Friday, June 17, 2005

60] பாலஸ்தீன் அகதி

நிலமெல்லாம் ரத்தம் _ பா. ராகவன் 60

ஜெருசலேம் நகரில் வசிக்கும் அரேபியர்களை ஏதாவது செய்து வெளியேற்றுவது. யுத்த சமயத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ, வேறு ஏதாவது காரணங்களை முன்னிட்டோ நகரை விட்டு வெளியேறிய அரபுகள் திரும்பி ஊருக்குள் வராமல் தடுத்து நிறுத்துவது. இந்த இரண்டு காரியங்களை ஒழுங்காகச் செய்தாலே அரேபியர்களின் அடிவயிற்றில் அடித்தது மாதிரிதான் என்று முடிவு செய்தது இஸ்ரேல்.

ஐ.நா. போட்டுக்கொடுத்த சட்டதிட்டங்களெல்லாம் என்ன ஆயின, எங்கே போயின? என்று யாரும் கேட்கக்கூடத் தயாராக இல்லை. யுத்தத்தின் இறுதியில் மேற்கு ஜெருசலேம் பகுதியை ஆக்கிரமித்துத் தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டுவிட்டது இஸ்ரேல். கேட்டால், 'கிழக்குப் பகுதியை ஜோர்டன் எடுத்துக்கொள்ளவில்லையா' என்கிற பதில் அவர்களிடம் தயாராக இருந்தது. ஜெருசலேம் நகரின் நிர்வாகம் ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு சிறப்புக் குழுவிடம் இருக்கும் என்கிற முன் தீர்மானங்களெல்லாம் காற்றோடு போயின.

கொஞ்சநாள் எல்லோரும் அடித்துக்கொள்வார்கள்; கிடைக்கிற இடங்களிலெல்லாம் போய் முறையிடுவர்கள்; சண்டைக்கு வருவார்கள்தான். ஆனால் காலப்போக்கில் அவரவர் தத்தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள்; தனக்குச் சிக்கல் ஏதும் இருக்காது என்று நினைத்தது இஸ்ரேல். இன்னொரு கணக்கும் அவர்களிடம் இருந்தது. எப்படியும் அமெரிக்காவின் தீவிர ஆதரவு தனக்கு உண்டு என்று அப்போதே தீர்மானமாக இருந்த இஸ்ரேல் அரசு, அமெரிக்க பலத்துடன் அக்கம்பக்கத்து தேசங்களை மிரட்டுவதோ, அவர்கள் மிரட்டினால் எதிர்ப்பதோ தனக்குச் சுலபம்தான் என்று கருதியது.

இந்த இடத்தில், பாலஸ்தீனைச் சுற்றியுள்ள பிற அரபு தேசங்களின் நிலைப்பாட்டை சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். என்னதான் 1948_யுத்தத்தில் அரேபியர்கள் சமரசம் செய்துகொண்டு போகவேண்டி நேர்ந்தாலும், பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான வெஸ்ட்பேங்க் மற்றும் காஸா பகுதிகளை முறையே ஜோர்டனும் எகிப்தும் தன்னுடையதாக்கிக்கொண்டாலும், யூதர்கள் மீதான அவர்களது வெறுப்பில் துளி மாறுதலும் ஏற்படவில்லை.

சொந்தச் சகோதரன் ஏமாற்றப்பட்டதில் தமக்கும் பங்குண்டு என்கிற குற்ற உணர்ச்சியெல்லாம் அவர்களுக்கு இல்லை என்பது உண்மையே. அதே சமயம், சகோதரனின் எதிரி தமக்கும் எதிரி என்கிற நிலைப்பாட்டிலும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை!

இது என்ன விசித்திரம் என்றால், இதற்குப் பெயர்தான் அரசியல். யுத்தத்தின் இறுதியில் தனக்குக் கிடைத்த காஸா பகுதியை ஏன் எகிப்து பாலஸ்தீனியர்களுக்குத் திருப்பித்தரவில்லை? ஏன் வெஸ்ட் பேங்கை ஜோர்டன், பாலஸ்தீனிய அரேபியர்கள் வசம் ஒப்படைக்கவில்லை? அப்புறம் என்ன சகோதரத்துவம் வாழ்கிறது என்கிற கேள்வி எழலாம். அவசியம் எழவேண்டும்.

எகிப்தும் ஜோர்டனும் மனம் வைத்திருந்தால், பாலஸ்தீனியர்களுக்கு ஐ.நா. பகுத்து அளித்திருந்த அதே நிலப்பரப்பை மீண்டும் அவர்கள் வசமே தந்து ஆளச் செய்திருக்கமுடியும். இஸ்ரேலுடன்தான் அவர்கள் மோதினார்கள் என்றாலும் போரின் இறுதியில் பாலஸ்தீனியர்களின் நிலப்பரப்பு முழுவதும் யாரிடம் இருந்தது என்றால், இந்த இரு சகோதர அரபு தேசங்களிடம்தான்! இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதி அப்போது சொற்பமே. ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜெருசலேமைத்தான் அவர்களால் ஆக்கிரமிக்க முடிந்ததே தவிர, வெஸ்ட் பேங்க்கையோ, காஸாவையோ அல்ல. அவை இரண்டுமே பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பு, ஐ.நா.வின் திட்டப்படி.

ஆக, 1948_யுத்தத்தைப் பொறுத்தவரை பாலஸ்தீனியர்களை அகதிகளாக்கி அழகுபார்த்தது இஸ்ரேல் அல்ல; சகோதர அரபு தேசங்களான எகிப்தும் ஜோர்டனும்தான் என்றாகிறது!

இஸ்ரேலுடன்தான் மோதினார்கள்; இஸ்ரேல்தான் எதிரி. இதில் சந்தேகமில்லை. ஆனாலும் யுத்தத்தின் இறுதியில் நிஜ எதிரியாக மறைமுகமாக அடையாளம் காணப்பட்டவை எகிப்தும் ஜோர்டனும்தான். அரபு தேசங்களின் சகோதரத்துவ மனப்பான்மை எத்தனை 'உன்னதமானது' என்பதற்கு இது முதல் உதாரணம்.

இதுதான். இந்த ஒரு அம்சம்தான் இஸ்ரேல் தன்னம்பிக்கை கொள்ள ஆதிமூலக் காரணமாகவும் அமைந்தது. என்ன செய்தாலும் தான் தப்பித்துவிடலாம் என்று அவர்கள் கருதியதன் காரணம் இதுதான். அரபு தேசங்கள் எல்லாம் எலும்புக்கு வாலாட்டும் நாய்கள்தான் என்று அவர்களைக் கருதச் செய்ததும் இதுதான். இந்த அம்சத்தை மனத்தில் கொண்டுதான், அரபு மண்ணில் காலூன்ற வழிதேடியது அமெரிக்கா. இதே விஷயத்தை மனத்தில் கொண்டுதான் ஏனைய ஐரோப்பிய நாடுகளும், சோவியத் யூனியனும் கூட அன்றைக்கு அரபு மண்ணின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட வழிதேடிக்கொண்டிருந்தன.

அரேபியர்களின் சகோதரத்துவம் என்பது முற்றிலும் மதம் சார்ந்ததே தவிர, அரசியல் சார்ந்ததல்ல. இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியுமானால் பாலஸ்தீன் பிரச்னையின் சிடுக்குகள் மிக்க குழப்பங்களைப் புரிந்துகொள்வதில் பெரிய பிரச்னை இராது.

அதனால்தான் அவர்கள் பாலஸ்தீனியர்களின் சுயராஜ்ஜியக் கனவு பறிபோனது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தமது யூத வெறுப்பை மட்டும் தீவிரமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். ஜோர்டனைத் தொடர்ந்து அத்தனை அரபு தேசங்களுமே யூதர்களை நிர்தாட்சண்யமாக வெளியேற்ற ஆரம்பித்தன. ஒவ்வொரு அரபு தேசமுமே தமது தேச எல்லைக்குள் வசிக்கும் அனைத்து யூதர்களும் தமது எதிரிகள் என்று பகிரங்கமாகச் சொல்லத் தொடங்கின.

யூதர்கள் முடிந்தவரை இஸ்ரேலுக்கு இடம்பெயர்ந்தார்கள். முடியாதவர்கள் எங்கெங்கு தஞ்சம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் போகத் தொடங்கினார்கள். சிரியா, தனது எல்லைக்குள் குடியேற்றமே கிடையாது என்று அறிவித்துவிட்டது. மொராக்கோ, யூதர்களை அனுமதித்தது. ஆனால் மதமாற்ற நிர்ப்பந்தங்கள் அங்கே மிக அதிகம் இருந்தன.

1948 _ யுத்தத்தில் இஸ்ரேல் அபகரித்த பகுதிகள் திருப்பித்தரப்பட்டால் ஒருவேளை நிலைமை கொஞ்சம் சீராகலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஆனால் ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட ஒரு துண்டு நிலத்தையும் விட்டுத்தர முடியாது என்று சொல்லிவிட்டார் பென்குரியன். அதே சமயம் எதற்கும் இருக்கட்டும் என்று, தனது கட்டுப்பாட்டு நிலப்பரப்புக்குள் வசிக்கும் அரேபியர்கள் தொடர்ந்து நிம்மதியாக வசிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றும் சொன்னார். இதன் நடைமுறை சாத்தியங்கள் பற்றிய கேள்விகள் இருந்தாலும் இஸ்ரேலின் இத்தகைய அறிவிப்பே மற்ற அரபு தேசங்களுக்குக் கொஞ்சம் தர்மசங்கடத்தைத் தந்தது.

காரணம், பாலஸ்தீனைச் சுற்றியுள்ள பிற தேசங்களுக்கு யுத்தத்தின் இறுதியில் அகதிகளாகப் போய்ச் சேர்ந்த பாலஸ்தீனிய அரேபியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களை என்ன செய்யலாம்; எப்படி வைத்துக் காப்பாற்றலாம் என்று அவர்களுக்குப் புரியவில்லை. ஒவ்வொரு அரபு தேசத்தின் எல்லைகளிலும் பாலஸ்தீனிய அகதிகள் முகாம்கள் இருந்தன. ஒவ்வொரு முகாமும் மைல் கணக்கில் நீளமானது. ஒவ்வொரு முகாமிலும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தங்க இடம், உண்ண உணவு, வாழ வழி செய்து தரும் தார்மீகக் கடமை அந்தந்த தேசங்களுக்கு இருப்பினும் நடைமுறைச் சிக்கல்களில் அவை சிக்கித்தவித்தன. பொருளாதாரப் பிரச்னை முதலாவது. இட நெருக்கடி இரண்டாவது.

அரபு தேசங்கள் எல்லாம் பரப்பளவில் மிகவும் சிறியவை. சிரியா, ஜோர்டன், லெபனான் எல்லாம் மிக மிகச் சிறிய தேசங்கள். நமது வடகிழக்கு மாநிலங்களின் அளவே ஆனவை. இருக்கிற மக்களுக்கே இடம் காணாத அத்தகைய தேசங்கள் அகதிகளை வைத்துக்கொண்டு எப்படிச் சமாளிக்கும்?

எகிப்து, லெபனான், ஈராக் ஆகிய மூன்று தேசங்களும் முதன் முதலாக, பாலஸ்தீனிய அகதிகளைத் தமது மக்களுடன் கலந்து வாழ அனுமதிக்க முடியாது என்று அறிவித்தன. அதாவது அகதி நிலையிலேயே அவர்கள் முகாம்களில் தொடரலாம். ஏதாவது தீர்வு யோசித்து பின்னால் ஒரு வழி காணலாம் என்று இதற்கு அர்த்தம். சகோதர முஸ்லிம்கள்!

இதில் சில கேவலமான பேரங்கள் எல்லாம் கூட நடந்தன. சிரியாவின் அப்போதைய சர்வாதிகாரியாக இருந்தவர் பெயர் ஹஸ்னி ஸாயிம் (பிusஸீவீ ஞீணீ'வீனீ). இவர் நேரடியாக இஸ்ரேல் அரசிடமே ஒரு பேரத்துக்குப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதாவது, அகதிகளாக இஸ்ரேல் எல்லையிலும் சிரியாவின் எல்லையிலும் உலவிக்கொண்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் பாலஸ்தீனியர்களை சிரியா தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்ளும். அதற்குப் பிரதி உபகாரமாக கலீலீ கடல் பகுதியின் சரிபாதியை ஆண்டுகொள்ளும் உரிமையைத் தனக்கு இஸ்ரேல் விட்டுக்கொடுக்குமா? என்று கேட்டார்.

இதைப்போன்ற மட்டரகமான பேரங்களுக்கு இஸ்ரேல் சம்மதிக்காததுதான் அதன் மிகப்பெரிய பலம். பென்குரியன் மிகத்தெளிவாகச் சொன்னார். 'எப்படி நாங்கள் உலகெங்கிலுமிருந்து வரும் யூதர்களை ஏற்றுக்கொள்கிறோமோ, எப்படி உலகெங்கிலுமிருந்து வந்து குடியேறும் அனைத்துத் தரப்பினரையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதோ, அதேபோல அந்தந்த அரபு தேசங்களுக்கு அகதிகளாக வருவோரையும் குடியேற விரும்பி வருவோரையும் அந்தந்த தேசம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று அவர் சொன்னார்.

இதில் கவனித்துப் பார்க்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இஸ்ரேல் தன்னைப் பற்றி மட்டும் இந்த வரிகளில் சொல்லிக்கொள்ளவில்லை. மாறாக தனது ஆதர்சம் அமெரிக்காதான் என்பதையும் மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறது. தமது இனத்தவர்கள் எங்கிருந்து வந்தாலும் தாங்கள் ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அமெரிக்காவில் குடியேற வந்தால் அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறது பார் என்று சுட்டிக்காட்டுவதன் மூலம், அமெரிக்காவையும் மறைமுகமாகப் புகழ்ந்து, அந்தப் பக்கம் கொஞ்சம் சுகமாகச் சாய்ந்துகொண்டது.

இது, இருப்பியல் சிக்கல்கள் மிக்க அரபு தேசங்களுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்தது.

சுதந்திர தேசமாக ஆன தினம் முதலே இஸ்ரேல் தனது தீவிர அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் வெளிப்படுத்தத் தவறியதில்லை. அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இஸ்ரேல் என்கிற தேசத்தை உருவாக்கியதுடன் முடிந்துவிடுவதில்லை அல்லவா? ஒரு தேசத்தின் நிர்மாணம் என்பது பெரிதும் பொருளாதாரம் மற்றும் ராணுவக் கட்டுமானத்தைச் சார்ந்தது. மத்தியகிழக்கைப் பொறுத்தவரை ராணுவக் கட்டுமானம் என்பது பொருளாதாரக் கட்டுமானத்தைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக எதிரிகளைத் தவிர சுற்றிலும் வேறு யாருமே இல்லாத இஸ்ரேலுக்கு..

இந்நிலையில் கணக்கு வழக்கில்லாமல் தனக்கு உதவக்கூடிய தேசம் அமெரிக்கா மட்டும்தான் என்று இஸ்ரேல் கருதியதில் வியப்பில்லை. பதிலுக்கு அமெரிக்காவுக்குத் தான் எந்தெந்த வகைகளிளெல்லாம் உதவி செய்யவேண்டிவரும் என்பது பற்றி அத்தனை துல்லியமாக அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை என்பது உண்மையே. ஆனாலும், காரணமில்லாமல் அமெரிக்கா தன்னை ஆதரிக்காது என்கிற அளவிலாவது அவர்கள் அறிந்தே இருந்தார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அகதிகளைச் சமாளிக்க முடியாத பிற அரபு தேசங்கள் கூடி என்ன செய்யலாம் என்று விவாதித்தன. இறுதியில் காஸாவும் வெஸ்ட் பேங்க்கும் யார் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த மண்ணின் மக்கள் மீண்டும் அந்த இடத்துக்கே திரும்பிவிடலாமே என்று நினைத்தார்கள். அகதி நிலைமையில் அந்நிய தேசத்தில் வாழ்வதைக் காட்டிலும், சொந்த மண்ணில் அடுத்த நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டு வாழ்வதில் அவர்களுக்குப் பெரிய மனச்சிக்கல் ஏதும் இராது என்று தீர்மானித்து அழைப்பு விடுத்தார்கள்.

இதனிடையில் 'பாலஸ்தீன் அகதி' என்கிற தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கை மத்தியக் கிழக்கு முழுவதிலும் ஏராளமாகப் பரவிவிட்டிருந்தது. ஐரோப்பிய எல்லை வரை அவர்கள் பரவிவிட்டிருந்தார்கள். சொந்த தேசத்தில் வாழமுடியாமல் துரத்தப்பட்ட அந்த அப்பாவி முஸ்லிம்களை வைத்துக்கொண்டு பராமரிக்க யாராலுமே முடியாத நிலையில், மிகவும் திண்டாடித் தெருவில் நின்றார்கள் அவர்கள்.

மீண்டும் நீங்கள் பாலஸ்தீனுக்கு வரலாம் என்று பிற அரபு தேசங்கள் சேர்ந்து குரல் கொடுத்தபோது, எங்கே பாலஸ்தீனியர்கள் அல்லாத பிற அரபு முஸ்லிம்களும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே வந்து சிக்கல் உண்டாக்கிவிடுவார்களோ என்று ஐ.நா. கவலைப்பட்டது. ஆகவே யார் பாலஸ்தீனிய அகதி என்பதற்கு ஒரு விளக்கம் அளித்தார்கள். 'குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் அவர்கள் பாலஸ்தீனில் வாழ்ந்திருக்க வேண்டும்.'

அவர்கள் திரும்ப ஆரம்பித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 19 ஜூன், 2005

No comments: