Tuesday, June 21, 2005

61] அரபுக்களின் ஒற்றுமையின்மை

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 61

இஸ்ரேல் உருவான மறுதினமே யுத்தமும் ஆரம்பமாகிவிட்டபடியால், இஸ்ரேலின் அரசியல் அமைப்பு, ஆட்சி முறை போன்ற விவரங்களை உடனடியாக நம்மால் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் மிக முக்கியமான விஷயம் இது. மத்தியக்கிழக்கு என்று சொல்லப்படும் மாபெரும் நிலப்பரப்பின் 99.9 சதவிகிதத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை வேறு; 0.1 சதவிகித நிலப்பரப்பே கொண்ட இஸ்ரேலின் அரசியல் அமைப்பு முற்றிலும் வேறு.

இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடு. தோன்றிய தினத்திலிருந்தே அப்படித்தான். ஆனால் நம்முடையதைப் போன்ற ஜனநாயகம் அல்ல அது. வரையறுக்கப்பட்ட ஜனநாயகம். கிட்டத்தட்ட அமெரிக்க ஜனநாயகத்துடன் நெருக்கமாக அதை ஒப்பிடமுடியும். ஒரே ஒரு வித்தியாசம், அமெரிக்காவில் அதிபருக்குத்தான் அதிகாரங்கள். இஸ்ரேலில் பிரதமருக்கு. அந்த ஒரு விஷயத்தில் இந்திய ஜனநாயகம் மாதிரிதான். ஆனால் மற்ற அம்சங்கள் எல்லாம் பெரும்பாலும் அமெரிக்காவைப் போலவேதான்.

1948-ம் வருடம் மே மாதம் 14-ம் தேதிதான் இஸ்ரேல் பிறந்தது என்றபோதும் அந்த வருடம் மார்ச்சிலேயே ஆட்சி எப்படி இருக்கவேண்டும், என்ன மாதிரியான நிர்வாக அமைப்பை நிறுவவேண்டும் என்று யூதர்களின் சமூகத் தலைவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்திருந்தார்கள். அரபு தேசங்களுக்கு நடுவில் அமையும் தேசமாக இருந்தபோதும், அந்த தேசங்களின் அரசியல் அமைப்புச் சாயல் ஏதும் தன்னிடம் இருந்துவிடக் கூடாதென்பதில் இஸ்ரேல் ஆரம்பம் முதலே மிகத் தெளிவாக இருந்தது.

மார்ச் மாதம் முதல் தேதி முதன்முதலில் மக்கள் மன்றம் என்றொரு அதிகாரபூர்வ அமைப்பை நிறுவினார்கள். யூதர்களின் தேசியக் கமிட்டியிலிருந்து இந்த மக்கள் மன்றத்துக்குப் பிரதிநிதிகளை நியமித்தார்கள்.

இந்த மக்கள் மன்றம்தான், இஸ்ரேல் உருவானதும் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தளித்தது.

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தை 'நெஸட்' (Knesset) என்று குறிப்பிடுவார்கள். ஹீப்ரு மொழியில் 'நெஸட்' என்றால் சட்டம் இயற்றும் இடம் என்று பொருள். இதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும்.

ஆரம்பகாலத்தில் நாடாளுமன்றத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தன. கிட்டத்தட்ட மன்னராட்சி போலவே தோற்றமளிக்கும்படியான அதிகாரங்கள். பிறகு இந்த அதிகாரங்களில் கொஞ்சம் நீதிமன்றத்துக்குப் போனது. எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் பிரதம மந்திரியின் வசம் தஞ்சம் புகுந்தது.

ஒரு சம்பிரதாயத்துக்காக அதிபர் என்றொருவரை இஸ்ரேல் வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் எந்த அதிகாரமும் அவருக்குக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைப்பது தவிர!

இஸ்ரேலில் ஒரு கட்சி ஆட்சி என்கிற வழக்கம் என்றைக்குமே இருந்ததில்லை. எப்போதும் ஜேஜே என்று குறைந்தது பதினைந்து இருபது கட்சிகளாவது சேர்ந்துதான் நாடாளுமன்றத்தை வழி நடத்தும். ஒரு கட்சி நாடாளுமன்றத்துக்குள் நுழையவேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு நிபந்தனை உண்டு. தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 1.5 சதவிகிதமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.

கூட்டணி அரசு என்றாலும் உறுதிமிக்க கூட்டணியாகத்தான் எப்போதும் இருக்கும். ஏனெனில் கட்சி வேறுபாடுகள் இருப்பினும் யூத இனம் என்கிற ஓரம்சத்தால் அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்படுவார்கள். இது அரசியலுக்கும் அப்பாற்பட்ட பிணைப்பு!

நம் ஊரில் செய்வதுபோல நினைத்துக்கொண்டாற்போல் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பிரதமரைக் கவிழ்ப்பதெல்லாம் இஸ்ரேலில் முடியாது. குடியரசுத் தலைவர் மாளிகை முன்னால் தர்ணா நடத்தினாலும் நடக்காது. அதிபரே விரும்பினாலும் பிரதமரை மாற்ற முடியாது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பிரதமரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்று நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கலாம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடுகள் ஏதுமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து இந்தக் காரியத்தை ஆத்மசுத்தியுடன் செய்தால், பிரதமர் தனியாக நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கப் போரடித்து தானாகவே ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்!

இஸ்ரேலின் இந்த ஐம்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இப்படி நடந்திருக்கிறது. 2000-வது வருடம் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக் (Ehud Barak) பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டிருக்கிறார்.

மற்றபடி இஸ்ரேலில் ஒரு பிரதமரை மாற்றுவது என்பது, அமெரிக்காவில் அதிபரை மாற்றுவது எத்தனை சிரமமோ அத்தனை சிரமம்.

இம்மாதிரியான ஏற்பாடு எதற்காக என்றால், சர்வதேச அளவில் தன்னை யாரும் சரிவர அங்கீகரிக்காத நிலையில், உள்நாட்டிலும் எப்போதும் குழப்பம் சூழ்ந்தவண்ணமே இருந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான். என்னதான் அமெரிக்கா ஆதரிக்கிறது என்றாலும் அக்கம்பக்கத்தில் தோழமையுடன் ஒரு புன்னகை செய்யக்கூட இஸ்ரேலுக்கு யாரும் கிடையாது. பெரும்பாலான ஆசிய தேசங்களும் இஸ்ரேலின் பாலஸ்தீன விரோத நடவடிக்கைகளை முன்னிட்டுத் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தபடியே தான் இருக்கின்றன. தனித்து நின்று போராடி வாழ்ந்தாக வேண்டிய இருப்பியல் நெருக்கடி இஸ்ரேலுக்குத் தொடக்ககாலம் முதலே இருந்து வருவதால், ஆட்சிமுறையில் இப்படியான சில இரும்புத்தனங்களைச் செய்துகொண்டார்கள்.

ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்துவிட்டால், என்ன ஆனாலும் அவர் சொல்பேச்சு கேட்பது என்பதுதான் இஸ்ரேலியர்களின் இயல்பு. தவறு செய்கிறாரென்று தெரிந்தாலும் தமக்குள் பேசிக்கொள்வார்களே தவிர, பொதுவில் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்.

அரசாங்கம் அங்கே மீடியாவை மிகவும் போஷாக்குடன் வைத்துக்கொள்வது வழக்கம். குறிப்பாகப் பத்திரிகைகள், நாளிதழ்கள். யூதப் பத்திரிகைகள் அங்கே இழுத்து மூடப்பட்டதாகச் சரித்திரமே கிடையாது. ஓடாத பத்திரிகைகள்கூட நூலக ஆர்டரின் பேரில் உயிர்வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். சுமார் 25 தினசரிப் பத்திரிகைகள் இஸ்ரேலில் இருக்கின்றன. அவற்றுள் 11 ஹீப்ரு மொழிப் பத்திரிகைகள். நான்கு அரபுமொழிப் பத்திரிகைகள். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹங்கேரியன், ருமேனியன், ரஷ்யன், ஜெர்மன் மொழிப் பத்திரிகைகள் தலா ஒன்று.

பெரும்பாலும் ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து இஸ்ரேலில் வாழத் தொடங்கிய யூதர்கள்தான் என்பதால், அந்தந்த தேசத்து மொழிகளில் ஒரு பத்திரிகையாவது இருக்கவேண்டுமென்று திட்டமிட்டு, இஸ்ரேல் அரசாங்கமே உதவி செய்து ஆரம்பித்துவைத்த பத்திரிகைகள் இவை. ஹீப்ரு மொழியின் சிதைந்த பேச்சு வழக்கு மொழியான இட்டிஷ் மொழியிலும் ஒரு தினசரிப் பத்திரிகை உண்டு.

தேசம் உருவான தினம் முதல் இன்றுவரை இஸ்ரேலில், அரசுக்கும் பத்திரிகைகளுக்குமான உறவு மிக அற்புதமான நிலையிலேயே இருந்துவருவது ஓர் உலக ஆச்சர்யம். எந்த ஒரு இஸ்ரேல் தினசரியும் அரசைக் கடுமையாக விமர்சிக்காது. அதே சமயம் கட்சிப் பத்திரிகை போலத் துதி பாடுவதும் கிடையாது. செய்தியை, செய்தியாக மட்டுமே வழங்குவது என்பது இஸ்ரேல் பத்திரிகைகளின் பாணி. தன் விமர்சனம் என்று எதையும் அவை முன்வைப்பதே இல்லை பெரும்பாலும்!

Yedioth Aharonoth என்கிற ஹீப்ரு மொழி செய்தித்தாள்தான் இஸ்ரேலில் மிக அதிகம் விற்பனையாகும் பத்திரிகை. மொத்தம் மூன்று லட்சம் பிரதிகள்.

பத்திரிகைகளுக்கும் அரசுக்கும் மட்டுமல்ல; பத்திரிகைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் கூட அங்கே மிக நல்ல உறவு உண்டு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று இதுவரை எந்தப் பத்திரிகை மீதும் எந்தக் காலத்திலும் யாரும் தொடுத்ததில்லை.

இஸ்ரேல் நீதிமன்றங்கள் பற்றிச் சொல்லவேண்டும். அங்கே இருவிதமான நீதி அமைப்புகள் செயல்படுகின்றன. ஒன்று சிவில் நீதிமன்றங்கள். இன்னொன்று, மத நீதிமன்றங்கள். சிவில் நீதிமன்றங்களில் வழக்கமான வழக்குகள் மட்டும் ஏற்கப்படும். திருமணம், திருமண முறிவு உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள், மதம் தொடர்பான பிரச்னைகளைக் கையாளும். குடும்ப கோர்ட் என்று இங்கே சொல்லப்படுவது போலத்தான். ஆனால் இஸ்ரேலில் குடும்பப் பிரச்னைகள் நீதிமன்றங்களுக்கு வருமானால் மிகவும் அக்கறையெடுத்து கவனிக்கப்படும். இஸ்ரேலில் வாழ்பவர்கள் மட்டும்தான் என்றில்லை. உலகெங்கும் வசிக்கும் யூதர்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் இஸ்ரேலில் இயங்கும் நீதிமன்றங்களை அணுக முடியும்.

அடுத்தபடியாக இஸ்ரேல் ராணுவம். ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் கொண்ட முதல்நிலைப் படை. நான்கு லட்சத்து முப்பதாயிரம் பேர் கொண்ட ரிசர்வ் ராணுவப்படை. விமானப்படையில் முப்பத்திரண்டாயிரம் பேர். கப்பல் படையில் பத்தாயிரம் பேர்.

இன்றைய தேதியில் வெளியில் தெரிந்த இஸ்ரேல் ராணுவத்தின் பலம் இதுதான். ஆனால் சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் 1957 முதலே அவர்களிடம் இதே பலம்தான் இருந்து வந்திருக்கிறது என்பது புலப்படும்.

ஆள்பலம் குறைவானாலும் இஸ்ரேல் தன் வீரர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் பிரும்மாண்டமானவை. உலகெங்கும் எங்கெல்லாம் மிகச்சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறதோ, அங்கெல்லாம் தனது படையினரை அனுப்பி, தொடக்க காலத்தில் போர்ப்பயிற்சி அளித்திருக்கிறார்கள். பின்னால் இஸ்ரேலே பல தேசங்களுக்குப் பயிற்சியளிக்கும் அளவுக்கு ராணுவத் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற தேசமாகிவிட்டது. இது விஷயத்தில் அமெரிக்காவின் உதவி மிகவும் குறிப்பிடப்படவேண்டியதொரு அம்சமாகும்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை மட்டும் வழங்கவில்லை. மாறாக அவற்றைப் பயன்படுத்துவதில் பயிற்சி, போர்க்காலங்களைச் சமாளிக்கும் நிர்வாகத் திறன் பயிற்சி, ஒற்றறியும் கலையில் பயிற்சி, உளவு நிறுவனங்களை அமைத்து, கட்டிக்காத்து, வழிநடத்துவதற்கான பயிற்சி என்று பார்த்துப் பார்த்துச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. இஸ்ரேல் தன் பங்குக்குத் தொழில் நுட்பத்துறையில் அடைந்த அபரிமிதமான வளர்ச்சி, அத்தேசத்தின் ஆயுத பலத்தை மிகவும் நவீனப்படுத்தியது.


அமெரிக்காவுக்கு ஒரு சி.ஐ.ஏ. மாதிரி இஸ்ரேலுக்கு ஒரு மொஸாட். உலகின் மூன்றாவது மிகப்பெரிய உளவு நிறுவனம் என்று சொல்லப்படும் மொஸாட், இஸ்ரேலின் இரண்டாவது அரசாங்கம். நிழல் அரசாங்கம்.

இத்தனை வலுவான பின்னணியை வைத்துக்கொண்டிருந்தாலும் இஸ்ரேலின் பலம் இவை எதுவுமே இல்லை.

மாறாக, யூதர்கள் என்று இனத்தால் தாங்கள் ஒன்றுபட்டவர்கள் என்கிற பெருமித நினைவுதான் இஸ்ரேலை இன்றளவும் உயிர்பிழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இன்றுவரை ஆதரிக்கும் அமெரிக்கா, நாளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உலகமே திரண்டு இஸ்ரேலை எதிர்க்கலாம். மீண்டும் அவர்கள் ஊர் ஊராக ஓட வேண்டி நேரலாம். என்ன ஆனாலும் இஸ்ரேல் மக்களை முற்றிலுமாக அழித்துவிடவே முடியாது. இன்னும் ஆயிரம் ஹிட்லர்கள் தோன்றினாலும் முடியாது.

காரணம், யூதர்களின் ஒற்றுமை அப்படிப்பட்டது. எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொண்டு சந்தர்ப்பம் பார்த்துத் திருப்பியடிக்கத் தெரியும் அவர்களுக்கு. இதுதான், இது ஒன்றுதான்.

இந்த ஒற்றுமை அரேபியர்களிடம் இல்லாததுதான் பாலஸ்தீனின் அவலநிலைக்கு ஆதாரக் காரணம்.

பாலஸ்தீன் அரேபியர்களுக்காகப் பரிதாபப்படலாம், கண்ணீர் சிந்தலாம். கவலை தெரிவிக்கலாமே தவிர, யாராலும் உருப்படியாக எந்த உதவியும் செய்யமுடியாமல் இருப்பதற்குக் காரணம் இதுதான். அரபுக்களிடையே ஒற்றுமை கிடையாது.

இது இஸ்ரேலுக்கு மிக நன்றாகத் தெரியும். அவர்களின் ஒற்றுமைக் குறைபாடு உயிருடன் இருக்கும்வரை தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை யூதர்கள் அறிவார்கள்.

யூதர்களின் இந்த மனோபாவத்தை, அரேபியர்களின் இந்த இழிநிலையை உணர்வுபூர்வமாக அறிந்து, அறிவுபூர்வமாகச் சிந்தித்து, உருப்படியான ஒரு வழியைக் காட்ட 1948-ல் ஒரே ஒரு நபர்தான் இருந்தார். அவர் அப்போது தலைவரெல்லாம் இல்லை. பதினெட்டு, பத்தொன்பது வயது இளைஞர். எகிப்தில் பிறந்த பாலஸ்தீன்காரர். கெய்ரோவில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்.

அவர் பெயர் முகம்மது அப்துல் ரெஹ்மான் அப்துல் ரவூஃப் அரஃபாத் அல் குதா அல் ஹுஸைனி. (Mohammed Abdel Rahman Abdel Raouf Arafat Al Qudua Al Husseini).

சுருக்கமாக அரஃபாத். பின்னால் ஒரு நட்சத்திரமானபோது யாசிர் அரஃபாத் என்று அழைக்கப்பட்டவர்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 23 ஜூன், 2005

No comments: