Monday, August 22, 2005

78] யாசர் அராஃபத்தின் இண்டிஃபதா (Intifada)

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 78

ஷேக் அகமது யாசினின் தலைமையில் ஹமாஸ் தனது சமூகப் பணி முகத்தைக் கிட்டத்தட்ட கழற்றிவைத்துவிட்டு, முழுநேர குண்டுவெடிப்பு இயக்கமாக உருமாறத் தொடங்கிய அதே சமயத்தில், யாசர் அராஃபத், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பி.எல்.ஓவுடன் பொதுமக்களும் கைகோக்கும் விதத்தில் ஒரு புதிய திட்டத்தைத் தயார் செய்துகொண்டிருந்தார்.

கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் செய்யும் திட்டம் ஏதும் அப்போது அவருக்கு இல்லை. மாறாக கத்திக்கு பதில் கல்லும் துப்பாக்கிக்குப் பதில் தீக்குச்சியும் ஆயுதமாகலாம் என்று முடிவு செய்தார். மேலோட்டமான பார்வையில் வெறும் மக்கள் எழுச்சி; நீதி கேட்டு நெடும்பயணம் என்பது போலத்தான் தெரியும். எப்படியும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குவதற்கு வரும். பதில் தாக்குதலுக்குத் துப்பாக்கி எடுக்காமல் கற்களைக்கொண்டு தற்காப்பு ஏற்பாடுகள் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்.

இது மக்கள் மத்தியில் இன்னமும் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுத்தரக் கூடும். மேலும், பாலஸ்தீன் விடுதலை என்பது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் கரத்தில் மட்டும் இல்லை என்று அராஃபத் நினைத்தார். இயக்கம் முன்னின்று போராடும். ஆனால், பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால்தான் திட்டம் வெற்றி யடையமுடியும் என்பது அவரது கருத்து.

இந்த எண்ணத்தின் விளைவாகப் பிறந்ததுதான் இண்டிஃபதா (Intifada). இந்த அரபுச் சொல்லுக்கு எழுச்சி, உலுக்கிப் பார்த்தல், பொங்கியெழுதல் என்று பலவிதமாகத் தமிழில் அர்த்தம் சொல்லலாம். இஸ்ரேல் அரசையும் ராணுவத்தையும் உலுக்குவதுதான் அராஃபத்தின் நோக்கம். பி.எல்.ஓ. அதனைச் செய்யாமல், பொதுமக்களை முன்னிறுத்திச் செய்யலாம் என்கிற யோசனைதான் முக்கியமானது. உலகம் முழுவதும் "இண்டிஃபதா, இண்டிஃபதா" என்று உச்சரிக்கும் விதத்தில் இந்த எழுச்சி மிகப்பெரிய வெற்றியை அவருக்குத் தேடித்தந்தது.

தோற்றத்தில் இது ஓர் அறப்போராட்டம் போல் இருந்ததால், அராஃபத்தின் எழுச்சி ஊர்வலங்களில் நடைபெறும் கலவரங்களும் கண்ணீர்ப் புகைகுண்டு வீச்சுகளும் தீவைப்புச் சம்பவங்களும் சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்குத்தான் அவப்பெயரைத் தேடித்தந்தன. உண்மையில் அரேபியர்களும் இந்த இண்டிஃபதாவில் ஏராளமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கலவரத்தை ஆரம்பித்துவைத்ததே அரேபியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பது சமகால சரித்திரம் சுட்டிக்காட்டும் உண்மை.

அராஃபத்தின் எண்ணத்தில் உதித்த இண்டிஃபதா, முதன் முதலில் செயலுக்கு வந்த ஆண்டு 1987. இதற்கு ஒரு வலுவான பின்னணியும் இருந்தது. அந்த வருடம் அக்டோபர் முதல் தேதி, காஸாவில் ஒரு சம்பவம் நடந்தது. இஸ்ரேலிய ராணுவம் அன்றைய தினம், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் என்னும் அமைப்பைச் சேர்ந்த ஏழு போராளிகளைச் சுட்டுக் கொன்றது. இந்தச் சம்பவத்தால் காஸா முழுவதும் யுத்தத்தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கிய சமயத்தில் ஒரு வந்தேறி யூதர், ஓர் அரபு பள்ளிச் சிறுமியின் பின்புறத்தில் தன் கைத்துப்பாக்கியால் சுட்டார். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமி அவள். சற்றும் எதிர்பாராதவகையில் பின்புறமிருந்து ஒரு குண்டு பாய்ந்து வந்து அவளது இடுப்புப் பகுதியில் வெடிக்க, நடுச்சாலையில் அந்தக் குழந்தை விழுந்து கதறியதை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து, நிலைகுலைந்து போய் நின்றார்கள். அந்த யூதர், துப்பாக்கியைத் துடைத்து எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு வந்த வழியே போய்விட்டார்.

இந்தச் சம்பவம் காஸாவில் மிகப்பெரிய கலவரத்துக்கான தூபத்தைப் போட்டது. மக்கள் கொதித்து எழுந்தார்கள். போராளிகளோ, கண்ணில் தென்பட்ட அத்தனை யூதர்களையும் சுட்டுக் கொல்லத் தொடங்கினார்கள். அனைத்து யூதக் கடைகள், அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. பேருந்துகள் நடுச்சாலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன.

என்ன செய்வதென்று தெரியாமல் இஸ்ரேலிய அரசு விழித்து நின்றது. கலவரத்தை அடக்க, ராணுவத்தை அனுப்பிவைத்தது. இது இன்னும் பிரச்னையாகிவிட்டது. ராணுவம் வந்துவிட்டது என்பது தெரிந்ததுமே காஸா பகுதியில் வசித்துவந்த மக்கள், கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள். கண்மூடித்தனமாகச் சாலைகளை நாசப்படுத்தி, குடிநீர்க் குழாய்களை உடைத்து, சரக்கு லாரிகளின் டாங்குகளில் தீப்பந்தங்களைச் சொருகி, என்னென்ன வகைகளிலெல்லாம் பற்றி எரியச் செய்யமுடியுமோ, அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள்.

காஸாவில் என்ன நடக்கிறது என்பதே சரியாக வெளியே தெரியவரவில்லை. அதனால், ஏராளமான வதந்திகள், புரளிகள் எழத் தொடங்கின. தினசரி பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள், எரிக்க வழியில்லாமல் கடலில் பிணங்கள் வீசப்படுகின்றன என்றெல்லாம் தகவல்கள் வெளிவரத் தொடங்க, சர்வதேச மீடியா பரபரப்படைந்தது.

கலவரம் நடந்தது உண்மை. இரு தரப்பிலும் ஏராளமான சேதங்கள் இருந்தது உண்மை. அதற்கு மேல் ஆயிரக்கணக்கில் படுகொலை என்று சொல்லப்பட்டது எல்லாம் பொய். ஆனால், வதந்திகள் தந்த கோபத்தில் மக்களின் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போய் மிகப்பெரிய யுத்தமாக அது உருப்பெறத் தொடங்கியது.

அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் அராஃபத் பயன்படுத்திக்கொண்டார். போராட்டம். மக்கள் போராட்டம். அறப்போராட்டம். ஆயுதத்தாக்குதல் வந்தால் மட்டும் தற்காப்புக்காகக் கற்களைப் பயன்படுத்தலாம் என்று மக்களின் எழுச்சியை ஒருமுகப்படுத்தி, அதற்கு இண்டிஃபதா என்று ஒரு பெயரளித்தார்.

கஸ்டடி மரணங்கள், கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்வது, வீடுகளை இடிப்பது, கொடூரமான முறையில் சித்திரவதை செய்வது, நாடு கடத்துவது உள்ளிட்ட இஸ்ரேலிய அரசின் அரபு விரோத நடவடிக்கைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, இவை அனைத்துக்கும் எதிரான போராட்டம் என்று சொல்லித்தான் முதல் இண்டிஃபதா ஆரம்பமானது.

ஆரம்பத்தில், இது அராஃபத்தின் யோசனையே அல்ல; மக்களின் இயல்பான எழுச்சியைத்தான் அராஃபத் தன்னுடைய திட்டம் போல் வடிவம் கொடுத்து நடைபெறச் செய்துவிட்டார் என்று கூடச் செய்திகள் வந்தன.

உண்மையில், மக்களை முன்னிறுத்தி ஒரு மாபெரும் போராட்டம் நடத்துவது பற்றி 1985-லிருந்தே அராஃபத் யோசித்து வந்திருக்கிறார். 1986-ம் வருடம் ஒரு பிரெஞ்சு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இது பற்றி மிக விரிவாகப் பேசவும் செய்திருக்கிறார்.

"பெயர் வாங்கிக்கொள்ளும் ஆர்வமோ, முன்னின்று நடத்துகிறோம் என்கிற கர்வமோ எங்களுக்கு இல்லை. வேண்டியது, பாலஸ்தீனின் விடுதலை. எங்கள் தாயக மக்களின் சுதந்திர சுவாசம். அதற்கு மேல் ஒன்றுமில்லை. இந்தப் போராட்டத்தில் பாலஸ்தீனின் ஒவ்வொரு குடிமகனும் எங்களுடன் இணைந்து போராடவேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேன்" என்று சொன்னார் அராஃபத்.

பி.எல்.ஓ. போராளிகள் முன்னின்று நடத்திய இந்த இண்டிஃபதாவுக்கு ஹமாஸும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பும் வெளியிலிருந்து ஆதரவு தந்தன. அதாவது போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டிய ஆயுதங்களை அவர்கள் சப்ளை செய்தார்கள். கல் வீச்சு என்னும் நடவடிக்கை ஹமாஸுக்குப் பிடிக்கவில்லை. பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் இயக்கத்தின் தலைவர்களோ, "அவர்கள் கண்ணீர்ப் புகை குண்டு வீசுகிறார்கள் என்றால் நீங்கள் நாட்டு வெடிகுண்டுகளையாவது வீசித்தான் ஆகவேண்டும்" என்று சொல்லி, கேட்டாலும் கேட்காவிட்டாலும் வீடுதோறும் தமது போராளிகளை அனுப்பி தினசரி ஒரு வீட்டுக்கு ஒரு நாட்டு வெடிகுண்டு என்று சப்ளை செய்துவிட்டு வர ஏற்பாடு செய்தார்கள்.

இது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மனக்கிளர்ச்சியை உண்டாக்கியது. விளைவாக, இண்டிஃபதா என்பது ஒரு அறப்போராட்டமாக அல்லாமல், திட்டமிட்ட கலவரமாகப் பரிமாணம் பெற்றது.

இதையெல்லாம் கவனித்துச் சரி செய்யவோ, எது நியாயம், எது அநியாயம் என்றெல்லாம் இரு கட்சிக்கும் பொதுவில் ஆராய்ச்சி செய்யவோ யாருக்கும் விருப்பமோ, அவகாசமோ இருக்கவில்லை. பொழுது விடிந்தால் குண்டு வெடிக்கும். கட்டடங்களும் பேருந்துகளும் பற்றி எரியும். ஒரு பக்கம் கொடி பிடித்து ஊர்வலம் போவார்கள். கோஷங்கள் விண்ணை முட்டும். இஸ்ரேலிய காவல்துறையோ, ராணுவமோ, துணை ராணுவப் படையோ தடுப்பதற்கு எதிரே வந்தால் உடனே கல்வீச்சு ஆரம்பமாகும். ஒரு டிராக்டரில் கருங்கற்களை ஏற்றிக்கொண்டு ஊர்வலத்தின் கூடவே ஓட்டிவருவார்கள். இஸ்ரேலிய போலீஸ் கண்ணில் பட்டவுடன் ஊர்வலம் கலவரமாகிவிடும். கற்கள் வானில் பறக்கும். பதிலுக்குக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பாயும். ரத்தமும் தண்ணீரும் சேறும் சகதியுமாக சில நிமிடங்களில் சாலையே ஒரு போர்க்களமாகக் காட்சியளிக்கும்.

இண்டிஃபதா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், மக்களை ஒரே நோக்கத்தில் போராட்டத்தில் ஈடுபடுத்தவேண்டும் என்பதுதான். ஆனால் துரதிருஷ்டவசமாக, சாதாரண மக்கள் அத்தனை பேரையும் ஆயுததாரியாக மாற்றும் விதத்தில் இந்த எழுச்சிப் போராட்டம் மாறிப்போய்விட்டது. ஒரு கட்டத்தில் இண்டிஃபதா ஊர்வலங்களின் முன் பகுதியில் குழந்தைகளை நிறுத்தி நடக்கச் சொல்லிவிட்டு மக்கள் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரேலிய போலீஸ், தாக்குதல் நடத்தினால் முதலில் பலியாகக் கூடிய சாத்தியம் குழந்தைகளுக்கே இருந்தபடியால், அதனைக் கொண்டு சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்கு கெட்டபெயர் உண்டாக்கித் தரலாம் என்று போராளி இயக்கங்கள் யோசித்து முடிவு செய்த முட்டாள்தனமான முடிவு இது. எத்தனையோ குழந்தைகள் இந்த எழுச்சிப் போராட்டக் காலத்தில் இறந்துபோனார்கள். ஆயிரக்கணக்கில் காயமடைந்தார்கள். இரு தரப்பிலும் ரத்தவெறி மேலோங்க, பாலஸ்தீன் முழுவதுமே பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.

இதனிடையில் பாலஸ்தீனில் இருந்த மைனாரிடி கிறிஸ்தவர்கள் 1988-ம் ஆண்டு பிரத்தியேகமாக ஓர் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். (இது நிஜமாகவே அமைதிப் போராட்டம்தான். ஆயுதங்கள் இல்லாமல் நடந்த போராட்டம்.) குறிப்பாக, கிறிஸ்தவ வியாபாரிகள்.

யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்த தொடர் யுத்த நடவடிக்கைகளில் மைனாரிடிகளான கிறிஸ்தவர்கள், மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இஸ்ரேலிய அரசு, தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அத்தனை கிறிஸ்தவ வியாபாரிகளும் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை "சிறப்பு வரியாக" அரசுக்குச் செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. வழக்கமான வருமான வரி, சொத்துவரி, விற்பனை வரி உள்ளிட்ட அத்தனை வரிகளும் எப்போதும் போல் உண்டு. இது சிறப்பு வரி. எதற்காக? என்றால், அரேபியப் போராளி இயக்கங்களுக்கு எதிராக இஸ்ரேல் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக!

வெறுத்துப் போனார்கள் கிறிஸ்தவர்கள். ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த பாலஸ்தீனுக்காகவும் நடக்கும் யுத்தத்தில் அப்போது அவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் ஜெருசலேம் புனித நகரம்தான். பக்கத்து ஊரான பெத்லஹேமில்தான் இயேசுபிரான் பிறந்திருக்கிறார். பாலஸ்தீனில் எங்கு தொட்டாலும் கிறிஸ்தவர்களுக்கும் ஆயிரம் புராணக் கதைகள் இருக்கவே செய்கின்றன.

ஆனால் இதென்ன அக்கிரமம்? வேறு இரண்டு இனங்கள் மோதிக்கொள்வதற்குத் தாங்கள் எதற்கு வரி செலுத்தி வசதி செய்துதர வேண்டும்?

அதனால்தான் அவர்கள் ஆரம்பித்தார்கள். போராட்டம். அறப்போராட்டம். அதாவது கோஷங்களுடன் ஊர்வலம். கோரிக்கைகளுடன் மனுக்கள். உண்ணாவிரதத்துடன் முழுநாள் கூட்டம். கடையடைப்புடன் சமநிலை குலைத்தல்.

ஒரு வகையில் கிறிஸ்தவர்களின் இந்தப் போராட்டம், முஸ்லிம்களின் இண்டிஃபதாவுக்கு ஓர் இலவச இணைப்பு போல் அமைந்துவிட்டது. பருந்துப் பார்வையில் பாலஸ்தீன் முழுவதுமே ஏதோ ஒரு காரணத்துக்காகப் போராடிக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் இருப்பது போல் தோற்றம் கிடைத்துவிடுகிறதல்லவா? அதுவும் கிறிஸ்தவர்கள் அங்கே மைனாரிடிகள். மைனாரிடிகளின் குரலுக்கு உரிய மதிப்புத் தராதவர்கள் எந்த தேசத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஆனால், இஸ்ரேல் தவறு செய்தது. கிறிஸ்தவர்களின் குரலுக்கு அவர்கள் மதிப்புக் கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. அந்தச் சிறப்பு வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க ஆரம்பித்தது.

இது எரியும் கொள்ளியில் பேரல் பேரலாக பெட்ரோலை ஊற்றியது போலாகிவிட்டது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 21 ஆகஸ்ட், 2005

No comments: