Sunday, October 09, 2005

91] கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 91

மம்மூத் அப்பாஸை ஏற்றாலும் ஏற்போம், அராஃபத்தை ஏற்கமாட்டோம் என்று இஸ்ரேல் ஒற்றைக்காலில் நின்றதற்குக் காரணம் என்னவென்று பார்த்துவிடுவது நல்லது. மம்மூத் அப்பாஸ் என்பவர், மக்கள் தலைவர் அல்லர். அராஃபத் உயிருடன் இருந்த காலத்தில், ஒரு தேர்தலில் அவர் தனித்து நின்றால் ஒரு ஓட்டு விழுமா என்பது, சந்தேகம்தான். அவர் அராஃபத்தின் சகா. அல் ஃபத்தாவின் ஆரம்பகாலம் முதல், உடன் இருந்து வருபவர். ஓரளவு மிதவாதி என்று சொல்லலாம். அவ்வளவுதான்.

அராஃபத்துக்குப் பதிலாக இன்னொருவர் வந்துதான் தீரவேண்டுமென்றால், அது யாராக இருக்கலாம் என்று சொல்வதற்குக் கண்டிப்பாக, பாலஸ்தீனியர்கள் யோசிக்கவே செய்வார்கள். ஏனெனில், அவர்களுக்குத் தலைவர் என்றால், அராஃபத் ஒருவர்தான். அராஃபத்தே ஒருவரைக் கைகாட்டி, 'இவர்தான் இனிமேல்' என்று சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதில், அவர்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை. மாறாக, தங்களுக்குத் தலைவராக வரப்போகிறவரை இஸ்ரேல் சிபாரிசு செய்கிறது என்பதை, பாலஸ்தீனியர்களால் ஜீரணிக்கக்கூட முடியவில்லை.

இது இஸ்ரேல் அரசுக்கும் நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும், அராஃபத்தை விலக்கிவிட்டு இன்னொருவர் வந்தால்தான் அமைதி என்று அவர்கள் அடம் பிடிக்குமளவுக்கு, அப்படியென்ன அராஃபத் மீது வெறுப்பு?

காரணம் இருக்கிறது.

அமெரிக்காவின் அதிபராக பில் க்ளிண்டன் இருந்தபோது, 2000_ம் ஆண்டு ஜூலை மாதத்தில், பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் யோசனையுடன், இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். கேம்ப் டேவிட் என்கிற இடத்தில் சுமார் இரண்டு வார காலம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், பாலஸ்தீன் அத்தாரிடி சார்பில் யாசர் அராஃபத்தும் இஸ்ரேலின் சார்பில், அப்போதைய இஸ்ரேலியப் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக்கும் கலந்துகொண்டார்கள்.

ஓஸ்லோ அமைதிப் பேச்சுவார்த்தை நல்ல விளைவுகளைத் தரும் என்று எதிர்பார்த்து பொய்த்துப்போன காரணத்தால், இம்முறை மிகக் கவனமாகத் திட்டங்கள் தயாரித்து வைத்திருந்தார் பில் க்ளிண்டன். இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த ஐந்தாண்டுகளில் (அதாவது 2005_ம் இந்த ஆண்டு!) பாலஸ்தீன் பிரச்னைக்கு சுமுகமானதொரு நிரந்தரத் தீர்வு கண்டுவிடமுடியும் என்பது அவரது கணக்கு.

அமெரிக்காவுக்கு, பாலஸ்தீன் மீது அப்படியென்ன அக்கறை? என்கிற கேள்விக்கு, ஒரே ஒரு பதில்தான். அன்றைய தேதியில், மத்தியக் கிழக்கு நாடுகள் எது ஒன்றுடனும் அமெரிக்காவுக்குச் சுமுக உறவில்லை. எங்காவது ஓரிடத்திலாவது நல்லது நடப்பதற்கு, தான் காரணமாக இருப்பது, தனிப்பட்ட முறையில் தன்னுடைய இமேஜை உயர்த்துவதற்கும் அமெரிக்க தேசத்தின் மதிப்பை மத்தியக் கிழக்கில் அதிகரிப்பதற்கும் பயன்படும் என்று க்ளிண்டன் நினைத்தார். அதனால்தான் கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.

க்ளிண்டனின் திட்டம் என்ன?

92 சதவிகித மேற்குக்கரை நிலப்பரப்பிலிருந்தும், 100 சதவிகிதம் காஸா பகுதியிலிருந்தும், இஸ்ரேலிய ராணுவம் விலக்கிக்கொள்ளப்படும்.

பாலஸ்தீன் அத்தாரிடி ஆள்வதற்காக, இஸ்ரேல் அளித்துள்ள தற்போதைய மேற்குக்கரைப் பகுதி மற்றும் காஸாவுடன் இன்னும் ஓரிரு நகரங்களை ஆளும் உரிமையும், பாலஸ்தீன் அத்தாரிடிக்கு வழங்கப்படும்.

மேற்குக்கரைப் பகுதியின் எல்லையோரம் அமைந்துள்ள இஸ்ரேலியக் குடியிருப்புப் பகுதிகளில், எட்டு சதவிகிதம் நிலப்பரப்பு இஸ்ரேலுடன் இணையும். அப்பகுதி, பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சி எல்லைக்குள் வராது. அதாவது, இஸ்ரேலியக் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளை இஸ்ரேலே ஆளும். பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சிக்குட்பட்ட பிற பகுதிகளில், வசிக்கும் யூதர்கள், படிப்படியாகத் திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவார்கள்.

தற்சமயம் பாலஸ்தீனியர்கள் நுழையவே முடியாதபடி இருக்கும் கிழக்கு ஜெருசலேத்தின் ஒரு பகுதியை, பாலஸ்தீன் அத்தாரிடி, தனது தலைநகராக அறிவித்துக்கொள்ள உரிமை வழங்கப்படும். அதேசமயம், ஜெருசலேம் முழுவதுமாக, பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தம் என்றும் ஆகிவிடாது. மற்ற மதத்தவர்களும் அங்கே வசிக்கலாம். வழிபாட்டுச் சுதந்திரம், அனைவருக்கும் பொதுவானதாக, நிலைநிறுத்தப்படும்.

பாலஸ்தீன் அகதிகள் என்கிற பெயரில், மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி வசித்து வருவோர் தாயகம் திரும்பும் விஷயத்தில், இஸ்ரேல் சிலவற்றை விட்டுக்கொடுக்கும். அவர்கள் பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பகுதிகளுக்கு வருவதில், தடையிருக்காது. சர்வதேச அளவில் ஒரு குழு அமைத்து, அகதிகள் தேசம் திரும்பும் விஷயத்தில், உறுதியானதொரு முடிவை விரைவில் எடுக்கலாம்.

க்ளிண்டனின் அமைதித் திட்டத்தின் சாரம் இதுதான். இதனை ஈஹுத் பாரக் முன்னிலையில் யாசர் அராஃபத்திடம் படித்துக்காட்டி, 'என்ன சொல்கிறீர்கள்?' என்று, க்ளிண்டன் கேட்டார்.

அராஃபத் சிறிது நேரம் யோசித்துவிட்டு , 'மன்னிக்கவும். ஒப்புக்கொள்ள முடியாது' என்று சொல்லிவிட்டார்.

ஈஹுத் பாரக் அதிர்ச்சியடைந்தார். இத்தனை கூடுதல் அதிகாரங்கள் உரிமை வழங்கும் திட்டம் ஒன்றை, க்ளிண்டன் கொண்டுவருவார் என்று அவரே எதிர்பார்க்கவில்லை. இஸ்ரேலிய மக்களுக்கு, தான் என்ன பதில் சமாதானம் சொல்லமுடியும் என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தார்.

ஆனால் அராஃபத், முற்றிலுமாக இத்திட்டத்தை நிராகரித்துவிட்டதில் க்ளிண்டன், பாரக் இருவருக்குமே தீராத அதிர்ச்சி, வியப்பு. 'உங்கள் மக்களையும் நிலப்பரப்பையும் மிக மோசமான ஒரு சூழலுக்கு நீங்கள் தள்ளியிருக்கிறீர்கள்' என்று, பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் க்ளிண்டன்.

அராஃபத் பதிலே சொல்லவில்லை. கைக்குட்டை அளவு நிலப்பரப்பை அளித்துவிட்டு, கனவை விலைபேசும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை, ஓஸ்லோ ஒப்பந்தத்தின்போதே அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். பாலஸ்தீன் அத்தாரிடி என்கிற அமைப்பை ஏன்தான் உருவாக்க ஒப்புக்கொண்டோமோ என்று வருந்திக்கொண்டிருந்தவருக்கு, இந்த அமைதி ஒப்பந்தத்தில் மகிழ்ச்சி கொள்ளத்தக்க எந்த ஓர் அம்சமும் கண்ணில் படாமல் போனதில் வியப்பில்லை.

அராஃபத் இதனை ஒப்புக்கொண்டிருந்தால், பாலஸ்தீனியர்களே அவரைக் கொன்றிருக்கக்கூடும். ஏனெனில், சுதந்திர பாலஸ்தீன் என்கிற ஒற்றை கோரிக்கையைத் தவிர, வேறு எது ஒன்றையுமே நினைத்துப்பார்க்கும் நிலையில், யாருமே இல்லை என்பதுதான் உண்மை.

தனிப்பட்ட முறையில் அராஃபத்துக்கேகூட, சதவிகிதக் கணக்குகளில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டிருந்தது. கிடைத்தால் முழு பாலஸ்தீன். இல்லாவிட்டால் முழுமையான போராட்டம். இந்த இரண்டைத் தவிர, இன்னொன்றைச் சிந்திக்கக்கூடாது என்பதில், அவர் தெளிவாக இருந்தார்.

அதனால்தான் க்ளிண்டனின் அமைதித்திட்டத்தை, ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டார் அராஃபத்..

ஈஹுத் பாரக்குக்குக் கடும் கோபம். பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு, அராஃபத்தைக் கிழிகிழி என்று கிழித்து எடுத்து வறுத்துவிட்டார்.

'என்ன மனிதர் இவர்! எதைச்சொன்னாலும் 'நோ, நோ' என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவரிடம் எப்படி அமைதிப்பேச்சு சாத்தியம்? பேச்சுவார்த்தையில் அவருக்கு ஆர்வமே இல்லை. முன்வைக்கப்பட்ட திட்டம் எது ஒன்றையும் பரிசீலிக்காமலேயே மறுப்புத் தெரிவித்துக்கொண்டே வந்தார். நாங்கள் பொறுமையின் எல்லைக்கே போய்விட்டோம். ரசாபாசமாக எதுவும் நடந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் அமைதி காத்தோம்' என்று, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், ஈஹுத் பாரக் சொல்லியிருக்கிறார். (ஏப்ரல், 2001)

பாரக்கின் கருத்துப்படி, அராஃபத் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஒரே நோக்கம்தான். பூரண சுதந்திரம் உள்ள முழுமையான பாலஸ்தீன். அதாவது இஸ்ரேல் என்றொரு தேசமே கூடாது. நிலப்பரப்பு முழுவதும் பாலஸ்தீன்தான்.

'நாங்கள் நடைமுறைச் சாத்தியமுள்ள யோசனைகளை முன்வைக்கிறோம். அவர்கள் நடக்கவே முடியாத விஷயத்துக்காகப் போராட நினைக்கிறார்கள்' என்றார் பாரக்.

பேச்சுவார்த்தை நடைபெற்ற தினங்களுள், ஒருநாள் மாலை உலாவப் போயிருந்த பாரக், எதிரே அராஃபத் வருவதைப் பார்த்து, புன்னகை செய்தார். அன்றுதான் டெம்பிள் மவுண்ட் என்று யூதர்களால் அழைக்கப்படும், பைத்துல் முகத்தஸ் வளாகத்திலுள்ள உமர் மசூதி குறித்துப் பேசியிருந்தார்கள். கிழக்கு ஜெருசலேமின் ஒரு பகுதியை, பாலஸ்தீன் அத்தாரிடி தனது தலைநகரமாக அறிவித்துக்கொள்ள, அனுமதி அளிப்பது பற்றிய பேச்சுவார்த்தை அது.

கூட்டத்தில், அராஃபத் 'நோ' சொல்லிவிட்டு எழுந்து போயிருக்க, இந்த மாலைச் சந்திப்பின்போது, பாரக் மீண்டும் அந்தப் பேச்செடுத்தபோது, 'அங்கே கோயிலே இருந்தது கிடையாது. நீங்கள் ஏன் திரும்பத்திரும்ப அதை 'டெம்பிள் மவுண்ட்' என்று குறிப்பிடுகிறீர்கள்?' என்று கேட்டதாக, பாரக் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார்.

'மிஸ்டர் அராஃபத், சாலமன் தேவாலயம் அங்கேதான் இருந்தது என்பது, யூதர்களின் நம்பிக்கையாக இருக்கலாம். தனிப்பட்ட முறையில், நானும் அதை நம்புகிறேன். அகழ்வாராய்ச்சிகள் ஏராளமான சான்றுகளைத் தருகின்றனவே' என்று, பில் க்ளிண்டன் சொல்லியிருக்கிறார்.

அராஃபத் புன்னகை செய்தார். 'அகழ்ந்தது யூதர்கள். அறிவித்தது, யூத அரசு. கிடைத்தது என்னவென்று இதுவரை வேறு யாருக்கு எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்? கிழக்கு ஜெருசலேத்தில் நீங்கள் எங்களுக்குப் பங்கு கொடுப்பதென்றால், பைத்துல் முகத்தஸ் முழுமையாக பாலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதென்றால் மட்டுமே சம்மதம்.'

பாரக்கின் கோபம் மேலும் அதிகரித்ததற்கு, இது மிக முக்கியக் காரணம். ஏனெனில், கிழக்கு ஜெருசலேத்தில் ஒரு பகுதியை அரேபியர்களுக்கு விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருந்தாரே தவிர, மசூதி வளாகத்தை விடுவிப்பது பற்றி, நினைத்துக்கூடப் பார்க்கவில்லை அவர். அப்படிச் செய்தால், இஸ்ரேலியர்கள் அவரைப் பதவியிலிருந்து இறக்குவது மட்டுமல்ல,. கட்டிவைத்து எரித்தே விடுவார்கள்.

இது இப்படி இருக்க, 'இட்ஸாக் ராபின் காலத்தில் நடைபெற்ற ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தில் கண்டிருந்தபடி, இஸ்ரேல் என்கிற தேசத்தை பாலஸ்தீனியர்களும், பாலஸ்தீன் என்கிற 'அமைப்பை' இஸ்ரேலும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு, அமைதிக்கான அடுத்தக் காலை எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான், என்னுடைய விருப்பம்' என்று சொன்ன பாரக், அராஃபத்துக்கு அந்த எண்ணம் துளிக்கூட இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

உண்மையில், நிஜமாகவே அமைதி தரக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் நிராகரிக்கும் மனநிலையில், அராஃபத் அப்போது இல்லை. ஆனால் அமைதிச் சூழல் ஏற்படுத்துவதுபோலத் தோற்றம் காட்டி, அடிமடியில் கைவைக்கக்கூடிய திட்டங்களைத்தான் அவர் எதிர்த்தார்.

ஒரு நல்ல வாய்ப்பு பறிபோய்விட்ட கோபம், பில் க்ளிண்டனுக்கு. அராஃபத் இருக்கும்வரை ஒரு கல்லைக்கூட நகர்த்தி வைக்க முடியாது என்கிற கடுப்பு, ஈஹுத் பாரக்குக்கு.

ஆகவே, அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு முழுமுதல் காரணம் அராஃபத்துதான் என்று திரும்பத்திரும்ப அத்தனை ஊடகங்களிலும் பேசிக்கொண்டே இருந்தார்.

இந்தச் சம்பவம்தான் இஸ்ரேலியர்கள் மத்தியில் அராஃபத் மீது, மிகக் கடுமையான வெறுப்பைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது. தமது மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் விதமாகத்தான் ஈஹுத் பாரக்குக்கு அடுத்து வந்த ஏரியல் ஷரோன், 'அராஃபத்தை நீக்கிவிட்டு வேறொருவரைப் பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராக நியமியுங்கள்' என்று, கோஷமிடத் தொடங்கினார்.

இதுவேதான் அராஃபத்தின் சரிந்துகிடந்த இமேஜை பாலஸ்தீனியர்கள் மத்தியில், மீண்டும் மிக உயரத்தில் தூக்கி நிறுத்தவும் காரணமாக அமைந்தது.

No comments: