Friday, April 29, 2005

37]

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 37

ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னர் கேதரின் காலத்தில் யூதர்கள் அங்கே இடம் பெயர்ந்தும் தேசமெங்கும் பரவியும் வாழ முடிந்ததென்றாலும் அது நீடித்த சௌகரியமாக அவர்களுக்கு அமையவில்லை. மன்னர் எதிர்பார்த்தபடி யூதர்களின் படையைக் கொண்டு துருக்கி சுல்தானை வெல்ல முடியாதது மட்டுமல்ல இதன் காரணம். அரசியல் காரணங்களைக் கருத்தில் எடுக்காத சாதாரணப் பொதுமக்களுக்கு யூதர்களைப் பிடிக்காமல் போய்விட்டது.

யூதர்கள் என்றால் கிறிஸ்துவத்தின் முதல் எதிரிகள் என்கிற அடிப்படைக் காரணம்தான் இங்கும் பிரதானம் என்றாலும், அதற்கு மேலும் சில காரணங்கள் இருந்தன.

ரஷ்யாவின் மண்ணின் மைந்தர்களான கிறிஸ்துவர்களை, அங்கு குடியேறிய யூதர்கள் மதம் மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அப்போது மிக பலமாகக் கிளம்பியது. உண்மையில் நம்பமுடியாத குற்றச்சாட்டு இது. யூத மதத்தில், மத மாற்றம் என்பது அறவே கிடையாது. சரித்திரத்தின் எந்தப் பக்கத்திலும் அவர்கள் யாரையும் மதம் மாற்ற முயற்சி செய்ததாகத் தகவல் இல்லை. ஆனால், ரஷ்யக் கிறிஸ்துவர்கள் இப்படியொரு குற்றச்சாட்டைத்தான் பிரதானமாக முன்வைத்தார்கள்.

இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்று யூதர்கள் தரப்பில் தொடர்ந்து போராடிப் பார்த்தார்கள். மன்னர் கேட்டாலும் மக்கள் விடுவதாக இல்லை. வேறு வேறு வகைகளில் யூதர்கள் அங்கே வாழ்வதற்கு நெருக்கடி தர ஆரம்பித்தார்கள்.

ரஷ்யாவிலிருந்து போலந்து பிரிந்தபோது (கி.பி. 1795-ல் இது நடந்தது. ரஷ்யாவுக்கு எதிராக போலந்து நாட்டு மக்கள் தொடர்ந்து புரட்சி செய்து துண்டுதுண்டாகப் பிரிந்துகொண்டிருந்தார்கள். இந்தக் குறிப்பிட்ட வருடம் நடந்த பிரிவினையின்போது மொத்தமாக போலந்து துண்டானது. துண்டாகும்போதே லித்துவேனியாவையும் சேர்த்துக்கொண்டு பிரிந்தது. இந்தக் கோபத்தில் ரஷ்யா தனது வரைபடங்களிலிருந்து போலந்தை ஒரேயடியாகத் தூக்கிவிட்டது!) அங்கெல்லாம் பரவி வசித்துக்கொண்டிருந்த யூதர்கள், பிரிவினையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிறைய நிலங்களை வளைத்துப் போட்டார்கள். குறிப்பாக போலந்து ரஷ்ய எல்லைகள் சரியாகப் பிரிக்கப்படாத இடங்களிலெல்லாம் அவர்கள் மைல் கணக்கில் நிலங்களை வளைத்திருந்தார்கள். இது ரஷ்ய விவசாயிகளுக்கு மிகவும் கோபமூட்டியது. அவர்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தபோது, எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. காரணம், அத்தனை ரஷ்ய அதிகாரிகளுமே யூதர்களிடம் லஞ்சம் வாங்கியிருந்ததுதான்!

தேசம் உடையும் சோகத்தைக் காட்டிலும், இந்த ஊழல் நாற்றமும் அதற்கு வித்திட்ட யூதர்களின் குயுக்தியும் ரஷ்யர்களை மிகவும் பாதித்தது. ஒட்டுமொத்த கிறிஸ்துவ ரஷ்யாவும் திரண்டு எழுந்து யூதர்களுக்கு எதிரான கலகங்களைத் தொடங்கி வைத்தது.

இன்னும் சற்று நுணுக்கமாக ஆராய்ந்தால், சகிப்புத்தன்மைக்குப் பேர் போன ரஷ்யர்கள், பின்னாளில் ஏன் அத்தனை உக்கிரமாக யூதர்களை ஓட ஓட விரட்டினார்கள் என்பதற்கு வேறொரு காரணமும் கிடைக்கிறது.

ஜார் மன்னர்கள் ஆண்டபோதும் சரி, பின்னால் ரஷ்யப் புரட்சி ஏற்பட்டு கம்யூனிசம் வந்தபோதும் சரி, அதற்குப் பின்னால் சோவியத் யூனியன் என்கிற இரும்புக்கோட்டையே உடைந்து சிதறி, பல துண்டு தேசங்களானபோதும் சரி, ரஷ்யர்களின் தேசப்பற்று கேள்விக்கு அப்பாற்பட்டது. இன அடையாளங்களால் பிரிந்திருந்தாலும் தாங்கள் ரஷ்யர்கள் என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்கு அலாதியான ஆனந்தம் உண்டு. ஒவ்வொரு ரஷ்யரும் தமது தேசத்துக்குத் தனிப்பட்ட முறையில் கடமைப்பட்டிருப்பதாக எப்போதும் உணர்வார்.

ஆனால், யூதர்களால் அவர்கள் ரஷ்யாவிலேயே பல தலைமுறைகளாக வாழ்ந்தாலும் அப்படியொரு தேசிய அடையாளத்தை விரும்பி ஏற்க முடியவில்லை. ‘நீங்கள் யார்?’ என்று எந்த ரஷ்யரிடம் கேட்டாலும் ‘நான் ஒரு ரஷ்யன்’ என்றுதான் சொல்லுவார். அதே ரஷ்யாவில் வசிக்கும் யூதரிடம் ‘நீங்கள் யார்’ என்று கேட்டால் ‘நான் ஒரு யூதன்’ என்றுதான் சொல்லுவார்!

ரஷ்யாவின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்ந்த ஒரே மொழி, ஒரே மதம் என்கிற விஷயத்துடன் யூதர்களால் எந்தக் காலத்திலும் ஒத்துப்போக முடியவில்லை. வாழ்க்கைப் பிரச்னைக்காக அவர்கள் ரஷ்ய மொழி பேசினார்களே தவிர, அதைத் தங்கள் மொழியாக ஒருபோதும் சொல்லமாட்டார்கள். வாழப்போன கிறிஸ்துவ ரஷ்யாவில் ‘உங்களை விட நாங்கள்தான் மதத்தால் உயர்ந்தவர்கள்’ என்கிற தம்பட்டத்தையும் நிறுத்திக்கொள்ளவில்லை.

இது பெரும்பான்மை கிறிஸ்துவர்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. தேசிய உணர்வே இல்லாத ஒரு கூட்டத்தை எதற்காகத் தாங்கள் வாழவைக்க வேண்டும் என்கிற கேள்வி அவர்களிடம் இருந்தது.

இன்னொரு காரணமும் இதற்கு உண்டு. அப்போது ரஷ்யா, தீவிர நில உடைமை தேசம். ஜமீந்தார்கள் அங்கே அதிகம். எல்லா ஜமீந்தார்களும் கிராமங்களில் வசித்துக்கொண்டு ஏகபோக விவசாயம் செய்து ஏராளமாகச் சம்பாதித்து, முறைப்படி வரியும் லஞ்சமும் செலுத்தி வந்தார்கள். போலந்துப் பிரிவினையை ஒட்டி ஏராளமான நிலங்களை வளைத்துப் போட்ட யூதர்கள், அப்போது பெரும்பாலும் நகர்ப்புறங்களிலேயே இருந்தார்கள். நகரங்களில் தாங்கள் வசித்துக்கொண்டு, கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளைப் பார்த்துக்கொள்ள தம் சுற்றத்தாரையும் நண்பர்களையும் குறிப்பாக, எல்லாருமே யூதர்கள் அங்கே அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

இது, தினக்கூலிக்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த எளிய ரஷ்ய விவசாயிகளை மிக அதிகமாக பாதித்தது. தங்கள் கிராமங்களில் தங்களுக்கு வேலைவாய்ப்பு அறவே கிடையாது என்றால் அவர்கள் எங்கே போவார்கள்?

அதிகாரிகளிடம் போக முடியாது. யாரும் காது கொடுத்துக் கேட்கக் கூடியவர்களாக இல்லை. யூத முதலாளிகளான ஜமீந்தார்களிடமே நியாயம் கேட்கலாம் என்றால் அவர்களும் கிராமப்புறங்களின் பக்கமே வரமாட்டார்கள். திடீர் திடீரென்று பெரிய பெரிய வாகனங்களில் மொத்தமாக யூத வேலையாட்கள் கிராமங்களுக்கு வந்து இறங்குவார்கள். சொல்லிவைத்தமாதிரி வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். உள்ளூர் விவசாயிகள் வரப்போரம் நின்று வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

இதில் இன்னொரு கூத்தும் நடந்திருக்கிறது. பல இடங்களில் நகர்ப்புறங்களிலிருந்து ஆட்கள் கிராமங்களுக்கு தினசரி காலை வந்து வேலை பார்த்துவிட்டு மாலை ஆனதும் வண்டியேறி மீண்டும் டவுனுக்குப் போய்விடுவார்கள். ஆபீஸ் உத்தியோகம் மாதிரி!

இது பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதுமே நடைமுறையில் இருந்திருக்கிறது!

அலெக்சாண்டர்-1 என்னும் ஜார் மன்னர் பதவி ஏற்ற பிறகுதான் (கி.பி. 1802 - 1825) நிலைமை கொஞ்சம் மாறத் தொடங்கியது. மக்களின் மனமறிந்து நடந்துகொள்வது முக்கியம் என்று கருதிய இந்த மன்னர், பதவியேற்றதும் முதல் வேலையாக கிராமப்பகுதிகளில் வேலைக்குப் போன யூதர்களையெல்லாம் விரட்ட ஆரம்பித்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எல்லையோர யூத நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளும் ஆரம்பமாயின.

யூதர்கள் தரப்பில், அநியாயமாகத் தங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டதே தவிர, அதன் பின்னணிக் காரணங்கள் எதுவுமே உலகுக்கு எடுத்துக்காட்டப்படவில்லை. எல்லா தேசங்களிலும் யூதர்களைத் துரத்துகிறார்கள், ரஷ்யாவும் துரத்த ஆரம்பித்திருக்கிறது என்று மட்டுமே உலகம் நினைத்தது.

உண்மையில், முந்தைய மன்னர் கேதரின் காலத்தில் கிடைத்த சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு ரஷ்யாவில் யூதர்கள் மிக வலுவாகக் காலூன்றியிருந்த அளவுக்கு வேறெந்த நாட்டிலும் நடைபெறவில்லை என்று சொல்லவேண்டும். பெரும்பாலான ரஷ்ய விவசாயிகளுக்கு அப்போது கையெழுத்துப் போடக்கூடத் தெரியாது என்பது அவர்களுக்குப் பெரிய சாதகமாக இருந்திருக்கிறது.

ஆனால் அலெக்சாண்டர்-1ன் காலத்தில் ஆரம்பித்த யூத விரட்டல் நடவடிக்கைகள் மிக விரைவாக சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன. முதலில் கிராமங்களிலிருந்து யூதர்களை விரட்டினார்கள். பிறகு சிறு நகரங்களிலிருந்து விரட்ட ஆரம்பித்தார்கள்.எங்கெல்லாம் யூதர்கள் வசிக்கிறார்களோ (அவர்கள் எப்போதும் மொத்தமாகத்தான் வசிப்பார்கள் என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்!) அங்கெல்லாம் போய் அடித்து விரட்ட ஆரம்பித்தார்கள்.

இதையெல்லாம் அரசாங்கம் முன்னின்று செய்யவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, ஒவ்வொரு ஊரிலிருந்தும் யூதர்களை விரட்டியடிப்பது தங்கள் தேசியக் கடமை என்றே ரஷ்யர்கள் அப்போது நினைத்தார்கள்! முதலில் அரசாங்கம் இதனை ஆதரிப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் பெரிய அளவில் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

மாறாக, யூதர்களைப் பாதிக்கும் விதத்தில் சிலபல சட்டத்திருத்தங்கள், நில வரையறைகள் கொண்டுவரப்பட்டன. வரிகளும் அதிகரிக்கப்பட்டன. யூதர்கள் தங்களுக்கென்று தனியே பள்ளிக்கூடங்கள் நடத்திக்கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

ரஷ்ய அரசுத்துறை அதிகாரிகளுக்கு இந்த வகையில் கொஞ்சம் வருத்தம்தான். ஏனெனில் நீண்ட நெடுங்காலமாக அவர்கள் யூதர்களிடமிருந்து கையூட்டுப் பெற்று வந்திருக்கிறார்கள். திடீரென்று யூத எதிர்ப்பு அலை அடிக்க ஆரம்பித்துவிட்டதில் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பு ஆனார்கள். அதேசமயம் மக்களின் எழுச்சியுடன் தாங்கள் ஒத்துப்போகாத பட்சத்தில் பதவிக்கே ஆபத்து வரக்கூடும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

வேறு வழியில்லாமல்தான் இந்த நிர்ப்பந்தங்களை அவர்கள் யூதர்களின்மீது திணித்தார்கள் என்பதையும் சொல்லிவிட வேண்டும்.

சுமார் ஐம்பது வருடங்கள். அதற்குக் கொஞ்சம் மேலே கூட இருக்கலாம். இம்மாதிரியான சிறு சிறு பிரச்னைகளும் பயமும் ரஷ்ய யூதர்களைக் கவ்விக்கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டாமா?

வந்தது.

1881-ம் ஆண்டு அலெக்சாண்டர்-2 என்ற ஜார் மன்னர் படுகொலை செய்யப்பட்டார். (அலெக்சாண்டர்-1-க்குப் பிறகு நிக்கோலஸ்-1 என்பவர் மன்னரானார். நிக்கோலஸுக்குப் பிறகு இந்த அலெக்சாண்டர்-2, 1855-ல் மன்னராகியிருந்தார்.) என்னவோ உப்புப்பெறாத அரசியல் காரணங்களுக்காக நடைபெற்ற படுகொலை அது.

ஆனால் விதி, அந்தக் கொலைச்சதியில் யூதர்கள் ஈடுபட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டிவிட்டது.

அது உண்மையா, இல்லையா என்று விசாரிக்கக்கூட யாரும் அப்போது தயாராக இல்லை. ஒரு ரஷ்யச் சக்கரவர்த்தியின் படுகொலைக்கு, வந்தேறிகளான யூதர்கள் காரணமாக இருக்கக்கூடும் என்கிற வதந்தியே போதுமானதாக இருந்தது. (இன்று வரையிலும் இது தீராத சந்தேகம்தான். யூதர்கள்தான் இக்கொலைச்சதியில் ஈடுபட்டார்களா, வேறு யாராவதா என்பது தீராத விவாதப்பொருளாகவே இருக்கிறது.)

ஒட்டுமொத்த ரஷ்யாவும் கொதித்தெழுந்துவிட்டது.

எலிசபெத் க்ரேட் என்கிற இடத்தில்தான் முதல் கலவரமும் முதல் கொலையும் விழுந்தது. வருடம் 1881. தீ போல ரஷ்யாவின் தென் மாகாணங்கள் அனைத்திலும் ஒரு வாரத்தில் பரவிவிட்டது. பார்த்த இடத்திலெல்லாம் யூதர்களை வெட்டினார்கள். தப்பியோடியவர்களையெல்லாம் நிற்கவைத்துக் கொளுத்தினார்கள். முழுக்கக் கொல்லமுடியவில்லை என்றால் கை, கால்களையாவது வாங்கினார்கள். யூத வீடுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், சமூக நிறுவனங்கள் எதுவுமே மிச்சமில்லை. ரத்தவெறி தலைக்கேறிவிட்டிருந்தது ரஷ்யர்களுக்கு.

தப்பித்து ஓடக்கூட முடியாமல் சிக்கிக்கொண்ட பல்லாயிரக்கணக்கான யூதர்கள் அப்போது நடுச்சாலைகளில் வெட்டுப்பட்டு இறந்துபோனார்கள். அவர்களது பிணங்களை எடுத்துப்போடக் கூட யாரும் முன்வரவில்லை!

இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய மன்னரே (புதிதாகப் பொறுப்பேற்றிருந்த அலெக்சாண்டர்-3) ரகசிய உத்தரவிட்டதாக பிறகு சொன்னார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 31 மார்ச், 2005

No comments: