Tuesday, June 14, 2005

59] ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடி

நிலமெல்லாம் ரத்தம் _ பா. ராகவன் 59

ஐ.நா. தலையீடு. அமைதி ஒப்பந்தம். போர் நிறுத்தம். இஸ்ரேலுக்கு இதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஏனெனில் யுத்தம் அவர்களது நோக்கமில்லை. யுத்தத்தைத் தொடங்கியவர்கள் அரேபியர்கள். அதாவது பாலஸ்தீன் போராளிகளுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்த ஏனைய அரபு தேசங்கள். அவர்களுக்குச் சம்மதமெனில் போரை நிறுத்திக்கொள்ள இஸ்ரேலுக்கு எந்தத் தடையும் இல்லை.

பாலஸ்தீன் போராளிகளுக்கு ஆதரவாகப் போரில் இறங்கிய பிற அரபு தேசங்களுக்கோ, ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடி இருந்தது. போரை நிறுத்துங்கள் என்று பக்குவமாக வெளியில் கேட்டுக்கொள்ளப்பட்டாலும், உள்ளுக்குள் அது சந்தேகமில்லாமல் மிரட்டல். தவிரவும், யுத்தத்தில் அவர்கள் நிறையவே இழந்தும் இருந்தார்கள். அதைத்தவிரவும் ஒரு காரணம் சொல்லுவதென்றால், போர் நிறுத்தத்தின் மூலம் கிடைக்கக்கூடிய சில நேர்முக நிறைய மறைமுக லாபங்கள். எல்லாம், அரசியல் சாத்தியமாக்கக்கூடிய லாபங்கள்.

முதல் முதலாக இஸ்ரேல் பிப்ரவரி 24, 1949 அன்று எகிப்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. எகிப்து யுத்தத்தில் முன்னேறி வந்த காஸா பகுதி எகிப்துக்கே சொந்தம். பிறகு லெபனானுடன் மார்ச் 23 அன்று ஒப்பந்தம் ஆனது. ஏப்ரல் 3_ம் தேதி டிரான்ஸ்ஜோர்டனுடனும் ஜூலை 20_ம் தேதி சிரியாவுடனும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதுவரையிலுமேகூட தாக்குப்பிடிக்க முடியாத ஈராக், தானாக முன்வந்து தன் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு, தான் கைப்பற்றியிருந்த பகுதிகள் சிலவற்றை ஜோர்டனுக்குத் தாரை வார்த்துவிட்டு வந்த வழியே போய்விட்டது.

ஒரு வரியில் இதைப் புரியும்படி சொல்வதென்றால், பாலஸ்தீன் அரேபியர்களுக்கு உதவி செய்வதற்கென்று வந்த பிற அரபு தேசங்கள் அனைத்தும் நடு வழியில் அவர்களைக் கைவிட்டுவிட்டு, தமக்குக் கிடைத்த லாபங்களுடன் திருப்தியடைந்து, திரும்பிப் போய்விட்டார்கள்.

இதனைக் காட்டிலும் கேவலமான, இதனைக் காட்டிலும் அருவருப்பூட்டக்கூடிய, இதைவிட மோசமான நம்பிக்கைத் துரோகம் என்பது வேறில்லை. ஐ.நா.வின் தலையீட்டால்தான் அப்படிச் செய்யவேண்டியதானது என்று அரபு தேசங்கள் சமாதானம் சொன்னாலும், மத்தியக்கிழக்கு தேசங்களின் ஒற்றுமை என்பது எந்த லட்சணத்தில் இருந்தது என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

ஆனால் இதற்கான அரசியல் நியாயங்கள் ஏராளம் இருக்கின்றன. மேலோட்டமாகவாவது அவற்றைப் புரிந்துகொள்வது அவசியம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், உலக அரங்கில் ஒரு மிகப்பெரிய பிரச்னை ரகசியமாக உருவாகியிருந்தது. அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் உருவாகியிருந்த பலப்பரீட்சைதான் அது. இருவரில் யார் வல்லரசு என்கிற கேள்வி மிகப்பெரிதாக இருந்தது அப்போது. உலகப்போரில் இரு தேசங்களுமே மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்திருந்தன. இரண்டுமே தவிர்க்க முடியாத மாபெரும் சக்திகள் என்பது உலகம் முழுவதற்கும் தெரிந்துவிட்டது.

இப்போது யார், எந்தக் கட்சி என்கிற கேள்வி எழுந்தது. அதாவது, அமெரிக்காவை ஆதரிக்கும் தேசங்கள் எவை, ரஷ்யாவை ஆதரிக்கும் தேசங்கள் எவை என்கிற கேள்வி. அமெரிக்காவை ஆதரிப்பதென்றால், அமெரிக்கா ஆதரிக்கும் அனைத்து அம்சங்களையும் சேர்த்து ஆதரிப்பது என்றாகும். ரஷ்யாவை ஆதரிப்பதென்றாலும் அப்படியே.

இஸ்ரேல் விஷயத்தில் அன்றைக்கு அமெரிக்காவுக்கும் சரி; ரஷ்யாவுக்கும் சரி, ஒரே நிலைப்பாடுதான். அவர்கள் இருவருமே இஸ்ரேலை ஆதரித்தார்கள். யூதர்கள் மீதான அனுதாபம் என்பது தவிர, மத்தியக்கிழக்கில் வலுவாகத் தன் கால்களை ஊன்றிக்கொள்ள இரு தேசங்களுமே சரியான இடம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மத்தியக்கிழக்கின் எண்ணெய் வளத்தைக் கொண்டு அடையக்கூடிய லாபங்கள் குறித்து அன்றைக்கு அரபு தேசங்களுக்கே அத்தனை முழுமையாக விவரம் தெரியாது. ஆனால் அமெரிக்காவுக்குத் தெரியும். ரஷ்யாவுக்குத் தெரியும்.

எண்ணெய் இருக்கிறது என்று அரபு தேசங்களுக்குத் தெரிந்தாலும் அமெரிக்கா அளவுக்கு, சோவியத் யூனியன் அளவுக்கு அவர்களிடம் தொழில்நுட்பத் தேர்ச்சி கிடையாது. இதென்ன வடை சுட்டுச் சாப்பிடும் எண்ணெய்யா? பெட்ரோலியம். எல்லாவற்றுக்குமே மூலாதாரம். எடுக்கும் ஒவ்வொரு சொட்டும் பணம். ஆகவே, இந்த இரு தேசங்களை எக்காரணம் கொண்டும் யாரும் பகைத்துக்கொண்டுவிடத் தயாராக இல்லை.

இரண்டாவது காரணம், பாலஸ்தீனை ஆதரிப்பதால் தமக்கு ஏதாவது லாபம் உண்டா என்று அனைத்து அரபு தேசங்களும் யோசித்தன. இஸ்ரேலை ஆதரிக்காமல், கண்டுகொள்ளாமல் விட்டால் கூடப் பிரச்னை ஏதுமிராது. ஆனால் பாலஸ்தீனை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்க, ஐரோப்பிய, சோவியத் யூனியனின் ஒட்டுமொத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டிவருமோ என்கிற அச்சம் அவர்களுக்கு இருந்தது.

தவிரவும் அனைத்து அரபு தேசங்களுமே கொஞ்ச நாள் இடைவெளிகளில்தான் சுதந்திரம் பெற்றிருந்தன. எதுவும் அப்போது தன்னிறைவு கண்ட தேசமல்ல. உணர்ச்சிவசப்பட்டு சகோதர அரேபியர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, வேண்டாத வம்புகளில் சிக்கிக்கொள்ள நேரிடுமோ என்றும் கவலைப்பட்டார்கள். நடந்து முடிந்த யுத்தத்தில் கிடைத்தவரை லாபம் என்று திரும்பிப் போவதுதான் தனக்கும் நல்லது; தன் தேசத்துக்கும் நல்லது என்று ஒவ்வொரு தேசமும் நினைத்தன.

ஆகவே, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஆத்மசுத்தியுடன் கையெழுத்திட்டுவிட்டார்கள். பாலஸ்தீன அரேபியர்கள் அந்தக் கணம் முதல் நடுத்தெருவுக்கு வந்தார்கள்.

பாலஸ்தீன் போராளிகளைப் பொறுத்தவரை போர் முடிந்துவிட்டதாக அவர்கள் நினைக்கவே இல்லை. உதவிக்கு வந்தவர்கள்தான் ஓடிவிட்டார்களே தவிர, யுத்தம் முடியவில்லை என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.

ஆனால், இதனை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை. சுற்றியிருக்கும் அரபு தேசங்களுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்படியே விஸ்தரித்து, நல்லுறவு கொள்ளவே அது விரும்பியது. இந்த விஷயத்தில் பென்குரியன் மிகத் தெளிவாக இருந்தார். என்றைக்கு இருந்தாலும் அரேபியர்கள் பாலஸ்தீன் போராளிகளை திரும்ப ஆதரிக்கவோ, அவர்களுக்காக யுத்தம் செய்யவோ முன்வரக்கூடும். அப்படியொரு சூழ்நிலை ஏற்படாத வண்ணம், நிரந்தரமாக அந்தத் தேசங்களுடன் நல்லுறவுப் பாலம் அமைத்துவிட அவர் மிகவும் விரும்பினார். அவர்களைச் சரிப்படுத்திவிட்டால், பாலஸ்தீன் போராளிகளைச் சமாளிப்பது பெரிய விஷயமல்ல என்பது அவர்களது சித்தாந்தம்.

யுத்தத்தின் இறுதியில் வெஸ்ட் பேங்க் என்று அழைக்கப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரைப் பகுதி முழுவதையும் ஜோர்டன் பெற்றிருந்தது. அவர்களுக்குக் கிடைத்த நிலப்பரப்பின் ஓர் எல்லை, ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதி வரை நீண்டிருந்தது. எஞ்சிய மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியிருந்தது.

ஆகவே, யதார்த்தமாகவே ஜெருசலேம் நகரம் இரண்டாகப் பிளக்கப்பட்டது. ஏற்கெனவே ஊருக்கு நடுவே ஓர் உடைந்த பெருஞ்சுவர் உண்டு. அது தவிரவும் ஒரு மானசீகப் பெருஞ்சுவரை இரு தேசங்களும் ஏற்படுத்திக்கொண்டிருந்தன.

ஆனால் அமைதி ஒப்பந்தத்தில், ஜெருசலேம் பற்றிய குறிப்பில் இஸ்ரேல் மிகத் தெளிவாக, வழிபாட்டுச் சுதந்திரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தது. இரு தரப்பு மக்களும் ஜெருசலேமுக்கு வருகை தருவதிலோ, கோயில்களில் வழிபாடு நடத்துவதிலோ, எந்த அரசும் எந்தப் பிரச்னையும் செய்யக்கூடாது என்று அதில் குறிப்பிட்டிருந்தது. ஜோர்டனும் அதற்கு ஒப்புக்கொண்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

என்னதான் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டாலும் இஸ்ரேல் ஒரு யூத தேசம். பாலஸ்தீன் அரேபியர்களை நட்டாற்றில் விட்டாலும் ஜோர்டன் ஓர் இஸ்லாமிய தேசம். ஆகவே, சிக்கல் அங்கிருந்து ஆரம்பித்தது.

ஜோர்டன் வசமிருந்த ஜெருசலேம் நகரின் பகுதிவாழ் யூதர்கள் யாரும் 'சினகா'க்களுக்குச் (கோயில்களுக்கு) செல்ல அனுமதிக்கப்படவில்லை. யூதர்களின் புனிதச் சுவரான அந்த உடைந்த பெருஞ்சுவர் அருகே நின்று அவர்கள் பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. ஜெருசலேம் நகரில் ஒரு புராதனக் கல்லறை ஒன்று உண்டு. ஒரு சிறு குன்றை ஒட்டிய பகுதியில் அமைந்த கல்லறை.

இந்தக் கல்லறைப் பகுதி, யூதர்களுக்கு ஒரு வழிபாட்டிடம். சுற்றிப்பார்க்கவும் வருவார்கள். நின்று பிரார்த்தனையும் செய்வார்கள். ஆயிரமாண்டு கால சரித்திரம் புதைந்த நிலம் அல்லவா? தொட்ட இடங்களெல்லாம் புனிதம்தான். வழிபாட்டிடம்தான்.

ஜோர்டன் என்ன செய்ததென்றால் இந்தக் கல்லறைக்கு வரும் யூதர்களைத் தடுப்பதற்காகவே அந்த வழியில் ஒரு பெரிய நெடுஞ்சாலைத் திட்டத்தை அறிவித்து, உடனடியாக சாலை போடும் வேலையில் இறங்கிவிட்டது.

சாலை என்றால் கல்லறைப் பகுதிக்குப் பக்கத்தில் அல்ல! அதன் மேலேயே. அப்படியொரு கல்லறை அங்கே இருந்தது என்று எதிர்காலம் சொல்லிக்கொள்ளலாமே தவிர, நின்று பார்க்க முடியாது. அமர்ந்து பிரார்த்தனை செய்யவும் முடியாது.

அது மட்டுமல்லாமல், சாலை போடும் பணியில் ஈடுபட்ட ஜோர்டன் தேசத்துப் பணியாளர்கள் சில அத்துமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். உதாரணமாக, நூற்றுக்கணக்கான புராதன கல்லறைகள் நிறைந்த அந்தப் பகுதியில் சில கல்லறைகளின் மேலே சிறிய கோபுரங்கள், அல்லது சாளரம் மாதிரியான வடிவமைப்பைச் செய்திருந்தார்கள். அந்த இடங்களையெல்லாம் பணியாளர்கள் பாத்ரூமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

யூதர்கள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பைத்தான் இப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இதெல்லாம் யூதர்களை எத்தனை தூரம் பாதித்திருக்கும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். அந்தக் கணத்தில் அவர்கள், 'செய்வது ஜோர்டானியர்கள்தானே' என்றெல்லாம் நினைத்துப் பார்க்கமாட்டார்கள். மாறாக, 'முஸ்லிம்கள் அல்லவா இப்படிச் செய்கிறார்கள்' என்றுதான் விரோதம் வளர்த்தார்கள்.

இந்த விரோதமெல்லாம்தான் பின்னால் பாலஸ்தீனிய அரேபியர்கள் மீது மொத்தமாக விடிந்தது.

இதனோடாவது ஜோர்டன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய், தன் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் வசிக்கும் அத்தனை யூதர்களும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆகவே அத்தனை பேரும் இடம் பெயர்ந்து இஸ்ரேலுக்குள் வந்தார்கள்.

ஜோர்டன் மட்டும் என்றில்லை. இஸ்ரேலைச் சுற்றியிருந்த அத்தனை அரபு தேசங்களுமே யுத்தத்துக்கும் அமைதி ஒப்பந்தங்களுக்கும் பிறகு இப்படித்தான் நடந்துகொண்டன. பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு நியாயம் கிடைக்க வழி ஏதும் செய்யாமல் தமது யூத வெறுப்பை மட்டும் அவை இவ்வாறு வெளிப்படுத்திக்கொண்டிருந்தன. முடிந்த வரை யூதர்கள் இடம் பெயர்ந்து இஸ்ரேலுக்குள் தஞ்சமாக வந்து சேர்ந்தார்கள். கொள்ளளவு என்று ஒன்று இருக்கிறதல்லவா? முடியாத யூதர்கள் மொராக்கோவுக்குப் போனார்கள். ஈரானுக்குப் போனார்கள். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் போனார்கள். இடம் பெயர்வது அவர்களுக்கொன்றும் புதிதல்ல' அல்லவா?

ஆனாலும் இஸ்ரேல் அரசு இதையெல்லாம் மௌனமாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு வரியைக் கூட எந்த அரபு தேசமும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை என்பதை கவனித்துக்கொண்டே இருந்தது. இதை வசமான சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் ஐ.நா.வின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது பற்றி அமைச்சர்கள் கூடி விவாதித்தார்கள்.

அதற்குமுன் உடனடி எதிர்வினையாக ஏதேனும் செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? என்ன செய்யலாம்?

இஸ்ரேல் எல்லைக்குள் வசிக்கும் அரேபியர்களின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியது. உள்ளூர் ஆட்சிமன்றக் குழுக்களின் மூலம் ஏற்பாடு செய்து அவர்களுக்குப் பிரச்னைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரேல் எல்லைக்குள் இருக்கும் அரேபியர்களை விரட்டியடிப்பது. வெளியிலிருந்து ஒரே ஒரு அரேபியக் கொசு கூட இஸ்ரேலுக்குள் நுழையமுடியாமல் பார்த்துக்கொள்வது.

இஸ்ரேலுக்குள் என்றால் ஜெருசலேத்துக்குள் என்றும் அர்த்தம். இஸ்ரேலின் ஆளுகையின் கீழ் இருக்கும் ஜெருசலேம். முஸ்லிம்களுக்கும் புனிதமான ஜெருசலேம்.

யூதர்களாவது வாழ நெருக்கடி என்றால் தாற்காலிகமாக ஜெருசலேத்தை விட்டு ஓடிவிடத் தயங்கமாட்டார்கள். ஆனால் அரேபியர்களோ, உயிரே போனாலும் ஜெருசலேமில் போகட்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்.

ஆகவே, அந்த இடத்தில் அடிக்கலாம் என்று முடிவு செய்தது இஸ்ரேல் அரசு.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16 ஜூன், 2005

No comments: