Saturday, August 20, 2005

77] ராணுவத்தலைவர் ஷேக் அகமது யாசின்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 77

2004-ம் வருடம் மார்ச் மாதம் 22-ம் தேதி தொழுகைக்காக அவர் ஒரு மசூதிக்குச் சென்றுகொண்டிருந்தார். தொழுகை முடித்து மசூதியை விட்டு வெளியே வந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு ராக்கெட் வெடிகுண்டு, அவர் அருகே சரியாக விழுந்து வெடித்து உயிரைக் குடித்தது. அடுத்த வினாடி பாலஸ்தீன் பற்றி எரியத் தொடங்கியது. இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோனின் கதை அத்துடன் முடிந்தது என்று அத்தனை பேரும் பேசிக்கொண்டார்கள். திட்டமிட்ட அந்தத் தாக்குதலை "சற்றும் எதிர்பாராததொரு விபத்துதான் இது. நாங்கள் அவரைக் குறிவைத்து ராக்கெட்டை ஏவவில்லை" என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் பொய்தான் சொல்கிறார் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். வயதில் மிகவும் முதிர்ந்த, மார்க்கக் கல்வியில் கரை கண்டவரான அவர் பெயர் ஷேக் அகமது யாசின். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸின் தலைவர்.

ஷேக் அகமது யாசின், ஹமாஸின் தலைமைப் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில் தொடங்கவேண்டிய இந்த அத்தியாயத்தை, அவரது மரணத்தில் தொடங்க நேர்ந்தது தற்செயலானதல்ல. தன்னைப் பற்றிய எந்த விவரத்தையும் எந்தக் காலத்திலும் வெளியில் சொல்லாத போராளி அவர். யாசின் குறித்து இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய தகவல்கள் நான்கே நான்குதான். முதலாவது, அவர் அதிகம் பேசமாட்டார். சமயத்தில் பேசவே மாட்டார். இரண்டாவது, ஒரு நாளைக்கு ஒரே ஒரு ரொட்டியும் ஒரு தம்ளர் பாலும் மட்டும்தான் அவரது உணவாக இருந்தது என்பது. மூன்றாவது, இருட்டில் கூடக் குறிதவறாமல் சுடக்கூடியவர் என்கிற தகவல். நான்காவது தகவல், அவருக்குக் கடைசிக் காலத்தில் கண் பார்வை சரியில்லாமல் போய் மிகவும் அவஸ்தைப்பட்டார் என்பது. இதுதான். இவ்வளவுதான்.

யாசினுக்கு முன்பு ஹமாஸை வழி நடத்தியவர்கள் எல்லோரும் அரசியல் வல்லுநர்களாக மட்டும் இருந்தார்கள். இவர்தான் முதல் ராணுவத் தலைவர். ஹமாஸை ஒரு சக்திமிக்க தனியார் ராணுவம் போலவே வடிவமைத்ததில் பெரும்பங்கல்ல; முழுப் பங்கே இவருடையதுதான். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் யுத்தத்துக்கு ஒரு சரியான வடிவம் கொடுத்தவர் யாசின்தான்.

ஒரு மாதத்துக்கு இத்தனை இலக்குகள் என்று திட்டம் போட்டுக்கொண்டு, தாக்குதலை நடத்தக் கற்றுக்கொடுத்தவர் அவர். ஒரு குழு ஓரிடத்தில் தாக்குதல் நடத்தப் போனால், அடுத்த குழு அடுத்த இலக்கை நோக்கி அப்போதே பயிற்சியிலும் முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கும். இவ்வாறு ஹமாஸின் அத்தனை போராளிகளையும் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, தேசமெங்கும் வேறு வேறு இடங்களில் பயிற்சி முகாம்கள் அமைத்து, தங்கவைத்துத் தயார் செய்ய ஆரம்பித்தார் யாசின்.

எந்தவிதமான சமரசங்களுக்கும் ஹமாஸ் தயாரானதல்ல என்பது முதன்முதலில் இஸ்ரேலிய அரசுக்குப் புரியவந்ததே ஷேக் அகமது யாசின் பொறுப்புக்கு வந்தபிறகுதான். ஹமாஸ், மிகத்தீவிரமாக இஸ்ரேலிய மக்களின்மீது தாக்குதல் ஆரம்பித்ததும் அவரது தலைமைக்குப் பிறகுதான். அதுவரை ராணுவ இலக்குகள், அரசாங்க இலக்குகள்தான் ஹமாஸின் பிரதான நோக்கமாக இருந்துவந்தது. அதனை மாற்றி, பொதுமக்களும் அரசின் கருத்தை ஏற்று நடந்துகொள்பவர்கள்தானே, ஆகவே இஸ்ரேலிய அரசின் அத்தனை குற்றங்களிலும் அவர்களுக்கும் பங்குண்டு என்று சொன்னவர் அவர்.

பொது இடங்களில் ஹமாஸ் வெடிகுண்டுகளைப் புழக்கத்தில் விடத் தொடங்கியது அப்போதுதான். பஸ்ஸில் வைப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கார் பார்க்கிங்கில் வைப்பார்கள். ரயில்களில் வைப்பார்கள். ஹோட்டல்கள், யூத தேவாலயங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், ரிசர்வேஷன் கவுண்ட்டர்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கங்கள், அரசு விழாக்கள் நடக்கும் இடங்கள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் என்று எங்கெல்லாம் மக்கள் கூடுவார்களோ அங்கெல்லாம் குண்டுவைக்க ஆரம்பித்தார்கள்.

சித்தாந்தம் என்பது சௌகரியப்படி மாற்றி எழுதிக்கொள்ளத் தக்கது. அதுவரை பாலஸ்தீன் விடுதலைக்காகப் போராடியபடி, பாலஸ்தீனிய அரேபியர்களின் நலனுக்காகவும் பாடுபட்டுக்கொண்டிருந்த ஹமாஸ், எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து இஸ்ரேலிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துவதையே தனது பிரதான மான நோக்கமாகக் கொள்ளத் தொடங்கியது.

இதனால்தான் பி.எல்.ஓ. ஓர் அரசியல் முகம் பெற்றதைப் போல ஹமாஸால் இறுதிவரை பெற முடியாமல் போய்விட்டது. எண்பதுகளிலேயே ஹமாஸை ஒரு தீவிரவாத இயக்கமாக உலகம் பார்க்கத் தொடங்கிவிட்டதென்றபோதும், அது அல் கொய்தாவைக் காட்டிலும் பயங்கரமான இயக்கம் என்று கருதப்பட்டது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான்.

உலகிலேயே முதல் முறையாக தற்கொலைத் தாக்குதல் என்னும் உத்தியைப் புகுத்தியது ஹமாஸ்தான். இந்தத் திட்டம் ஷேக் அகமது யாசினின் எண்ணத்தில் உதித்தவற்றுள் ஒன்று.

கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்வது, மதத்துக்காக உயிர்த்தியாகம் செய்வது, விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்வது என்கிற புராதனமான சித்தாந்தத்துக்குப் புதுவடிவம் கொடுத்து, தானே ஓர் ஆயுதமாக மாறி எதிரியின் இலக்கைத் தாக்கி அழிப்பது என்கிற கருத்தாக்கத்தை முதன்முதலில் 1989-ல் முன்வைத்தது ஹமாஸ்.

ஹெப்ரான் (Hebron) என்கிற இடத்திலிருந்த இப்ராஹிம் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 29 பேர், ஈவிரக்கமின்றி பரூஷ் கோல்ட்ஸ்டெயின் (Baruch Goldstein) என்கிற வந்தேறி யூதரால் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்க முடிவு செய்தது ஹமாஸ். திரும்ப அதேபோல துப்பாக்கி ஏந்தி கண்ணில் பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்வது எந்தப் பலனும் அளிக்காது என்று ஹமாஸின் உயர்மட்டக் குழுவினர் கருதினார்கள். அப்போது வடிவம் பெற்றதுதான் இந்தத் தற்கொலைத் தாக்குதல் என்கிற உத்தி.

ஒரு தாக்குதல் நடத்த வேண்டும். அது உலகத்தையே குலுக்க வேண்டும். இஸ்ரேலிய அரசு பதறிக்கொண்டு அலறியோட வேண்டும். இப்படியும் செய்வார்களா என்று அச்சம் மேலோங்கவேண்டும். அதுதான் சரியான பதிலடியாக இருக்க முடியும் என்று தீர்மானித்த ஹமாஸ், திட்டமிட்டு ஒரு போராளியைத் தயார் செய்து அனுப்பியது. உடலெங்கும் வெடிபொருட்களைக் கட்டிக்கொண்டு போய் நட்டநடு வீதியில் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு சுமார் ஐம்பது யூதர்களையும் கொன்றான் அவன்.

ஹமாஸ் எதிர்பார்த்தபடியே இந்தச் சம்பவம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்தது. அத்தனை நாட்டுத் தலைவர்களும் அலறினார்கள். இஸ்ரேல் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனது. இப்படியுமா கொலைவெறி கொள்வார்கள் என்று பக்கம்பக்கமாக எழுதி மாய்ந்தார்கள். உடனடியாகப் பல்வேறு நாடுகள் ஹமாஸை தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கமாக அறிவித்தன. இதில் மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கு வெளிப்படையாகப் பல தேசங்களில் கிளைகளும் துணை அமைப்புகளும் பயிற்சி முகாம்களும் இருப்பதுபோல ஹமாஸுக்குக் கிடையவே கிடையாது. எங்கே யார் இருக்கிறார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது.

1989-லிருந்து 1991- வரை ஹமாஸ் இயக்கத்தினரைப் பற்றித் தகவல் சேகரிக்கவென்றே அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.வில் தனியொரு பிரிவு செயல்பட்டது. இஸ்ரேலிய உளவுத்துறை மொஸாட்டுடன் இணைந்து மூன்று ஆண்டுகள் படாதபாடுபட்டும் அவர்களால் மொத்தம் பதினான்கு பேரைத் தவிர வேறு பெயர்களைக் கூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை. எந்த ஒரு ஹமாஸ் தலைவரைப் பற்றிய தனி விவரங்களும் கிடைக்கவேயில்லை. "கஷ்டப்பட்டு" அவர்கள் சேகரித்து வெளி உலகுக்கு அறிவித்த அந்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்கள் இதோ:

ஷேக் அகமது யாசின் – மதத்தலைவர், ராணுவத்தலைவர். (இவர் மார்ச் 22, 2004-ல் இஸ்ரேலிய ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.)

டாக்டர் அப்துல் அஜிஸ் அல் ரண்டிஸி (Dr. Abdul aziz al rantissi யாசின் மறைவுக்குப் பிறகு ஹமாஸின் தலைவரானவர். இவரும் இஸ்ரேல் ராணுவத்தினரால் அதே ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.)

இப்ராஹிம் அல் மகத்மெ (Ibrahim al Makadmeh 2003-ம் ஆண்டு மொஸாட் உளவாளிகளால் கொலை செய்யப்பட்டவர்.)

மெஹ்மூத் அல் ஸாஹர் (Mahmoud al Zahar அரசியல் பிரிவுத் தலைவர்)

இஸ்மாயில் ஹனியா (Ismail Haniya பெரும்பண்டிதர். அரசியல் ஆலோசகர்.)

சயீது அ'சியாம் (Said a' Siyam - அரசியல் பிரிவின் மூத்த செயலாளர்.)

ஸலா ஸாஹேத் (Salah Sahed ஹமாஸின் ராணுவத் தளபதி. 2002-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.)

மொஹம்மத் டெயிஃப் (Mohammed Deif – ராணுவத் தளபதி.)

அட்னல் அல் கௌல் (Adnal al Ghoul வெடிபொருள் நிபுணர். ராக்கெட் லாஞ்ச்சர் பிரயோகத்தில் விற்பன்னர்.)

மொஹம்மத் தாஹா (Mohammed Taha ஹமாஸைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர். மார்க்க அறிஞர். 2003-ம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவம் இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இன்றுவரை சிறையில் இருக்கிறார்.)

யாஹியா அயாஷ் (Yahya Ayyash வெடிகுண்டுகள் தயாரிக்கும் விஞ்ஞானி.)

காலித் மஷால் (Khaled Mashal டெமஸ்கஸில் வசிக்கும் ஹமாஸ் தலைவர். செப்டம்பர் 2004-க்குப் பிறகு ஈரானுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.)

மூசா அபு மர்ஸுக் (Mousa Abu marzuk சிரியாவில் இருக்கிறார்.)

ஷேக் கலில் (Sheikh Khalil – 2004-ல் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட இவர், மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்று வருணிக்கப்பட்டவர்.)

எந்த விவரமும் கண்டுபிடிக்க முடியாத இவர்களில் சிலரை இஸ்ரேல் ராணுவம் எப்படிக் கொன்றது என்பது மிக முக்கியமான விஷயம். ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் அந்த இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்படுகிறார் என்றால் கண்டிப்பாக அவர் மிகப்பெரிய மார்க்க அறிஞராகத்தான் இருப்பார். அவரது ராணுவத் தகுதிகளெல்லாம் கூட இரண்டாம்பட்சம்தான்.

அப்படி சமய ஈடுபாடு மிக்க ஒருவர் மசூதிக்குப் போய் தொழுகை நடத்துவதிலிருந்து ஒரு நாளும் தவற மாட்டார்.

இதை கவனத்தில் கொண்ட இஸ்ரேல், காஸா பகுதியில் உள்ள அத்தனை மசூதிகளைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஒற்றர்களை எப்போதும் நிறுத்திவைக்கும். இந்த ஒற்றர்கள், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு முறை ஓரிடத்தில் பணியில் இருக்கும் ஒற்றர், அடுத்த ஒரு மாத காலத்துக்கு அந்த இடத்துக்கு வரமாட்டார். அத்தனை கவனம்!

இப்படிப் பணியில் நிறுத்தப்படும் ஒற்றருக்கு ஒரே ஒரு கட்டளைதான். ஹமாஸ் தலைவர் எப்போது எந்த மசூதிக்கு வருகிறார் என்று பார்த்துச் சொல்லவேண்டும். அவர் தினசரி வருகிறாரா, வாரம் ஒரு முறை வருகிறாரா, அல்லது ஏதாவது விசேஷ தினங்களில் மட்டும் வருகிறாரா என்று காத்திருந்து சரியாகப் பார்த்துச் சொல்லவேண்டும்.

தகவல் சரிதான் என்று உறுதிப்படுத்தப்பட்டதும் பாதுகாப்பான தூரத்தில் பதுங்கியிருந்து ராக்கெட் வெடிகுண்டு மூலம் கொன்றுவிடலாம் என்று யோசனை சொன்னது மொஸாட்.

இப்படித்தான் ஷேக் அகமது யாசின் படுகொலை செய்யப்பட்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மசூதிக்கு வருபவர் அவர் என்பது, இஸ்ரேல் ராணுவத்துக்கு சௌகரியமாகப் போய்விட்டது. அவர் உள்ளே போகும் நேரம், வெளியே வந்து நாற்காலியிலிருந்து இறங்கி வண்டியில் ஏறுவதற்கு ஆகும் கால அவகாசம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கவனித்து, சரியாக அடித்தார்கள். யாசின் இறந்து போனார்.

யாசின் இறந்தபோது, கோபத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் முழுவதும் ஏராளமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். எங்கு பார்த்தாலும் குண்டு வெடித்தது. பஸ்கள் எரிந்தன. மக்களின் அலறல் ஓசை பத்து நாட்கள் வரை ஓயவே இல்லை. புதிய தலைவரான டாக்டர் அப்துல் அஜிஸ் அல் ரண்டிஸியின் வழிகாட்டுதலில், இயக்கம் இன்னும் உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியிருப்பதாக அறிவித்தார்கள்.

உடனே மொஸாட் விழித்துக்கொண்டது. ஓஹோ, உங்கள் புதிய தலைவர் இவர்தானா என்று அவருக்கு அடுத்தபடியாகக் கட்டம் கட்டினார்கள். அதேபோல ஒளிந்திருந்து தாக்கி அவரையும் கொன்றார்கள். ஒரே வருடத்தில் இரண்டு தலைவர்களைப் பறிகொடுத்த ஹமாஸ், செய்வதறியாமல் திகைத்தது.

ஹமாஸ் தனது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தபோதுதான், விஷயத்தை மோப்பம் பிடித்த ஹமாஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் சிரியாவில் வசிப்பவருமான காலித் மஷால், அவசர அவசரமாக "தலைவரை ரகசியமாகத் தேர்ந்தெடுங்கள். எக்காரணம் கொண்டும் யார் தலைவர் என்பதை வெளியே சொல்லாதீர்கள்" என்று இயக்கத்தினருக்கு ரகசியச் சுற்றறிக்கை அனுப்பினார்.

சற்றே நிதானத்துக்கு வந்த ஹமாஸ், அவர் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தங்களது தலைவர் யாரென்பதை அறிவிப்பதை அத்துடன் நிறுத்திக்கொண்டது. ஆனாலும் சீனியாரிடி அடிப்படையில் மெஹ்மூத் அல் ஸாஹர்தான் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னது மொஸாட். துணைத்தலைவராக இஸ்மாயில் ஹனியாவும் அவருக்கு அடுத்தபடியாக சயீது அ'சியாமும் இருப்பார்கள் என்றும் சொல்லி, வைத்த குறிக்காக இன்னும் வலைவிரித்திருக்கிறார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 18 ஆகஸ்ட், 2005

No comments: