Monday, May 16, 2005

51] ஹிட்லரின் விஷவாயு கொலைக்கூடங்கள்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 51

முதன்முதலில் ஹிட்லரை சந்தோஷப்படுத்துவதற்காகத்தான் நாஜிகள், யூதர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். பிறகு, யூத ஒழிப்பு என்பது ஜெர்மானிய அரசின் தலையாய செயல்திட்டங்களுள் ஒன்றானபோது, பார்க்கும் இடங்களில் தென்படும் அத்தனை யூதர்களையும் கொன்றார்கள். ஒரு கட்டத்தில், ஹிட்லரின் சந்தோஷம், தேசிய செயல்திட்டம் என்பதையெல்லாம் தாண்டி, யூதர்களைக் கொல்வதென்பது, ஜெர்மானிய நாஜிகளுக்கு ஒரு நோய் போலவே ஆகிவிட்டது. ரத்தத்தில் கலந்துவிட்ட தொற்றுநோய். பொழுது விடிந்து பொழுதுபோனால், இன்றைக்கு எத்தனை பேரைக் கொல்வது என்று கவலையுடன் சிந்திக்கத் தொடங்கிவிடுகிற அளவுக்குக் கொலைவெறி அவர்களைத் தின்றுகொண்டிருந்தது.

இந்த வெறியின் உச்சகட்ட வெளிப்பாடு, ஹிட்லரின் போலந்து படையெடுப்பைத் தொடர்ந்து தலைவிரித்து ஆடத்தொடங்கியது.

ஆங்காங்கே சில நூறு பேர், ஆயிரம் பேர் என்று நிற்கவைத்துச் சுட்டுக்கொல்வது, நாஜிகளுக்கு அலுத்துவிட்டது. கொல்லத்தான் போகிறோம்; ஏதாவது புதுமையாக யோசித்து அதையும் கலாபூர்வமாகச் செய்யலாமே என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.

8 டிசம்பர், 1941-ம் ஆண்டு அது நடந்தது. ஜெர்மன் ராணுவம் கைப்பற்றிய போலந்தின் எல்லையோர கிராமம் ஒன்றில் இருந்த மக்களை வெளியேற்றிவிட்டு வீடுகளையெல்லாம் இடித்துத் தள்ளி, ஒரு பெரிய மரக் கூடாரத்தைக் கட்டினார்கள். ஒரே சமயத்தில் சுமார் ஆறாயிரம் பேர் வரை அந்த மர வீட்டில் வசிக்கலாம். அத்தனை பெரிய கட்டடம்.

கட்டுமானப்பணி நான்கு தினங்களுக்குள் நடந்துமுடிந்துவிட்டது. எல்லாம் தயார் என்று ஆனதும், சுற்றி இருந்த சுமார் எட்டு கிராமங்களுக்குப் போய் அங்கெல்லாம் வசித்துக்கொண்டிருந்த சுமார் நான்காயிரத்து ஐந்நூறு யூதர்களைக் கைது செய்து அழைத்து வந்து அந்த மர வீட்டினுள் அடைத்தார்கள்.

மூச்சுவிடக்கூட காற்று நுழையமுடியாதபடி கட்டப்பட்டிருந்த கொலைக்களம் அது. நான்கு புறங்களிலும் தலா ஒரே ஒரு வட்ட வடிவ ஓட்டை மட்டுமே இருந்தது. அந்த ஓட்டைகளின் வழியே பெரிய பைப்லைன் ஒன்று உள்ளே செல்லும்படி அமைக்கப்பட்டது. தப்பிக்க வழியேதும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, அந்தக் குழாய்களின் வழியே விஷவாயுவை உள்ளே செலுத்தத் தொடங்கினார்கள்.

அத்தனை பெரிய கொலைக்களம் முழுவதும் இண்டு இடுக்கு விடாமல் விஷவாயு நிறைவதற்குச் சரியாக நான்கு தினங்கள் பிடித்தன.

உள்ளே குழுமியிருந்த நான்காயிரத்து ஐந்நூறு யூதர்களும் ஒவ்வொருவராக மூச்சுத் திணறி, ஓலக்குரல் எழுப்பி, செத்து விழுவதை வெளியிலிருந்து ரசித்துக் கேட்டபடி ஜெர்மானியக் காவல்துறையினர் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். உள்ளே அடைக்கப்பட்டவர்களுள் ஒருவர்கூட உயிருடன் இல்லை என்பது தெரிந்தபிறகுதான் அவர்கள் கதவைத் திறந்தார்கள். (கதவு திறக்கப்பட்டபோது வெளியேறிய விஷப்புகையில் யூதரல்லாத சில போலந்து கிராமவாசிகளும் மடிந்துபோனார்கள்.)

இப்படி அடைத்துவைத்து அணு அணுவாகக் கொல்வது மிகவும் சுலபமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறதே என்று எண்ணிய ஜெர்மானிய காவல்துறையினர், இன்னும் நாலாயிரம் பேரைப் பிடித்துவா என்று ஒரு தனிப்படையை வேறு நான்கு கிராமங்களுக்கு உடனே அனுப்பினார்கள்.

அந்தக் கொலைக்கூடத்துக்கு செம்னோ (Chelmno) என்று பெயர். முதல் நாலாயிரம் பேர் அங்கே மரணமடைந்த ஒரு வார காலத்துக்குள் அடுத்து பத்தாயிரம் யூதர்கள் அதனுள்ளே அடைக்கப்பட்டு விஷப்புகைக்கு பலியானார்கள். ஒரு சிறு பிசிறு கூட இல்லாமல் யூதர்களை இந்த முறையில் கொல்லமுடிகிறது என்கிற தகவலை, ஜெர்மனியின் அத்தனை காவல் அதிகாரிகளுக்கும் உடனடியாகத் தெரிவிப்பதற்காக ஒரு மாநாடு கூட்டினார்கள். பெர்லினில் நடைபெற்ற அந்த மாநாட்டின் இறுதியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, எங்கெல்லாம் ஹிட்லரின் ராணுவம் வெற்றி வாகை சூடியபடி போய்க்கொண்டிருக்கிறதோ, அங்கெல்லாம் உடனடியாக ஒரு கேஸ் சேம்பர் கட்டிவிடுவது. புதுக்குடித்தனம் போவதற்குமுன் வீட்டைப் பெருக்கி, வெள்ளையடித்து சுத்தம் செய்வது போல, ஒவ்வொரு தேசத்திலும் உள்ள அத்தனை யூதர்களையும் அந்தக் கொலைக்களத்துக்குக் கொண்டுபோய் கொத்தாகக் கொன்றுவிடுவது.

இந்தத் திட்டம் மட்டும் ஒழுங்காக நடந்துவிடுகிற பட்சத்தில் ஓரிரு வருடங்களில் ஐரோப்பாவில் ஒரு யூதர்கூட உயிருடன் இருக்கமுடியாது என்று கணக்குப் போட்டு வேலையை ஆரம்பித்தார்கள். அதற்கு முன்னால் ஒவ்வொரு ஐரோப்பிய தேசத்திலும் எத்தனை யூதர்கள் இருக்கிறார்கள், எந்தெந்தப் பகுதிகளில் அவர்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்கிற பட்டியல் வேண்டும் என்று காவல்துறை மேலிடம் கேட்டது.

இதற்கென்று ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, ரகசியமாக ஒவ்வொரு ஐரோப்பிய தேசத்திலும் வசிக்கும் யூதர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க அனுப்பினார்கள். குடியேற்றத்துறை, சுங்கத்துறை, நகரசபைகளில் ஆங்காங்கே ஆட்களைப் பிடித்து லஞ்சம் கொடுத்து, முன்னதாக அந்தந்த நாடு, நகரங்களில் வசிக்கும் யூதர்கள் குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டன. நன்றாக கவனிக்க வேண்டும். இதெல்லாம் ஜெர்மனிக்குள் நடந்த விஷயங்கள் அல்ல. ஒட்டுமொத்த ஐரோப்பிய தேசங்களிலும் ஆள் வைத்து தகவல் சேகரித்துக்கொண்டிருந்தது, ஜெர்மானியக் காவல்துறை.

‘யூதர்கள் விஷயத்தில் இறுதித்தீர்வு’ என்று ஒரு தலைப்பே இதற்கு வைத்து, தனியே ஒரு ஃபைல் போட்டு, கவனிப்பதற்கு அதிகாரிகளை நியமித்து ஒரு அரசாங்கத் திட்டமாகவே இது செயல்படுத்தப்பட்டது. பிரிட்டன் உள்பட எந்த தேசத்தையும் ஹிட்லர் விட்டுவைக்க விரும்பவில்லை. கிழக்கே சோவியத் யூனியனிலிருந்து மேற்கே அமெரிக்கா வரை அத்தனை தேசங்களிலும் வசிக்கும் அத்தனை யூதர்களையும் கொன்றுவிட்டு, உலகம் முழுவதும் ஆரியக்கொடியை பறக்கவிடுவேன் என்று வீர சபதம் செய்திருந்தார் அவர்.

1942-ம் ஆண்டு போலந்தில் ஹிட்லரின் படை கட்டிய ‘செம்னோ’ கொலைக்களம் மேலும் விரிவு படுத்தப்பட்டது. ஒரு தாற்காலிகக் கூடாரமாக முன்னர் கட்டப்பட்ட அந்த கேஸ் சேம்பர், நன்கு திட்டமிடப்பட்டு மிகவும் உறுதிமிக்க கட்டடமாக, இன்னும் பெரிய அளவில் இன்னும் நிறைய வசதிகளுடன் (உள்ளே அனுப்பப்படுபவர்களுக்கல்ல; அனுப்புகிறவர்களுக்கு!) அதிநவீன கொலைக்களமாக திருத்திக் கட்டப்பட்டது. கூடவே மேலும் மூன்று கொலைக் களங்கள் மிக அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டன. (இவை, ஜெர்மனி - போலந்து எல்லைப் பகுதியில் உள்ள Belzec, Sobibor, Treblink ஆகிய நகரங்களில் கட்டப்பட்டன.)

உலகப்போரில் ஜெர்மன் ராணுவத்தினர் வெற்றி கண்டு, போகும் வழியெல்லாம் வசிக்கும் யூதர்களை உடனடியாகக் கைதுசெய்து மிகப்பெரிய டிரக்குகளிலும் கூட்ஸ் வண்டிகளிலும் ஏற்றி, இந்தக் கொலைக்களங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். வாகனங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டபோது மாமிசங்களையும் கால்நடைகளையும் ஏற்றிப்போகும் கார்கோ பெட்டிகளில் அடைத்தும் கூட்ஸ் வண்டிகளில் இணைத்து அனுப்பிவிடுவார்கள். வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டால், அது அவர்களின் நல்லகாலம். இல்லாவிட்டால் விஷப்புகை மரணம். வேறு வழியே இல்லை.

இப்படிக்கூட நடக்குமா என்று நினைத்துப் பார்த்தாலே ரத்தக்கண்ணீர் வரத்தக்க கொடூரத்தின் விஸ்வரூபம் அது. செய்யும் கொலைகள் குறித்த குற்ற உணர்ச்சி ஹிட்லருக்கு வேண்டுமானால் இல்லாதிருந்திருக்கலாம். அவரது ஆட்கள் அத்தனை பேருமா ஈவிரக்கமற்றவர்களாக இருந்திருப்பார்கள்?

இதுவும் விசித்திரம்தான். ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்தக் காட்சிகள் ஓரளவு நினைவிருக்கலாம். ஹிட்லரின் ராணுவத்தில் பணியாற்றிய ஷிண்ட்லர் என்கிற ஒரு தனிநபர், யூதர்கள் விஷயத்தில் சற்றே மனிதாபிமானமுடன் நடந்துகொண்டதைச் சித்திரித்து, ஆஸ்கர் விருது பெற்ற படம் அது. இன்னும் ஓரிரு ஷிண்ட்லர்கள் இருந்திருக்கக்கூடும். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வெறும் காட்டுமிராண்டிகளின் கூட்டம் என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. முன்பே சொன்னதுபோல, இது ஒரு கடமை என்பதைத் தாண்டி ஒரு நோயாக அவர்கள் மனமெங்கும் பரவிவிட்டிருந்ததுதான் மிக முக்கியக் காரணமாகப் படுகிறது.

மார்ச் 1942-ம் வருடம் ஹிட்லர் தனது ஐந்தாவது கொலைக்களத்தைக் கட்டுவித்தார். இதற்கு ‘ஆஸ்விச்’ (Auschwitz) என்று பெயர்.

முந்தைய நான்கு கேஸ் சேம்பர்களுக்கும் இந்த ஆஸ்விச் சேம்பருக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் இங்கே அனுப்பப்படும் யூதர்கள் உடனடியாகக் கொல்லப்படமாட்டார்கள்.

மாறாக, சில காலம் அந்தச் சிறைக்கூடத்தில் தினசரி ஒரே ஒரு ரொட்டித்துண்டை உண்டு உயிர்வாழ அவர்களுக்கு அனுமதி உண்டு.

எதற்காக இந்தச் ‘சலுகை’ என்றால், இங்கே கொண்டுவரப்படும் யூதர்கள் அத்தனைபேரும் பார்ப்பதற்கு திடகாத்திரமாக இருப்பார்கள். நோயாளிகள், நோஞ்சான்களை மற்ற நான்கு முகாம்களுக்கு அனுப்பிவிட்டு, திடகாத்திர யூதர்களை மட்டும் இங்கே கொண்டுவந்து தங்கவைத்து, அவர்களின் உடல் உறுதியைப் பரிசோதிப்பார்கள். உணவில்லாமல், நீரில்லாமல் அவர்களால் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று பார்ப்பார்கள்.

பதினைந்து நாட்களுக்கு மேல் ஒரு மனிதன் அந்த ஒரே ஒரு ரொட்டித்துண்டை உண்டு, ஓரளவு ஆரோக்கியமாகவே இருந்துவிட்டால், அவனது உயிர் போகாது. மாறாக, ஜெர்மானிய அதிகாரிகளுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அடிமைகளாகப் பணியாற்றவேண்டும்.

யூதர்கள் அத்தனை பேரையும் கொன்றுவிடவேண்டும் என்று செயல்திட்டம் வகுத்துவிட்டு, அவர்களை அடிமைகளாக வைத்துக்கொள்வது எப்படி? இதற்கு ஒரு ஜெர்மானிய காவல்துறை அதிகாரி சொன்ன பதில் : “விநாடிப்பொழுதில் கொன்றுவிடலாம். ஆனால் துளித்துளியாக் கொல்வதில் உள்ள சுகம் அதில் இல்லை. அதனால்தான் அவர்களை அடிமைகளாக்குகிறோம்.”

இதனிடையில் ‘ஆஸ்விச்’ முகாமுக்கு அனுப்பப்படும் யூதர்களைக் கொல்வதில்லை என்கிற செய்தி ஏனைய அப்பாவி யூதர்களுக்குப் போய்ச்சேர்ந்திருந்தது. கைது செய்யப்படும் யூதர்கள், எப்படியாவது தங்களை ஆஸ்விச் முகாமுக்கு அனுப்பவேண்டும் என்பதற்காக ஜெர்மானியக் காவல்துறையினருக்கு ஏராளமாக லஞ்சம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாக மரணமில்லை என்கிற உத்தரவாதமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது அப்போது!

இந்த வகையில் சில நூறு யூதப் பெண்கள், இரண்டாயிரத்தைந்நூறு குழந்தைகள், எண்பது கிழவர்கள் ஆகியோர் ஆஸ்விச்சுக்கு வந்து சேர்ந்தார்கள். இது நடந்தது 1942-ம் ஆண்டு மே மாதத்தில்.

முகாம் அதிகாரிகளுக்கு மிகவும் குழப்பமாகிப்போனது. திடகாத்திரமானவர்களை மட்டும்தானே இங்கே அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்; எதற்காக பெண்களும் கிழவர்களும் குழந்தைகளும் வருகிறார்கள் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ஒருவேளை மற்ற முகாம்களில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ; உடனடியாகக் கொன்று ‘இடத்தை காலியாக்கி’ வைத்துக்கொள்வதற்காக இப்படியரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து, அந்தக்கணமே அந்த முகாமுக்கு வருகிறவர்களுக்கு ஒரு ரொட்டி கொடுக்கிற வழக்கத்தை நிறுத்திவிட்டார்கள்.

மாறாக, அந்த பேட்சில் வந்த பெண்கள், குழந்தைகள், கிழவர்களை உள்ளே அனுப்பி, பழையபடி விஷப்புகையைப் பரவவிடத் தொடங்கிவிட்டார்கள்.

இறப்பதற்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வந்து சேர்ந்த அந்த அப்பாவி யூதர்கள் அந்தக் கணமே காலமாகிப்போனார்கள்!

இவர்கள் கொஞ்சகாலமாவது உயிர்பிழைத்திருப்பதற்காக லஞ்சம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்கிற தகவலோ, வருபவர்களை மேலதிகாரிகள் யாரும் பார்த்து அனுப்பிவைக்கவில்லை; திருட்டுத்தனமாக அங்கே வந்திருக்கிறார்கள் என்பதோ அடுத்த இரண்டு வருடங்கள் வரை அங்கிருந்த அதிகாரிகளுக்குத் தெரியவே தெரியாது. யாரும் விசாரிக்கக்கூட இல்லை.

அடிமைகளை உருவாக்குவதற்காகவென்று கட்டப்பட்ட அந்த சிறைச்சாலை, மற்றவற்றைப் போலவே உடனடி கொலைக்களமாக மாறி, அடுத்த இரண்டு வருடங்களில் சுமார் பத்துலட்சம் பேருக்கு விஷவாயு மோட்சம் அளித்தது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 19 மே, 2005

No comments: