Sunday, October 30, 2005

98] காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 98

யாசர் அராஃபத்தின் மரணம், சர்வதேச அளவில் உருவாக்கிய கவன ஈர்ப்பு மற்றும் துக்கத்தைத் தாண்டி மூன்று முக்கிய விளைவுகளுக்குக் காரணமானது.

முதலாவது, அராஃபத்துக்குப் பிறகு, பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட மம்மூத் அப்பாஸ், எப்பாடுபட்டாவது பாலஸ்தீனில் அமைதியைக் கொண்டுவந்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டது;

இரண்டாவது, அராஃபத்தான் அமைதிக்கு வில்லனாக இருக்கிறார் என்று தொடர்ந்து பேசிவந்த இஸ்ரேல், இனி ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்கிற சர்வதேச நெருக்கடிக்கு உள்ளானது;

மூன்றாவது, அராஃபத் இறந்ததும் அமெரிக்க அதிபர் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் ஆற்றிய உரைகள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகளால் சீண்டப்பட்ட ஹமாஸ், தமது ஆயுதப் போராட்டத்தை முன்னைக்காட்டிலும் பன்மடங்கு தீவிரப்படுத்த முடிவு செய்தது.

முதல் இரண்டு விளைவுகளுக்கும் இந்த மூன்றாவது விளைவு, பெரும் எதிரி. மம்மூத் அப்பாஸோ, இஸ்ரேலிய அரசோ ஹமாஸைக் கட்டுப்படுத்துவதென்பது, இயலாத காரியம். தவிரவும் ஹமாஸ் தனது இரண்டு பெரும் தலைவர்களை அப்போதுதான் ராக்கெட் தாக்குதலுக்கு பலிகொடுத்திருந்தது. அந்தக் கோபமும் உடன் சேர்ந்திருந்தது.

ஆகவே, எந்த ராக்கெட் தாக்குதலில் தனது தனிப்பெரும் தலைவர்களை இழந்தார்களோ, அதே ராக்கெட் தாக்குதல் மூலம் இஸ்ரேலை நிலைகுலையச் செய்வது என்று, ஹமாஸ் முடிவு செய்தது. கஸம் (Qassam) என்னும் தனது பிரத்யேக ராக்கெட்டுகளை ஏவி, இஸ்ரேலிய இலக்குகளை அழிக்கத் தீர்மானித்தது.

இந்தக் கஸம் ராக்கெட்டுக்கு ஒரு சரித்திரம் உண்டு. ஒரு போராளி இயக்கம், தனக்கென தனியொரு ராக்கெட் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக ராக்கெட்டுகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்று, உலகுக்கு முதல் முதலில் செய்து காட்டியது ஹமாஸ்தான். மேலோட்டமான பார்வைக்கு கஸம் ராக்கெட்டுகள் மிகச் சாதாரணமானவை. ராக்கெட் வடிவ வெளிப்புறம்; உள்ளே அடைக்கப்பட்ட வெடிமருந்துகள் என்பதுதான் சூத்திரம். ஆனால், இதில் மூன்று விதமான ராக்கெட்டுகளை அவர்கள் தயாரித்தார்கள். குறுகிய இலக்குகளைத் தாழப் பறந்து தாக்கும் ரகம், சற்றே நீண்டதூர இலக்குகளைத் தாக்கவல்ல ரகம், வேகம் அதிகரிக்கப்பட்ட, நடுவே திசைமாற்றிச் செலுத்தத்தக்க தானியங்கி ரகம் ஒன்று.

ஆனால், இந்த மூன்று வித ராக்கெட்டுகளுக்கும் விளக்கப் புத்தகமோ, தயாரிப்புக் கையேடோ கிடையாது. ஹமாஸின் மிகச் சில மூத்த நிபுணர்களுக்கு மட்டுமே இந்த ராக்கெட்டுகளை உருவாக்கத் தெரியும். அதுகூட 2004_ம் ஆண்டுக்குப் பிறகுதான்.

அதற்கு முன், கஸம் ராக்கெட்டை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுநர் அட்னான் அல் கௌல் (Adnan al – Ghoul) என்பவருக்கு மட்டும்தான் அந்த ராக்கெட் சூட்சுமம் தெரியும். ஒரே ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு, பல்லாண்டு காலம் ஆராய்ச்சி செய்து, ஹமாஸுக்கென்று பிரத்யேகமாக இந்த ராக்கெட்டை உருவாக்கித் தந்தவர் அவர். 2004_அக்டோபரில் அவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்படுவதற்கு மிகச் சில வாரங்கள் முன்னர்தான் எதற்கும் இருக்கட்டும் என்று ராக்கெட் தொழில்நுட்பத்தை ஹமாஸின் சில மூத்த பொறியியல் வல்லுநர்களுக்கு அவர் கற்பித்திருந்தார்!

கஸம் ராக்கெட்டுகளை ஹமாஸ், பெரும்பாலும் காஸா பகுதிகளில்தான் பயன்படுத்தியது. அந்த ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையும் காஸாவில்தான் இருந்தது. மேற்குக் கரைப் பகுதிக்குத் தரை மார்க்கமாக, அதை எடுத்துச் செல்வதில் இருந்த பிரச்னைகள் காரணமாக, கஸம் ராக்கெட்டுகள் காஸாவின் பிரத்யேக ஆயுதமாகவே கருதப்பட்டு வந்தது.

அட்னான் அல் கௌல், எப்படியாவது காஸாவில் ஏவினால் டெல் அவிவ் வரை போய் வெடிக்கக்கூடிய விதத்தில் இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவிட வேண்டும் என்றுதான் இறுதிவரை பாடுபட்டார். ஆனால், அது நடக்கவில்லை.

ஹமாஸின் கஸம் உருவாக்கிய 'பாதிப்பில்' பாலஸ்தீனில் உள்ள பிற போராளிக்குழுக்களும் தமக்கென பிரத்யேகமான ராக்கெட் தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்ளப் பெரும்பாடு பட்டன. கஸம் போல, முற்றிலுமாக சுதேசி தொழில்நுட்பத்தில் தயாரிக்க முடியவில்லை. என்றாலும், அவர்களும் ஓரளவு பலன் தரத்தக்க ராக்கெட்டுகளைத் தமக்கென உருவாக்கவே செய்தார்கள்.

உதாரணமாக, பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் போராளி இயக்கம், ஒரு ராக்கெட்டை உருவாக்கி, அதற்கு அல் கட்ஸ் (Al -quds) என்று பெயரிட்டது. பாப்புலர் ரெஸிஸ்டண்ட் கமிட்டி அமைப்பு, அல் நஸ்ஸர் (Al -Nasser) என்றொரு ராக்கெட்டைத் தனக்கென தயாரித்துக்கொண்டது. ஃபத்தா அமைப்பினர், கஃபா (Kafah) என்றொரு ராக்கெட்டைப் பயன்படுத்தினர். டான்ஸிம் அமைப்பினர், ஸெரயா (Seraya) என்கிற ராக்கெட்டைப் பயன்படுத்தினர்.

ஒரு தாக்குதல் நடந்துமுடிந்தபிறகு, தாக்குதலைச் செய்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிய, இந்தப் பிரத்யேக ராக்கெட்டுகள்தான், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினருக்கு உதவி செய்தன.

ஹமாஸின் 'கஸம்' ராக்கெட்டுகள், குறைந்தபட்சம் 5.5 கிலோ எடையும் அதிகபட்சம் 90 கிலோ எடையும் உள்ளவை. இந்த ராக்கெட்டுகள், மூன்றிலிருந்து பத்து கிலோ வெடிபொருள்களைச் சுமந்து சென்று வெடிக்கச் செய்யவல்லவை. அதிகபட்சம் பத்து கிலோமீட்டர் தூரம் வரை இவை பறந்து சென்று தாக்கும். பிற இயக்கங்களின் ராக்கெட் தொழில்நுட்பம், கஸம் ராக்கெட்டுடன் ஒப்பிடக்கூட முடியாதவை. அதிகபட்சம் அந்த ராக்கெட்டுகள் சில நூறு மீட்டர்கள் வரை மட்டுமே பறக்கும்.

அராஃபத் இறந்த மறுதினமே ஹமாஸ் தன்னுடைய யுத்தத்தைத் தொடங்கிவிட்டது. நஹல் ஓஜ் (NahalOz) , க'ஃபர் தரோம் (K'far Darom) என்ற இரு இஸ்ரேலிய இலக்குகளைக் குறிவைத்து, நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை வீச ஆரம்பித்தார்கள். இதில், கஃபர் தரோம் பகுதியில் இருந்த ஒரு கிண்டர்கார்டன் பள்ளிக்கூடம், மிகக் கடுமையான சேதத்துக்கு உள்ளானது. பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. நகரின் மின்சாரத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. மக்கள் வெளியே வந்தால், உயிருக்கு உத்தரவாதமில்லை என்கிற நிலைமை.

இஸ்ரேல் ராணுவத்தால், ஹமாஸின் இந்த அசுரத் தாக்குதலைத் தடுக்கமுடியவில்லை. எங்கிருந்து ராக்கெட்டுகள் வருகின்றன என்று திசையைத் தீர்மானிப்பதே பெரிய பிரச்னையாக இருந்தது. முதல் முறையாக ஹமாஸ் வீரர்கள், தாம் இருக்கும் இடத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல், நாலாபுறங்களிலிருந்தும் ராக்கெட்டுகளை மட்டும் சலிக்காமல் செலுத்திக்கொண்டே இருந்தார்கள்.

பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராகப் பொறுப்பேற்று, இருபத்துநான்கு மணி நேரம் கூட ஆகியிராத நிலையில், மம்மூத் அப்பாஸ், ஹமாஸின் இந்தக் கோபத் தாண்டவத்தைக் கண்டு மிகவும் கவலை கொண்டார். அராஃபத்தின் மரணம் நிகழ்ந்த சூட்டோடு பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டுவிட முடிந்தால்தான் உண்டு; இல்லாவிட்டால், இன்னும் பல்லாண்டுக் கணக்கில் இது இழுத்துக்கொண்டேதான் போகும் என்று அவர் நினைத்தார்.

ஆகவே, அமெரிக்கா முன்னர் போட்டுக்கொடுத்த ரோட் மேப்பின் அடிப்படையிலேயே, அமைதிக்கான சாத்தியங்களை மீண்டும் உட்கார்ந்து பேசி, இரு தரப்புக்கும் சம்மதம் தரத்தக்கத் தீர்வை நோக்கி நகருவதே, தனது முதல் பணி என்று அவர் உத்தேசித்திருந்தார். ஆனால், ஹமாஸின் உக்கிரதாண்டவம், இந்த அமைதி முயற்சி அத்தனையையும் நடுவீதியில் குவித்துவைத்து போகிக் கொண்டாடிக் குளிர்காய்ந்துவிடும் போலிருந்தது.

ஆகவே, அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு, அராஃபத்தின் இறுதி ஊர்வலம் நடந்ததற்கு மறுநாளே, அப்பாஸ் சிரியாவுக்குப் பறந்தார். சிரியாவின் எல்லைப்பகுதியில் முகாம் அமைத்துத் தங்கியிருந்த ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்து, 'தாக்குதலை தயவுசெய்து நிறுத்துங்கள்' என்று, காலில் விழாத குறையாகக் கெஞ்சினார். ஆனால், ஹமாஸ் அதற்கு செவிசாய்க்கவில்லை.

'' 'பிரச்னைக்கு அமைதித்தீர்வு' என்று இறுதிவரை சொல்லிக்கொண்டிருந்த அராஃபத் மறைந்துவிட்டார். அமைதி ஏற்படாததற்குக் காரணமே அராஃபத்தான்' என்று, அமெரிக்க அதிபர் சொல்லுகிறார். அத்தகைய அயோக்கியர்களுடன் நீங்கள் என்ன அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப்போகிறீர்கள்? இதுவரை செய்துகொண்ட உடன்படிக்கைகள், எப்போதாவது நீண்டநாள் நோக்கில் பலன் தரத்தக்கதாக இருந்திருக்கின்றனவா? அவர்களுக்காக நீங்கள் ஏன் வந்து எங்களிடம் கெஞ்சுகிறீர்கள்?''

கேள்விகள் அனைத்துமே நியாயமானவைதான் என்பது அப்பாஸுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஒருவர், இது நியாயம் என்று ஒப்புக்கொள்ள முடியாது. அமைதி நடவடிக்கை எது ஆரம்பமாவதென்றாலும் முதல் படி போராளி இயக்கங்களைத் தடுத்து நிறுத்துவதாகவும் போராளிகளைக் கைது செய்வதாகவும் மட்டுமே இருக்கும்.

இது ஹமாஸ் தலைவர்களுக்கும் தெரியும். ஆனால், தாக்குதலை நிறுத்தக்கோரி வந்த அப்பாஸ் மீது, அப்போது அவர்களுக்குக் கோபம் மட்டுமே வந்தது. 'தயவுசெய்து போய்விடுங்கள்' என்றுதான் சொன்னார்கள். வேறு வழியில்லாமல், அப்பாஸ் தோல்வியுடன் திரும்பவேண்டியதாகிவிட்டது.

அப்பாஸ் வந்து போனதன் தொடர்ச்சியாக டிசம்பர் 12_ம் தேதி ஹமாஸ் ஒரு மிகப்பெரிய தாக்குதலுக்கான ஆயத்தங்களை உடனடியாகச் செய்தது. காஸா முனையில், எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள ரஃபா என்கிற இடத்தில் ஒரு சுரங்கப்பாதையில் 1.5 கிலோ எடையுள்ள வெடிபொருள்களைக் கொண்டு சேர்த்து, அருகிலுள்ள இஸ்ரேலிய ராணுவ முகாமைத் தாக்கும் எண்ணத்துடன் வெடிக்கச் செய்தார்கள்.

மூன்று வீரர்கள் பலி. அதைக்காட்டிலும் பெரிய பாதிப்பு, அந்தச் சுரங்கமே நாசமாகிவிட்டது. பல கட்டடங்கள் கடும் சேதத்துக்குள்ளாயின. குண்டுவெடிப்பு அதிர்ச்சியிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் மீள்வதற்குள்ளாகவே, துப்பாக்கித் தாக்குதலையும் தொடங்கி, கண்ணில் பட்ட அத்தனை வீரர்களையும் சுடத் தொடங்கினார்கள். பலியானது இரண்டுபேர்தான் என்றாலும், ஏராளமானவர்கள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாயினர்.

ஹமாஸ், இந்தத் தாக்குதலை ஃபத்தா அமைப்புடன் இணைந்து மேற்கொண்டதாகப் பின்னால் தெரியவந்தது. 'யாசர் அராஃபத் இறக்கவில்லை. அவர்கள்தான் 'கொன்று'விட்டார்கள். அதற்குப் பழிதீர்க்கவே இத்தாக்குதலை நிகழ்த்தினோம்' என்று அபூ மஜாத் என்கிற ஃபத்தாவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நிலைமை, மேலும் மோசமடையத் தொடங்கியது. ஹமாஸின் கோபம் ஏனைய பாலஸ்தீன் போராளி இயக்கங்களுக்கும் பரவ, ஒரு முழுநீள யுத்தம் தொடங்குவதற்கான அத்தனை சாத்தியங்களும் மிக வெளிப்படையாகத் தென்பட ஆரம்பித்தன. மம்மூத் அப்பாஸ் கவலை கொண்டார். காரணம், 2005_ம் ஆண்டு ஜனவரி பிறந்ததுமே (9_ம் தேதி) பாலஸ்தீன் அத்தாரிடிக்குப் பொதுத்தேர்தல் திட்டமிடப்பட்டிருந்தது. தாற்காலிக அதிபராக இருந்த மம்மூத் அப்பாஸை, முறைப்படி தேர்தல் மூலமே பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராக நியமித்து, பிரச்னையைத் தீர்க்கும் விதத்தில், ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டாக வேண்டிய நெருக்கடி இஸ்ரேலுக்கு இருந்தது.

ஆனால், தேர்தல் ஒழுங்காக நடைபெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. ஒரு பக்கம் ஹமாஸைச் சமாதானப்படுத்தி அவர்களையும் ஜனநாயக அரசியலுக்குள் இழுப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் 'கைதாகி சிறையில் இருந்த பல பாலஸ்தீன் போராளிகளை விடுவித்தால்தான் உங்களுக்குக் காது கொடுக்கவாவது செய்வோம்' என்று ஹமாஸ் முரண்டுபிடிக்க, இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கிக்கொண்டிருந்தார் அப்பாஸ்.

அமைதி என்று இனி எப்போது பேசுவதாக இருந்தாலும், இதுவரை கைது செய்த அத்தனை போராளிகளையும் விடுவித்துவிட்டுத்தான் பேசவேண்டும் என்று தீர்மானமாகச் சொன்னது ஹமாஸ். அந்த விஷயத்தில், ஏதாவது ஏமாற்று வேலை செய்யலாம் என்று நினைத்தால், காஸாவில் யாரும் ஓட்டுப்போட வரமாட்டார்கள் என்று எச்சரித்தார்கள். மீறி தேர்தல் நடக்குமானால், ஹமாஸ் சார்பில் யாரையாவது போட்டியிட வைப்போம் என்றும் எச்சரித்தார்கள்.

ஹமாஸ் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துவிட்டதாக அர்த்தமில்லை இதற்கு. சாலையில் நடந்துபோகும் எந்தப் பரதேசியையாவது பிடித்து, ஹமாஸ் தன்னுடைய ஆதரவு அவருக்குத்தான் என்று சொல்லி தேர்தலில் நிற்கவைத்தாலும், காஸாவில் அவருக்குத்தான் ஓட்டு விழும்! எதிர்த்து நிற்பது மம்மூத் அப்பாஸாகவே இருந்தாலும் டெபாசிட் கிடைக்காது!

காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு அத்தகையது. மேற்குக்கரையில் இது சாத்தியமில்லை என்றாலும், காஸாவில் மட்டும் தேர்தல் சீர்குலைந்தாலும் போதுமே? அது ஓர் உழக்குதான். சந்தேகமில்லாமல் உழக்குதான். அதற்குள் கிழக்கு ஒரு சாராரிடமும் மேற்கு இன்னொரு சாராரிடமும் இருந்ததுதான் விஷயம்.

என்ன செய்யலாம் என்று யோசித்தார் அப்பாஸ்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30 அக்டோபர், 2005

No comments: