Wednesday, August 10, 2005

75] ஹமாஸ் (Harakat Al Muqawamah AlIslamiyah)

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 75

ஹரக்கத் அல் முக்காவாமா அல் இஸ்லாமியா (Harakat Al Muqawamah AlIslamiyah) என்கிற நெடும்பெயரின் எளிய சுருக்கம்தான் ஹமாஸ் (Hamas).

பொதுவாக டெல் அவிவில் குண்டு வெடித்தது என்கிற செய்தி வரும்போதெல்லாம் ஹமாஸின் பெயர் அடிபடுவதைப் பார்த்திருப்பீர்கள். மற்றபடி அந்த இயக்கத்தைப் பற்றி மேலதிக விவரங்கள் பெரும்பாலும் வெளியே வராது. அதிகம் படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லத்தக்க மிகப்பெரிய பண்டிதர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்பு இது. இன்றல்ல; தொடக்கம் முதலே அப்படித்தான். ஆனால் அல் கொய்தா என்று சொன்னதுமே ஒசாமா பின்லேடனின் முகம் நினைவுக்கு வருவது மாதிரி, ஹமாஸ் என்றதும் யார் முகமும் பெயரும் அடையாளமும் நமது நினைவில் வருவதில்லை அல்லவா? அதுதான் ஹமாஸ். உண்மையில் அல் கொய்தாவைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது; அளவிலும் செயல்திறனிலும் பெரிய அமைப்பு இது.

ஆனால் அல் கொய்தா மாதிரி ஊரெல்லாம் குண்டு வைத்து, உலகெல்லாம் நாசம் செய்யும் அமைப்பு அல்ல இது. மாறாக, பாலஸ்தீனின் விடுதலைக்காக மட்டும், இஸ்ரேலுக்கு எதிராக மட்டும் செயல்படும் ஓர் அமைப்பு. பாலஸ்தீனுக்கு வெளியே ஹமாஸுக்குத் தீவிரவாத இயக்கம் என்று பெயர். ஆனால் பாலஸ்தீனுக்குள் அது ஒரு போராளி இயக்கம் மட்டும்தான். இன்றைக்கு பாலஸ்தீன் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாக விளங்கும் ஹமாஸ், ஏன் பி.எல்.ஓ.மாதிரி ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் இயக்கமாக உருப்பெறவில்லை என்கிற கேள்விக்கு ஒரே பதில்தான்.

பி.எல்.ஓ.வுக்கு அரசியல் நோக்கம் மட்டுமே உண்டு. ஹமாஸின் அடிப்படை நோக்கம் மதம் சார்ந்தது. இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னையை இன்றுவரை யூத முஸ்லிம் பிரச்னையாக மட்டுமே பார்க்கிற அமைப்பு அது. அதனால்தான் பி.எல்.ஓ.வில் இணையாமல் தனியாகத் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு பி.எல்.ஓ.வுக்கு இணை அமைப்பு போலச் செயல்படத் தொடங்கியது ஹமாஸ்.

யூதர்களின் அராஜகங்கள் அனைத்துக்கும் ஒரு தடுப்புச் சக்தியாக விளங்கக்கூடியவர்கள் என்கிற அறைகூவலுடன் (ஹமாஸின் முழுப்பெயரின் நேரடியான அர்த்தமே இதுதான்) பாலஸ்தீன் விடுதலைப் போரில் ஹமாஸ் குதித்தபோது, ஏற்கெனவே அங்கே சுமார் இருபது போராளி இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால் எந்த இயக்கத்திலும் படித்தவர்கள் கிடையாது. அல்லது அரைகுறைப் படிப்பு. எந்த ஒரு விஷயத்தையும் உள்ளார்ந்து யோசித்து, அலசி ஆராய்ந்து செயல்படக் கூடியவர்களாக அப்போது யாரும் இல்லை.

ஹமாஸின் பலமே, படித்தவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் என்பதுதான். இஸ்லாமிய மார்க்கக் கல்வியில் கரைகண்ட பலபேர் அதில் இருந்தார்கள். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டக்கூடிய பல மிகப்பெரிய கட்டுமான வல்லுநர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஆசிரியர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள், மதகுருக்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஹமாஸை வழி நடத்தத் தொடங்கினார்கள்.

இத்தனை பெரிய ஆட்களுக்கெல்லாம் துப்பாக்கி தூக்குவதைத் தவிர, வேறு யோசனையே வராதா என்று ஒரு கணம் தோன்றலாம். இந்தியா போன்ற பிரச்னைகள் அதிகமில்லாத தேசத்தில், அதிலும் குறிப்பாக ஜனநாயக தேசத்தில் அமர்ந்துகொண்டு, பாலஸ்தீன் பிரச்னையைப் பார்க்கும்போது, சில விஷயங்கள் இப்படித்தான் அந்நியமாகத் தோன்றும். ஆயுதப்போராட்டம் தவிர வேறு எதுவுமே உபயோகப்படாது என்று, அத்தனை பேருமே அங்கே முடிவு செய்து களத்தில் இறங்கியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுவது, ஒவ்வொரு கட்டத்திலும் இங்கே அவசியமாகிறது. ஏனெனில் பாலஸ்தீனிய அரேபியர்களின் எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் இஸ்ரேல் அரசோ, மற்ற தேசங்களின் அரசுகளோ, செவி சாய்க்கவே இல்லை என்பதுதான் சரித்திரம் சுட்டிக்காட்டும் உண்மை. என்றைக்கு பிரிட்டன், பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் என்றொரு தேசத்தை உருவாக்குவது என்று முடிவு செய்ததோ, அன்றைக்கு ஆரம்பித்த சிக்கல் இது. பாலஸ்தீனியர்களுக்கென்று பிரித்துக்கொடுக்கப்பட்ட மேற்குக்கரையையும் காஸாவையும் கூட இஸ்ரேல் அபகரித்தபோது, அதன் தீவிரம் அதிகமானது. அந்தத் தீவிரக் கணத்தில் உதித்த இயக்கம்தான் ஹமாஸ்.

ஹமாஸ் தொடங்கப்பட்டபோது, அதன் நோக்கமாகச் சொல்லப்பட்டவை இவைதான்:

1. மேற்குக் கரை, காஸா உள்பட இஸ்ரேலின் வசம் இருக்கும் பாலஸ்தீனிய நிலப்பரப்பு முழுவதையும் வென்றெடுப்பது. இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிப்பது. (அதாவது இங்கே யூதர்களை என்று பொருள்.)

2. தப்பித்தவறி பாலஸ்தீன் என்றாவது ஒரு நாள் மதச்சார்பற்ற தனியொரு தேசமாக அறியப்படவேண்டி வருமானால், அதை எதிர்த்தும் போராடுவது; பாலஸ்தீனை ஒரு முழுமையான இஸ்லாமிய தேசமாக ஆக்குவது.

இந்த இரண்டு நோக்கங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிக வெளிப்படையாகச் சொல்லிவிட்டுத்தான், ஹமாஸ் இயக்கத்தினர் துப்பாக்கிகளை வாங்க ஆரம்பித்தார்கள்.

ஹமாஸ் தோன்றியபோது, பி.எல்.ஓ.வின் தனிப்பெரும் தலைவராக யாசர் அராஃபத் அடையாளம் காணப்பட்டு, மேற்குக் கரைப் பகுதி கிட்டத்தட்ட அவரது கோட்டை போலவே இருந்தது. யாசர் அராஃபத் அங்கே தலைவர் மட்டுமல்ல. ஒரு ரட்சகர். அவரைவிட்டால் பாலஸ்தீனிய முஸ்லிம்களுக்கு வேறு நாதி கிடையாது என்கிற நிலைமை.

ஆகவே, ஹமாஸின் வளர்ச்சியும் வேகமும் மேற்குக்கரை வாசிகளுக்கு முதலில் ஒருவிதமான பயத்தைத்தான் விளைவித்தது. ஹமாஸ் என்கிற இயக்கம், பி.எல்.ஓ.வுக்கு எதிராகத் திசை திரும்பிவிடுமோ என்கிற பயம். ஏன் ஹமாஸும் பி.எல்.ஓ.வில் இணையக்கூடாது என்று மக்கள் ஆற்றாமையுடன் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். ஆனால் ஹமாஸின் நிறுவனர்கள், அந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார்கள். இரு அமைப்புகளின் அடிப்படை நோக்கமும் ஒன்றுதான் என்றாலும் ஹமாஸுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இருந்ததால், வீணாகத் தன்னால் பி.எல்.ஓ.வும் யாசர் அராஃபத்தும் தர்மசங்கடத்துக்கு உள்ளாகக் கூடாது என்று நினைத்தார்கள். அதனாலேயே தனித்து இயங்கத் தீர்மானித்தார்கள்.

இதனால் மேற்குக்கரைப் பகுதியில், தொடக்ககாலத்தில் ஹமாஸுக்கு செல்வாக்கு என்று ஏதும் உண்டாகவில்லை. மாறாக, காஸாவில் ஹமாஸ் அபரிமிதமான வளர்ச்சி கண்டது. காஸா பகுதியில் வசித்துவந்த ஒவ்வொரு தாயும் தன் மகன் எந்த விதத்திலாவது ஹமாஸுக்கு சேவையாற்றவேண்டும் என்று விரும்பியதாகக் கூடச் சொல்லுவார்கள். அங்கே உள்ள ஆண்கள் அத்தனை பேரும் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹமாஸுக்கு நன்கொடையாக அனுப்பிவைப்பார்கள். இன்றைக்குப் பல தீவிரவாத இயக்கங்கள் கட்டாய வரிவசூல் செய்வது உலகறிந்த விஷயம். (நமது நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் உல்ஃபா போன்ற பல இயக்கங்கள், இப்பணியைக் கர்மசிரத்தையாக இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படியொரு சாத்தியம் இருக்கிறது என்கிற யோசனை அவர்களுக்கு வந்ததே, ஹமாஸுக்கு காஸா பகுதி மக்கள் மனமுவந்து நிதியளித்ததைப் பார்த்த பிறகுதான்! மனமுவந்து மக்கள் அளிக்காத இடங்களிலெல்லாம் கட்டாய வசூல் என்கிற கலாசாரம் தோன்றிவிட்டது!)

ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்தால், இந்தளவு மக்கள் செல்வாக்கு இருக்குமா? உண்மையில் ஹமாஸின் பணிகள் பிரமிப்பூட்டக்கூடியவை. ஹமாஸின் தற்கொலைப்படைகளும், கார் குண்டுத் தாக்குதல்களும் பிரபலமான அளவுக்கு அந்த அமைப்பின் சமூகப்பணிகள் வெளி உலகுக்குத் தெரியாமலேயே போய்விட்டன.

மேற்குக் கரையும் சரி, காஸாவும் சரி, பாலஸ்தீனிய அரேபியர்கள் வாழும் இஸ்ரேலின் எந்த மூலை முடுக்காயினும் சரி. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்காக ஹமாஸ் தனியொரு அரசமைப்பையே வைத்திருந்தது. சாலைகள் போடுதல், குடிநீர் வசதி செய்துதருதல், வீதிகளில் விளக்குகள் போட்டுத்தருதல், குப்பை லாரிகளை அனுப்பி, நகரசுத்திகரிப்புப் பணிகள் ஆற்றுதல் என்று ஹமாஸின் 'அரசாங்கம்' செய்த மக்கள் நலப்பணிகள் ஏராளம். (இன்று இதெல்லாம் இல்லை. சுத்தமாக இல்லை என்பதையும் சொல்லிவிட வேண்டும்.)

இந்தக் காரியங்களெல்லாம் ஒழுங்காக நடப்பதற்காகத் தனியொரு 'நாடாளுமன்றமே' ஹமாஸில் நடத்தப்பட்டது. முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத் தொகுதி தொகுதியாகப் பிரித்துத் தந்துவிடுவார்கள். மக்கள் பணிகளுக்கான செலவுக்குப் பணம்?

தயங்கவே மாட்டார்கள். இஸ்ரேலிய இலக்குகள் எது கண்ணில் பட்டாலும் உடனடியாகத் தாக்கப்படும். வங்கிகள், கருவூலங்கள், மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் என்று எதையும் எப்போதும் தாக்குவார்கள். சாக்குமூட்டையில் பணத்தைக் கட்டிக்கொண்டுபோய் ஹமாஸுக்கென்று தனியே இயங்கிய வங்கியொன்றில் சேகரித்து, கணக்கெழுதிவிடுவார்கள்.

அதன்பின் தொகுதி வாரியாக 'நிதி' பிரித்தளிக்கப்படும். இஸ்ரேலிய அரசு எதையெல்லாம் செய்யத் தவறுகிறதோ, அதையெல்லாம் அங்கே ஹமாஸ் செய்யும். இடிக்கப்பட்ட மசூதிகளைச் செப்பனிட்டு, புதுப்பொலிவுடன் மீண்டும் கட்டித்தருவது, மதப் பள்ளிக்கூடங்கள் நடத்துவது, மருத்துவமனைகள் கட்டுவது, மூலிகை மருந்துகளுக்காக மூலிகைத் தோட்டங்கள் அமைப்பது என்று எத்தனையோ பணிகளை ஹமாஸ் செய்திருக்கிறது.

இதற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல இன்னொரு பக்கம் சற்றும் இரக்கமில்லாமல், யூதர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றும் போடுவார்கள். பைக் வெடிகுண்டு, கார் வெடிகுண்டு, சூட்கேஸ் வெடிகுண்டு ஆகிய மூன்றையும் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்தியது ஹமாஸ்தான். இவற்றுள் கார்குண்டு வெடிப்பில் ஹமாஸ் இயக்கத்தினர் நிபுணர்கள். உலகின் எந்த மூலையிலும் எந்த யூத இலக்கின்மீது கார் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு ஹமாஸ்தான் என்று கைகாட்டிவிட முடியும்.

இந்தக் காரணத்தால்தான், பாலஸ்தீனிய அரேபியர்கள் ஹமாஸை எந்தளவுக்குக் கொண்டாடுகிறார்களோ, அதே அளவுக்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஹமாஸை அச்சமூட்டும் பயங்கரவாத இயக்கமாகத் தொடர்ந்து கண்டனம் செய்துவருகின்றன.

ஹமாஸின் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அடிக்கடி பரபரப்பூட்டுபவை. என்ன செய்தும் தடுத்துநிறுத்தப்பட முடியாதவை. இஸ்ரேல் அரசே எத்தனையோ முறை ஹமாஸுடன் சமரசப் பேச்சுக்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. ஆனால், ஹமாஸ் சம்மதித்ததில்லை.

'எங்களுக்கு இஸ்ரேலியப் பொதுமக்கள், இஸ்ரேலிய ராணுவம் என்கிற பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு இஸ்ரேலியக் குடிமகனும் கட்டாயமாக ஒரு வருடமாவது ராணுவச் சேவையாற்றவேண்டும் என்று அவர்கள் விதி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் சிவிலியன்களைத் தாக்குவதாகச் சொல்லுவது தவறு. அனைத்து யூதர்களுமே குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ராணுவத்தில் இருந்திருக்கிறார்கள் அல்லவா? அதனால், யாரை வேண்டுமானாலும் தாக்குவோம். அபகரிக்கப்பட்ட எங்கள் நிலம் மீண்டும் எங்கள் வசம் வந்து சேரும்வரை தாக்கிக்கொண்டேதான் இருப்போம்' என்பது ஹமாஸின் பிரசித்தி பெற்ற கோஷம்.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஒரு நிரந்தரத் தலைவலி என்பது 1970-களின் மத்தியில் மிகவும் வெட்டவெளிச்சமாகத் தெரிய ஆரம்பித்தது. இஸ்ரேலுக்கு உதவி செய்யக்கூடிய அத்தனை நாடுகளுக்குமே என்றாவது ஒரு நாள் ஹமாஸால் பிரச்னை வரத்தான் செய்யும் என்று அமெரிக்கா எச்சரித்தது.

ஆகவே ஹமாஸின் செயல்பாட்டைக் குறைத்தாலொழிய, நமக்குத் தலைவலி குறையாது; என்ன செய்யலாம் என்று இஸ்ரேலிய அரசு தனது உளவு அமைப்பான மொஸாட்டிடம் யோசனை கேட்டது. ஹமாஸுக்கு நிதியளிப்பவர்கள் பாலஸ்தீனிய அரேபியர்கள். அவர்களின் ஆள்பலம் என்பதும் பாலஸ்தீனுக்குள் இருக்கும் அரபு இளைஞர்கள்தான். ஆகவே ஹமாஸின் மக்கள் செல்வாக்கைக் குறைத்தால்தான் எதுவுமே சாத்தியம். அந்த இடத்தில் அடித்தால் இந்த இடத்தில் வந்து சேரும் உதவிகள் நிறுத்தப்படும் என்று மொஸாட், இஸ்ரேல் அரசுக்கு யோசனை சொன்னது.

இஸ்ரேல் அரசு இதனை ஏற்றுக்கொண்டது. விளைவு? காஸா மற்றும் மேற்குக் கரை மக்களின் மீது திடீர் திடீரென்று வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஒவ்வொரு இரவிலும் ஏதாவது ஒரு குடிசைப் பகுதி பற்றிக்கொண்டு எரியும். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐம்பது அரேபியர்களாவது 'காணாமல்'போவார்கள். ஒவ்வொரு தினமும் எந்த அரபுக் குடியிருப்புப் பகுதியிலாவது இனக்கலவரம் மூளும். அடிதடிகள் நடந்து, கண்ணீர்ப்புகைகுண்டு வீச ராணுவம் வரும். கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கு பதில் அவர்கள் கையெறி குண்டுகளை வீசிச் சிலரைக் கொன்றுவிட்டுத் திருப்தியுடன் திரும்பிப் போவார்கள்.

இந்தச் சம்பவங்கள் ஒரு கட்டத்தில் தறிகெட்டுப் போகவே, கோபம் கொண்ட ஹமாஸ் ஒரு பகிரங்க அறிக்கை வெளியிட்டது. இஸ்ரேல் அரசுக்கு எதிராக, மிகத் துணிச்சலுடன், மிகக் கோபமாக, மிகக் கடுமையாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, இஸ்ரேலை மட்டுமல்லாமல் உலகம் முழுவதையுமே அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கச் செய்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 11 ஆகஸ்ட், 2005

No comments: