Sunday, October 02, 2005

88] பாலஸ்தீனின் தந்தை யாசர் அராஃபத்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 88
யாசர் அராஃபத்தை, 'பாலஸ்தீனின் தந்தை' என்று தயங்காமல் சொல்லமுடியும். பாலஸ்தீன் விடுதலைக்காக அவர் எடுத்த முயற்சிகள், பட்ட சிரமங்கள், செய்துகொண்ட சமரசங்கள், விட்டுக்கொடுத்த சம்பவங்கள், கெஞ்சிக் கூத்தாடிய தருணங்கள், வெகுண்டெழுந்து தோள்தட்டிய உணர்ச்சி மயமான காட்சிகள் எல்லாம், கணக்கு வழக்கில்லாதவை. ஆனால் நமக்குத் தெரிந்த 'தேசத்தந்தை' படிமத்துடன், அராஃபத்தை ஒப்பிடமுடியாது.

இதற்குப் பல நுணுக்கமான காரணங்கள் உண்டு. முதலில் காந்தியைப் போல், அராஃபத், ஓர் அஹிம்சைவாதி அல்ல. அவர் ஆயுதப்போராளி. வயதான காலத்தில்தான், அவர் பேச்சுவார்த்தைகளில் அக்கறை காட்டினார். இரண்டாவது, காந்தி பதவிகள் எதிலும் அமர்ந்தவரல்லர். சுதந்திரம் அடைந்த தினத்தில்கூட வங்காளக் கலவரங்களுக்கு நிவாரணம் தேடி, நவகாளி யாத்திரை போனாரே தவிர, டெல்லியில் கொடியேற்றி, மிட்டாய் சாப்பிட்ட வைபவங்களில், அவர் கலந்துகொள்ளவில்லை. மூன்றாவதும் மிக முக்கியமானதுமான காரணம், காந்தியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்தது. நல்லது கெட்டது எதுவானாலும், ஊருக்குத் தெரிவித்துவிட்டுத்தான், அவர் தம் வீட்டுக்கே சொல்வார். அராஃபத்தின் வாழ்க்கை, ரகசியங்களாலானது. அவரது பல நடவடிக்கைகள் குறித்து, இன்றுவரை சரியான, ஆதாரபூர்வமான தகவல்கள் கிடையாது.

இத்தனை வித்தியாசங்கள் இருந்தாலும், அவரும் தேசத்தந்தைதான். இன்னும் பிறக்காத, என்றோ ஒருநாள் பிறக்கப்போகிற, ஒரு தேசத்தின் தந்தை.

இந்த ஒப்பீடு இங்கே செய்யப்படுவதற்கு, ஒரு காரணம் உண்டு. இரண்டாயிரமாவது ஆண்டு பிறந்தபிறகுதான் பாலஸ்தீன் பிரச்னை, ஒரு புதுப்பரிமாணம் எடுத்தது. நிறைய உயிரிழப்புகளும், கலவரங்களும், தீவைப்புச் சம்பவங்களும், கல்வீச்சு வைபவங்களும் தினசரி நடக்கத் தொடங்கின. 2001 மார்ச் மாதம், 'பார்க்' ஓட்டலில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள், இஸ்ரேல் அரசு முழுவீச்சில் அரேபியர்களை அடக்குவதற்காக அனுப்பிய ராணுவத்தின் வெறித்தனமான வேட்டை, அப்போது கைதான ஏராளமான அரபுகளின் கோபம், அதன் விபரீத விளைவுகள் இவையெல்லாம், இதற்குமுன் உலக சரித்திரத்தில், வேறெங்குமே நடந்திராதவை.

அப்படியொரு களேபரம் நடந்துகொண்டிருந்தபோது, பாலஸ்தீன் அரேபியர்களின் ஒரே அரசியல் முகமான, அராஃபத்தின் நடவடிக்கைகள் எதுவுமே, வெளிப்படையாக இல்லை என்பது வருத்தமான உண்மை.

ஒரு பக்கம், அமைதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டேதான் இருந்தார். மறுபக்கம், இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக மல்லுக்கட்டிக்கொண்டிருந்த பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்கும் தம்மாலான உதவிகளை, அவர் செய்துகொண்டே இருந்தார். இது, அனைவருக்குமே தெரியும் என்றபோதும், தொடர்ந்து அவர் தமது போராளி இயக்க ஆதரவு நிலை குறித்து, மறுப்புத் தெரிவித்து வந்தது, பொருந்தாமலேயே இருந்துவந்தது. அவர் வெளிப்படையாகவே, இஸ்ரேலுக்கு எதிரான நேரடி யுத்தத்தைத் தலைமைதாங்கி நடத்தலாமே என்றுதான் அரபுலகம் கேட்டது. அராஃபத், அதற்குப் பதில் சொல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்ததற்கு, ஒரே ஒரு காரணம்தான்.

ஒருவேளை அமைதிப் பேச்சுக்கள் மூலம் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பிருக்குமானால், அதை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் அது.

நல்லது நடக்க வேண்டும் என்பதுதான், அவரது நோக்கம் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்கான வழி இதுதான் என்று தெளிவாக, தீர்மானமாக அவரால் ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனது துரதிருஷ்டம்.

இல்லாவிட்டால் ஓஸ்லோ ஒப்பந்தப்படி அமைதிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராகப் பொறுப்பேற்று, மேற்குக் கரையையும் காஸாவையும் ஒரு பக்கம் ஆண்டுகொண்டு, இன்னொரு பக்கம், போராளி இயக்கங்களுக்கு உதவி செய்ய எப்படி முடியும்?

அவர், போராளி இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று, இஸ்ரேல்தானே குற்றம் சாட்டியது என்று கேட்கலாம்.

ஒரு சம்பவம் நடந்தது. அதுதான் எல்லாவற்றையும் வெட்டவெளிச்சமாக்கியது. ஆண்டு 2002. அந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே, அராஃபத்தின் 'அல் ஃபத்தா'வும், அல் ஃபத்தாவின் தற்கொலைப் படைப் பிரிவான 'அல் அக்ஸா மார்டைர்ஸ் பிரிகேடு'ம் மிகத்தீவிரமான ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கின. கவனிக்கவும். ஹமாஸோ, இதர அமைப்புகளோ அல்ல. அராஃபத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போராளி இயக்கங்கள்.

ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற இயக்கங்களின் தாக்குதல்களைக் காட்டிலும், அல் ஃபத்தாவின் தாக்குதல்கள் மிகத் தீவிரமானவை; கடும்பாதிப்புகளை ஏற்படுத்தவல்லவை. இதற்கு, சரித்திரத்தில் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உண்டு. இந்த அமைப்புகளின் தாக்குதலில் தினசரி, குறைந்தது பத்திருபது இஸ்ரேலிய இலக்குகளாவது நாசமாகிக்கொண்டிருந்தன. ஒட்டுமொத்த பாலஸ்தீனும் வியப்புடன் பார்த்த சம்பவம் அது.

ஏனெனில், அராஃபத் அமைதி, அமைதி என்று பேச ஆரம்பித்திருந்ததில் சற்றே நம்பிக்கை இழந்து போயிருந்தனர், பாலஸ்தீனியர்கள். ஆனால் அல்ஃபத்தா இயக்கத்தவர்கள், மிகவும் வெளிப்படையாக, இஸ்ரேலிய ராணுவத்தினரைக் கண்ட இடத்திலெல்லாம் துவம்சம் செய்ய ஆரம்பித்ததைப் பார்த்ததும் அராஃபத், மீண்டும் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்றே பேச ஆரம்பித்தார்கள்.

அராஃபத் இதனை மறுத்து அறிக்கை வெளியிடவில்லை. அதேசமயம், 'ஆமாம், நான் மீண்டும் துப்பாக்கி ஏந்திவிட்டேன்' என்றும் சொல்லவில்லை.

இது சர்வதேச அரங்கில் மிகப்பெரிய குழப்பத்தை விளைவித்தது. அராஃபத்தின் நிலைப்பாடு என்ன என்பது, மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

இந்தக் குழப்பத்துக்கு இன்னும் வலு சேர்க்கும்விதமாக, அதுவரை அராஃபத்தை மிகக் கடுமையாக விமரிசித்து வந்த ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற பாலஸ்தீன் விடுதலை இயக்கங்கள், 2002-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, அராஃபத்தை வானளாவப் புகழ ஆரம்பித்தன. அவர்தான் மீட்சி கொடுக்கப்போகிறார் என்றே ஹமாஸ் ஒருமுறை சொன்னது.

இப்போதும் மறுத்தோ, ஆமோதித்தோ அராஃபத் பதில் ஏதும் சொல்லவில்லை. ஒரு விஷயத்தில் அவர் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார். நேரடியாகத் தானே துப்பாக்கி ஏந்தி யுத்தம் புரிவதில்லை. அதேசமயம், அரேபியர்களின் ஆடைகளுள் ஒன்றாகிவிட்ட துப்பாக்கியை, என்ன செய்தாலும் தன்னால் இறக்கி வைக்க முடியப்போவதில்லை என்பதால், போராளிகளுக்கு எதிராக ஏதும் செய்யாமல் இருந்துவிடுவது. முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்யப் பார்ப்பது. முடியாதபோது, பேசாமல் இருந்துவிடுவது.

இதெல்லாம் அரசியலில் மிகவும் சாதாரணமான விஷயங்கள்தான் என்பதை விளக்கத் தேவையில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டம் என்கிற புனிதமான உணர்வில், இந்த அரசியல் வாசனை கலக்கும்போதுதான், ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இப்படியானதொரு குழப்பம் மிக்க பின்னணியுடன், அராஃபத் உலாவந்த காலத்தில்தான், ரமல்லா நகருக்குள் இஸ்ரேலிய ராணுவம் புகுந்தது. அப்போதும் அராஃபத், 'பேசலாம் வாருங்கள்' என்றுதான் சொன்னார். ஆனால், அவரது மாளிகைக்கு வெளியே, இஸ்ரேலிய ராணுவத்தினருடன் துப்பாக்கி யுத்தம் புரிந்துகொண்டிருந்தவர்களை, அவர் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

கடல் போல் பெருக்கெடுத்து வந்திருந்த இஸ்ரேலியப் படைகளுக்கு, ரமல்லாவில் அராஃபத் தங்கியிருந்த மாளிகையைக் காவல் காத்தவர்கள், வெறும் கொசுக்களாகத்தான் தெரிந்திருக்க வேண்டும். மிகச் சுலபத்தில் அவர்கள் மாளிகையையும் நகரையும் வசப்படுத்திவிட்டார்கள். அங்கிருந்த அத்தனை அரேபியப் போராளிகளையும் கைது செய்து அனுப்பிவிட்டு, நகரைச் சுற்றி, முதலில் பலத்த காவல் போட்டார்கள். அராஃபத்தின் மாளிகையைச் சுற்றி, தனியே ஒரு சுற்று ராணுவக் காவல் நிறுத்தப்பட்டது.

வீட்டைவிட்டு அவர் வெளியே வரமுடியாதபடியும், வெளியிலிருந்து ராணுவத்தினருக்குத் தெரியாதபடி யாரும் உள்ளே போகமுடியாதபடியும் கவனமாக ஏற்பாடு செய்துவிட்டு, அவரது மாளிகைக்குள் ராணுவம் நுழைந்தது.

சோதனை.

ஓர் இண்டு இடுக்கு விடாமல், அப்படிடியொரு சோதனை போட்டார்கள். அராஃபத்தின் வீட்டிலிருந்த அத்தனை ஆவணங்களையும், கடிதங்களையும், கணக்கு வழக்கு நோட்டுப்புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்கள்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டு அராஃபத் புன்னகையுடன் உட்கார்ந்திருந்தார். அவருக்கு மிக நெருக்கமான ஒன்றிரண்டு சகாக்கள் மட்டுமே அருகே இருக்க, அனுமதிக்கப்பட்டனர். தொலைபேசித் தொடர்புகள் மறுக்கப்பட்டன. தொலைக்காட்சி, வானொலி போன்ற சாதனங்கள் பயன்படுத்துவதையும் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.

அராஃபத்தால் எதுவுமே செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. என்னென்ன ஆவணங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள், எதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள், எது சாதாரணம் என்று கருதப்பட்டது? எதுவுமே அவருக்குத் தெரியாது. ஓர் அறையில் அவர் இருக்க அனுமதிக்கப்பட்டார். அந்த அறைக்குள்ளேயே பாத்ரூம் இருந்ததால் வெளியே வரவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லப்பட்டது. அப்படியே வருவதென்றாலும், கூடவே இரண்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கி ஏந்தி வருவார்கள். அதிகபட்சம் தன்னுடைய வீட்டின் பிற அறைகளுக்கு அவரால் போக முடியும். அவ்வளவுதான். மொட்டை மாடிக்குக்கூடப் போகக்கூடாது என்று தடைவிதித்திருந்தார்கள்.

இதைத்தான் வீட்டுச்சிறை என்பார்கள். ஓர் அரசியல் தலைவருக்குத் தரவேண்டிய மரியாதையில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், மரியாதை ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்றும் சாதிக்க முடியாது என்கிற நிலைமை.

இந்தச் சோதனை, சில வாரங்கள் நீடித்தன. (மூன்று மாதங்கள் வரை சோதனை நடந்தது என்றும் சில கருத்துகள் இருக்கின்றன. கால அளவில் துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை.)

சோதனையை முடித்துவிட்டு, கிடைத்த விவரங்களை அங்கிருந்தபடியே ராணுவத்தினர் டெல் அவிவுக்கு அனுப்பினார்கள். அதன் அடிப்படையில், 2002-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இஸ்ரேல் அரசு ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், போராளி இயக்கங்களுக்குப் போதிய நிதி உதவி அளிக்க, அராஃபத் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த அனுமதிக் கடிதம் ஒன்று, சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆதார நகலையும் இஸ்ரேல் அரசு வெளியிட்டது. இது தவிரவும், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இது, சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடிய அறிக்கை என்று கருதிய அரபு லீக், அவசர அவசரமாக ஓர் அமைதி ஒப்பந்தத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டது. ஆறுநாள் யுத்தத்தின் போது, கைது செய்த பாலஸ்தீன் முஸ்லிம்களை இஸ்ரேல் விடுதலை செய்யவேண்டும். அராஃபத்தின் பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்பை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும். தொடர்ந்து அரேபியர்களின் ஆட்சி, மேற்குக் கரை மற்றும் காஸாவில் நடைபெறத் தடை சொல்லக்கூடாது. பதிலுக்கு அரபு லீக், இஸ்ரேல் என்னும் தேசத்தை, அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும்.

இன்றுவரையிலுமே கூட இஸ்ரேலை, எந்த ஓர் அரபு தேசமும் அங்கீகரிக்கவில்லை என்பதை, நினைவில் கொள்ள வேண்டும். அன்றைய சூழ்நிலையில், அவர்களுக்கு அப்படிடியொரு நிர்ப்பந்தம் இருந்தது. அராஃபத்தை ஒரு பொய்யர் என்று நிறுவுவதற்குத் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் இஸ்ரேல் எடுத்துக்கொண்டிருந்தது. அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக அறிவித்த ஆவணங்கள் கூட, இஸ்ரேலிய உளவு அமைப்பே உருவாக்கியிருக்கக்கூடிய போலி ஆவணங்கள்தான் என்றுகூடப் பேசினார்கள். என்னென்னவோ சொல்லிப்பார்த்தார்கள், செய்து பார்த்தார்கள்.

இஸ்ரேல் கேட்பதாகவே இல்லை. அராஃபத் தொடர்ந்து வீட்டுச்சிறையில்தான் இருந்தாக வேண்டும் என்கிற நிலைமை உருவானது. அதேசமயம், அவர் அதுநாள் வரை இழந்திருந்த மக்கள் செல்வாக்கு என்னும் மதிப்புமிக்க பீடம், மீண்டும் அவருக்குக் கிடைக்கத் தொடங்கியது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 25 செப்டம்பர், 2005

No comments: