமுடியாது அல்லவா? என்ன செய்யலாம்?

யூதர்கள் யோசித்தார்கள். விளைவாக, பாலஸ்தீனின் பல்வேறு பகுதிகளில் வங்கிக்குச் சம்பந்தமில்லாத சில தனியமைப்புகளைத் தோற்றுவித்தார்கள். பொது நல அமைப்புகளாக அடையாளம் காட்டப்பட்ட அந்த அமைப்புகளின் முழுநேரப்பணி, நில ஆக்கிரமிப்புதான். குண்டர்களும் ரவுடிகளும் நிறைந்த அத்தகைய அமைப்புகளின் உறுப்பினர்கள் மிரட்டியும் தாக்கியும் நிலங்களைக் கையகப்படுத்தி நிலவங்கிக்கு அளித்துவிடுவார்கள்! அதற்காக அவர்களுக்கு மாத ஊதியமே தரப்பட்டிருக்கிறது.

சுமார் இரண்டாண்டு காலகட்டத்துக்குள் பாலஸ்தீனிய அரேபியர்களின் மொத்த நிலப்பரப்பில் சுமார் நாலரை சதவிகித நிலம் யூத நில வங்கிகளின் மூலம் யூதர்களின் வசமாகியிருந்தது. அதுவரைதான் யூதர்கள் ‘கஷ்டப்பட’வேண்டியிருந்தது. அதற்குப்பின்னால் நிலக் கொள்முதல் திட்டம் பிடித்த வேகம், விவரிப்புக்கு அப்பாற்பட்டது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 14 ஏப்ரல், 2005

No comments: