Tuesday, November 15, 2005

101] பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 101

எல்லா பாலைவனங்களிலும் எப்போதாவது ஒருநாள் மழை பொழியத்தான் செய்யும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. பாலஸ்தீன் சுதந்திரம் என்பதும் சாத்தியமானதே.

அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இஸ்ரேல் இன்று பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி, உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேலியத் தொழில்நுட்பங்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த இனச் சண்டையை இன்னும் தொடர்வது அத்தேசத்தின் மிகப்பெரிய அவமானமே.

பாலஸ்தீன் போராளி இயக்கங்களுடன் போரிடுவதற்காக இஸ்ரேல் செலவிடும் தொகை எத்தனை என்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள். ஆண்டு வரவு செலவுக் கணக்கில் சராசரியாக நான்கில் ஒரு பங்கை அவர்கள் இதற்குச் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிறியதும் பெரியதுமாக எத்தனை யுத்தங்கள், எவ்வளவு இழப்புகள்?

பாலஸ்தீனின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி விட்டு, மேற்குக் கரைப் பகுதிகளையும் காஸாவையும் முற்றிலுமாக அவர்கள் வசம் அளித்து விட்டு இஸ்ரேல் விடைபெற்றுக்கொண்டு,விட்டால், அத்தேசத்தின் வளர்ச்சி சதவிகிதம் இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமே இல்லை. இதைச் செய்ய அவர்களைத் தடுப்பவை என்னென்ன என்பதைத்தான் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால், இதனைச் செய்துதான் ஆகவேண்டும் என்கிற சூழ்நிலை இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் வந்தே தீரும் என்றொரு கணிப்பு இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யூதர்களுக்கு இருந்த இருப்பியல் சார்ந்த பிரச்னைகளும் பதற்றங்களும் இப்போது அறவே இல்லை. உலகம் ஒரு பெரிய கிராமமாகிவிட்ட சூழ்நிலையில் அவர்களால் எங்கு போயும் தமது இருப்பை ஸ்தாபித்துக்கொள்ள முடியும். மத, இன அடையாளங்கள் பின்தள்ளப்பட்டு, திறமை இருப்பவன் பிழைத்துக்கொள்வான் என்கிற பொதுவான சாத்தியத்தில் உலகம் இயங்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், இனச் சண்டைகளில் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்க, யூதர்கள் விரும்பமாட்டார்கள்.

ஆனால், இந்த மனமாற்றம் ஓரிரவில் வரக்கூடியதல்ல. கொஞ்சம் கொஞ்சமாக வரும். வந்தே தீரும். அதுவரை அமைதி காக்கவேண்டிய அவசியம் பாலஸ்தீனியர்களுக்கும் இருக்கிறது. தொடர் யுத்தங்களால் இதுவரை தாங்கள் சாதித்ததென்ன என்று அவர்களும் யோசித்துப் பார்த்தாக வேண்டியிருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளலாம் என்று அராஃபத் முடிவு செய்த பிறகுதான், ஓரிரு நகரங்களாவது அரேபியர்கள் ஆள்வதற்குக் கிடைத்தன. அதே அமைதிப் பேச்சுகளை மம்மூத் அப்பாஸ் முன்னெடுத்துச் சென்றதன் விளைவாகத்தான் இன்றைக்கு மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளிலிருந்து யூதக் குடியிருப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால் ஆயுதப் போராட்டம் இதுவரை சாதித்தது என்ன? ஆண்டவனும் ஆண்டவர்களும் கைவிட்ட நிலையில் ஆயுதத்தைத்தான் நம்பவேண்டும் என்று அம்மக்கள் கருதியதைக் குறை சொல்லமுடியாது. ஆனால், ஆயுதங்களைக் காட்டிலும் பேச்சுவார்த்தைகள் வலிமைமிக்கவை என்பதை சரித்திரம் தொடர்ந்து நிரூபித்து வந்திருப்பதை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டியிருக்கிறது. இருபத்தோறாம் நூற்றாண்டில் ஆயுதப் போராட்டம் சாதிக்கக்கூடியவையாக உலகில் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையில் பாலஸ்தீன் சுதந்திரத்துக்கு முன்னால் அங்கே நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டிய கட்டாயம் அப்பாஸுக்கு இருக்கிறது. அது ஒன்றுதான் இளைஞர்களை ஆயுதமேந்தவிடாமல் தடுக்கும். ஒரு புதிய தேசத்தைக் கட்டுவதென்பது சாதாரண காரியமல்ல. தேசம் பிறக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல் இந்த விஷயத்தில் மட்டும் அப்பாஸ் இஸ்ரேலையே ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படலாம், தப்பில்லை.

ஐம்பது ஆண்டுகளில் பாலஸ்தீன் அரேபியர்கள் எத்தனை போராட்டங்களை எதிர்கொண்டார்களோ, அதே அளவு போராட்டங்களை இஸ்ரேலும் சந்தித்திருக்கிறது. அதனால் இஸ்ரேலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை அல்லவா? பாலஸ்தீனியர்கள் மட்டும் ஏன் இன்னும் மத்தியக் கிழக்கின் நோஞ்சான் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்?

இஸ்ரேல் ஒரு தேசம்; பாலஸ்தீன் ஒரு கனவு என்று இதற்குப் பதில் சொல்லலாம். ஆனால் கனவு நனவாகப்போகிற நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை மனத்தில் கொண்டு இனியாவது ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள பாலஸ்தீனியர்கள் மனத்தளவில் தயாராகவேண்டும். பாலஸ்தீனுக்கு உதவுவதை உலக நாடுகள் அனைத்தும் தமது கடமையாக நினைத்துச் செயல்பட்டாக வேண்டும். ஒரு நூறு பன்னாட்டு நிறுவனங்கள் பாலஸ்தீனில் ஒரே சமயத்தில் கிளை திறந்தால் நடக்கக்கூடிய நல்லவற்றைச் சற்று யோசித்துப் பாருங்கள். இதற்கு ஏன் யாரும் முயற்சி எடுக்கவில்லை?

ஜெருசலேம். இதனை விலக்கிவிட்டு பாலஸ்தீன் பிரச்னை குறித்துப் பேசவே முடியாது என்பது எத்தனை உண்மையோ, அதே அளவு உண்மை ஜெருசலேம் குறித்த பிரச்னையைத் தீர்க்கவும் முடியாது என்பது.

ஐ.நா.வின் சிறப்புக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் இந்நகரைப் பாதுகாக்கப்படவேண்டிய, புராதன நகரமாக சிறப்பு கவனத்துக்குட்பட்ட சுற்றுலாத்தலமாக, மும்மதத்தவரும் வந்து வணங்கிவிட்டுச் செல்லக்கூடிய வழிபாட்டுத் தலமாக, அனைவருக்கும் பொதுவான தொல்லியல் நகரமாக ஆக்கி, பராமரிப்புப் பொறுப்பை நிரந்தரமாக ஐக்கிய நாடுகள் சபையே ஏற்பது ஒன்றுதான் வழி.

இஸ்ரேலோ, புதிதாக மலரவிருக்கும் பாலஸ்தீனோ, பக்கத்து தேசமான ஜோர்டனோ வேறெந்த தேசமோ ஜெருசலேத்தைச் சொந்தம் கொண்டாடினால் எப்போதும் பிரச்னைதான். இதில் கிழக்கு ஜெருசலேம், மேற்கு ஜெருசலேம் என்கிற பிரிவினைகள் கூடப் பிரச்னைக்கு வழிவகுக்கக்கூடியதுதான்.

ஜெருசலேம் யாருடையது என்கிற கேள்வி இருக்கும் வரை பாலஸ்தீனுக்கு அமைதி கிடையாது. மனத்தளவில் அனைவரும் உணர்ந்த இந்த உண்மையைச் செயல் அளவிலும் கடைப்பிடிக்க இரு தரப்பினரும் தயாராகிவிட்டால், பாலஸ்தீன் சுதந்திரம் கைக்கெட்டும் தூரம்தான்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10 நவம்பர், 2005

No comments: