Sunday, October 30, 2005

97] ஏரியல் ஷரோன் அஞ்சிய ஓரே மனிதர்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 97

குறையில்லாத மனிதர்கள் இல்லை. ஓர் அரசியல்வாதியாக யாசர் அராஃபத்தின் சரிவுகளை, சறுக்கல்களைப் பார்க்கும் அதே சமயத்தில், ஒரு போராளியாக அவர் நின்று சாதித்தவை எதுவும் நினைவிலிருந்து தப்பவே தப்பாது. அராஃபத் என்றொரு மனிதர் பாலஸ்தீனில் தோன்றாமல் போயிருந்தால், இன்றைக்கு நாம் பேசுவதற்கு 'பாலஸ்தீன்' என்றொரு பொருள் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய பாலஸ்தீனியர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குச் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தி, போராடச் சொல்லிக்கொடுத்து, தானே தலைமை தாங்கி, நெறிப்படுத்தி, பாலஸ்தீன் பிரச்னையை முதல்முதலில் சர்வதேச கவனத்துக்கு எடுத்துச் சென்று, போராட்டத்தைத் தொடர்ந்தபடியே, விடாமல் அமைதி முயற்சிகளுக்கும் ஆதரவு கொடுத்து வந்தார்.

அவரது பாணி கொஞ்சம் புதிர்தான். ஆனாலும், அவரது அரசியல் பாணிதான் இஸ்ரேல் விஷயத்தில் எடுபடக்கூடியதாக இருந்தது. அல்லாதபட்சத்தில், ஒட்டுமொத்த பாலஸ்தீன் மக்களையும் 'பாலஸ்தீன் அகதிகளா'க்கி உலகெங்கும் உலவவிட்டிருப்பார்கள். அராஃபத் என்கிற ஒரு நபருக்குத்தான் இஸ்ரேலிய அதிகாரிகள் பயந்தார்கள். ஏரியல் ஷரோன் அஞ்சியதும் அவர் ஒருவருக்குத்தான். அராஃபத்தைக் கொன்றுவிட்டால் தன்னுடைய பிரச்னைகள் தீரும் என்றேகூட அவர் கருதி, வெளிப்படுத்தியிருக்கிறார். அராஃபத் மீது அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அடிக்கடி அவரது வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தி, அவரை வீட்டுச் சிறையில் வைத்து, வெளியே ராக்கெட் தாக்குதல் நடத்தி எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அச்சமூட்டிப் பார்த்தார்கள். அவராக எங்காவது ஓடிப்போனால்கூடத் தேவலை என்று நினைத்தார்கள்.

அசைந்துகொடுக்கவில்லை அவர். போராளி இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்தார் என்கிற ஒரு குற்றச்சாட்டைத் தவிர, அராஃபத் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் ஒரு சர்வாதிகாரி என்று குற்றம்சாட்டினார்கள். அதில் சந்தேகமென்ன? அவர் சர்வாதிகாரிதான். ஒரு போராளி இயக்கத் தலைவர், ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுக்கும்போது, ஜனநாயகவாதியாக எப்படிக் காலம் தள்ளுவார் என்று எதிர்பார்க்கலாம்? அவரது அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள், அவருக்கு அப்படியொரு தோற்றம் அளித்ததை மறுக்கமுடியாது. ஆனால் அராஃபத், ஒருபோதும் தன்னை ஒரு ஜனநாயக அரசியல்வாதியாகச் சொல்லிக்கொண்டதில்லை. எப்படி அவர் தன்னை ஒரு சர்வாதிகாரியாகவும் சொல்லிக்கொள்ளவில்லையோ, அப்படி!

அரசுப்பணத்தை, அவர் தமது சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டார், மனைவி பேரில் நிறைய சொத்து சேர்த்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரம் கிடையாது. பலபேர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், உறுதியான ஆதாரங்கள் எதற்கும் இல்லை என்பதும் உண்மை. அராஃபத்தின் வீட்டில் பலமுறை சோதனையிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், அங்கிருந்து போராளி இயக்கங்களுக்கு அவர் எழுதிய கடிதங்கள், அனுப்பிய பணத்துக்கான ரசீது போன்றவற்றைத்தான் கைப்பற்றினார்களே தவிர, கோகோகோலா நிறுவனத்திலோ, மொபைல் போன் நிறுவனத்திலோ அவருக்கு இருந்ததாகச் சொல்லப்பட்ட பங்குகளுக்கான பத்திரங்களை அல்ல.

இதெல்லாம் பாலஸ்தீனியர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், அவர்கள் அராஃபத் மீது மனத்தாங்கல் கொண்டதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. தொடர்ந்து மீடியா அவர்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள், பிரச்னை ஒரு முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போவது பற்றிய எரிச்சல், தள்ளாத வயதில் அராஃபத் செய்துகொண்ட திருமணம், பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்புக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லாமல் இருந்த அவரது விநோதமான மௌனம் என்று பட்டியலிடலாம். முக்கியக் காரணம், இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சு என்கிற ஒரு விஷயத்தை அவர்தான் ஆரம்பித்துவைத்தார் என்பது. இது பாலஸ்தீனியர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காத ஒரு விஷயம். அமைதிப் பேச்சுக்கு இஸ்ரேல் லாயக்கில்லாத ஒரு தேசம் என்பது, அவர்களின் தீர்மானமான முடிவு. அராஃபத், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது அவர்களுக்கு வேறுவிதமான சந்தேகங்களைக் கிளப்பிவிட்டது.

ஒரு பக்கம் அவரது சொத்துகள் பற்றிய பயங்கர வதந்திகள் வர ஆரம்பிக்க, மறுபக்கம் அவர் இஸ்ரேலுடன் அமைதி பேசிக்கொண்டிருக்க, எங்கே தங்கள் தலைவர் விலைபோய்விட்டாரோ என்று, அவர்கள் மனத்துக்குள் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்கள். இதுதான் பிரச்னை. இதுதான் சிக்கல். நடுவில் சிலகாலம் அராஃபத்தின் இமேஜ் நொறுங்கியதற்கான காரணம் இதுதான்.

ஆனால், உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் கிடந்த அராஃபத்தை இஸ்ரேல் வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு, மேற்குக்கரை முழுவதிலும் தேடுதல் வேட்டை நடத்தி, குடியிருப்புகளை நாசம் செய்து, சளைக்காமல் ராக்கெட் வீசித் தாக்கத் தொடங்கியபோதே, அராஃபத் மீது அவர்களுக்கு அனுதாபம் பிறந்துவிட்டது. தங்கள் தலைவர் உயிருக்கு ஆபத்து என்கிற எண்ணம் எப்போது அவர்களுக்கு முதல்முதலில் தோன்றியதோ, அப்போதே பழைய கசப்புகளை மறந்து அவரைக் காப்பாற்ற முடிவு செய்து, ஒட்டுமொத்த பாலஸ்தீனியரும் போராட்டத்தில் குதித்தனர்.

அராஃபத் மீதான அவர்களின் அன்பு எத்தகையது என்பதற்கு மற்றெந்த உதாரணத்தைச் சொல்லுவதைக் காட்டிலும் அவரது மரணம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இருக்க முடியும்.

செப்டெம்பர் 2004_லிலேயே அராஃபத்தின் உடல்நலன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவிட்டிருந்தது. அவருக்கு என்ன பிரச்னை என்பது பற்றி யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. வயதான பிரச்னைதான் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மையில், ரத்தம் சம்பந்தமான சில கோளாறுகள் அவருக்கு இருந்தன. நரம்புத்தளர்ச்சி நோயும் இருந்திருக்கிறது. அக்டோபர் மாத இறுதியில் அவரது உடல்நிலை முற்றிலும் சீர்குலைந்து சிகிச்சைக்காக அவர் பாரீசுக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதே பாலஸ்தீனியர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் ரமல்லாவை விட்டு நகராமல் இருந்த அராஃபத், இப்போது பாரீசுக்குத் 'தூக்கிச் செல்லப்படுகிறார்' என்று கேள்விப்பட்டபோதே, அவர்களால் என்ன நடக்கப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.

தாங்கமுடியாமல் அப்போதே வீதிக்கு வந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள். தங்களை அநாதைகளாக்கிவிட்டுத் தங்கள் தலைவர் போய்விடப்போகிறார் என்கிற அச்சத்தில் அவர்கள் அழுதார்கள். இனி யார் தங்களுக்கு மீட்சியளிப்பார்கள் என்று கையேந்தித் தொழுதார்கள்.

ஆனால், அராஃபத்தை பாரீசுக்கு அழைத்துச் சென்றபோதே, தலைவர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது. சிகிச்சை எதுவும் அவருக்கு மறுவாழ்வு அளிக்காது என்பது அனைவருக்குமே தெரிந்துவிட்டது. பாரீசில் உள்ள பெர்ஸி ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். பேச்சு கிடையாது. மூச்சு மட்டும் லேசாக வந்துகொண்டிருந்தது. கோமா நிலைக்கு அவர் போய்க்கொண்டிருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். அதிலிருந்து மீள முடியுமா என்று தெரியாது என்றும் சொன்னார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் இந்தப் போராட்டம் இருந்தது. ஒரு கட்டத்தில் இனி அவரை மீட்கவே முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்துவிட, பாலஸ்தீன் அரசியல்வாதிகள், தங்கள் கணவரைக் கொன்றுவிட முடிவு செய்துவிட்டதாக, பாரீசில் இருந்த அராஃபத்தின் மனைவி சுஹா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கருணைக்கொலை குறித்த பேச்சுக்கள் எழுந்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதெல்லாம் யூகங்கள்தான். உறுதியாக அப்படி யாரும் பேசியதற்கான ஆதாரங்கள் கிடையாது. தவிரவும் அராஃபத் போன்ற ஒரு மக்கள் தலைவர் விஷயத்தில் அவரது அமைச்சர்கள் அப்படியெல்லாம் அதிரடி முடிவு எடுத்துவிடவும் மாட்டார்கள். ஒருவேளை டாக்டர்களே அதைச் சிபாரிசு செய்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள். இதற்கும் ஆதாரம் கிடையாது.

மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு, நவம்பர் 11_ம் தேதி (2004) அதிகாலை 4.30 மணிக்கு யாசர் அராஃபத் இறந்துவிட்டதாக பெர்ஸி ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்கள்.

அவரது வாழ்க்கையைப் போலவே, அவரது மரணமும் கேள்விக்குறிகளுடன்தான் இருக்கிறது! உண்மையில் அவர் முன்பே இறந்திருக்க வேண்டும்; சமயம் பார்த்து அறிவிப்பதற்காகத்தான் காலம் கடத்தினார்கள் என்று பலமான வதந்தி எழுந்தது. பாலஸ்தீனிலிருந்து அவரை பாரீசுக்கு அழைத்துச் சென்றபோதே அவர் இறந்திருக்கக்கூடும் என்று கூட ஒரு வதந்தி உண்டு. சொத்து விவரங்கள் குறித்த இறுதி முடிவுகளை எடுப்பதற்காகவும், பாலஸ்தீன் அத்தாரிடியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த ஒருமித்த முடிவுக்கு வருவதற்காகவுமே இந்தக் காலதாமதம் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும் சொன்னார்கள். எல்லாம் வதந்திகள்!

அராஃபத்தின் மரணச் செய்தியை மேற்குக் கரையில் அவரது உதவியாளர் தயெப் அப்துற்றஹீம் என்பவர் அறிவித்தார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் கதறினார்கள். நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்கள். பாலஸ்தீன் நகரங்களில் வசித்த ஒவ்வொரு தாயும் தன்னுடைய மகன் இறந்ததாகக் கருதி அழுதார்கள். ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய சகோதரர் இறந்துவிட்டதாக நினைத்துத் தேம்பினார்கள். ஒவ்வொரு ஆண்மகனும் தன் ஆத்மாவைத் தொலைத்துவிட்டதாகக் கருதிக் கதறினார்கள்.

எப்பேர்ப்பட்ட இழப்பு அது! பாலஸ்தீன் என்கிற ஒரு கனவு தேசத்தின் முகமாக அல்லவா இருந்தார் அவர்? பாலஸ்தீன் மக்களிடையே சுதந்திரக் கனலை ஊதி வளர்ப்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவரல்லவா அவர்? ஆயிரம் தோல்விகள், லட்சம் குற்றச்சாட்டுகள், கோடிக்கணக்கான அவமானங்கள் பட்டாலும் தன் மௌனத்தையே தன் முகவரியாகக் கொண்டு, போராட்டம் ஒன்றைத் தவிர வேறொன்றைச் சிந்திக்காமலேயே வாழ்ந்து மறைந்தவரல்லவா அவர்?

அற்பமாக ஆயிரம் குற்றச்சாட்டுகள் முன்வைத்து ஒருவரது பெயரைக் கெடுக்கலாம். என்ன செய்தாலும், ஐம்பதாண்டு காலமாகப் போராட்டத்தை முன்னின்று நடத்தி, பாலஸ்தீனின் தந்தை என்கிற பெயரைப் பெற்றவரை அந்த மக்களின் மனத்திலிருந்து முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட முடியுமா என்ன?

அராஃபத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான மக்களின் முகங்களில் படர்ந்திருந்த சோகம், இன்னுமொரு நூற்றாண்டு காலத்துக்கு நம் கண்களை விட்டு நகரப்போவதில்லை என்பது நிச்சயம். அவர்கள் கதறலை தொலைக்காட்சியில் பார்த்தோமே? மறக்கக்கூடியதா அந்தக் காட்சி?

ஆனால், அராஃபத்தின் மரணச் செய்தி வெளியானவுடனேயே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஓர் அறிக்கை வெளியிட்டார். 'பாலஸ்தீன் பிரச்னை இனி மிக விரைவில் சுமுக நிலையை நோக்கி நகரும். விரைவில் தீர்வு காணப்படும்' என்று சொன்னார்.

இதன் அர்த்தம், அராஃபத் ஒருவர்தான் அமைதிக்குத் தடையாக இருந்தார் என்பதுதான்! அதாவது அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் இட்ஸாக் ராபினுடன் இணைந்து பெற்ற அராஃபத்! துப்பாக்கி ஏந்திய கரங்களில் ஆலிவ் இலை ஏந்தி ஐ.நா. சபைக்குச் சென்று உரையாற்றிய அராஃபத்! தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை; தமது மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்காதா என்கிற ஒரே எதிர்பார்ப்புடன் ஓஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, தமது சொந்த மக்களாலேயே இழித்துப் பேசப்பட்ட அராஃபத்! போராளி இயக்கங்களுக்கு உதவி செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் அமைதிக்கான கதவுகளையும் எப்போதும் திறந்தே வைத்திருந்த அராஃபத்!

ஜார்ஜ் புஷ்ஷின் அறிக்கை விவரத்தை அறிந்த அத்தனை பாலஸ்தீனியர்களும் மௌனமாக மனத்துக்குள் துடித்தார்கள். இப்படிக்கூடவா ஒரு மனிதர் இருக்க முடியும்? ஒரு மாபெரும் தலைவரின் மரணத் தருணத்தில் கூடவா வன்மம் காட்டமுடியும்?

இந்தச் சம்பவம்தான் ஹமாஸை அப்போது பலமாகச் சீண்டியது. அராஃபத் இறந்துவிட்டார். இனி அமைதி திரும்பிவிடும் என்று அமெரிக்க அதிபர் சொல்கிறார். ஆமாம், அப்படித்தான் என்று ஏரியல் ஷரோன் பதில் பாட்டு பாடுகிறார். பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா?

அன்றைய தினமே ஹமாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டது. 'இஸ்ரேல் மீதான எங்கள் புனிதப்போரை அராஃபத்தின் மரணம் இன்னும் தீவிரப்படுத்துகிறது. தாக்குதல் தொடரும். இன்னும் வலுவாக.''

மூன்றே வரிகள். வெலவெலத்துவிட்டது இஸ்ரேல்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 27 அக்டோபர், 2005

No comments: