Tuesday, May 24, 2005

52] இரண்டாவது மிகப்பெரிய தவறு

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 52

இரண்டாம் உலகப்போரின் சூடு, ஒட்டுமொத்த உலகத்தையும் தாக்கிக்கொண்டிருந்த நேரம். ஐரோப்பா தொடங்கி ஆப்பிரிக்கா வரை யுத்தத்தின் சத்தம் மிகப் பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததால், ஹிட்லரின் யூத இனப்படுகொலைகள் அந்த நேரத்தில் சற்று மெதுவாகவே மக்களுக்குத் தெரியவந்தன. யூதர்கள் மட்டும் தாம் வாழும் தேசங்களில் ஹிட்லருக்கு எதிரான போராட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டம் என்று அமர்க்களப்படுத்தி விஷயத்தை அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டிராவிட்டால், ஒருவேளை இன்றைக்குக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச விவரங்கள்கூட கிடைக்காமலே போயிருக்கக்கூடும்.

என்ன செய்து ஹிட்லரிடமிருந்து தப்பிக்கலாம் என்பதுதான் அன்றைக்கு ஒட்டுமொத்த யூதகுலத்தின் ஒரே கவலையாக இருந்தது. யாராலுமே நெருங்கமுடியாத, யாருமே எதிர்க்கமுடியாத ஒரு ராட்சஸ சக்தியாக அவர் இருந்தார். குரூரம் மட்டும் அவரது குறைபாடல்ல. மாறாக, அவர் ஒரு முழு முட்டாளாகவும் இருக்க நேர்ந்தது துரதிருஷ்டம்தான். எடுத்துச் சொல்லப்படும் எந்த விஷயமும் ஹிட்லரின் சிந்தனையைப் பாதிக்காது என்பது தெரிந்தபிறகு அவரிடம் பேசுவதற்குக்கூட யாரும் முன்வரவில்லை. ஹிட்லர் ஆதரவுத் தலைவர்கள், ஹிட்லர் எதிர்ப்புத் தலைவர்கள் என்றுதான் இருந்தார்களே தவிர, நல்லவிதமாகப் பேசி அவரைச் சரிப்படுத்தும் நிலையில் யாருமே இல்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாகும்.

இது அன்றைக்கு மற்ற யாரையும்விட, பாலஸ்தீன் மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.

ஏற்கெனவே உலகெங்கிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். கட்டுப்படுத்தவே முடியாத ஒரு மாபெரும் இனப்பெயர்ச்சியாக இருந்தது அது. ஹிட்லர் ஒருவேளை தன் திட்டப்படி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் கபளீகரம் செய்துவிட்டால் வேறு வழியே இல்லை. அத்தனை லட்சம் ஐரோப்பிய யூதர்களும் தப்பி ஓடிவரக்கூடிய ஒரே இடம் பாலஸ்தீனாகத்தான் இருக்கும்.

சட்டபூர்வமாக அதை ஒரு யூத தேசமாக ஆக்க முயற்சி செய்துகொண்டிருந்த யூதர்களுக்கு, விஷயம் மிகவும் சுலபமாகிப்போகும். ஒரு வாக்கெடுப்பு நடத்தினால்கூட பெரும்பான்மை யூதர்களாகவே அப்போது இருப்பார்கள்.

என்ன செய்யலாம் என்று முஸ்லிம் தலைவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். ஹிட்லரின் யூதப் படுகொலைகளை ஆதரிக்கவோ எதிர்க்கவோ அவர்களுக்கு விருப்பமில்லை. மாறாக, ஹிட்லராவது தங்களுக்கு உதவமாட்டாரா என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்!

அதாவது ஹிட்லர் கொன்றதுபோக, அடித்துத் துரத்தப்படும் யூதர்கள் பாலஸ்தீனுக்கு வந்துவிடாமல் இருக்க ஏதாவது ஒரு வழி வேண்டும் அவர்களுக்கு. பிரிட்டனிடம் இதற்காக உதவி கேட்கமுடியாது. ஏற்கெனவே இஸ்ரேலை உருவாக்குவதற்காக வரிந்துகட்டிக்கொண்டிருக்கும் தேசம் அது. உலகப்போர் தொடங்கிய சமயம் பிரிட்டனின் பிரதமராகப் பொறுப்பேற்ற வின்ஸ்டன் சர்ச்சில், தொடக்கத்திலிருந்தே யூதர்கள் மீது அனுதாபம் கொண்டவராகவே தன்னைக் காட்டிக்கொண்டு வந்தவர். அமெரிக்காவிடம் போகலாமென்றால், அவர்களும் ஜெர்மானிய யூதர்களின் மீது ஏற்பட்ட அனுதாபம் காரணமாக, முழு யூத ஆதரவு நிலை எடுக்கும் கட்டத்தில் இருந்தார்கள். சரித்திர நியாயங்கள் யாருக்கும் அப்போது முக்கியமாகப் படவில்லை. ஹிட்லர் என்கிற தனிமனிதனின் வெறியாட்டத்தால் ஓர் இனமே அழிந்துகொண்டிருக்கிறது; எப்படியாவது, ஏதாவது செய்து யூதர்களைக் காப்பாற்றவேண்டும் என்றுதான் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் சிந்தித்தன.

விசித்திரம் பாருங்கள். அத்தனை தேசங்களுமே ஒவ்வொரு காலகட்டத்தில் யூதப் படுகொலைகளை நிகழ்த்தியவைதான். ஆனால் ஹிட்லர் செய்தவற்றோடு ஒப்பிட்டால், எதுவுமே சாதாரணம்தான் என்று நினைக்கத்தக்க அளவில் நடந்துகொண்டிருந்தது ஜெர்மானிய நாஜிக்கட்சி.

என்ன செய்யலாம்? உட்கார்ந்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள், பாலஸ்தீன் அரேபியர்கள். எப்படியும் போரின் இறுதியில் பிரிட்டன் கூட்டணிப் படைகள் வெற்றி பெற்றுவிட்டால் இஸ்ரேலை உருவாக்காமல் விடமாட்டார்கள் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. போரில் பிரிட்டன் தோற்கவேண்டும் என்று கடவுளையா வேண்டிக்கொள்ளமுடியும்? பிரிட்டன் தோற்பதென்றால் ஹிட்லர் ஜெயித்தாகவேண்டும். ஹிட்லர் ஜெயித்தால் யூதர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் நாசமாவது தவிர, வேறு வழியே இல்லை.

ஆனாலும் முஸ்லிம்களுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைக்கலாமென்று அவர்கள் நினைத்தார்கள். குறைந்தபட்சம், யூதர்களுக்கு எதிரான ஒரு காரியம் செய்கிறோம் என்கிற சந்தோஷத்திலாவது ஹிட்லர் தமக்கு உதவலாம் என்பது அவர்கள் எண்ணம்.

மறுபுறம், உலகப்போரில் பிரிட்டனை மிகப் பலமாக ஆதரித்த யூதகுலத்தவர்கள், ஆயிரமாயிரம் பேராக, சுயமாக பிரிட்டனை அணுகி, படையில் தம்மைச் சேர்த்துக்கொள்ளக் கேட்டு நிற்கத் தொடங்கினார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது வாழ்வா, சாவா யுத்தம். ஹிட்லருக்கு எதிராக யார் திரண்டாலும் தமது ஆதரவு அவர்களுக்கு உண்டு என்பது மட்டும்தான் யூதர்களின் நிலைப்பாடு.

யூத தேசிய காங்கிரஸின் அப்போதைய தலைவராக இருந்தவர் டேவிட் பென்குரியன். பிரிட்டனுடன் மிக நெருக்கமான அரசியல் உறவு கொண்டவர். பல உரசல்களைத் தாண்டியும் நெருக்கம் குலையாத உறவு அது. பிரிட்டன் மிகவும் வெளிப்படையாக இஸ்ரேல் உருவாக்கப்படும் என்பதை அறிவிக்க வேண்டுமென்று அப்போது வற்புறுத்திவந்தவர் குரியன். சர்ச்சிலோ, ‘யுத்தம் முடிந்தபிறகு அதைப் பற்றிப் பேசலாம்; இப்போது வேண்டாம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

எப்படியும் சர்ச்சில் செய்துவிடுவார் என்பது குரியனுக்குத் தெரியும். ஆனாலும் போரின் தன்மை எப்படி மாறும் என்று கணிக்கமுடியாமல் இருந்தது. உண்மையில், அமெரிக்கா யுத்தத்தில் இறங்கும்வரை, ஹிட்லரின் கைதான் மேலோங்கியிருந்தது. இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினியுடன் சேர்ந்துகொண்டு, இன்னொரு பக்கம் ஜப்பான் உதவிக்கு இருக்கிற தைரியத்தில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தது அவரது ராணுவம். ஜெர்மனியின் உண்மையான பலம் இவை மட்டுமல்ல. பொறியியல் துறையில் அந்தக் காலத்தில் கிட்டத்தட்ட தன்னிறைவு கண்டிருந்த தேசம் அது. ஆயுதங்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பிலும் பிரயோகத்திலும் மற்ற தேசங்கள் எதுவும் நெருங்கமுடியாத தரத்தைத் தொட்டுவிட்டிருந்தது ஜெர்மனி.

இந்த தைரியம்தான் ஹிட்லரை எதைக் கண்டும் பயப்படாத மனநிலைக்குக் கொண்டுசேர்த்திருந்தது. ஜெர்மனியின் ஒவ்வொரு குடிமகனும் தனது படைவீரன்தான் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். கட்டாய ராணுவ சேவை அமலில் இருந்தது பெரிய விஷயமல்ல. முதியோர், பெண்கள் உள்பட ஜெர்மானியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஏதாவது விதத்தில் யுத்தத்தில் பங்கெடுக்கவேண்டுமென்பதை அவர் மிகவும் வற்புறுத்தினார். ஆள்பலமும் ஆயுதபலமும் அவரைக் கிரக்கம் கொள்ளச் செய்தன. இயல்பான முரட்டுத்தனமும் வெறியும் அவரைச் செலுத்திக்கொண்டிருந்தன.

இதுதான் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஓரளவு நம்பிக்கையளித்த விஷயம். பிரிட்டன், அமெரிக்க, பிரான்ஸ் கூட்டணி நாடுகள் ஒருபோதும் தம்மை ஆதரிக்கப்போவதில்லை என்பது தெளிவானதுமே பாலஸ்தீன் அரேபியர்கள் ஹிட்லரை ஆதரித்துவிடலாமென்று முடிவு செய்தார்கள்.

அரேபியர்கள் தமது சரித்திரத்தில் செய்த இரண்டாவது மிகப்பெரிய தவறு இது. அவர்கள் செய்த முதல் தவறு, யூத நில வங்கிகளின் நோக்கம் தெரியாமல் தங்கள் நிலங்களை இழந்தது. இரண்டாவது இது.

பிரிட்டனின் காலனிகளுள் ஒன்றாக இருந்த பாலஸ்தீனில் அப்போது முஸ்லிம்களுக்கென்று பிரமாதமான அமைப்பு பலமோ, நட்பு பலமோ கிடையாது. அவர்கள் சிதறிய பட்டாணிகளாகத்தான் இருந்தார்கள். எல்லோருக்கும் பொதுவான ஒரே விஷயம் எல்லோருமே யூதர்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதுதான்.

முகம்மது அமீன் அல் ஹுஸைனி என்பவர் அன்றைக்கு பாலஸ்தீன முஸ்லிம்கள் சமூகத்தின் தலைவராக இருந்தார். 1893-ம் வருடம் ஜெருசலேமில் பிறந்தவர் இவர். மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பணக்காரர் என்றால் ஒட்டாமான் சாம்ராஜ்ஜியத்திலேயே மிகப்பெரிய பணக்காரக் குடும்பம் என்று பெயர்பெற்ற அளவுக்குப் பணக்காரர்.

தமது சொத்து சுகங்கள் முழுவதையும் கொடுத்தாவது பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிம்மதியைத் தேடித்தரமுடியுமா? என்று பாடுபட்டுக்கொண்டிருந்தவர் அவர். இந்தக் குணங்களால் அவரை மக்கள் ‘கிராண்ட் முஃப்தி’ என்று அழைத்தார்கள். அவர் சொன்ன பேச்சைக் கேட்டார்கள்.

புத்திசாலி; திறமைசாலி; பொதுநல நோக்குக் கொண்டவர், அரசியலில் தெளிவான பார்வை உள்ளவர் என்று எத்தனையோ விதமாகப் பாராட்டப்பட்ட ஹுசைனிதான் அந்தத் தவறைச் செய்தார்.

உலகப்போரில் ஹிட்லருக்கு ஆதரவு!

மனித மனங்களின் விசித்திரங்களைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவேண்டும். ஹிட்லர் எத்தனை ஆபத்தான மனிதர் என்று பாலஸ்தீன் அரேபியர்களுக்குத் தெரியாதா? நிச்சயம் தெரியும். ஆனாலும் அந்த நேரத்தில் தங்களுக்கு உதவ அவரைவிட்டால் வேறு ஆள் இல்லை என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம், ஹிட்லருக்கு யூதர்களைப் பிடிக்காது என்பது மட்டும்தான்!

ஹுஸைனி, ஜெர்மனிக்குப் போய் ஹிட்லரைச் சந்தித்துப் பேசினார். யுத்தத்தில் பாலஸ்தீன் முஸ்லிம் சமூகத்தினர் முழு மனத்துடன் அவரை ஆதரிப்பார்கள் என்று வாக்குக் கொடுத்தார். சிறிய அளவிலாவது ஒரு ராணுவத்தைத் திரட்டித் தர தம்மால் முடியும் என்றும் சொன்னார்.

யுத்தம் மிகத்தீவிர முகம் கொள்ளத்தொடங்கியது. முஸ்லிம்கள் தம் தலையில் தாமே மண்ணை வாரிக்கொட்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 22 மே, 2005

No comments: