Friday, April 29, 2005

33]

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 33

புராதன ஹீப்ருவுக்குப் புத்துயிர் அளிக்க பாலஸ்தீன் யூதர்கள் முயற்சி மேற்கொண்டிருந்த பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஐரோப்பாவில் மிக முக்கியமானதொரு சம்பவம் ஆரம்பமானது. மிக முக்கியமானதென்றால், மிக, மிக முக்கியமானது. கிறிஸ்துவ மதத்துக்குள் நடந்த ஒரு புரட்சி என்று அதனைச் சொல்லலாம். புராதன கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களிலிருந்து கருத்தளவிலும் தத்துவ ரீதியிலும் பெரிதும் வேறுபட்ட ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களின் எழுச்சியே அது. ஒட்டுமொத்த கிறிஸ்துவ ஐரோப்பாவிலும் அன்றைக்கு இதுதான் பேச்சு. ப்ராட்டஸ்டண்ட்டுகளின் எழுச்சி. கிறிஸ்துவ மதத்துக்குள் அத்தனை ஆழமான விரிசல் உருவாகும் என்று பலர் எதிர்பார்த்திராத சமயம் அது. அரசல்புரசலாக விரிசல்கள் இருந்தன என்றாலும், எதிர்ப்பாளர்கள் என்று வருணிக்கப்பட்ட ப்ராட்டஸ்டண்ட்டுகள் (Protest செய்ததால் அவர்கள் Protestants! அவ்வளவுதான். கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களுக்கும் இந்த எதிர்த்தரப்புக் கிறிஸ்துவர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை, எதனால் பிரிந்தார்கள் என்பதெல்லாம் மிக விரிவாகப் பேசப்படவேண்டிய விஷயங்கள். நூற்றுக்கணக்கான நுணுக்கமான காரணங்கள் இதற்கு உண்டு. ஆனால், இந்தத் தொடரில் அதற்கெல்லாம் இடமில்லை.) இத்தனை தீவிரமாகப் புறப்படுவார்கள் என்றோ, இத்தனை எதிர்ப்பாளர்கள் இருப்பார்கள் என்றோகூட சநாதன கிறிஸ்துவர்கள் எதிர்பார்க்கவில்லை. யூதர்களை விரட்டியடிப்பது என்கிற கிறிஸ்துவர்களின் தலையாய நோக்கத்தையே திசை திருப்பும் அளவுக்கு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களின் எழுச்சி ஐரோப்பாவை ஒரு ஆட்டு ஆட்டுவித்துக்கொண்டிருந்தது.

இதன் காரணகர்த்தா, மார்ட்டின் லூதர். ப்ராட்டஸ்டண்ட்டுகளின் பெருந்தலைவராக அடையாளம் காணப்பட்டவர். (இவர் ஜெர்மன் பாதிரியார். மார்ட்டின் லூதர் கிங் அல்ல.)

ஆனால், கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள்தான், யூதர் விரோத நடவடிக்கைகளை அப்போது தாற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு, ப்ராட்டஸ்டண்டுகளை கவனித்துக்கொண்டிருந்தார்களே தவிர, ப்ராட்டஸ்டண்டுகள் யூதர்களை விடுவதாக இல்லை. முக்கியமாக, மார்ட்டின் லூதர்.

கி.பி. பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி, ஹிட்லரின் காலம் வரை ஐரோப்பிய தேசங்களிலிருந்து யூதர்கள் மிகக் கொடூரமாகத் துரத்தப்பட்டதற்கும் நிகழ்ந்த படுகொலைகளுக்கும் ஆதிமூலக் காரணமாக யூத சரித்திர ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுவது மார்ட்டின் லூதரின் யூத விரோதப் பிரசாரங்களைத் தான். இதில் உள்ள உணர்ச்சிவசப்பட்ட வரிகளையும், மிகையான தகவல்களையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் கூட, ஒருவர், இருவர் என்றில்லாமல் அத்தனை பேருமே இந்த விஷயத்தில் அவர் மீது கடும் கோபம் கொண்டு தாக்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்!

ப்ராட்டஸ்டண்டுகளுக்கு யூதர்கள் மீது அப்படியென்ன வெறுப்பு? இதற்குப் பிரத்தியேகக் காரணங்கள் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ப்ராட்டஸ்டண்டுகள் என்றாலும் அவர்களும் கிறிஸ்துவர்கள். அவர்களும் ஐரோப்பியர்கள். இதுதான் ஒரே காரணம். மற்றவர்களுக்கும் இது மட்டும்தான் காரணம். யூதர்களா, துரத்தியடி. இதற்கெல்லாம் ஒரு காரணம் வேறு வேண்டுமா என்ன? அன்றைய ஐரோப்பா மொத்தமே அப்படித்தான் இருந்தது.

ஆனால் கிறிஸ்துவர்களிடையே புதிதாகப் பிரிந்து, தனியடையாளம் கண்ட ப்ராட்டஸ்டண்டுகள், இந்த அதிதீவிர யூத எதிர்ப்பின் மூலம் இன்னும் சீக்கிரமாகப் பிரபலமடைந்தார்கள் என்பதை மறுக்கமுடியாது! பின்னாளில் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களைக் காட்டிலும் ப்ராட்டஸ்டண்டுகள் என்றால் யூதர்களுக்குக் கூடுதலாகப் பற்றிக்கொண்டு வந்ததன் காரணமும் இதுதான்.

பிரச்னையின் ஆரம்பம், மார்ட்டின் லூதரின் ஒரு கடிதம்தான் என்று அடித்துச்சொல்கிறார்கள், யூத வரலாற்று ஆசிரியர்கள். (மார்ட்டின் கில்பர்ட் போன்ற சமீபகால ஆராய்ச்சியாளர்கள் கூட இக்கடிதத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை!) சற்று விவகாரமான அந்த விஷயத்தைக் கொஞ்சம் அலசவேண்டியது கட்டாயம்.

1543-ம் ஆண்டு லூதர், தம்மைப் பின்பற்றும் கிறிஸ்துவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதக் கட்டுரைக்கு ளியீ tலீமீ யிமீஷ்s ணீஸீபீ ஜிலீமீவீக்ஷீ லிவீமீs என்று தலைப்பு வைத்தார். மிக விரிவாக, ஏழு பகுதிகளாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் சாரத்தைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

1. யூதர்களின் தேவாலயங்கள் எதுவும் செயல்படக்கூடாது. ஒன்று, எரித்துவிட வேண்டும். அல்லது, யாரும் உள்ளே போக முடியாதபடி பாழ்படுத்தி, குப்பைகளால் நிரப்பிவிட வேண்டும்.

2. இதனை வன்முறையாகக் கருதாமல், கடவுளுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாக நினைக்கவேண்டும். தொடர்ந்து யூதர்கள் தம்மைக் குறித்தும் தமது சமூகம் குறித்தும் உயர்த்தியும் பெருமை பேசியும் செய்துவரும் பொய்ப்பிரசாரங்களை முறியடிக்க இதுவே ஆரம்பமாகும்.

3. தேவாலயங்கள் செயல்படுவதைத் தடை செய்யும்போது அவர்கள் தம் நடவடிக்கைகளை வீட்டிலிருந்தும் தொடரக் கூடும். அதனால் யூதர்களின் வீடுகளையும் இடித்துவிடுங்கள். தம்மைப் பற்றிய மிகையான மதிப்பீடுகள் கொண்ட யூதர்கள், ஜிப்ஸிகள் போல் திரியத்தொடங்கியபிறகாவது யோசிக்க ஆரம்பிக்கலாம்.

4. யூதர்களின் பொய்கள் அனைத்தும் அவர்களது மத நூல்களான தோரா, தால்மூத் ஆகியவற்றிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. அந்த நூல் பிரதி ஒன்று கூட அவர்கள் கையில் இருக்கக் கூடாது; கிடைக்கவும் கூடாது. அதற்காவன செய்யவேண்டும்.

5. யூத மதபோதகர்களை, குருமார்களை (Rabbi) அச்சுறுத்தி வைக்கவும். தொடர்ந்து அவர்கள் போதனைகளைத் தொடருவார்களேயானால் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

6. யூதர்களின் பாஸ்போர்ட்களைப் பறிமுதல் செய்யவேண்டும். வியாபாரம் உள்ளிட்ட எந்தக் காரணத்துக்காகவும் அவர்கள் எங்கேயும் நகர முடியாதபடி செய்துவிடுவது அவசியம்.

7. யூதர்கள் நிறைய சொத்து சேர்த்திருக்கிறார்கள். அவர்களது பணம், நகைகளைப் பறிமுதல் செய்யவேண்டும். அவை அனைத்தும் நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டவை; வழிப்பறி செய்யப்பட்டவை என்பதை முதலில் உணரவேண்டும்.

8. இத்தனைக்குப் பிறகும் அவர்களால் நமக்கோ, நமது மனைவி மக்களுக்கோ, நமது ஊழியர்களுக்கோ, சகாக்களுக்கோ ஏதேனும் ஆபத்து வரும் என்று நினைப்பீர்களானால் அவர்களை வெளியேற்றத் தயங்கவேண்டாம். பெரும்பாலான ஐரோப்பிய தேசங்கள் அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கின்றன. நீங்களும் செய்யலாம்; தவறில்லை.

ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களுக்கு மார்ட்டின் லூதர் எழுதியதாக யூத வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக்காட்டும் இக்கடிதத்தில் இன்னும் கூடப் பல திடுக்கிடும் உத்தரவுகள், யோசனைகள் இருக்கின்றன. ஐரோப்பாவில் அன்றைக்கு யூதர்கள் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடையே வாழ நேர்ந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே மேற்கண்ட சில உத்தரவுக் குறிப்புகள்.

உண்மையில், எந்த ஒரு ஐரோப்பிய தேசத்திலும் யூதர்கள் பாதுகாப்பாக வாழமுடியாது என்று மிகத்தெளிவாகத் தெரிந்த காலகட்டம் அது. அச்சுறுத்தல்கள் பல்வேறு இடங்களிலிருந்து மிகக் கடுமையாக வரத் தொடங்கியிருந்தன. பிரான்ஸ், இத்தாலி, போலந்து, இங்கிலாந்து போன்ற தேசங்களில் யூதர்கள் தனியாகச் சாலையில் நடந்து செல்லவே பயந்தார்கள். எப்போதும் ஏதாவது ஓர் ஆயுதத்தை ரகசியமாகத் தங்கள் ஆடைகளுக்குள் ஒளித்து வைத்திருந்தார்கள். கிறிஸ்துவர்களின் திருவிழாக் காலங்கள், கிறிஸ்துவ தேவாலய விழாக்கள் நடைபெறும் மாதங்களில் எல்லாம் கூடுமானவரை ஊரைவிட்டு வெளியே போய்விடப் பார்ப்பார்கள். எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரம் தேச எல்லையைக் கடந்து போய்விட மிகவும் விரும்பினார்கள்.

இந்தமாதிரியான காலகட்டத்தில் பாலஸ்தீனில் மீண்டும் யூதர்கள் இளைப்பாற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது என்னும்போது வேறென்ன செய்வார்கள்?

அணி அணியாகப் பாலஸ்தீனை நோக்கி வரத் தொடங்கினார்கள். துருக்கியப் பேரரசின் அங்கமாக இருந்த பாலஸ்தீனில் இம்மாதிரியான எந்தப் பிரச்னையும் இல்லை என்பது உடனடிக் காரணம். சொந்த ஊருக்கு இந்த சாக்கிலாவது போய்ச் சேர்ந்துவிட முடிகிறதே என்பது இன்னொரு காரணம். இப்படித்தான் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஏராளமான யூதர்கள் பாலஸ்தீனுக்கு வந்து சேர்ந்தார்கள்.

இந்த வகையில் பதினாறாம் நூற்றாண்டைக் காட்டிலும், பதினேழாம் நூற்றாண்டில் வந்தவர்கள் மிகவும் அதிகம். குறிப்பாக, கி.பி. 1648-ம் ஆண்டு யூதகுலம் ஹிட்லரின் தாத்தா ஒருவரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் பெயர் பொக்டான் ஷெமீயில்நிகி. (Bogdan Chmielnicki). கொசாக்குகள் (Cossack) என்று அழைக்கப்பட்ட அன்றைய கிழக்கு ஐரோப்பிய புரட்சியாளர்களின் தலைவர் இவர். லித்துவேனியா, போலந்து, உக்ரைன் போன்ற நாடுகளில் இவரது ஒரு சொல்லால் உந்தப்பட்ட கிறிஸ்துவர்கள், கூட்டம் கூட்டமாக, கொத்துக்கொத்தாக யூதர்களைக் கொன்று தள்ள ஆரம்பித்தார்கள். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்றெல்லாம் அவர்கள் சற்றும் பார்க்கவில்லை. ஒரு யூதரைக் கொன்றுவிட முடியுமானால் ஒரு கிறிஸ்துவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்று அப்போது சொல்லப்பட்டது.

முதலில் கண்ட இடத்தில் வெட்டித்தள்ளிக்கொண்டிருந்தவர்கள், கொலை பழகிவிட்டதும் சித்திரவதை செய்து கொல்லலாம் என்று முடிவு செய்து விதவிதமான சித்திரவதை உத்திகளை யோசிக்கத் தொடங்கினார்கள். (பின்னாளில் இந்தக் கொசாக்குகளின் பரிமாண வளர்ச்சியாகத்தான் ஜெர்மனியில் ஹிட்லர் கால ஆட்சி இருந்தது.)

கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து, அப்படியே சதையை இடுப்பு வரை உரித்தெடுப்பது, விரல்களைத் தனித்தனியே வெட்டி எடுத்து ஒரு மாலையாகக் கோத்து, வெட்டுப்பட்டவரின் கழுத்தில் அணிவித்து, கழுத்தை ரம்பத்தால் அறுப்பது, ஒவ்வொரு முடியாகப் பிடுங்கி முழுத்தலையையும் ரத்தக்காயமாக்கிவிட்டு அதன் மேல் கொதிக்கக் கொதிக்க வெந்நீரை ஊற்றுவது என்று குரூரத்தின் பல்வேறு எல்லைகளை அவர்கள் திறந்து காட்டினார்கள்.

இந்தக் கொடுங்கோன்மையிலிருந்து தப்பித்த சில யூதர்கள், நீண்டதூரப் பிரயாணம் மேற்கொள்ள அவகாசம் இல்லாமல் உடனடி சாத்தியங்கள் தெரிந்த பால்கன் தீபகற்பத்துக்கும் ஜெர்மனிக்கும் ஹாலந்துக்கும் அகதிகளாகத் தப்பிப்போய்ப் பிழைத்தார்கள்.

இவர்கள் அல்லாமல் இன்னும் சில யூதர்கள் எங்குமே போக வழியின்றி வலுக்கட்டாயமாக கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி, அந்தந்த நாடுகளிலேயே தங்கிவிட்டதும் நடந்திருக்கிறது.

(போலந்தில் மட்டும் பொக்டான் ஷெமீயில்நிகியின் காலத்துக்குப் பிறகு பதவிக்கு வந்த மன்னர், நிர்ப்பந்தத்தின்பேரில் கிறிஸ்துவத்துக்கு மாறிய யூதர்கள் மீண்டும் யூதர்களாகி, தம் மத வழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம் என்று அனுமதியளித்ததாகவும், அதன்படி சில ஆயிரம் பேர் தாங்கள் யூத மதத்தையே மீண்டும் கடைப்பிடிக்கிறோம் என்று அறிவித்ததாகவும் சில நூல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய விரிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு விஷயம். யூத மதத்திலிருந்து கிறிஸ்துவத்துக்குப் போனவர்கள் உண்டே தவிர, வேறெந்த மதத்திலிருந்தும் யூத மதத்துக்கு ‘மாற’ முடியாது. அதற்கு அனுமதி இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.)

இத்தனை களேபரங்களுக்கு இடையில் உயிர்பிழைத்து, பாலஸ்தீன் வரையிலுமேகூட வர முடிந்த யூதர்கள், நடந்த கதைகளை விலாவாரியாக எடுத்துச் சொன்ன கையோடு, அப்போது அங்கே பரவலாகிக்கொண்டிருந்த ஹீப்ரு மொழி மறுமலர்ச்சிப் பணிகளில் உடனடியாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள்!

போலந்திலிருந்து அப்படித் தப்பிவந்த ஒரு யூதர், தமது முன்னோர்களின் மொழியான ஹீப்ருவை முதல் முதலாகத் தமது நாற்பது வயதுக்கு மேல் கற்றுக்கொண்டு, தமது தேசத்தில் நடந்த யூத இனப் படுகொலைகளை விவரித்து அந்த மொழியில் ஒரு நூலே எழுதியிருக்கிறாராம்.

துரதிருஷ்டவசமாக இன்று அந்தப் புத்தகம் இஸ்ரேலில் கூடக் கிடைப்பதில்லை. கிடைத்திருக்குமானால், எத்தனை நெருக்கடி காலம் வந்தாலும் யூதர்கள் தமது இனத்தையும் மொழியையும் காப்பதற்கான பணி என்று எது ஒன்று சுட்டிக்காட்டப்பட்டாலும் எப்படி உடனே அதில் மூழ்கிவிடுவார்கள் என்பதை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தக்கூடிய ஓர் ஆவணமாகத் திகழ்ந்திருக்கும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 17 மார்ச், 2005

No comments: