Saturday, May 14, 2005

50] ஹிட்லரால் அழிக்கப்பட்ட யூதர்கள்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 50

ஹிட்லரின் யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம் எத்தகையது என்பதை எத்தனை பக்கங்கள் வருணித்தாலும், அதன் முழு வீரியத்துடன் புரிந்துகொள்வது கஷ்டம். ஹிட்லரின் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே அது புரியும். அதுகூட ஓரளவுக்குத்தான். ஹிட்லர் காலத்து ஜெர்மானிய யூதர்களுக்கு மட்டுமே தெரிந்த பேயாட்டம் அது. ஒரு யூதரை முதல் முறையாகப் பார்க்கும்போதே, அவர் பிணமாக இருந்தால் எப்படியிருப்பார் என்று சிந்திக்கத் தொடங்கிவிடுகிற கூட்டமாக இருந்தது நாஜிக்கட்சி. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், சாதனையாளர்கள் என்று எந்த விதமாகவும் அவர்கள் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. யூதர் என்கிற ஓர் அடையாளம் போதுமானதாக இருந்திருக்கிறது.

துப்பாக்கியால் சுடுவது, கத்தியால் அங்கம் அங்கமாக வெட்டியெடுத்துக் கொல்வது, ஆசை ஆசையாக பெட்ரோல் ஊற்றிப் பற்றவைத்து வேடிக்கை பார்ப்பது, கொதிக்கும் வெந்நீர்த் தொட்டிகளில் போட்டு, உடல் பொசுங்கிப்போவதை ரசிப்பது, விஷவாயு அறைகளில் கூட்டம் கூட்டமாக நிர்வாணப்படுத்தி நிற்கவைத்து, மூச்சுத்திணறி ஒவ்வொருவராக விழுவதைப் பார்த்து மகிழ்வது, சிறு பிளேடு அல்லது ரம்பம் கொண்டு மேல் தோல் முழுவதையும் அறுத்து, உரித்தெடுப்பது என்று எத்தனை விதமான குரூரங்கள் சாத்தியமோ, அத்தனையையும் அவர்கள் யூதர்களின்மீது பிரயோகித்தார்கள்.

எதுவுமே பதிவாகாத கொலைகள். கொன்றது அனைத்தும் காவல்துறையினர் என்பதால் நீதிமன்றங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. அல்லது ‘இன்னார் காணவில்லை’ என்று காவல்துறையினர் ஒவ்வொரு யூதருக்கும் வழங்கும் இறுதிச் சான்றிதழுக்கு ஒப்புதல் தரும் வேலையை மட்டும் நீதிமன்றங்கள் செய்துவந்தன.

1939 செப்டம்பருக்கு முன்புவரை யூதப் படுகொலைகள் ஒரு சம்பிரதாயத்துக்காக, ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. அதாவது கைது செய்து சித்திரவதைக் கூடங்களுக்கு அழைத்துச் சென்று கொலை செய்தார்கள். ‘ஆமாம், கொன்றோம், அதற்கென்ன?’ என்று நேரடியாகக் கேட்காமல், காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். (அப்போது பல யூதர்கள் திருட்டுத்தனமாக தேசத்தை விட்டு வெளியேறி, அகதிகளாகப் பல நாடுகளுக்குப் போய்க்கொண்டிருந்ததால், தாங்கள் கொல்லும் யூதர்களை சுலபமாக அப்படிக் காணாமல் போனவர்களின் பட்டியலில் நாஜிகளால் சேர்க்க முடிந்தது.)

ஆனால் எப்போது ஜெர்மனி, போலந்தின் மீது படையெடுத்ததோ (செப்டம்பர் 1939), அப்போதிலிருந்து இந்த வழக்கம் அடியோடு மாறிவிட்டது. எப்படியும் ஹிட்லர்தான் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஆளப்போகிறவர் என்கிற தீர்மானத்தில், செய்கிற கொலைகளை பகிரங்கமாகவே செய்யலாம் என்று ஜெர்மானிய காவல்துறை முடிவு செய்துவிட்டது.

இதன்பிறகு அவர்கள் விசாரணைக்கு என்று எந்த யூதரையும் தனியே அழைத்துச் செல்வதை விட்டுவிட்டார்கள். பொழுது விடிந்ததும் நேரே ஏதாவது ஒரு யூதக் காலனிக்குப் போவார்கள். அல்லது யூத தேவாலயத்துக்குச் செல்வார்கள். கண்ணில் தென்படும் நபர்களிடம் ‘நீங்கள் யூதர்தானே?’ என்று கேட்பார்கள்.

எந்த யூதரும் தன்னை ஒரு யூதரல்லர் என்று சொல்லமாட்டார். உயிரே போனாலும் அவர் வாயிலிருந்து அப்படியரு வார்த்தை வராது.

ஆகவே, அவர் தலையாட்டுவார். அவ்வளவுதான். அப்படியே போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் நிற்கச் சொல்லிவிட்டு இரண்டடி பின்னால் போய் சுட்டுச் சாய்த்துவிட்டு அடுத்தவரிடம் போய்விடுவார்கள்.

இதில் ஒரு சொல்கூட மிகையே இல்லை. இப்படித்தான் நடந்ததாக அத்தனை மேற்கத்திய சரித்திர ஆசிரியர்களும் வருணித்திருக்கிறார்கள். வீடுகள், தேவாலயங்கள், வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள் என்று எங்கெல்லாம் யூதர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஹிட்லரின் கூலிப்படையினர் போல் செயல்பட்ட காவல்துறையினர் சென்று, கொத்துக்கொத்தாகக் கொன்று சாய்த்துக்கொண்டிருந்தார்கள்.

“என்னை ஏன் கொல்கிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்?” என்று இறப்பதற்கு முன் பெர்லின் நகரத்து யூதர் ஒருவர் கேட்டதற்கு, ஹிட்லரின் காவலர் ஒருவர் சொன்ன பதில்:

“நீங்கள் கொலைக்குற்றவாளியாக இருந்தால் கூட மன்னித்துவிடலாம். யூதராக அல்லவா இருக்கிறீர்கள்! வேறு வழியே இல்லை. இறந்துவிடுங்கள்.’’

ஹிட்லரின் போலந்துப் படையெடுப்பு நடந்துகொண்டிருந்த முதல் வாரத்தில் மட்டும் மொத்தம் பத்தாயிரம் யூதர்கள் ஜெர்மனியில் கொல்லப்பட்டார்கள். கொலை செய்யப்பட்ட அத்தனை பேரையும் ஆங்காங்கே சிறு சிறு குன்றுகள் போல் குவித்துவைத்து மொத்தமாக எரித்துவிட்டது காவல்துறை. இதில் சுமார் இரண்டாயிரம் பெண்களும் நானூற்றைம்பது குழந்தைகளும் அடக்கம்.

போலந்தை ஹிட்லர் தன்வசப்படுத்திவிட்ட செய்தி கிடைத்த மறுகணமே மேலும் முந்நூறு யூதர்கள் கொல்லப்பட்டார்கள். நம் ஊரில் ஏதாவது சந்தோஷமான காரியம் நடக்கிறதென்றால் பட்டாசு வெடிப்போம் அல்லவா? அந்த மாதிரி அங்கே மகிழ்ச்சியைக் கொண்டாடுவதென்றால் யூதர்களைக் கொல்லவேண்டும் என்பது ஒரு ‘கலாசாரமாக’ இருந்தது!

இத்தனைக்கும், உயிர்பிழைப்பதற்காக போலந்தின் மேற்கு எல்லையிலிருந்து (மேற்கு போலந்தைத்தான் அப்போது ஹிட்லர் வென்றிருந்தார்.) கிழக்கு எல்லைக்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய யூதர்கள் அவர்கள். அவர்கள் ஓடிய பாதையெங்கும் இருந்த கட்டடங்களின் மாடிகளில் காத்திருந்த நாஜிப்படை, கிட்டே நெருங்கும்போது சுட்டு வீழ்த்தினார்கள். போலந்தின் சாலைகளெங்கும் ரத்தக் குளங்கள் ஆயின. வேகத்தடைகள் போல ஆங்காங்கே மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. நெருங்குவதற்கு பயந்துகொண்டு நாய்களும் நரிகளும் வல்லூறுகளும்கூட அந்தப் பிரதேசத்துக்குள் நுழையவில்லை என்று எழுதுகிறார்கள் பல சரித்திர ஆசிரியர்கள்.

எப்படியாவது சோவியத் யூனியனுக்குள் நுழைந்துவிட வேண்டுமென்பதுதான் அப்போது போலந்துவாழ் யூதர்களுக்கு இருந்த ஒரே லட்சியம். ஒவ்வொரு அடியாக ரகசியமாக எடுத்துவைத்து அவர்கள் சோவியத் யூனியனை நோக்கித்தான் அப்போது முன்னேறிக்கொண்டிருந்தார்கள். ஹிட்லர், ரஷ்யாவுக்குள் காலெடுத்து வைப்பது கஷ்டம் என்பது அவர்களின் நம்பிக்கை. அத்தனை சீக்கிரம் அவரால் ரஷ்யாவின் மீதெல்லாம் படையெடுக்க முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ரஷ்யாவின் காலநிலை, ராணுவபலம் உள்ளிட்ட பல காரணங்கள் அதற்கு இருந்தன. ஆனால் போலந்து யூதர்களை ரஷ்யா மனமுவந்து ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

சட்டவிரோதமாகவாவது ரஷ்ய எல்லையை அடைந்துவிட்டால் பிரச்னையில்லை; ரஷ்யச் சிறைச்சாலைகளில் எஞ்சிய காலத்தைக் கழிக்க நேர்ந்தாலும் பரவாயில்லை; உயிர் பிழைத்திருந்தால் போதும் என்று நினைத்தார்கள். எல்லையைக் கடக்க சில ஏஜெண்டுகளின் உதவியைக் கோரிவிட்டு வீடுகளுக்குள் பதுங்கியிருந்தார்கள் போலந்து யூதர்கள்.

இதையறிந்த ஹிட்லரின் படை, உடனடியாக போலந்து முழுவதும் ஆங்காங்கே தாற்காலிக சித்திரவதைக் கூடங்களை நிறுவி, உள்ளே விஷக் கிருமிகளையும் விஷ வாயுவையும் பரப்பி வைத்துவிட்டு, அனைத்து யூதக் குடியிருப்புகளின் மீதும் தாக்குதலைத் தொடங்கியது. உயிர்தப்பி ஓடிவருவோர் அனைவரையும், காத்திருக்கும் ஹிட்லரின் படையினர் கைதுசெய்து உடனடியாக அந்தத் தாற்காலிகக் கூடங்களுக்குள் அடைத்துவிடுவார்கள்.

நூற்றுக்கணக்கானோர் இப்படி பலியாகியிருக்கிறார்கள். சில ஆயிரம்பேர் வாழ்நாள் முழுவதும் தீராத சரும, இருதய, நுரையீரல் நோயாளிகளாக மாறி அவஸ்தைகளுடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 1940-ல் ஹிட்லர், டென்மார்க்கையும் நார்வேவையும் கைப்பற்றினார். சரியாக ஒரு வருடத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்தை வசப்படுத்தினார். அதற்கடுத்த வருடம் கிரீஸையும் யூகோஸ்லாவியாவையும் விழுங்கினார்.

இப்படிக் கைப்பற்றப்பட்ட தேசங்களில் எல்லாம் ஹிட்லரின் பிரதிநிதிகள் உடனடியாக ஆளத் தொடங்கினார்கள். ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக அவர்கள் செய்தது, அந்தந்த தேசத்தில் இருந்த யூதர்கள் அத்தனைபேரையும் அள்ளிக்கொண்டுபோய் சித்திரவதைக் கூடங்களில் கொட்டுவது!

சித்திரவதைக் கூடங்களில், தமது ‘முறை’க்காகக் காத்திருக்கும் யூதர்களின் பாடுதான் மிகவும் பரிதாபம். விநாடிப் பொழுதில் கொன்று வீசிவிட்டால்கூட வலி இருக்காது. ஆனால், கொலைகார இயந்திரங்களின் எதிரே வரிசையில் தம் பெயரைச் சொல்லி அழைப்பதற்காக அவர்கள் பல வாரங்கள், மாதங்கள் காத்திருக்கவும் வேண்டியிருந்திருக்கிறது!

அப்படிக் காத்திருக்கும் தினங்களில் அவர்களுக்கு உணவு தரப்படமாட்டாது. குடிப்பதற்கு நீரும்கூட எப்போதாவது கிடைத்தால் உண்டு. இல்லாவிட்டால் அதுவும் இல்லை. முழு நிர்வாணமாக வாரக்கணக்கில் வரிசையில் நின்றுகொண்டே இருக்கவேண்டும். க்யூ நகர்ந்து படிப்படியாக முன்னேறி அவர்களின் முறை வரும்போது, இறப்பதை நினைத்து அவர்கள் ஓரளவு நிம்மதியே அடைவார்கள் அல்லவா!

எந்தக் காலத்திலும், எந்த விதத்திலும் நியாயமே சொல்லமுடியாத இனப்படுகொலை அது. ஒட்டுமொத்த மானுட குலத்தின் குரூரசுபாவம் விசுவரூபம் எடுத்து ஒன்றாகத் திரண்டு ஒரு உருவம் பெறுமானால், அந்த உருவத்துக்கு ஹிட்லர் என்று பெயர். இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்தானா என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. ஹிட்லரைப் பற்றியும், ஹிட்லர் காலத்துக் கொடுமைகள் குறித்தும் நாம் கேள்விப்படுகிற, நமக்குக் கிடைக்கிற தகவல்கள் அனைத்துமே ஓரெல்லைவரை குறைபாடுள்ளவைதான். இத்தனை லட்சம் படுகொலைகள் வெளியே தெரிந்திருக்கின்றனவென்றால், தெரியாத கொலைகள் இன்னும் உண்டு. அவர், ரகசியங்களின் பரமபிதா. வெறுப்பின் மூலக்கடவுள். குரூரத்தின் உச்சபட்சம்.

இன்றைக்குப் பத்து நாட்கள் முன்னர்கூட, ஹிட்லருக்குக் கடைசி தினங்களில், ரகசிய அறையில் மருத்துவம் பார்த்த நர்ஸ் என்று ஒரு தொண்ணூறு வயதுப் பெண்மணி முதல் முறையாக இப்போது வாய்திறந்திருப்பதைப் பார்த்தோம். புதைந்த நாகரிகம் மாதிரி, அது ஒரு புதைந்த அநாகரிகம். தோண்டத்தோண்ட வந்துகொண்டேதான் இருக்கும்.

இவை ஒரு புறம் இருக்க, 22 ஜூன் 1941-ம் ஆண்டு ஹிட்லரின் படை சோவியத் யூனியனுக்குள் நுழைந்தது. ராணுவம் ஒரு பக்கம் சோவியத் யூனியனுக்குள் நுழையும் போதே, யூதக் கொலைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்படையினர் ரஷ்யாவின் கிழக்குப் பக்கம் எல்லையோரம் இருந்த யூத முகாம்களுக்கும் காலனிகளுக்கும் படையெடுத்தன.

சரியாக மூன்று வாரங்கள். அந்த மூன்று வார காலத்துக்குள் மொத்தம் சுமார் ஐம்பத்தைந்தாயிரம் யூதர்களை அவர்கள் கொன்றுகுவித்தார்கள். அத்தனைபேரும் அகதிகளாக அங்கே வந்து தங்கியிருந்தவர்கள். உலக சரித்திரத்தில் ஏன், உலக யுத்தத்தில்கூட மூன்று வாரங்களில் இத்தனை பேரை ஒருபோதும் கொன்றதில்லை. யாரும் தப்பிக்க முடியாமல் சுற்றிவளைத்து, கண்ணை மூடிக்கொண்டு நாளெல்லாம் சுட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என்று பார்க்கவேயில்லை. கண்ணை மூடிக்கொண்டு என்றால், நிஜமாகவே கண்ணை மூடிக்கொண்டு! ஒருநாளைக்குக் குறைந்தது ஐயாயிரம் பேரைக் கொல்வது என்று செயல்திட்டம் போட்டுக்கொண்டு கொன்றார்கள். கொன்று குவித்த பிணங்களின் மீதே ஏறி நின்று மேலும் சுட்டார்கள். அதுவும் போதாமல், வீடுகளிலிருந்து மக்களைத் தரதரவென்று இழுத்துவந்து ஒரு பெரிய குழி வெட்டி உள்ளே மொத்தமாகத் தள்ளி, சுற்றி மேலே நின்று சுட்டார்கள். வெறியடங்காமல், மலைப்பாறைகளை டிரக்குகளில் ஏற்றி வந்து அந்தக் குழிகளில் வீசியெறிந்தும் கொன்றார்கள். குழந்தைகள் தனியாகக் கிடைத்தால் அவர்களுக்குக் குதூகலமாகிவிடும். தூக்கி உயரே விசிறியெறிந்து, கீழே விழுவதற்குள் ஏழெட்டு முறை சுட்டார்கள்.

மூன்றுவாரப் படுகொலை என்று சரித்திரம் வருணிக்கும் இந்தக் கோர தாண்டவம் நடந்துமுடிந்து சரியாக எட்டு தினங்கள்தான் அவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த ஒரு வாரத்தில் இன்னொரு ஒன்பதாயிரம் பேர்!

கொல்லக்கொல்ல யூதர்கள் முளைத்துக்கொண்டே இருக்கிறார்களே என்கிற கடுப்பு, ஜெர்மானிய காவல்துறையினருக்கு. ஒரு காவலர், ரஷ்ய எல்லையில் இருந்து, பெர்லினில் இருந்த தன் மகனுக்கு இப்படியரு கடிதம் எழுதியிருக்கிறார்:

‘மகனே, எத்தனை ஆயிரம் பேரைக் கொன்றாலும் யூதர்கள் குலத்தை முழுவதுமாக எங்களால் அழிக்கமுடியவில்லை. ஆகவே, ஜெர்மனியின் அடுத்த தலைமுறையினரின் ‘நலன்’ கருதி, யூதப் பெண்களை கவனிப்பதற்காக நமது மேதகு பிரசிடெண்ட் ஏதாவது சிறப்புத்திட்டம் அறிமுகப்படுத்தினால்தான் நல்லது.’

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 15 மே, 2005

No comments: