Tuesday, May 24, 2005

53] ஹிட்லரின் தற்கொலை

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 53

ஜெர்மனியில் ஹிட்லரின் ராஜாங்கம் ஆரம்பமானதிலிருந்து, அவரது மறைவை ஒட்டி ஒரு முடிவுக்கு வந்த இரண்டாம் உலக யுத்தம் வரை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளவேண்டுமானால், அதற்கு ஏராளமான சுவாரசியமான புத்தகங்கள் இருக்கின்றன. வில்லியம் ஷிரரின் The Rise and Fall of the Third Riech படித்துப் பாருங்கள். ஒரு திரைப்படம் பார்ப்பது போலவே இருக்கும். ஹிட்லரின் யூதப் படுகொலைகள், அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் யூதர்கள் பிரிட்டனின் கூட்டணிப் படைகளுக்கு அளித்த ஆதரவு, என்ன செய்தாவது தங்கள் தேசத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பதைப்பில் பாலஸ்தீனிய முஸ்லிம்கள் ஹிட்லருக்கு ஆதரவு தெரிவித்தது... இந்த மூன்று விஷயங்கள்தான் இங்கே முக்கியம்.

இதில், முஸ்லிம்களின் இந்த முடிவு மிகவும் அபத்தமானது; துரதிருஷ்டவசமானது. யுத்தத்தில் அவர்கள் எந்தப்பக்கமும் சாயாமல் இருந்திருந்தால் கூடக் கொஞ்சம் அனுதாபம் மிச்சம் இருந்திருக்கும். எப்போது அவர்கள் ஹிட்லரை நம்பினார்களோ, அப்போதே அவர்களின் விதி எழுதப்பட்டுவிட்டது.

உலக யுத்தம் தொடங்கிய முதல் ஒன்று, ஒன்றரை ஆண்டுகள் வரை ஹிட்லரின் கைதான் பெரிதும் மேலோங்கியிருந்தது. ஆனால் பின்னால் நிலைமை அப்படியே தலைகீழாகி, ஜெர்மன் இத்தாலி ஜப்பான் ராணுவங்களை பிரிட்டனும் அமெரிக்காவும் பிரான்ஸும் பார்த்த இடங்களிலெல்லாம் உதைக்கத் தொடங்கின. பர்ல் துறைமுகத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜப்பான் மீது அமெரிக்கா கொண்ட வெறி, ஜெர்மனிக்கும் மிகப்பெரிய எமனாக விடிந்தது. அமெரிக்கா என்பது எத்தகைய சக்திகளைக் கொண்ட தேசம் என்பதும் முதல் முதலில் அப்போதுதான் முழுமையாகத் தெரியவந்தது.

1944-ம் ஆண்டின் இறுதியில் பிரிட்டன் கூட்டணிப் படைகளின் வெற்றியை எல்லோரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரிட்டனில் அவ்வப்போது கூடிய தொழிற்கட்சிக் கூட்டங்களில் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேலை உருவாக்கித் தருவது பற்றி நிறையவே விவாதித்தார்கள். பாலஸ்தீனிய முஸ்லிம்களின் ஜெர்மானிய ஆதரவு நிலை அவர்களை மிகவும் வெறுப்பேற்றியிருந்ததை மறுக்க முடியாது. அது மட்டும்தான் காரணம் என்றில்லாவிட்டாலும், அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

அரேபியர்களைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் ‘அரேபியர்களுக்கு இடமா இல்லை? மத்தியக் கிழக்கின் எல்லா நிலப்பரப்பும் அவர்களது மூதாதையர்களின் இடங்கள்தானே? பாலஸ்தீனிய அரேபியர்கள் எங்குவேண்டுமானாலும் போய் வசிக்கலாமே? பெருந்தன்மையுடன் அவர்கள் பாலஸ்தீனை யூதர்களுக்கு காலி பண்ணிக்கொடுத்தால்தான் என்ன? யூதர்கள்தான் பாவம் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்’ என்று பேசினார்கள்.

யுத்தம் முடிந்த சூட்டில் பிரிட்டனிலும் தேர்தல் ஜுரம் வந்துவிடப்போகிறது என்கிற சூழ்நிலை. ஆகவே பேசுகிற ஒவ்வொரு பேச்சையும் ஓட்டாக மாற்றிப் பேசியாக வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருந்தது. அப்போதைய தொழிற்கட்சி உறுப்பினர்களுள் மிகவும் பிரபலமானவர்கள், க்ளெமண்ட் அட்லி, ஹெர்பர்ட் மாரிசன், எர்னெஸ்ட் பெவின் ஆகியோர். இவர்கள், அப்போதைய பிரிட்டன் பிரதமரான சர்ச்சிலின் யுத்த ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகித்தார்கள்.

ஆலோசனைக் கூட்டங்களில் என்ன பேசினாலும் உடனே அதை மக்கள் மத்தியிலும் வந்து ஒப்பித்துவிடுவார்கள். தங்கள் கட்சி, யூதர்கள் விஷயத்தில் மிகவும் வெளிப்படையான நிலையையே எடுக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ளவே இந்த ஏற்பாடு. இஸ்ரேலை உருவாக்கும்போது, ‘தற்போதுள்ள பாலஸ்தீனிய எல்லைகளைச் சற்று மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருந்தால் அதையும் பரிசீலிப்போம்’ என்று பேசினார்கள். அதாவது, தேவையிருப்பின் எகிப்து, சிரியா, ஜோர்டன் (அன்றைக்கு அதன் பெயர் டிரான்ஸ்ஜோர்டன்) ஆகிய பாலஸ்தீனின் அண்டை நாடுகளுடன் கலந்து பேசி, எல்லைகளைச் சற்று விஸ்தரித்து அமைக்கலாம் என்பது தொழிற்கட்சியின் திட்டமாக இருந்தது. எப்படி இருந்தாலும் மேற்சொன்ன தேசங்கள் எல்லாமே யுத்தத்தின் முடிவில் பிரிட்டன் கூட்டணி தேசங்கள் எதாவது ஒன்றின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் இருக்கும்; பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்பது அவர்கள் யோசனை.

என்ன செய்தும் தாக்குப்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு ஏப்ரல் 30, 1945-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். சரியாக எட்டு தினங்கள் கழித்து இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஐரோப்பாவையும் யூதர்களையும் பிடித்த சனி அன்றுடன் விலகிக்கொண்டது. யுத்தத்தில் மொத்தம் அறுபது லட்சம் பேர் இறந்தார்கள். அதில் மூன்றில் ஒரு பங்கு யூதர்கள் என்று ஒரு கணக்கு இருக்கிறது. இது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கணக்கு என்று எடுத்துக்கொண்டாலும் குறைந்தது இருபது லட்சம் யூதர்களாவது ஹிட்லர் என்கிற தனிமனிதனின் வெறியாட்டத்துக்கு பலியானது உண்மையே.

பாலஸ்தீன் என்கிற தேசம் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் சமமான அளவு பாத்தியதை உள்ளதுதான் என்கிற சரித்திர உண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஒட்டுமொத்த மேலை தேசங்களும் இஸ்ரேல் உருவாவதற்கு ஆதரவு தெரிவித்ததற்கும் இதுதான் காரணம். யூதர்கள் மீதான அனுதாபம். மிச்சமிருக்கும் யூதர்களாவது இனி நிம்மதியாக வாழட்டுமே என்கிற இரக்கம்.

அந்த வகையில் இஸ்ரேல் உருவானதற்கு பிரிட்டனைக் காட்டிலும் ஹிட்லர்தான் மூலகாரணம் என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது!

அனுதாபம் வரலாம், தவறில்லை; ஆனால் ஏன் பாலஸ்தீனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? வேறு இடமா இல்லை என்கிற புராதனமான கேள்வி இங்கே மீண்டும் வரலாம். வேறு வழியே இல்லை. இதெல்லாம் நடக்கும், இப்படித்தான் நடக்கமுடியும் என்று எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே யோசித்து பாலஸ்தீனில் நில வங்கிகளைத் தொடங்கி, பெரும்பாலான இடங்களை வளைத்துப் போட்டுக் காத்திருந்த யூதர்கள், இன்னொரு இடம் என்கிற சிந்தனைக்கு இடம் தருவார்களா? யூதகுலம் சந்தித்த மாபெரும் இழப்புகளுக்கெல்லாம், அவல வாழ்வுக்கெல்லாம் ஓர் அர்த்தம் உண்டென்றால் அது பாலஸ்தீனை அடைவதாகத்தான் இருக்க முடியும் என்று பெரும்பாலான ஐரோப்பிய தேசங்கள் அப்போது நினைக்கத் தொடங்கிவிட்டன. அங்குள்ள அரேபியர்கள் என்ன ஆவார்கள்? இவர்கள் சுகமாக வாழ்வதற்காக அவர்கள் அவதிப்படவேண்டுமா என்றெல்லாம் அவர்கள் யோசிக்கத் தயாராக இல்லை.

யார் எக்கேடு கெட்டால் என்ன? யுத்தம் முடிந்துவிட்டது. இனி கொஞ்சம் ஓய்வெடுத்தாக வேண்டும். யூதர்களுக்கு இஸ்ரேலைத் தந்துவிடலாம். அவர்களும் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்.

இதனிடையில் சுமார் ஆறு லட்சம் யூதர்கள் பாலஸ்தீனில் நன்றாக வேர் விட்டுக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டிருந்தார்கள். சுத்தமாகத் துடைத்துவிடப்பட்டு ஒரு யூதர் கூட இல்லாதிருந்த பாலஸ்தீன்! சலாவுதீன் மன்னன் காலத்தில் புறப்பட்டுப் போய்விட்டார்கள் அவர்கள். எத்தனை தலைமுறைகள்! எங்கெங்கோ சுற்றி, என்னென்னவோ கஷ்டப்பட்டவர்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பத்துப் பத்துப் பேராக, நூறு நூறு பேராக உள்ளே நுழையத் தொடங்கியவர்கள்தான் யுத்தத்தின் முடிவில் ஆறு லட்சம் பேராகப் பெருகியிருந்தார்கள்.

1917-ல் உருவான பால்ஃபர் பிரகடனம் 1939-ம் ஆண்டு யுத்தம் தொடங்குவதற்கு முன்பு வரை அப்படியே உயிருடன் தான் இருந்தது. ‘இஸ்ரேலை உருவாக்கித் தருவோம்.’ பிரிட்டனின் வாக்குறுதி அது. யுத்தம் தொடங்கியதிலிருந்து கவனம் திசை மாறிவிடவே, மீண்டும் அதை எடுத்து தூசிதட்டி உடனடியாக முடித்துத்தரக் கேட்டார்கள் யூதர்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், எங்கே பிரிட்டன் தங்களை ஏமாற்றிவிடுமோ என்று அஞ்சிய சில யூதர்கள், ரகசியமாக புரட்சிப் படைகளையெல்லாம் அவசர அவசரமாக உருவாக்கி, பாலஸ்தீனின் பாலைவனப்பகுதிகளில் போர்ப்பயிற்சிகளெல்லாம் செய்துகொண்டிருந்தார்கள்.

யுத்தத்துக்குப் பிறகு உடனடியாக அறிவிக்கப்பட்ட பிரிட்டனின் செயல் திட்டங்களுள் இஸ்ரேல் உருவாவது பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாததே இதற்குக் காரணம்.

இத்தகைய புரட்சிகர அமைப்புகள் ஆங்காங்கே சில சில்லறை வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. ‘பாலஸ்தீனிலிருந்து பிரிட்டன் ராணுவத்தினரை வெளியேற்றுவோம்’ என்று சொல்லிக்கொண்டு இவர்கள் போராடத் தொடங்கினார்கள். இதில் பிரிட்டனுக்கு மிகவும் இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இஸ்ரேல் உருவாவதற்குத்தான் அவர்கள் பாடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இடையில் யூதர்களே வில்லன்களாக ஏதாவது குட்டையைக் குழப்பிவிடப்போகிறார்களோ என்று பயந்தார்கள்.

‘இன்னும் கொஞ்ச நாளைக்கு பாலஸ்தீனில் பிரிட்டிஷ் ராணுவம் இருக்கத்தான் செய்யும்’ என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டு, கலவரக்காரர்களை அடக்கச்சொல்லி ராணுவத்துக்கு உத்தரவிட்டது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம்.

அரேபியர்களுக்கு அச்சம் மிகுந்திருந்தது அப்போது. ஏதோ சதி நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. எப்படியும் பாலஸ்தீனை உடைத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. ஓர் உச்சகட்ட காட்சியை மிகுந்த உணர்ச்சிமயமாகத் தயாரிக்கும் பொருட்டுத்தான் இப்படி அவர்கள் தமக்குள் ‘அடிப்பது மாதிரி அடி; அழுவது மாதிரி அழுகிறேன்’ என்று நாடகம் போடுகிறார்களோ என்று சந்தேகப்பட்டார்கள்.

‘என்ன ஆனாலும் பாலஸ்தீனைப் பிரிக்க விடமாட்டோம், யூதக் குடியேற்றங்களை இறுதி மூச்சு உள்ளவரை தடுக்கவே செய்வோம்’ என்று அரேபியர்கள் கோஷமிட்டார்கள்.

ஆனால், அவர்களது கோஷத்தை யார் பொருட்படுத்தினார்கள்?

தினசரி லாரி லாரியாக யூதர்கள் வந்து பாலஸ்தீன் எல்லையில் இறங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். (ரயில்களிலும் டிரக்குகளிலும் கூட வந்தார்கள்.) அப்படி வந்த யூதர்களுக்கு உடனடியாக பாலஸ்தீனில் வீடுகள் கிடைத்தன. குடியேற்ற அலுவலகத்திலேயே வீட்டுச்சாவிகளை வாங்கிக்கொண்டுதான் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

அரேபியர்கள் தாங்கள் மெல்ல மெல்ல தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்தார்கள். யாரிடம் உதவி கேட்கலாம் என்றும் அவர்களுக்குப் புரியவில்லை. யுத்தத்தில் ஜெர்மனியை ஆதரித்தவர்களுக்கு, யுத்தம் முடிந்தபிறகு உதவுவதற்கு ஒரு நாதியில்லாமல் போய்விட்டது.

தவிர, இன்னொரு மிக முக்கியமான பிரச்னையும் அப்போது இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில்தான் மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளம் குறித்த முழுமையான ‘ஞானம்’ அனைத்து மேற்கத்திய தேசங்களுக்கும் உண்டாகியிருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏராளமான தேசங்கள் ஏதாவது வகையில் மத்தியக் கிழக்கில் வலுவாகக் காலூன்ற முகூர்த்தம் பார்த்துக்கொண்டிருந்தன. யுத்தத்தின் சாக்கில் கைப்பற்றப்பட்ட மத்தியக்கிழக்கு தேசங்களை எப்படிப் பங்கிடலாம், எப்படி நிரந்தரமாகப் பயனடையலாம் என்றே அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தார்கள். தமக்குச் சாதகமான அரசுகள் அங்கே உருவாவதற்கு உதவி செய்வதன்மூலம், எண்ணெய்ப் பொருளாதாரத்தில் தாங்கள் லாபம் பார்க்கலாம் என்பதே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற தேசங்களின் சிந்தனையாக இருந்தது.

அமெரிக்காவின் வல்லமை முழுவதுமாக வெளிப்பட்டிருந்த சமயம் அது. எப்படியும் ஒரு மாபெரும் வல்லரசாக அத்தேசம் உருவாவது நிச்சயம் என்று யாருக்குத் தெரிந்ததோ இல்லையோ, பிரிட்டனுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவே, அமெரிக்கா யூதர்களை வலுவாக ஆதரிப்பதை பிரிட்டன் அரசு கணக்கில் எடுத்துக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது.

பாலஸ்தீன் என்றில்லை. எந்த அரேபிய தேசமும் அமெரிக்காவை மனத்தளவில் ஆதரிக்காது. ஆகவே, மத்தியக்கிழக்கில் ஒரு யூத தேசம் உருவாவது தனக்கு மிகவும் சாதகமானது என்றே அமெரிக்கா கருதியது. இதனால்தான் வரிந்துகட்டிக்கொண்டு அன்றுமுதல் இன்றுவரை இஸ்ரேலை ஆதரித்து வருகிறது அமெரிக்கா.

சக்திமிக்க தேசங்கள் என்கிற அளவில் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் அப்போது சம பலத்தில் இருந்தன. ஒரே வித்தியாசம் என்னவெனில், அமெரிக்கா ஒரு முதலாளித்துவ தேசம். சோவியத் யூனியன், கம்யூனிச தேசம். பிரிட்டனால் அமெரிக்காவைச் சகித்துக்கொள்ள முடிந்தாலும் முடியுமே தவிர, கம்யூனிஸ்டுகளின் அரசை ஒருக்காலும் சகிக்க முடியாது. இந்தக் காரணத்தாலும் இஸ்ரேல் விஷயத்தில் அமெரிக்காவின் விருப்பமும் நிலைப்பாடும் பிரிட்டன் பொருட்படுத்தத்தக்கவையாக இருந்தன.

இதையெல்லாம் ஏனைய ஐரோப்பிய, ஆசிய தேசங்கள் மிகவும் கூர்மையுடன் கவனித்துக் கொண்டிருந்தன. என்னதான் நடக்கப்போகிறது பாலஸ்தீனில்?

யுத்தம் முடிந்தவுடனேயே பிரிட்டன் பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு முடிவு சொல்லிவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது உண்மை. ஆனால் யுத்தத்தின் முடிவில் உடனடியாகத் தீர்ந்தது பாலஸ்தீன் பிரச்னையல்ல; இந்தியப் பிரச்னை!

ஆகஸ்ட் 15, 1947-ம் ஆண்டு பிரிட்டன், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டது. இந்தியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து குதூகலித்ததை பாலஸ்தீனிய யூதர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அதே பிரிட்டன் தான் அவர்களுக்கும் ஒரு நல்லது செய்தாகவேண்டும். ஆனால் எப்போதுசெய்யப்போகிறது?

பிரிட்டன் தயாராகத்தான் இருந்தது. ஒரே ஒரு பிரச்னைதான். கொஞ்சம் சிக்கல் மிக்க பிரச்னை. அது தீர்ந்தால் இஸ்ரேல் விஷயத்தைத் தீர்த்துவிடலாம். ஆனால் எப்படித் தீர்ப்பது?

அதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26 மே, 2005

No comments: