Friday, September 16, 2005

86] ஏரியல் ஷரோன் நடத்திய ஓரங்க நாடகம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 86

ராணுவத் தளபதியாக உத்தியோகம் பார்த்திருந்தாலும் அடிப்படையில் ஏரியல் ஷரோன், எப்போதுமே அரசியல்வாதிதான். பிரதமராவதற்கு முன்பு, அவரது அரசியல் எப்படி இருந்தது என்பதை, ஒரு வரியில் விளக்கிவிடலாம். அவர் இஸ்ரேலின் லாலு பிரசாத் யாதவ். அதிரடிகளுக்குப் பெயர்போனவர். ஜனநாயக சௌகரியத்தில் நினைத்துக்கொண்டால் பேரணி, ஊர்வலம் என்று அமர்க்களப்படுத்திவிடுவது, அவரது இயல்பாக இருந்தது. பெரிய அளவில் - மிகப்பெரிய அளவில் ஓர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக, அவர் தீட்டிய திட்டம்தான், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைவது என்பது.

அதன்மூலம் யூதர்களின் நன்மதிப்பை அழுத்தந்திருத்தமாகப் பெறுவது, அதை அடிப்படையாக வைத்தே இஸ்ரேலின் பிரதமராகிவிடுவது என்கிற அவரது கனவு, அச்சுப்பிசகாமல் பலித்ததை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், அன்றைக்கு அந்தச் சம்பவம் உண்டாக்கிய பாதிப்பு, பாலஸ்தீன் சரித்திரத்தில் அழிக்கமுடியாததொரு மாபெரும் கறையாகிப்போனதும் உண்மை.

ஏரியல் ஷரோன், அல் அக்ஸாவுக்கு வருகை தரத் திட்டமிட்டிருந்த தினத்தில், ஒட்டுமொத்த ஜெருசலேம் மக்களும் அந்தப் பிராந்தியத்தில் நிறைந்து குவிந்துவிட்டார்கள். ஏற்கெனவே, அரசுக்கு விண்ணப்பித்து, 'முறைப்படி' அனுமதி பெற்றுத்தான் அவர் அந்தத் 'தீர்த்தயாத்திரை'யை மேற்கொண்டிருந்தார். ஆகவே, முன்னதாகவே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று அரண்கள் போல் நகரக் காவல் படையினர், துணை ராணுவப் படையினர், மொஸாட் உளவுப் பிரிவின் சிறப்புக் காவல் அதிகாரிகள் மசூதியைச் சூழ்ந்து காவல் காக்க, ஏரியல் ஷரோன் அங்கே வந்து சேர்ந்தார்.

இறங்கியவருக்கு, முதலில் கிடைத்தது ஒரு கல்லடி. எங்கிருந்து எப்படிப் பறந்து வந்தது என்று ஆராய்ச்சி செய்யவெல்லாம் நேரமில்லை. ஒரு கல். ஒரே ஒரு கல். அவ்வளவுதான். சரியாக அவரது காலடியில் வந்து விழுந்தது. நகத்தில் பட்டிருக்குமோ என்னவோ. ஆனால், தாக்குதல் ஆரம்பமாகிவிட்டதாக, காவல்துறையினர் தற்காப்பு யுத்தத்துக்கு ஆயத்தமாக, அதுவே போதுமானதாக இருந்தது.

நிறையப்பேர் கறுப்புக்கொடி காட்டினார்கள். ஷரோனுக்கு எதிராக கோஷமிட்டார்கள். தடுப்புகளை மீறி வந்து, அவரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், காவல்துறையினர் யாரையும் அருகே நெருங்க விடவில்லை. இது, முஸ்லிம்களின் கோபத்தை மிகவும் கிளறிவிட்டது. வன்மத்தை நெஞ்சுக்குள் வைத்துப் பூட்டி, தொலைவில் நின்றபடியே பல்லைக் கடித்துக்கொண்டிருந்தார்கள்.

'நான் வம்பு செய்ய வரவில்லை; அன்பை விதைக்கவே வந்தேன்' என்று கவித்துவமாகப் பேசி கைதட்டல் பெற்றுக்கொண்டார் ஏரியல் ஷரோன்.

அவரது வருகையின் உண்மையான நோக்கம், அன்பு விதைப்பதெல்லாம் இல்லை. அல் அக்ஸா மசூதி வளாகம் யூதர்களுக்குச் சொந்தமானதுதான்; நாம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மசூதியை இடித்துவிட்டு, நமது தேவாலயத்தைக் கட்டிவிடலாம் என்று சொல்லாமல் சொல்லுவதுதான்! ஜெருசலேம் முழுமையாக, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை, யூதர்களுக்குப் புரியவைப்பதற்காகத்தான் அவர் அந்த முயற்சியை மேற்கொண்டார்.

ஏரியல் ஷரோன் என்கிற ஒரு மனிதர், சுமார் பதினைந்து நிமிடங்கள் நடத்திய, அந்த ஓரங்க நாடகத்துக்குப் பாதுகாவலர்களாக வந்திருந்தவர்களின் எண்ணிக்கை, மொத்தம் ஆயிரத்து இருநூறு. பார்வையாளர்களான பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எழுபத்தைந்தாயிரம் பேர்.

ஷரோன் வந்து திரும்பும்வரை அதாவது, அந்தப் பதினைந்து இருபது நிமிடங்கள் வரை, அங்கே எந்த விபரீதமும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. காவலர்கள் மிகத் திறமையாகச் செயல்பட்டு, ஒரு எறும்புகூடக் கிட்டே வரமுடியாதபடிதான் பார்த்துக்கொண்டார்கள்.

ஆனால், அவர் திரும்பிய மறுகணமே ஜெருசலேம் பற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டது. அடிபட்ட புலிகளாக ரகசியமாகக் கூடிப் பேசினார்கள், முஸ்லிம்கள். புனிதமான அல் அக்ஸா மசூதி வளாகத்தை வேண்டுமென்றே களங்கப்படுத்துவதற்காகவே, ஏரியல் ஷரோன் அங்கு வந்து போனார் என்பதில், அவர்களுக்கு இரண்டாவது கருத்தே இல்லை. ஆதிக்க சக்திக்கும் பாதிக்கப்பட்ட வர்க்கத்தினருக்கும், காலம் காலமாக நடந்து வரும் யுத்தத்தின் அடுத்த பரிமாணம், அந்தக் கணத்தில் நிகழலாம் என்பது போலச் சூழல் மோசமடைந்துகொண்டிருந்தது.

முஸ்லிம்கள், எந்தத் தலையை முதலில் உருட்டப்போகிறார்கள் அல்லது எந்தக் கிராமத்தில் புகுந்து, தீவைக்கப்போகிறார்கள் என்பதுதான் கேள்வி. பதில் எப்போது கிடைக்கும் என்று உலகமே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், அது நடந்தது..

முதல் உயிரை யூதர்களே பறித்தார்கள்.

எப்படியும் முஸ்லிம்கள் தாக்கத்தான் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பில், தாங்களே முந்திக்கொண்டால், சேதத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்த ஜெருசலேம் நகர யூதர்கள், அங்கிருந்த முஸ்லிம் குடியிருப்புகளின்மீது, சற்றும் எதிர்பாராவிதமாகத் தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள். கற்கள் பறந்தன. தீப்பந்தங்கள் பாய்ந்து சென்று பற்றிக்கொண்டன. கதவுகள் இடித்து உடைக்கப்பட்டு, வீடுகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. தப்பியோடியவர்களைப் பிடித்து இழுத்து, கழுத்தை அறுத்தார்கள். சிலர் கைத்துப்பாக்கியால் சுட்டார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் எல்லாம் நடந்தது. அரை நாள் பொழுதுதான். கலவர மேகம் சூழ்ந்தது தெரியும். முஸ்லிம்கள் தமது கலவரத்தை எங்கிருந்து தொடங்குவார்கள் என்று அனைவரும் யோசித்துக்கொண்டிருக்கும்போது, யூதர்கள் அதனை ஆரம்பித்துவைத்ததோடு மட்டுமல்லாமல், அன்று இரவுக்குள்ளாகவே நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை ரத்தம் சொட்டச்சொட்டத் தலைதெறிக்க ஓடவைத்தார்கள். அப்புறம் நடந்ததுதான், மேலே சொன்ன தீவைப்பு இத்தியாதிகள்.

இத்தனை நடந்தபோதும், காவலர்கள் யாரும் அங்கே வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். எல்லாம் முடிந்து நகரமே மயானபூமியாகக் காட்சியளித்தபோதுதான், முதல் போலீஸ் வண்டி வந்து நின்றது. பதினேழு நிமிடங்கள் பிரதான மார்க்கெட்டில் ஒப்புக்கு ஒரு விசாரணை நடந்தது.

கொதித்துவிட்டது முஸ்லிம் உலகம். அன்றிரவே தீர்மானித்து, மறுநாள் காலையே தமது எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதமாகக் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள். இங்கே மேற்குக் கரையில் ஒரு பேரணி. அங்கே காஸாவில் ஒரு பேரணி.

தோதாக அன்றையதினம், முஹம்மத் அல் துரா என்கிற பன்னிரண்டே வயதான சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சிறு துப்பாக்கிச் சண்டையின் குறுக்கே போய் மாட்டிக்கொண்டுவிட, சிறுவன் பலியாகிப் போனான்.

இதுவும், முஸ்லிம்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. பாலஸ்தீனில் மட்டுமல்ல. உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும், வெகுண்டெழச் செய்த சம்பவம் அது.

இதன் தொடர்ச்சியாகத்தான், சாதாரண கண்டனப் பேரணியாகத் தொடங்கிய அந்த 'அல் அக்ஸா இண்டிஃபதா', ஒரு மாபெரும் கலவர ரகளையின் தொடக்கப்புள்ளி ஆனது. எங்கிருந்துதான் முஸ்லிம்களுக்குக் கற்கள் கிடைத்தனவோ தெரியவில்லை. பேரணியெங்கும் கற்களே பறந்தன. கண்ணில் பட்ட அத்தனை இஸ்ரேலியக் காவலர்களையும் அடித்தார்கள். துரத்தித் துரத்தி அடித்தார்கள். பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பிப் பற்றவைத்துத் தூக்கித் தூக்கி வீசினார்கள். யூதக் கடைகள், கல்வி நிலையங்கள், வீடுகள் எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. போகிற வழியிலெல்லாம், முத்திரை பதித்துக்கொண்டே போனார்கள்.

இத்தனைக்கும், முஸ்லிம்கள் தரப்பில் இழப்புகள் அம்முறை மிக அதிகமாக இருந்தது. இண்டிஃபதா தொடங்கிய முதல் ஆறு தினங்களிலேயே, சுமார் அறுபத்தைந்து பேரை இஸ்ரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொன்றிருந்தார்கள். இவர்கள் தவிர, சுமார் 2,700 பேர் நடக்கக்கூட முடியாத அளவுக்குக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வீதியெங்கும் ரத்தக் கறையுடன் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் விழுந்துகிடந்த காட்சிகளை, சர்வதேச மீடியா கர்ம சிரத்தையுடன் ஒளிபரப்பியது.

அக்டோபர் 12-ம் தேதி இரண்டு இஸ்ரேலிய போலீஸார், சிவிலியன் உடையில் ரமல்லா நகருக்குள் புகுந்தார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொண்ட பாலஸ்தீன் அத்தாரிடி காவலர்கள், உடனடியாகக் கைது செய்து சிறையில் தள்ளினார்கள். இந்தச் சம்பவம், மேற்குக் கரையில் ஒப்புக்குக் காவலர்கள் என்கிற பெயருடன், பொழுதுபோக்கிக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலருக்கு, மிகுந்த சலிப்பையும் வெறுப்பையும் உண்டாக்கின. அவர்கள், காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கே பணியில் இருந்த இஸ்ரேலியக் காவலர்கள் அத்தனை பேரையும் சுட்டுக்கொன்று, பிணங்களைத் தாங்களே தூக்கி வந்து வீதியில் வீசி எறிந்தார்கள்.

தற்செயலாக, அந்தப் பக்கம் படமெடுத்துக்கொண்டிருந்த ஒரு இத்தாலி டி.வி. குழுவினர், இந்தக் காட்சியைப் படமெடுத்து ஒளிபரப்பிவிட, ஒட்டுமொத்த யூதகுலத்தவரும், பாலஸ்தீன் அரேபியர்களை ஒழித்துக்கட்ட, வரிந்துகட்டிக்கொண்டு, களத்தில் குதித்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும் அபாயம் தெரியவரவே, இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சி புரியும் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில், விமானத் தாக்குதல் நடத்த முடிவு செய்தது.

இந்தக் களேபரங்கள் நடந்துகொண்டிருந்த காலத்தில், இஸ்ரேலில் பொதுத்தேர்தல் வந்தது. வருடம் 2001, பிப்ரவரி மாதம்.

தொழிலாளர் கட்சித் தலைவர் ஈஹுத் பாரக், புகழ்பெற்ற மக்கள் தலைவர். எப்படியும் அவர் தலைமையிலான ஆட்சிதான் அமையும் என்று உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, சற்றும் நம்பமுடியாதபடி லிகுத் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏரியல் ஷரோன் அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

எல்லாம், அவர் அல் அக்ஸா மசூதிக்குள் புகுந்து நடத்திய அரசியல் நாடகத்தின் விளைவு. யூதர்களின் தேவதூதரே அவர்தான் என்பது போல், திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டது அப்போது. யூதர்கள் இழந்த தம் சாலமன் தேவாலயத்தை மீண்டும் கட்டவேண்டுமென்றால், ஜெருசலேத்தை அவர்கள் நிரந்தரமாகத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றால், ஏரியல் ஷரோனை ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே முடியும் என்று பிரசாரம் செய்யப்பட்டிருந்தது.

ஷரோனும் மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார். 'எனக்கு யார் மீதும் அனுதாபங்கள் ஏதுமில்லை. இஸ்ரேல் மக்களுக்காக மட்டுமே நான் குரல் கொடுப்பேன், போராடுவேன்.''

போதாது? பிரதமராகிவிட்டார்.

மே மாதம் 7-ம் தேதி ஒரு சம்பவம் நடந்தது. நடந்துகொண்டிருந்த சம்பவங்களுக்கெல்லாம், சிகரமானதொரு சம்பவம்.

பாலஸ்தீன் அத்தாரிடி பொறுப்பில் இருந்த காஸா பகுதியின் கடல் எல்லைக்குள் 'சந்தோரினி' என்றொரு கப்பல் வந்துகொண்டிருந்தது. அந்தக் கப்பலை இஸ்ரேலியக் கடற்படை அதிகாரிகள், சுற்றி வளைத்துச் சோதனை போட்டார்கள். ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் அதிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை அனைத்தும், 'Popular Front for the Liberation of Palestine - General Command (PFLP - GC)' என்கிற அமைப்பின் தலைவரான அஹமத் ஜிப்ரில் என்பவரின் ஆர்டரின் பேரில், காஸா துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்த ஆயுதங்கள். அவற்றின் மொத்த மதிப்பு பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று, மதிப்பிட்ட அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

காஸா துறைமுகத்துக்குச் சற்றுத்தள்ளி ஒதுக்குப்புறமான கடல் பகுதியில் கப்பலை நிறுத்தி, படகுகள் மூலம் அவற்றை எடுத்துச் சென்று பாலஸ்தீன் அத்தாரிடி அதிகாரிகளிடம் சேர்ப்பிக்க, உத்தரவு இருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

மிகவும் வெளிப்படையாகச் சொல்லுவதென்றால், யாசர் அராஃபத், இஸ்ரேலுக்கு எதிரானதொரு முழுநீள யுத்தத்துக்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார் என்பதே இதன் பொருள்.

இதை பாலஸ்தீனியர்களேகூட நம்பமாட்டார்கள். அராஃபத், என்றைக்கு பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராகி, மேற்குக் கரை நகரங்களையும் காஸாவையும் ஆளத் தொடங்கினாரோ, அன்றிலிருந்தே தமது போராளி முகத்தைக் கழற்றி வைத்துவிட்டார் என்பதுதான், பாலஸ்தீனியர்களின் பிரதானமான குற்றச்சாட்டு. ஆனால், இந்த விஷயத்தில் இஸ்ரேலிய கடற்படை அதிகாரிகள் சொன்ன தகவல், முற்றிலும் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது?

இஸ்ரேல் வேறு ஏதாவது சதித்திட்டம் தீட்டுகிறதா என்ன? யாருக்கும் அப்போது புரியவில்லை.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 18 செப்டம்பர், 2005

No comments: