Wednesday, August 31, 2005

80] ஓஸ்லோ ஒப்பந்தம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 80

பி.எல்.ஓ. போன்ற மாபெரும் போராளி இயக்கங்களின் தலைவர்கள் பாலஸ்தீனிலேயே இருந்தபடி போராட்டங்களை நடத்துவது என்பது சற்றும் இயலாத காரியம். ஓர் இயக்கத்தை வழி நடத்துவது என்பது நூற்றுக்கணக்கான சிக்கல்களை உட்கொண்டது. முதலில் போராளிகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு சௌகரியமான இடம், வசதிகள், உணவு, போதிய தூக்கம், பாதுகாப்பு மிகவும் அவசியம். இவற்றைவிட முக்கியம், பணம். அப்புறம் அரசு ஆதரவு. தடையற்ற ஆயுதப் பரிமாற்றங்களுக்கான வசதிகள்.

இதன் அடுத்தக்கட்டம், அரசியல் தீர்வுகளுக்கான ஆலோசனைகளை மேற்கொள்வது, பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளைத் திறக்கப் பார்ப்பது. உண்மையிலேயே அதில் விருப்பமிருக்குமானால் தலைவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் சுபாவம் இருந்தாக வேண்டும். விமர்சனங்களுக்கு அஞ்சாத பக்குவம் வேண்டும். நீண்டநாள் நோக்கில் தேசத்துக்கும் மக்களுக்கும் நன்மை உண்டாவதற்காகக் கொள்கைகளில் சிறு மாறுதல்கள் செய்துகொள்ளத் தயங்கக்கூடாது. எல்லாவற்றைக் காட்டிலும் சுயநலமற்ற மனப்பான்மை நிரந்தரமாக இருக்கவேண்டும்.

இதெல்லாம் அனைவருக்கும் புரியக்கூடியவை அல்ல. புரியும் என்றாலும் முழுக்கப் புரிவது சாத்தியமில்லை.

பாலஸ்தீனில் வசிக்க முடியாத பி.எல்.ஓ.வினருக்கு லெபனானும் சிரியாவும் டுனிஷும் அரசியல் அடைக்கலமும் ஆதரவும் அளித்து, அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட வழி செய்துகொடுத்ததில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால், அராஃபத் யுத்தத்தைக் காட்டிலும் அரசியல் தீர்வில்தான் தமக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்பதைத் தொடக்கம் முதல் வெளிப்படையாகத் தெரிவிக்காமலேயே இருந்துவிட்டதில்தான், கொஞ்சம் பிரச்னையாகிவிட்டது.

அரசியல் தீர்வுக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என்று வாய்வார்த்தையில் சொல்லுவது பெரியவிஷயமல்ல. அதை அவர் தொடக்கம் முதலே செய்துவந்திருக்கிறார் என்றபோதும், பிரதானமாக ஒரு போராளியாகவே அடையாளம் காணப்பட்டவர், இஸ்ரேலிய அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டுவந்திருக்கிறார் என்பது பலருக்கு வியப்பளிக்கும் விஷயமாகவே இருந்தது.

தவிரவும், முன்பே பார்த்தது போல அராஃபத்தும் சரி, அவரது அல்ஃபத்தா அமைப்பும் சரி, ஆரம்பம் முதலே சோஷலிசத்தில் நம்பிக்கை கொண்ட தலைவரும் இயக்கமுமாகவே அடையாளம் காணப்பட்டு வந்ததையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும். ஒருபோதும் மதத்தை முன்னிறுத்தி அராஃபத் யுத்தம் மேற்கொண்டதில்லை.

அவரளவில் தெளிவாகவே இருந்திருக்கிறார் என்றபோதும், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு அராஃபத்தின் அரசியல் அவ்வளவாகப் புரியவில்லை என்பது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் தெரியவந்தது.

அராஃபத் டுனிஷில் இருந்த காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. இவற்றில் எது ஒன்றும் முழு விவரங்களுடன் வெளியே வரவில்லை. ஒரு பக்கம் பாலஸ்தீன் முழுவதும் இண்டிஃபதா எழுச்சிப் போராட்டங்கள் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, மறுபுறம் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்பதைப் பாலஸ்தீனியர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

தாற்காலிகத் தீர்வுகளின் வழியே நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது என்கிற சித்தாந்தத்தில், அராஃபத்துக்கு நம்பிக்கை உண்டு. அவரது மேடைப்பேச்சு வீடியோக்கள் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. ஆக்ரோஷமாக "ஜிகாது ஜிகாது ஜிகாது" என்று கை உயர்த்திக் கோஷமிடும் அந்த அராஃபத்தைத்தான் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குத் தெரியும். அந்த உத்வேகத்துக்கு ஆட்பட்டுத்தான் அவர்கள் இண்டிஃபதாவை மாபெரும் வெற்றிபெற்ற போராட்டமாக ஆக்கினார்கள்.

அதிகம் படிப்பறிவில்லாத, தலைவன் என்ன சொன்னாலும் கட்டுப்படக்கூடிய அந்த மக்களுக்கு, அராஃபத்தின் இந்த அரசியல் தீர்வை நோக்கிய ஆரம்ப முயற்சிகள் முதலில் புரியாமல் போனதில் வியப்பில்லை. துப்பாக்கியுடன் மட்டுமே அராஃபத்தைப் பார்த்தவர்கள் அவர்கள். ஆலிவ் இலையும் துப்பாக்கியும் கைக்கொன்றாக எடுத்துக்கொண்டு ஐ.நா.வுக்குப் போன அராஃபத், அவர்களுக்கு மிகவும் புதியவர்.

அதனால்தான், இண்டிஃபதாவின் விளைவாக உருவான ஓஸ்லோ ஒப்பந்தம், பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் தந்தது. அவநம்பிக்கை என்றால், அராஃபத்தின் மீதான அவநம்பிக்கை. கிட்டத்தட்ட சரிபாதி பாலஸ்தீனியர்கள் இந்த அவநம்பிக்கைக்கு ஆட்பட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அகண்ட பாலஸ்தீனத்தின் ஒரே பெரிய தலைவராக அவரைக் கற்பனை செய்துபார்த்துவந்த மக்களுக்கு, அவரை ஒரு முனிசிபாலிடி சேர்மனாக நினைத்துப் பார்ப்பதில் நிறைய சங்கடங்கள் இருந்தன. அதைவிட, எங்கே அராஃபத் விலைபோய்விடுவாரோ என்கிற பயம் அதிகம் இருந்தது. அவரும் இல்லாவிட்டால் தங்களுக்கு விடிவு ஏது என்கிற கவலை. பாலஸ்தீனில் மட்டுமல்ல. உலகம் முழுவதிலும் வசித்துவந்த முஸ்லிம் சமூகத்தினருக்கும் அடிமனத்தில் இந்த பயம் இருக்கத்தான் செய்தது.

இந்த விவரங்களின் பின்னணியில், நாம் ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குள் நுழைவது சரியாக இருக்கும்.

இன்றைக்கு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமரசம் பேசி ஏதாவது நல்லது செய்துவைக்க முடியுமா என்று பார்க்கிற நார்வே, அன்றைக்கு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையில்கூட இப்படியானதொரு அமைதி முயற்சியை மேற்கொண்டது. ஆனால் இன்றைக்குப் போல, அன்று நடந்த இந்த முயற்சிகள், வெளிப்படையான முயற்சிகளாக இல்லை. மாறாக, டுனிஷியாவில் இருந்த யாசர் அராஃபத்துக்கும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தைகள் யாவும் பரம ரகசியமாகவே நடைபெற்றன. இதற்கு நார்வே மட்டும் காரணமல்ல. ஓரெல்லை வரை அமெரிக்காவும் காரணம்.

1989-90_களிலிருந்தே பி.எல்.ஓ.வும் இஸ்ரேலிய அரசும் ரகசியப் பேச்சுகளில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஓரளவு அமைதிக்கான சாத்தியம் இருக்கிறது என்பது தெரியவந்தபோது, ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கான பணிகளில் இறங்க ஆரம்பித்தார்கள். ஓஸ்லோ என்பது நார்வேவின் தலைநகரம். அங்கே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் அந்தப் பெயர் வந்துவிட்டது. அவ்வளவுதான்.

முதலில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அராஃபத் நார்வேக்குப் போகவில்லை. அவர் அப்போது அமெரிக்காவில் இருந்தார். அமெரிக்க அதிகாரிகளுடனும் ஐ.நா.வின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். நிரந்தரத் தீர்வு என்பது உடனடியாகச் சாத்தியமில்லாத காரணத்தால், சில தாற்காலிகத் தீர்வுகளை இருதரப்புக்கும் பொதுவாக அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் முன்வைத்தார்.

ஒரு பக்கம் யாசர் அராஃபத் அங்கே பேசிக்கொண்டிருந்த அதே சமயம், அங்கே பேசப்பட்ட தீர்வுகள், ஓர் ஒப்பந்தமாக எழுதப்பட்டு நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் கையெழுத்தானது. பி.எல்.ஓ.வின் சார்பில் அகமது குரானி என்பவரும், இஸ்ரேல் அரசின் சார்பில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிமோன் பெரஸும் கையெழுத்திட்டார்கள்.

கவனிக்கவும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம், ரகசியமாகவே செய்யப்பட்டது. உலகுக்கு அறிவிக்கப்படவில்லை. 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று இது நடந்தது.

ஒப்பந்தம் என்று செய்யப்பட்டதே தவிர, பாலஸ்தீனியர்கள் இதனை எப்படி ஏற்பார்கள் என்கிற சந்தேகம் அராஃபத்துக்கும் இருந்திருக்கிறது. அதனால்தான், பகிரங்கமாக ஒப்பந்தத்தை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், இதெல்லாம் மூடிவைக்கிற விஷயமல்ல என்கிற காரணத்தினால் சரியாக எட்டே தினங்களில் (ஆகஸ்ட் 27) வெளிவந்துவிட்டது. பத்திரிகைகள் எப்படியோ மோப்பம் பிடித்து செய்தி வெளியிட்டுவிட்டன.

முதலில் அராஃபத்தும் இஸ்ரேலிய அதிகாரிகளும் யோசித்தார்கள். அப்படியொரு ஒப்பந்தம் நடக்கவே இல்லை என்று சொல்லிவிடுவதா? அல்லது, ஆமாம் நடந்தது என்று உண்மையை ஒப்புக்கொள்வதா?

இதுதான் குழப்பம். ஆனால் நார்வே அரசு, இதற்கு மேல் மூடி மறைக்க வேண்டாம் என்று சொல்லி, ஒப்பந்தம் கையெழுத்தானது உண்மைதான் என்று பகிரங்கமாக அறிவித்தது.

பாலஸ்தீனியர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகமே வியப்புடன் பார்த்த சம்பவம் இது. ஆண்டாண்டு காலமாகப் பாலஸ்தீனியர்களின் விடுதலைக்காகத்தான் யாசர் அராஃபத் போராடுகிறார். அவர்களுக்காகத்தான் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஓர் ஒப்பந்தம் வரை போயிருக்கிறார். அப்படி இருக்கையில், அதை ஏன் ரகசியமாகச் செய்யவேண்டும்? மக்கள் மத்தியிலேயே செய்திருக்கலாமே?

என்றால், காரணம் இல்லாமல் இல்லை. நிதானமாகப் பார்க்கலாம். விஷயம் வெளியே தெரிந்துவிட்டதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ளவேண்டியதானது என்று பார்த்தோமல்லவா?

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தத்தை, முறைப்படி பகிரங்கமாக மீண்டும் ஒரு முறை செய்தால்தான் சரியாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் சொன்னார்.

ஆகவே, கையெழுத்தாகிவிட்ட ஒப்பந்தம் மீண்டும் ஒரு முறை வாஷிங்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பகிரங்கமாக, மீடியாவின் விளக்குகளுக்கு எதிரே மீண்டும் கையெழுத்தானது. இம்முறை இஸ்ரேல் பிரதமர் இட்ஸாக் ராபினும் யாசர் அராஃபத்துமே பில் க்ளிண்டன் முன்னிலையில் கையெழுத்துப் போட்டார்கள்.

இப்படியொரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியதற்காக யூதர்கள், ராபினைப் புழுதிவாரித் தூற்றி, வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அரேபியர்கள், யாசர் அராஃபத்தை சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

யாருக்குமே சந்தோஷம் தராத அந்த ஒப்பந்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? பார்க்கலாம்:

Declaration of Principles என்று தலைப்பிடப்பட்டு ஒரு கொள்கைப் பிரகடனமாக வெளியிடப்பட்ட இந்த ஒப்பந்தம், மொத்தம் பதினேழு பிரிவுகளையும் நான்கு பின்னிணைப்புகளையும் கொண்டது.

"பாலஸ்தீன் மக்கள் தமது ஒரே தலைவராக யாசர் அராஃபத்தைத்தான் கருதுகிறார்கள். ஆகவே, அவருடன் செய்துகொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களுடனும் செய்துகொள்ளும் ஒப்பந்தமாகக் கருதப்படும்" என்கிற அறிவிப்புடன் ஆரம்பமாகும் இந்த ஒப்பந்தத்தின் சாரமென்னவென்றால், பி.எல்.ஓ.வுக்கு இஸ்ரேலிய அரசு சில இடங்களில் தன்னாட்சி செய்யும் உரிமையை வழங்கும் என்பதுதான்.

தன்னாட்சி என்கிற பதம், சற்றே கிளுகிளுப்பு தரலாம். உண்மையில் ஒரு நகராட்சி அல்லது மாநகராட்சியை நிர்வகிப்பது போன்ற அதிகாரத்தைத்தான் இஸ்ரேல் அதில் அளித்திருந்தது. காஸா மற்றும் மேற்குக் கரையிலுள்ள ஜெரிக்கோ நகரங்களை ஆட்சி செய்யும் அதிகாரம் அரேபியர்களிடம் அளிக்கப்படும். "பாலஸ்தீனியன் அத்தாரிடி" என்கிற ஆட்சிமன்ற அமைப்பின் மூலம் அவர்கள் அந்தப் பகுதிகளை நிர்வகிக்க வேண்டும். யாசர் அராஃபத் முதலில் பாலஸ்தீனுக்கு ஒரு முறை "வந்துபோக" அனுமதிக்கப்படுவார். பிறகு அவர் அங்கே குடிபெயரவும் ஏற்பாடு செய்யப்படும். பி.எல்.ஓ.வின் ஜோர்டன் கிளையில் உறுப்பினர்களாக இருக்கும் சில நூறு போராளிகள் மேற்குக் கரைப் பகுதி நகரமான ஜெரிக்கோவுக்கு வந்து நகரக் காவல் பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். (அதாவது உள்ளூர் போலீஸ்.) பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தபால் துறை ஆகிய துறைகள் பாலஸ்தீனியன் அதாரிடியால் நிர்வகிக்கப்படும். இஸ்ரேலிய ராணுவம் அந்தப் பகுதிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்ளப்படும். ஆனால், உடனடியாக அது நடக்காது. "தன்னாட்சி அதிகாரம் பெற்ற இடங்கள்" என்று சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதியில் உள்ள நிலங்களையும் நீர் ஆதாரங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இஸ்ரேல் அரசிடம்தான் இருக்கும். ஒட்டுமொத்த பாதுகாப்புப் பொறுப்பு மற்றும் வெளி விவகாரத் துறைப் பொறுப்பு ஆகியவையும் இஸ்ரேலைச் சேர்ந்ததே.

சுற்றி வளைக்க அவசியமே இல்லை. இரண்டு நகரங்களை ஒரு நகராட்சித் தலைவர்போல யாசர் அராஃபத் ஆளலாம். அவ்வளவுதான். இதற்குத்தான் நார்வே நாட்டாமை. அமெரிக்க ஆதரவு. ரகசியப் பேச்சுக்கள் எல்லாம்.

அதுசரி. பதிலுக்கு பி.எல்.ஓ. அவர்களுக்குச் செய்யப்போவது என்ன?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28 ஆகஸ்ட், 2005

Saturday, August 27, 2005

79] இண்டிஃபதாவின் எழுச்சிப் பேரணிகள்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 79

நமக்குத்தெரிந்த ஊர்வலங்கள், நாம் பார்த்திருக்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், நமது தேசத்தில் நடைபெறும் மாபெரும் பேரணிகள், சீரணி அரங்கத்தில் திரளும் மக்கள்வெள்ளம் _ இவற்றைக் கொண்டு பாலஸ்தீனில் அன்று நடைபெற்ற இண்டிஃபதாவைக் கற்பனை செய்யாமல் இருப்பது நல்லது. ஏனெனில், எண்பதுகளின் பிற்பகுதியில், பாலஸ்தீனியர்களின் இந்த எழுச்சி அலையை ஒப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காமல் திண்டாடித் தெருவில் நின்றிருக்கிறது சர்வதேச மீடியா.

பத்து, நூறு, ஆயிரமல்ல. லட்சக்கணக்கில் மக்கள் திரண்டுவிடுவார்கள். நிற்க இடமில்லாமல் சாலைகள் அடைபடும். கூட்டம் ஓரங்குலம் நகர்வதற்கே மணிக்கணக்காகும். ஒட்டுமொத்த பாலஸ்தீனிய அரேபியர்களும் இஸ்ரேலுக்கு எதிராகத் திரண்டு நிற்கும்போது, எத்தனை கண்ணீர்க் குண்டுகள் வீசமுடியும்? என்னதான் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும்?

மேலும் எழுச்சிப் பேரணி என்பது காலை தொடங்கி மாலை முடிவுறும் விஷயமும் அல்ல. வருடக்கணக்கில் நடந்தது. இரவு _ பகல் பாராமல் நடந்தது. பிறவி எடுத்ததே பேரணி நடத்தத்தான் என்பது போல் திடீர் திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் மக்கள் கூடிவிடுவார்கள். நூற்றுக்கணக்கான குழந்தைகளை முதலில் நடக்கவிட்டு, பின்னால் பெண்கள் அணிவகுப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் ஆண்கள். நடுவில் ஊடுபாவாகப் போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இருக்கவே இருக்கிறது கல் வண்டிகள். பெட்ரோல் அடைக்கப்பட்ட கண்ணாடி பாட்டில்கள்.

பாலஸ்தீனியப் போராளி இயக்கங்களின் நோக்கத்துக்கு, இந்த மக்கள் எழுச்சிப் பேரணிகள் மிகப்பெரிய உதவிகள் செய்ததை மறுக்கவே முடியாது. அதே சமயம், இழப்புகளும் சாதாரணமாக இல்லை.

முதல் இண்டிஃபதா தொடங்கி பதின்மூன்று மாத காலத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் முஸ்லிம்கள் இஸ்ரேலியக் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அத்தனைபேரும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்கள். பதிலுக்கு அரேபியர்கள் நடத்திய தாக்குதலில் (அதே ஒரு வருட காலத்தில்) 160 இஸ்ரேலியக் காவல்துறையினர் இறந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கல்லடித் தாக்குதல் உத்தியைக் காட்டுமிராண்டித்தனமாக மீடியாவில் முன்னிறுத்த, இஸ்ரேல் அரசு மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொண்டது. உலகப்போர்களையும் உள்ளூர்ப் போர்களையும் பார்த்துவிட்ட பிறகு, துப்பாக்கிச் சூடு என்பது மிகச் சாதாரணமான விஷயமாக ஆகிவிட்ட நிலையில், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கல்லால் அடித்துக் கொல்வது என்பது கண்டிப்பாகக் காட்டுமிராண்டித்தனமாகக் கருதப்பட வாய்ப்பிருக்கிறது என்று நம்பி, இஸ்ரேல் அரசு இண்டிஃபதாவின் வன்முறைப் பக்கங்களை _ குறிப்பாக அரேபியர்களின் கல்லடித் தாக்குதல் காட்சிகளை கவனமாகப் படம் பிடித்து மீடியாவுக்கு அளிக்க விசேஷ கவனங்கள் எடுத்துக்கொண்டது.

ஆனால், இந்த முயற்சி பலனளிக்கவில்லை. காரணம், இண்டிஃபதா ஊர்வலங்களைக் குழந்தைகளை முன்னிறுத்தி அரேபியர்கள் நடத்தியபடியால், முதல் பலி எப்படியானாலும் சிறுவர், சிறுமியராகவே இருந்ததால், அதுதான் பூதாகரமாக வெளியே தெரிந்தது. "குழந்தைகளைத் தாக்காதீர்கள்" என்று ராணுவ உயர் அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கரடியாகக் கத்திக்கொண்டிருந்தாலும், இஸ்ரேலியப் படையினருக்கு அத்தனை பெரிய கூட்டங்களைச் சமாளிக்கத் தெரியவில்லை. குழந்தைகளை விலக்கிவிட்டு எப்படிக் கூட்டத்தின் உள்ளே புகுந்து பின்னால் அணி வகுக்கும் ஆண்களைக் குறிவைப்பது என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஊர்வலத்தை தூரத்தில் பார்க்கும்போதே அவர்கள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசத் தொடங்கிவிடுவார்கள். எப்படியும் சில நூறு குழந்தைகளாவது உடனே மயக்கமடைந்து கீழே விழும். காத்திருந்தாற்போல் போராளி அமைப்பினர் அவற்றைப் புகைப்படமெடுத்து அனுப்பிவிடுவார்கள். இஸ்ரேலியப் படையினர் ஊர்வலத்தை நெருங்கி, தாக்குதலை மெல்ல ஆரம்பித்து எல்லாம் முடிந்தபிறகு படமெடுக்கத் தொடங்குவதற்குள் அங்கே குழந்தைகள் விழுந்துகிடக்கும் படங்கள் பிரசுரமே ஆகியிருக்கும். நாடெங்கிலும் பெரிது பெரிதாக போஸ்டர் அடித்து ஒட்டிவிடுவார்கள். நம்மூர் பாணியில் சொல்லுவதென்றால் "அப்பாவிக் குழந்தைகள் அநியாய பலி! யூதர்களின் கொலைவெறியாட்டம்!!" என்கிற தலைப்புகளை நாள்தோறும் பார்க்க முடிந்தது.

பாலஸ்தீன் பற்றி எரிகிறது என்பது தெரிந்ததுமே உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தமது பிரதிநிதிகளை பாலஸ்தீனுக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலான சர்வதேச ஊடகங்களுக்கு அன்று பாலஸ்தீனில் ஒரு நிரந்தர அலுவலகமே இருந்தது.

இந்த மேலை நாட்டு ஊடகச் செய்தியாளர்களிடம் ஒரு பிரச்னை என்னவெனில், அவர்களுக்கு அரபு - யூத உறவு அல்லது உறவுச் சிக்கல் பற்றிய அடிப்படைகள் அவ்வளவாகத் தெரியாது. வரலாறு தெரியாது. ஆகவே, ஒவ்வொருவரும் தம் இஷ்டத்துக்கு ஒரு வரலாற்றை உற்பத்தி செய்து பக்கம் பக்கமாகக் கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக ஐரோப்பிய தேசங்களிலிருந்து அன்றைக்கு பாலஸ்தீனுக்கு வந்த பத்திரிகையாளர்கள் அடித்த கூத்து, நகைச்சுவை கலந்த சோகம்.

ஒரு நாளைக்கு ஒரு கதை சொல்லுவார்கள். இண்டிஃபதா ஊர்வலத்தை ஒருநாள் பார்த்துவிட்டு, அரேபியர்கள் அடிபடும் காட்சி அவர்கள் கண்ணில் பட்டுவிட்டதென்றால், அன்றைக்கு அரேபியர்கள் மீது அவர்களின் அனுதாபம் பிய்த்துக்கொண்டு ஊற்றத் தொடங்கிவிடும். சரித்திர காலத்திலிருந்தே பிரச்னையை கவனித்து வருபவர்கள்போல, அரேபியர்களின் பக்கம் சார்பு எடுத்து பக்கம் பக்கமாக என்னென்னவோ எழுதித் தள்ளி அனுப்பிவிடுவார்கள். அது பிரசுரமும் ஆகிவிடும்.

அதே நிருபர்கள் மறுநாள் அல்லது அடுத்த வாரம் எழுதும் கட்டுரை சம்பந்தமே இல்லாமல் யூத ஆதரவு நிலை எடுத்துப் பல்லை இளிக்கும்.

உண்மை என்னவென்றால், பிரச்னையின் ஆணிவேர் அவர்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சரித்திர காலம் தொடங்கி நடந்துவரும் இரண்டு இனங்களின் மோதலுக்கு அடிப்படை என்னவென்று மேலை நாட்டினருக்குத் தெரியவே தெரியாது. யூதர்கள் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்கிற அனுதாபம் அனைத்து ஐரோப்பியர்களுக்கும் எப்போதும் உண்டு. ஏனென்றால், ஐரோப்பிய தேசங்கள்தான் யூதர்களைக் கஷ்டப்படுத்தியிருக்கின்றன. அது ஓரெல்லை வரை அவர்களது உள்ளூர் சரித்திரத்தின் சில அத்தியாயங்கள். ஆகவே, யூத ஆதரவு நிலை எடுக்க அந்த ஒரு காரணமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது.

ஆனால், சமகாலத்தில் பாலஸ்தீன் மக்களின் எழுச்சிப் போராட்டத்தைப் பார்க்க நேரிடுகையில், யூதர்கள் தம் குணத்தை மாற்றிக்கொண்டு கொடுங்கோலர்களாக மாறிவிட்டார்களோ என்றும் சமயத்தில் அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.

உண்மையில், யாரும் குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. குணத்துக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. யூதர்கள், அரபுகளின் நிலங்களை அபகரித்ததில்தான் பிரச்னை தொடங்குகிறது. நிலவங்கிகள் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இது நா¦Ç¡ரு முகம் கொண்டு பூதாகரமாகி வருகிற விஷயம். ஆதரவற்ற அரேபியர்களை அடக்கி வைப்பது அவர்களுக்குச் சுலபமாக இருந்த காரணத்தால், தயங்காமல் தர்ம, நியாயம் பார்க்காமல் பாலஸ்தீன் முழுவதையும் ஆக்கிரமித்தார்கள். அரபுகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஒருமித்த குரலில் இஸ்ரேலை எதிர்க்கமுடியவில்லை. யுத்தம் வரை வந்த சகோதர அரபு தேசங்கள் கூட, கிடைத்தவரை லாபம் என்று மேற்குக் கரையையும் காஸாவையும் ஆளுக்கொரு பக்கம் கூறு போட்டது நினைவிருக்கலாம்.

1948 - யுத்தத்தின்போதே, ஜோர்டனும் எகிப்தும் தமக்கு லாபமாகக் கிடைத்த பாலஸ்தீனிய நிலப்பரப்பை பாலஸ்தீனிய அரேபியர்களிடமே திருப்பிக்கொடுத்து, சுதந்திரப் பாலஸ்தீனை உருவாக்கி அளித்திருப்பார்களேயானால், அவர்களின் சுதந்திரத்துக்குப் பாதுகாவலர்களாக நின்றிருப்பார்களேயானால், இத்தனை தூரம் பிரச்னை வளர்ந்திருக்கமுடியாது.

மீண்டும் யுத்தம் செய்து இழந்த நிலங்களை இஸ்ரேல் கைக்கொண்டபிறகு தான் இத்தனை விவகாரங்களும் சூடுபிடித்தன.

இதெல்லாம் ஐரோப்பிய மீடியாவுக்குத் தெரியவில்லை. ஆகவே, இஷ்டத்துக்கு எழுதி, குழம்பிய குட்டையை மேலும் குழப்ப ஆரம்பித்தார்கள்.

இதில் ஆச்சர்யமான விஷயம், ஐரோப்பிய ஊடகங்களுக்குத் தெரியாத சரித்திரங்களை அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க மீடியா எடுத்துச் சொன்னது என்பதுதான். இண்டிஃபதா ஊர்வலங்களில் ஏராளமான பாலஸ்தீனியக் குழந்தைகள் கொல்லப்பட்டதில் கொதித்துப்போன அமெரிக்கப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அந்தச் செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுத்துப் பிரசுரித்ததோடு மட்டுமல்லாமல், அமெரிக்க அரசு இஸ்ரேலைக் கண்டித்துப் பேசவும், நடவடிக்கை எடுக்கவும் கூடக் கடுமையாக வற்புறுத்தின.

நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுகளுக்கு நாம் வந்து சேரவேண்டியிருக்கிறது:

பாலஸ்தீன் போராளி இயக்கங்களே சாதிக்க முடியாத பலவற்றை இந்த மக்கள் எழுச்சி ஊர்வலங்களும் அதன் தொடர்ச்சியான கலவரங்களும் சாதித்தன. பாலஸ்தீன் பிரச்னை குறித்த சர்வதேச கவனமும் அக்கறையும் உண்டாக இந்த இண்டிஃபதாதான் ஆரம்பக் காரணமானது. பாலஸ்தீன் விஷயத்தை ஐ.நா. மிகத்தீவிரமாக கவனிக்கவும் பின்னால் பி.எல்.ஓ.வுக்கு ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்து அளிக்கவும் கூட இதுதான் மறைமுகக் காரணம்.

அக்கம்பக்கத்து அரபு தேசங்களின் தொடர்போ, ஒத்துழைப்போ இல்லாமல், பாலஸ்தீனிய அரேபியர்கள் தாங்களாகவே வழிநடத்தி, முன்னெடுத்துச் சென்ற இந்த மிகப்பெரிய எழுச்சி ஊர்வலங்கள், அரசியலைத் தாண்டி அனுதாபத்துடன் பிரச்னையைப் பார்க்க வழி செய்தன.

அதுவரை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பாலஸ்தீனிய அரேபியர்களை "South Syrians" என்று சிரியாவின் குடிமக்களாக முன்னிலைப் படுத்தியே பேசிவந்த இஸ்ரேலின் குள்ளநரித்தனம் உலக மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, பாலஸ்தீனியர்களின் சுய அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியாயம் என்று பேச வழிவகுத்தது.

இந்த இண்டிஃபதாவுக்குப் பிறகு சற்றும் நம்பமுடியாதபடியாகப் பல்வேறு ஐரோப்பிய தேசங்களின் அரசுகள் பி.எல்.ஓ.வுக்கும் றி.கி என்று சுருக்கமாகச் சொல்லப்படும் "பாலஸ்தீனியன் அத்தாரிடி" என்கிற அரபுகளின் ஆட்சிமன்றக் குழுவுக்கும் வெள்ளமென நிதியுதவி செய்ய ஆரம்பித்தன. மறுபுறம் அமெரிக்க அரசு, தனது விருப்பத்துக்குரிய தோழனான இஸ்ரேலிய அரசுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளையும் மிரட்டல்களையும் முன்வைத்து வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியது. குறிப்பாக எழுச்சிப் பேரணியின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பதினாறு வயதுக்குட்பட்ட 159 அரேபியக் குழந்தைகள் மொத்தமாக இஸ்ரேலியக் காவல்துறையினரால் கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்க ஊடகங்கள் அத்தனையும் தம் அரசின் இஸ்ரேலிய ஆதரவு நிலையை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல் அமெரிக்க அரசு இது தொடர்பாக இஸ்ரேலைக் கண்டித்ததுடன் மட்டுமல்லாமல், ஒரு சில உதவிகளைத் தாம் நிறுத்தவேண்டிவரும் என்று எச்சரிக்கையும் செய்தது.

இஸ்ரேல் அரசின் நிதி ஆதாரம் கணிசமாக பாதிக்கப்பட ஆரம்பித்தது. ஒரு வருட காலத்தில் சுமார் 650 மில்லியன் டாலர் ஏற்றுமதி இதனால் கெட்டது என்று பேங்க் ஆஃப் இஸ்ரேல் அறிக்கை அளித்துக் கலவரமூட்டியது. இந்தப் போராட்டங்களினால் இஸ்ரேலின் சுற்றுலா வருமானம் சுத்தமாக நின்றுபோனது.

அதுவரை அரேபியர்களின் அனைத்துப் போராட்டங்களையும் தீவிரவாதச் செயல்களாக மட்டுமே சொல்லிவந்த இஸ்ரேலிய அரசுக்கு இண்டிஃபதா எழுச்சிப் பேரணிகளை என்ன சொல்லி வருணிப்பது என்று தெரியாமல் போனது. தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் கலந்துகொள்ளும் பேரணிகளை எப்படித் தீவிரவாதச் செயலாக முன்னிலைப்படுத்த முடியும்? அதுவும் சர்வதேச மீடியா முழுவதும் அப்போது பாலஸ்தீனில் குடிகொண்டிருந்தது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இண்டிஃபதா நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலெல்லாம் யாசர் அராஃபத்தும் பி.எல்.ஓ.வின் மிகமுக்கியத் தலைவர்களும் துனிஷியாவில் அகதி அந்தஸ்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். (அதற்குமுன் கொஞ்சகாலம் லெபனானிலும் அங்கிருந்து துரத்தப்பட்டு சிரியாவிலும் தஞ்சமடைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.) பாலஸ்தீனில் இருக்கமுடியாத அரசியல் நெருக்கடி அவர்களுக்கு இருந்தது. வெளிநாட்டில் இருந்தபடிதான் பாலஸ்தீனியப் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடிக்கொண்டிருந்தார்கள். இண்டிஃபதாவின் மகத்தான வெற்றிதான் அவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வழிகோலியது. அதாவது ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கான ஆரம்பமே இந்த மக்கள் எழுச்சிப் பேரணிகளும் அவற்றின் விளைவுகளும்தான். ஓஸ்லோ ஒப்பந்தத்துக்கான சாத்தியங்கள் தெரிய ஆரம்பித்த பிறகுதான் பி.எல்.ஓ.வினர் பாலஸ்தீன் திரும்ப முடிந்தது.

அதென்ன ஓஸ்லோ ஒப்பந்தம்? அடுத்துப் பார்க்கவேண்டியது அதுதான்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 25 ஆகஸ்ட், 2005

Monday, August 22, 2005

78] யாசர் அராஃபத்தின் இண்டிஃபதா (Intifada)

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 78

ஷேக் அகமது யாசினின் தலைமையில் ஹமாஸ் தனது சமூகப் பணி முகத்தைக் கிட்டத்தட்ட கழற்றிவைத்துவிட்டு, முழுநேர குண்டுவெடிப்பு இயக்கமாக உருமாறத் தொடங்கிய அதே சமயத்தில், யாசர் அராஃபத், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பி.எல்.ஓவுடன் பொதுமக்களும் கைகோக்கும் விதத்தில் ஒரு புதிய திட்டத்தைத் தயார் செய்துகொண்டிருந்தார்.

கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் செய்யும் திட்டம் ஏதும் அப்போது அவருக்கு இல்லை. மாறாக கத்திக்கு பதில் கல்லும் துப்பாக்கிக்குப் பதில் தீக்குச்சியும் ஆயுதமாகலாம் என்று முடிவு செய்தார். மேலோட்டமான பார்வையில் வெறும் மக்கள் எழுச்சி; நீதி கேட்டு நெடும்பயணம் என்பது போலத்தான் தெரியும். எப்படியும் இஸ்ரேலிய ராணுவம் தாக்குவதற்கு வரும். பதில் தாக்குதலுக்குத் துப்பாக்கி எடுக்காமல் கற்களைக்கொண்டு தற்காப்பு ஏற்பாடுகள் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்.

இது மக்கள் மத்தியில் இன்னமும் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுத்தரக் கூடும். மேலும், பாலஸ்தீன் விடுதலை என்பது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் கரத்தில் மட்டும் இல்லை என்று அராஃபத் நினைத்தார். இயக்கம் முன்னின்று போராடும். ஆனால், பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால்தான் திட்டம் வெற்றி யடையமுடியும் என்பது அவரது கருத்து.

இந்த எண்ணத்தின் விளைவாகப் பிறந்ததுதான் இண்டிஃபதா (Intifada). இந்த அரபுச் சொல்லுக்கு எழுச்சி, உலுக்கிப் பார்த்தல், பொங்கியெழுதல் என்று பலவிதமாகத் தமிழில் அர்த்தம் சொல்லலாம். இஸ்ரேல் அரசையும் ராணுவத்தையும் உலுக்குவதுதான் அராஃபத்தின் நோக்கம். பி.எல்.ஓ. அதனைச் செய்யாமல், பொதுமக்களை முன்னிறுத்திச் செய்யலாம் என்கிற யோசனைதான் முக்கியமானது. உலகம் முழுவதும் "இண்டிஃபதா, இண்டிஃபதா" என்று உச்சரிக்கும் விதத்தில் இந்த எழுச்சி மிகப்பெரிய வெற்றியை அவருக்குத் தேடித்தந்தது.

தோற்றத்தில் இது ஓர் அறப்போராட்டம் போல் இருந்ததால், அராஃபத்தின் எழுச்சி ஊர்வலங்களில் நடைபெறும் கலவரங்களும் கண்ணீர்ப் புகைகுண்டு வீச்சுகளும் தீவைப்புச் சம்பவங்களும் சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்குத்தான் அவப்பெயரைத் தேடித்தந்தன. உண்மையில் அரேபியர்களும் இந்த இண்டிஃபதாவில் ஏராளமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கலவரத்தை ஆரம்பித்துவைத்ததே அரேபியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பது சமகால சரித்திரம் சுட்டிக்காட்டும் உண்மை.

அராஃபத்தின் எண்ணத்தில் உதித்த இண்டிஃபதா, முதன் முதலில் செயலுக்கு வந்த ஆண்டு 1987. இதற்கு ஒரு வலுவான பின்னணியும் இருந்தது. அந்த வருடம் அக்டோபர் முதல் தேதி, காஸாவில் ஒரு சம்பவம் நடந்தது. இஸ்ரேலிய ராணுவம் அன்றைய தினம், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் என்னும் அமைப்பைச் சேர்ந்த ஏழு போராளிகளைச் சுட்டுக் கொன்றது. இந்தச் சம்பவத்தால் காஸா முழுவதும் யுத்தத்தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கிய சமயத்தில் ஒரு வந்தேறி யூதர், ஓர் அரபு பள்ளிச் சிறுமியின் பின்புறத்தில் தன் கைத்துப்பாக்கியால் சுட்டார். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமி அவள். சற்றும் எதிர்பாராதவகையில் பின்புறமிருந்து ஒரு குண்டு பாய்ந்து வந்து அவளது இடுப்புப் பகுதியில் வெடிக்க, நடுச்சாலையில் அந்தக் குழந்தை விழுந்து கதறியதை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்த்து, நிலைகுலைந்து போய் நின்றார்கள். அந்த யூதர், துப்பாக்கியைத் துடைத்து எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு வந்த வழியே போய்விட்டார்.

இந்தச் சம்பவம் காஸாவில் மிகப்பெரிய கலவரத்துக்கான தூபத்தைப் போட்டது. மக்கள் கொதித்து எழுந்தார்கள். போராளிகளோ, கண்ணில் தென்பட்ட அத்தனை யூதர்களையும் சுட்டுக் கொல்லத் தொடங்கினார்கள். அனைத்து யூதக் கடைகள், அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. பேருந்துகள் நடுச்சாலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன.

என்ன செய்வதென்று தெரியாமல் இஸ்ரேலிய அரசு விழித்து நின்றது. கலவரத்தை அடக்க, ராணுவத்தை அனுப்பிவைத்தது. இது இன்னும் பிரச்னையாகிவிட்டது. ராணுவம் வந்துவிட்டது என்பது தெரிந்ததுமே காஸா பகுதியில் வசித்துவந்த மக்கள், கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள். கண்மூடித்தனமாகச் சாலைகளை நாசப்படுத்தி, குடிநீர்க் குழாய்களை உடைத்து, சரக்கு லாரிகளின் டாங்குகளில் தீப்பந்தங்களைச் சொருகி, என்னென்ன வகைகளிலெல்லாம் பற்றி எரியச் செய்யமுடியுமோ, அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள்.

காஸாவில் என்ன நடக்கிறது என்பதே சரியாக வெளியே தெரியவரவில்லை. அதனால், ஏராளமான வதந்திகள், புரளிகள் எழத் தொடங்கின. தினசரி பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள், எரிக்க வழியில்லாமல் கடலில் பிணங்கள் வீசப்படுகின்றன என்றெல்லாம் தகவல்கள் வெளிவரத் தொடங்க, சர்வதேச மீடியா பரபரப்படைந்தது.

கலவரம் நடந்தது உண்மை. இரு தரப்பிலும் ஏராளமான சேதங்கள் இருந்தது உண்மை. அதற்கு மேல் ஆயிரக்கணக்கில் படுகொலை என்று சொல்லப்பட்டது எல்லாம் பொய். ஆனால், வதந்திகள் தந்த கோபத்தில் மக்களின் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போய் மிகப்பெரிய யுத்தமாக அது உருப்பெறத் தொடங்கியது.

அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் அராஃபத் பயன்படுத்திக்கொண்டார். போராட்டம். மக்கள் போராட்டம். அறப்போராட்டம். ஆயுதத்தாக்குதல் வந்தால் மட்டும் தற்காப்புக்காகக் கற்களைப் பயன்படுத்தலாம் என்று மக்களின் எழுச்சியை ஒருமுகப்படுத்தி, அதற்கு இண்டிஃபதா என்று ஒரு பெயரளித்தார்.

கஸ்டடி மரணங்கள், கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்வது, வீடுகளை இடிப்பது, கொடூரமான முறையில் சித்திரவதை செய்வது, நாடு கடத்துவது உள்ளிட்ட இஸ்ரேலிய அரசின் அரபு விரோத நடவடிக்கைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, இவை அனைத்துக்கும் எதிரான போராட்டம் என்று சொல்லித்தான் முதல் இண்டிஃபதா ஆரம்பமானது.

ஆரம்பத்தில், இது அராஃபத்தின் யோசனையே அல்ல; மக்களின் இயல்பான எழுச்சியைத்தான் அராஃபத் தன்னுடைய திட்டம் போல் வடிவம் கொடுத்து நடைபெறச் செய்துவிட்டார் என்று கூடச் செய்திகள் வந்தன.

உண்மையில், மக்களை முன்னிறுத்தி ஒரு மாபெரும் போராட்டம் நடத்துவது பற்றி 1985-லிருந்தே அராஃபத் யோசித்து வந்திருக்கிறார். 1986-ம் வருடம் ஒரு பிரெஞ்சு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இது பற்றி மிக விரிவாகப் பேசவும் செய்திருக்கிறார்.

"பெயர் வாங்கிக்கொள்ளும் ஆர்வமோ, முன்னின்று நடத்துகிறோம் என்கிற கர்வமோ எங்களுக்கு இல்லை. வேண்டியது, பாலஸ்தீனின் விடுதலை. எங்கள் தாயக மக்களின் சுதந்திர சுவாசம். அதற்கு மேல் ஒன்றுமில்லை. இந்தப் போராட்டத்தில் பாலஸ்தீனின் ஒவ்வொரு குடிமகனும் எங்களுடன் இணைந்து போராடவேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேன்" என்று சொன்னார் அராஃபத்.

பி.எல்.ஓ. போராளிகள் முன்னின்று நடத்திய இந்த இண்டிஃபதாவுக்கு ஹமாஸும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பும் வெளியிலிருந்து ஆதரவு தந்தன. அதாவது போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டிய ஆயுதங்களை அவர்கள் சப்ளை செய்தார்கள். கல் வீச்சு என்னும் நடவடிக்கை ஹமாஸுக்குப் பிடிக்கவில்லை. பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் இயக்கத்தின் தலைவர்களோ, "அவர்கள் கண்ணீர்ப் புகை குண்டு வீசுகிறார்கள் என்றால் நீங்கள் நாட்டு வெடிகுண்டுகளையாவது வீசித்தான் ஆகவேண்டும்" என்று சொல்லி, கேட்டாலும் கேட்காவிட்டாலும் வீடுதோறும் தமது போராளிகளை அனுப்பி தினசரி ஒரு வீட்டுக்கு ஒரு நாட்டு வெடிகுண்டு என்று சப்ளை செய்துவிட்டு வர ஏற்பாடு செய்தார்கள்.

இது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மனக்கிளர்ச்சியை உண்டாக்கியது. விளைவாக, இண்டிஃபதா என்பது ஒரு அறப்போராட்டமாக அல்லாமல், திட்டமிட்ட கலவரமாகப் பரிமாணம் பெற்றது.

இதையெல்லாம் கவனித்துச் சரி செய்யவோ, எது நியாயம், எது அநியாயம் என்றெல்லாம் இரு கட்சிக்கும் பொதுவில் ஆராய்ச்சி செய்யவோ யாருக்கும் விருப்பமோ, அவகாசமோ இருக்கவில்லை. பொழுது விடிந்தால் குண்டு வெடிக்கும். கட்டடங்களும் பேருந்துகளும் பற்றி எரியும். ஒரு பக்கம் கொடி பிடித்து ஊர்வலம் போவார்கள். கோஷங்கள் விண்ணை முட்டும். இஸ்ரேலிய காவல்துறையோ, ராணுவமோ, துணை ராணுவப் படையோ தடுப்பதற்கு எதிரே வந்தால் உடனே கல்வீச்சு ஆரம்பமாகும். ஒரு டிராக்டரில் கருங்கற்களை ஏற்றிக்கொண்டு ஊர்வலத்தின் கூடவே ஓட்டிவருவார்கள். இஸ்ரேலிய போலீஸ் கண்ணில் பட்டவுடன் ஊர்வலம் கலவரமாகிவிடும். கற்கள் வானில் பறக்கும். பதிலுக்குக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பாயும். ரத்தமும் தண்ணீரும் சேறும் சகதியுமாக சில நிமிடங்களில் சாலையே ஒரு போர்க்களமாகக் காட்சியளிக்கும்.

இண்டிஃபதா ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், மக்களை ஒரே நோக்கத்தில் போராட்டத்தில் ஈடுபடுத்தவேண்டும் என்பதுதான். ஆனால் துரதிருஷ்டவசமாக, சாதாரண மக்கள் அத்தனை பேரையும் ஆயுததாரியாக மாற்றும் விதத்தில் இந்த எழுச்சிப் போராட்டம் மாறிப்போய்விட்டது. ஒரு கட்டத்தில் இண்டிஃபதா ஊர்வலங்களின் முன் பகுதியில் குழந்தைகளை நிறுத்தி நடக்கச் சொல்லிவிட்டு மக்கள் பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரேலிய போலீஸ், தாக்குதல் நடத்தினால் முதலில் பலியாகக் கூடிய சாத்தியம் குழந்தைகளுக்கே இருந்தபடியால், அதனைக் கொண்டு சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்கு கெட்டபெயர் உண்டாக்கித் தரலாம் என்று போராளி இயக்கங்கள் யோசித்து முடிவு செய்த முட்டாள்தனமான முடிவு இது. எத்தனையோ குழந்தைகள் இந்த எழுச்சிப் போராட்டக் காலத்தில் இறந்துபோனார்கள். ஆயிரக்கணக்கில் காயமடைந்தார்கள். இரு தரப்பிலும் ரத்தவெறி மேலோங்க, பாலஸ்தீன் முழுவதுமே பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.

இதனிடையில் பாலஸ்தீனில் இருந்த மைனாரிடி கிறிஸ்தவர்கள் 1988-ம் ஆண்டு பிரத்தியேகமாக ஓர் அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். (இது நிஜமாகவே அமைதிப் போராட்டம்தான். ஆயுதங்கள் இல்லாமல் நடந்த போராட்டம்.) குறிப்பாக, கிறிஸ்தவ வியாபாரிகள்.

யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்த தொடர் யுத்த நடவடிக்கைகளில் மைனாரிடிகளான கிறிஸ்தவர்கள், மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இஸ்ரேலிய அரசு, தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அத்தனை கிறிஸ்தவ வியாபாரிகளும் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை "சிறப்பு வரியாக" அரசுக்குச் செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. வழக்கமான வருமான வரி, சொத்துவரி, விற்பனை வரி உள்ளிட்ட அத்தனை வரிகளும் எப்போதும் போல் உண்டு. இது சிறப்பு வரி. எதற்காக? என்றால், அரேபியப் போராளி இயக்கங்களுக்கு எதிராக இஸ்ரேல் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக!

வெறுத்துப் போனார்கள் கிறிஸ்தவர்கள். ஜெருசலேத்தை மையமாக வைத்து ஒட்டுமொத்த பாலஸ்தீனுக்காகவும் நடக்கும் யுத்தத்தில் அப்போது அவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் ஜெருசலேம் புனித நகரம்தான். பக்கத்து ஊரான பெத்லஹேமில்தான் இயேசுபிரான் பிறந்திருக்கிறார். பாலஸ்தீனில் எங்கு தொட்டாலும் கிறிஸ்தவர்களுக்கும் ஆயிரம் புராணக் கதைகள் இருக்கவே செய்கின்றன.

ஆனால் இதென்ன அக்கிரமம்? வேறு இரண்டு இனங்கள் மோதிக்கொள்வதற்குத் தாங்கள் எதற்கு வரி செலுத்தி வசதி செய்துதர வேண்டும்?

அதனால்தான் அவர்கள் ஆரம்பித்தார்கள். போராட்டம். அறப்போராட்டம். அதாவது கோஷங்களுடன் ஊர்வலம். கோரிக்கைகளுடன் மனுக்கள். உண்ணாவிரதத்துடன் முழுநாள் கூட்டம். கடையடைப்புடன் சமநிலை குலைத்தல்.

ஒரு வகையில் கிறிஸ்தவர்களின் இந்தப் போராட்டம், முஸ்லிம்களின் இண்டிஃபதாவுக்கு ஓர் இலவச இணைப்பு போல் அமைந்துவிட்டது. பருந்துப் பார்வையில் பாலஸ்தீன் முழுவதுமே ஏதோ ஒரு காரணத்துக்காகப் போராடிக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் இருப்பது போல் தோற்றம் கிடைத்துவிடுகிறதல்லவா? அதுவும் கிறிஸ்தவர்கள் அங்கே மைனாரிடிகள். மைனாரிடிகளின் குரலுக்கு உரிய மதிப்புத் தராதவர்கள் எந்த தேசத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஆனால், இஸ்ரேல் தவறு செய்தது. கிறிஸ்தவர்களின் குரலுக்கு அவர்கள் மதிப்புக் கொடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. அந்தச் சிறப்பு வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க ஆரம்பித்தது.

இது எரியும் கொள்ளியில் பேரல் பேரலாக பெட்ரோலை ஊற்றியது போலாகிவிட்டது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 21 ஆகஸ்ட், 2005

Saturday, August 20, 2005

77] ராணுவத்தலைவர் ஷேக் அகமது யாசின்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 77

2004-ம் வருடம் மார்ச் மாதம் 22-ம் தேதி தொழுகைக்காக அவர் ஒரு மசூதிக்குச் சென்றுகொண்டிருந்தார். தொழுகை முடித்து மசூதியை விட்டு வெளியே வந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு ராக்கெட் வெடிகுண்டு, அவர் அருகே சரியாக விழுந்து வெடித்து உயிரைக் குடித்தது. அடுத்த வினாடி பாலஸ்தீன் பற்றி எரியத் தொடங்கியது. இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோனின் கதை அத்துடன் முடிந்தது என்று அத்தனை பேரும் பேசிக்கொண்டார்கள். திட்டமிட்ட அந்தத் தாக்குதலை "சற்றும் எதிர்பாராததொரு விபத்துதான் இது. நாங்கள் அவரைக் குறிவைத்து ராக்கெட்டை ஏவவில்லை" என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் பொய்தான் சொல்கிறார் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். வயதில் மிகவும் முதிர்ந்த, மார்க்கக் கல்வியில் கரை கண்டவரான அவர் பெயர் ஷேக் அகமது யாசின். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸின் தலைவர்.

ஷேக் அகமது யாசின், ஹமாஸின் தலைமைப் பொறுப்புக்கு வந்த காலகட்டத்தில் தொடங்கவேண்டிய இந்த அத்தியாயத்தை, அவரது மரணத்தில் தொடங்க நேர்ந்தது தற்செயலானதல்ல. தன்னைப் பற்றிய எந்த விவரத்தையும் எந்தக் காலத்திலும் வெளியில் சொல்லாத போராளி அவர். யாசின் குறித்து இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய தகவல்கள் நான்கே நான்குதான். முதலாவது, அவர் அதிகம் பேசமாட்டார். சமயத்தில் பேசவே மாட்டார். இரண்டாவது, ஒரு நாளைக்கு ஒரே ஒரு ரொட்டியும் ஒரு தம்ளர் பாலும் மட்டும்தான் அவரது உணவாக இருந்தது என்பது. மூன்றாவது, இருட்டில் கூடக் குறிதவறாமல் சுடக்கூடியவர் என்கிற தகவல். நான்காவது தகவல், அவருக்குக் கடைசிக் காலத்தில் கண் பார்வை சரியில்லாமல் போய் மிகவும் அவஸ்தைப்பட்டார் என்பது. இதுதான். இவ்வளவுதான்.

யாசினுக்கு முன்பு ஹமாஸை வழி நடத்தியவர்கள் எல்லோரும் அரசியல் வல்லுநர்களாக மட்டும் இருந்தார்கள். இவர்தான் முதல் ராணுவத் தலைவர். ஹமாஸை ஒரு சக்திமிக்க தனியார் ராணுவம் போலவே வடிவமைத்ததில் பெரும்பங்கல்ல; முழுப் பங்கே இவருடையதுதான். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் யுத்தத்துக்கு ஒரு சரியான வடிவம் கொடுத்தவர் யாசின்தான்.

ஒரு மாதத்துக்கு இத்தனை இலக்குகள் என்று திட்டம் போட்டுக்கொண்டு, தாக்குதலை நடத்தக் கற்றுக்கொடுத்தவர் அவர். ஒரு குழு ஓரிடத்தில் தாக்குதல் நடத்தப் போனால், அடுத்த குழு அடுத்த இலக்கை நோக்கி அப்போதே பயிற்சியிலும் முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கும். இவ்வாறு ஹமாஸின் அத்தனை போராளிகளையும் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, தேசமெங்கும் வேறு வேறு இடங்களில் பயிற்சி முகாம்கள் அமைத்து, தங்கவைத்துத் தயார் செய்ய ஆரம்பித்தார் யாசின்.

எந்தவிதமான சமரசங்களுக்கும் ஹமாஸ் தயாரானதல்ல என்பது முதன்முதலில் இஸ்ரேலிய அரசுக்குப் புரியவந்ததே ஷேக் அகமது யாசின் பொறுப்புக்கு வந்தபிறகுதான். ஹமாஸ், மிகத்தீவிரமாக இஸ்ரேலிய மக்களின்மீது தாக்குதல் ஆரம்பித்ததும் அவரது தலைமைக்குப் பிறகுதான். அதுவரை ராணுவ இலக்குகள், அரசாங்க இலக்குகள்தான் ஹமாஸின் பிரதான நோக்கமாக இருந்துவந்தது. அதனை மாற்றி, பொதுமக்களும் அரசின் கருத்தை ஏற்று நடந்துகொள்பவர்கள்தானே, ஆகவே இஸ்ரேலிய அரசின் அத்தனை குற்றங்களிலும் அவர்களுக்கும் பங்குண்டு என்று சொன்னவர் அவர்.

பொது இடங்களில் ஹமாஸ் வெடிகுண்டுகளைப் புழக்கத்தில் விடத் தொடங்கியது அப்போதுதான். பஸ்ஸில் வைப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கார் பார்க்கிங்கில் வைப்பார்கள். ரயில்களில் வைப்பார்கள். ஹோட்டல்கள், யூத தேவாலயங்கள், பல்கலைக்கழக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், ரிசர்வேஷன் கவுண்ட்டர்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கங்கள், அரசு விழாக்கள் நடக்கும் இடங்கள், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் என்று எங்கெல்லாம் மக்கள் கூடுவார்களோ அங்கெல்லாம் குண்டுவைக்க ஆரம்பித்தார்கள்.

சித்தாந்தம் என்பது சௌகரியப்படி மாற்றி எழுதிக்கொள்ளத் தக்கது. அதுவரை பாலஸ்தீன் விடுதலைக்காகப் போராடியபடி, பாலஸ்தீனிய அரேபியர்களின் நலனுக்காகவும் பாடுபட்டுக்கொண்டிருந்த ஹமாஸ், எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து இஸ்ரேலிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துவதையே தனது பிரதான மான நோக்கமாகக் கொள்ளத் தொடங்கியது.

இதனால்தான் பி.எல்.ஓ. ஓர் அரசியல் முகம் பெற்றதைப் போல ஹமாஸால் இறுதிவரை பெற முடியாமல் போய்விட்டது. எண்பதுகளிலேயே ஹமாஸை ஒரு தீவிரவாத இயக்கமாக உலகம் பார்க்கத் தொடங்கிவிட்டதென்றபோதும், அது அல் கொய்தாவைக் காட்டிலும் பயங்கரமான இயக்கம் என்று கருதப்பட்டது, தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான்.

உலகிலேயே முதல் முறையாக தற்கொலைத் தாக்குதல் என்னும் உத்தியைப் புகுத்தியது ஹமாஸ்தான். இந்தத் திட்டம் ஷேக் அகமது யாசினின் எண்ணத்தில் உதித்தவற்றுள் ஒன்று.

கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்வது, மதத்துக்காக உயிர்த்தியாகம் செய்வது, விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்வது என்கிற புராதனமான சித்தாந்தத்துக்குப் புதுவடிவம் கொடுத்து, தானே ஓர் ஆயுதமாக மாறி எதிரியின் இலக்கைத் தாக்கி அழிப்பது என்கிற கருத்தாக்கத்தை முதன்முதலில் 1989-ல் முன்வைத்தது ஹமாஸ்.

ஹெப்ரான் (Hebron) என்கிற இடத்திலிருந்த இப்ராஹிம் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 29 பேர், ஈவிரக்கமின்றி பரூஷ் கோல்ட்ஸ்டெயின் (Baruch Goldstein) என்கிற வந்தேறி யூதரால் படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்க முடிவு செய்தது ஹமாஸ். திரும்ப அதேபோல துப்பாக்கி ஏந்தி கண்ணில் பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினரை மட்டும் சுட்டுக் கொல்வது எந்தப் பலனும் அளிக்காது என்று ஹமாஸின் உயர்மட்டக் குழுவினர் கருதினார்கள். அப்போது வடிவம் பெற்றதுதான் இந்தத் தற்கொலைத் தாக்குதல் என்கிற உத்தி.

ஒரு தாக்குதல் நடத்த வேண்டும். அது உலகத்தையே குலுக்க வேண்டும். இஸ்ரேலிய அரசு பதறிக்கொண்டு அலறியோட வேண்டும். இப்படியும் செய்வார்களா என்று அச்சம் மேலோங்கவேண்டும். அதுதான் சரியான பதிலடியாக இருக்க முடியும் என்று தீர்மானித்த ஹமாஸ், திட்டமிட்டு ஒரு போராளியைத் தயார் செய்து அனுப்பியது. உடலெங்கும் வெடிபொருட்களைக் கட்டிக்கொண்டு போய் நட்டநடு வீதியில் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு சுமார் ஐம்பது யூதர்களையும் கொன்றான் அவன்.

ஹமாஸ் எதிர்பார்த்தபடியே இந்தச் சம்பவம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்தது. அத்தனை நாட்டுத் தலைவர்களும் அலறினார்கள். இஸ்ரேல் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனது. இப்படியுமா கொலைவெறி கொள்வார்கள் என்று பக்கம்பக்கமாக எழுதி மாய்ந்தார்கள். உடனடியாகப் பல்வேறு நாடுகள் ஹமாஸை தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கமாக அறிவித்தன. இதில் மிகப்பெரிய நகைச்சுவை என்னவென்றால் அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கு வெளிப்படையாகப் பல தேசங்களில் கிளைகளும் துணை அமைப்புகளும் பயிற்சி முகாம்களும் இருப்பதுபோல ஹமாஸுக்குக் கிடையவே கிடையாது. எங்கே யார் இருக்கிறார்கள் என்பது கூட யாருக்கும் தெரியாது.

1989-லிருந்து 1991- வரை ஹமாஸ் இயக்கத்தினரைப் பற்றித் தகவல் சேகரிக்கவென்றே அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.வில் தனியொரு பிரிவு செயல்பட்டது. இஸ்ரேலிய உளவுத்துறை மொஸாட்டுடன் இணைந்து மூன்று ஆண்டுகள் படாதபாடுபட்டும் அவர்களால் மொத்தம் பதினான்கு பேரைத் தவிர வேறு பெயர்களைக் கூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை. எந்த ஒரு ஹமாஸ் தலைவரைப் பற்றிய தனி விவரங்களும் கிடைக்கவேயில்லை. "கஷ்டப்பட்டு" அவர்கள் சேகரித்து வெளி உலகுக்கு அறிவித்த அந்த ஹமாஸ் தலைவர்களின் பெயர்கள் இதோ:

ஷேக் அகமது யாசின் – மதத்தலைவர், ராணுவத்தலைவர். (இவர் மார்ச் 22, 2004-ல் இஸ்ரேலிய ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.)

டாக்டர் அப்துல் அஜிஸ் அல் ரண்டிஸி (Dr. Abdul aziz al rantissi யாசின் மறைவுக்குப் பிறகு ஹமாஸின் தலைவரானவர். இவரும் இஸ்ரேல் ராணுவத்தினரால் அதே ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.)

இப்ராஹிம் அல் மகத்மெ (Ibrahim al Makadmeh 2003-ம் ஆண்டு மொஸாட் உளவாளிகளால் கொலை செய்யப்பட்டவர்.)

மெஹ்மூத் அல் ஸாஹர் (Mahmoud al Zahar அரசியல் பிரிவுத் தலைவர்)

இஸ்மாயில் ஹனியா (Ismail Haniya பெரும்பண்டிதர். அரசியல் ஆலோசகர்.)

சயீது அ'சியாம் (Said a' Siyam - அரசியல் பிரிவின் மூத்த செயலாளர்.)

ஸலா ஸாஹேத் (Salah Sahed ஹமாஸின் ராணுவத் தளபதி. 2002-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.)

மொஹம்மத் டெயிஃப் (Mohammed Deif – ராணுவத் தளபதி.)

அட்னல் அல் கௌல் (Adnal al Ghoul வெடிபொருள் நிபுணர். ராக்கெட் லாஞ்ச்சர் பிரயோகத்தில் விற்பன்னர்.)

மொஹம்மத் தாஹா (Mohammed Taha ஹமாஸைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர். மார்க்க அறிஞர். 2003-ம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவம் இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இன்றுவரை சிறையில் இருக்கிறார்.)

யாஹியா அயாஷ் (Yahya Ayyash வெடிகுண்டுகள் தயாரிக்கும் விஞ்ஞானி.)

காலித் மஷால் (Khaled Mashal டெமஸ்கஸில் வசிக்கும் ஹமாஸ் தலைவர். செப்டம்பர் 2004-க்குப் பிறகு ஈரானுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.)

மூசா அபு மர்ஸுக் (Mousa Abu marzuk சிரியாவில் இருக்கிறார்.)

ஷேக் கலில் (Sheikh Khalil – 2004-ல் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட இவர், மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்று வருணிக்கப்பட்டவர்.)

எந்த விவரமும் கண்டுபிடிக்க முடியாத இவர்களில் சிலரை இஸ்ரேல் ராணுவம் எப்படிக் கொன்றது என்பது மிக முக்கியமான விஷயம். ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் அந்த இயக்கத்தின் தலைவராக அறிவிக்கப்படுகிறார் என்றால் கண்டிப்பாக அவர் மிகப்பெரிய மார்க்க அறிஞராகத்தான் இருப்பார். அவரது ராணுவத் தகுதிகளெல்லாம் கூட இரண்டாம்பட்சம்தான்.

அப்படி சமய ஈடுபாடு மிக்க ஒருவர் மசூதிக்குப் போய் தொழுகை நடத்துவதிலிருந்து ஒரு நாளும் தவற மாட்டார்.

இதை கவனத்தில் கொண்ட இஸ்ரேல், காஸா பகுதியில் உள்ள அத்தனை மசூதிகளைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஒற்றர்களை எப்போதும் நிறுத்திவைக்கும். இந்த ஒற்றர்கள், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு முறை ஓரிடத்தில் பணியில் இருக்கும் ஒற்றர், அடுத்த ஒரு மாத காலத்துக்கு அந்த இடத்துக்கு வரமாட்டார். அத்தனை கவனம்!

இப்படிப் பணியில் நிறுத்தப்படும் ஒற்றருக்கு ஒரே ஒரு கட்டளைதான். ஹமாஸ் தலைவர் எப்போது எந்த மசூதிக்கு வருகிறார் என்று பார்த்துச் சொல்லவேண்டும். அவர் தினசரி வருகிறாரா, வாரம் ஒரு முறை வருகிறாரா, அல்லது ஏதாவது விசேஷ தினங்களில் மட்டும் வருகிறாரா என்று காத்திருந்து சரியாகப் பார்த்துச் சொல்லவேண்டும்.

தகவல் சரிதான் என்று உறுதிப்படுத்தப்பட்டதும் பாதுகாப்பான தூரத்தில் பதுங்கியிருந்து ராக்கெட் வெடிகுண்டு மூலம் கொன்றுவிடலாம் என்று யோசனை சொன்னது மொஸாட்.

இப்படித்தான் ஷேக் அகமது யாசின் படுகொலை செய்யப்பட்டார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மசூதிக்கு வருபவர் அவர் என்பது, இஸ்ரேல் ராணுவத்துக்கு சௌகரியமாகப் போய்விட்டது. அவர் உள்ளே போகும் நேரம், வெளியே வந்து நாற்காலியிலிருந்து இறங்கி வண்டியில் ஏறுவதற்கு ஆகும் கால அவகாசம் ஆகியவற்றைத் துல்லியமாகக் கவனித்து, சரியாக அடித்தார்கள். யாசின் இறந்து போனார்.

யாசின் இறந்தபோது, கோபத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் முழுவதும் ஏராளமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். எங்கு பார்த்தாலும் குண்டு வெடித்தது. பஸ்கள் எரிந்தன. மக்களின் அலறல் ஓசை பத்து நாட்கள் வரை ஓயவே இல்லை. புதிய தலைவரான டாக்டர் அப்துல் அஜிஸ் அல் ரண்டிஸியின் வழிகாட்டுதலில், இயக்கம் இன்னும் உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியிருப்பதாக அறிவித்தார்கள்.

உடனே மொஸாட் விழித்துக்கொண்டது. ஓஹோ, உங்கள் புதிய தலைவர் இவர்தானா என்று அவருக்கு அடுத்தபடியாகக் கட்டம் கட்டினார்கள். அதேபோல ஒளிந்திருந்து தாக்கி அவரையும் கொன்றார்கள். ஒரே வருடத்தில் இரண்டு தலைவர்களைப் பறிகொடுத்த ஹமாஸ், செய்வதறியாமல் திகைத்தது.

ஹமாஸ் தனது அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தபோதுதான், விஷயத்தை மோப்பம் பிடித்த ஹமாஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் சிரியாவில் வசிப்பவருமான காலித் மஷால், அவசர அவசரமாக "தலைவரை ரகசியமாகத் தேர்ந்தெடுங்கள். எக்காரணம் கொண்டும் யார் தலைவர் என்பதை வெளியே சொல்லாதீர்கள்" என்று இயக்கத்தினருக்கு ரகசியச் சுற்றறிக்கை அனுப்பினார்.

சற்றே நிதானத்துக்கு வந்த ஹமாஸ், அவர் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தங்களது தலைவர் யாரென்பதை அறிவிப்பதை அத்துடன் நிறுத்திக்கொண்டது. ஆனாலும் சீனியாரிடி அடிப்படையில் மெஹ்மூத் அல் ஸாஹர்தான் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னது மொஸாட். துணைத்தலைவராக இஸ்மாயில் ஹனியாவும் அவருக்கு அடுத்தபடியாக சயீது அ'சியாமும் இருப்பார்கள் என்றும் சொல்லி, வைத்த குறிக்காக இன்னும் வலைவிரித்திருக்கிறார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 18 ஆகஸ்ட், 2005

Sunday, August 14, 2005

76] ஹமாஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவு

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 76

இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் தொடக்கம் மதம் சார்ந்ததாக இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அது முற்றிலும் அரசியல் சார்ந்ததொரு விவகாரமாகிவிட்டது. இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டபடியால்தான் யாசர் அராஃபத் பி.எல்.ஓ.வின் தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது, தொடக்கத்திலிருந்தே அரசியல் தீர்வுக்கும் ஒரு கதவைத் திறந்து வைத்தார். பேச்சுவார்த்தைகள், அமைதி ஒப்பந்தங்கள், போர் நிறுத்தம் உள்ளிட்ட சாத்வீக வழிகளுக்கும் சம்மதம் சொன்னார்.

ஆனால் பிரச்னையின் அடிப்படை அரசியல் அல்ல என்று திட்டவட்டமாகக் கருதிய ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிராக வெளியிட்ட அந்த முதல் அறிக்கையில் அழுத்தந்திருத்தமாக 'அல்லாவின் பெயரால்' தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தது.

'மதத்தின்மீது ஒருவன் நம்பிக்கை இழப்பானானால் அவனது பாதுகாப்பும் அவனது நல்வாழ்வும் அந்தக் கணத்துடன் போய்விடுகிறது' என்கிற பிரசித்தி பெற்ற இஸ்லாமியக் கவிஞர் முஹம்மது இக்பாலின் வரிகளை மேற்கோள் காட்டி யூத மக்களுக்கும் இஸ்ரேலிய அரசுக்கும் எச்சரிக்கை செய்யும் விதமாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கைதான் இஸ்லாத்தின் பெயரால் புனிதப்போருக்கு அறைகூவல் விடுத்த முதல் அறிக்கை.

புனிதப்போர்கள் அதற்கு முன்பும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் ஹமாஸின் அந்த அறிக்கை பாலஸ்தீனிய அரேபியர்களிடையே அன்றைக்கு ஏற்படுத்திய தாக்கமும் பாதிப்பும் முன்னெப்போதும் நிகழாதது. உருக்கமும் உணர்ச்சி வேகமும் கோபமும் ஆதங்கமும் கலந்த கவித்துவமான வரிகளில் ஒரு போராளி இயக்கம் அதற்கு முன் அறிக்கை வெளியிட்டதில்லை. பாலஸ்தீனியர்களின் வலியை அப்பட்டமாகப் படம் பிடிக்கும் அந்த அறிக்கையிலிருந்துதான் பாலஸ்தீனுக்கான ஜிகாத் வேகமெடுக்கத் தொடங்கியது என்று தயங்காமல் கூறலாம்.

திடீரென்று பாலஸ்தீனில் இந்த அறிக்கை உண்டாக்கிய எழுச்சியைக் கண்டு, முதலில் அஞ்சியது இஸ்ரேல் அல்ல. அமெரிக்காதான். உடனடியாக ஹமாஸை ஒரு தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கச் சொல்லி, இஸ்ரேல் அரசுக்கு உத்தரவிட்டுவிட்டு, உலகெங்கும் ஹமாஸுக்கு உதவக்கூடிய யாராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கைது செய்யவும் தனது உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் கேட்டுக்கொண்டது.

அன்றைய காலகட்டத்தில் இது மிகவும் நகைப்புக்குரிய ஒரு விஷயம். ஏனென்றால், ஹமாஸ் என்றொரு இயக்கம் இருப்பது தெரியுமே தவிர, அது யாரால் தலைமை தாங்கப்படுகிறது, வழி நடத்துவோர் யார் யார் என்கிற விவரங்களெல்லாம் அப்போது பாலஸ்தீனிலேயே கூட யாருக்கும் தெரியாது. ஹமாஸின் எந்த ஒரு தலைவரும் தன் பெயரோ, புகைப்படமோ வெளியே வர அனுமதித்ததில்லை. ஹமாஸ் இயக்கத்தில் இருந்த எந்த ஒரு போராளியும் பிற போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்போல இருபத்து நாலு மணி நேரமும் கையில் துப்பாக்கியுடன் முகத்தைத் துணியால் கட்டி மறைத்துக்கொண்டு அலைந்து திரிந்ததில்லை. காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் மட்டுமே புழங்கி, திரைப்படத் தீவிரவாதிகள்போல படபடபடவென்று இயந்திரத் துப்பாக்கி புல்லட்டுகளை வீணாக்கிக் கொண்டிருக்கவில்லை.

ஹமாஸின் முழுநேரப் போராளிகள்கூட தொடக்ககாலத்தில் எங்கெங்கோ உத்தியோகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். சிலர் ஆசிரியர்களாக இருந்தார்கள். சிலர் மருத்துவர்களாக இருந்தார்கள். பெரும்பாலான இளைஞர்கள் ஹமாஸின் 'தனி பார்லிமெண்ட்'டின் தன்னார்வச் சேவகர்களாக கிராமம் கிராமமாகப் போய் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு, சாலை போடுவதிலும் நகர சுத்திகரிப்புப் பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். இது மிகையே இல்லாத உண்மை. ஓர் அவசியம், தேவை என்று வரும்போது அப்படி அப்படியே வேலையைப் போட்டுவிட்டு ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். அந்தச் சமயங்களில் மட்டும் அடையாளம் மறைப்பதன் பொருட்டு ஹமாஸ் போராளிகள் தங்கள் முகங்களைத் துணியால் சுற்றி மறைத்துக்கொள்வார்கள். ஏனெனில், பொழுது விடிந்தால் மீண்டும் வீதிகளுக்கு வந்து கூட்டிப் பெருக்க வேண்டுமே?

ஹாலிவுட் காட்ஃபாதரிலிருந்து கோலிவுட் ஜென்டில்மேன் வரை திரைப்படங்கள் காட்டிய நெகடிவ் ஹீரோயிஸத்தின் ரிஷிமூலத்தைத் தேடிப்போனால் ஹமாஸில்தான் வந்து நிற்கவேண்டியிருக்கும்.

ஹமாஸின் வளர்ச்சி இஸ்ரேலை மிகவும் கவலை கொள்ளச் செய்தது. ஏற்கெனவே பதினெட்டுப் போராளி இயக்கங்களை உள்ளடக்கிய பி.எல்.ஓ.வையும் அதன் தலைவர் யாசர் அராஃபத்தின் எதிர்பார்க்கமுடியாத கெரில்லா யுத்தங்களையும் சமாளிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தார்கள் அவர்கள். குறிப்பாக, பி.எல்.ஓ.வின் மிக முக்கிய சக்தியாக விளங்கிய அராஃபத்தின் 'ஃபத்தா' இயக்கத்தினர் தாம் கற்ற போர்க்கலையின் அத்தனை சிறப்பு நடவடிக்கைகளையும் மொத்தமாக டெல் அவிவ் நகரில் காட்டியே தீருவது என்று தீர்மானம் செய்துகொண்டு, தினசரி குறைந்தது இரண்டு அல்லது மூன்று தாக்குதல்களைத் தயங்காமல் மேற்கொண்டு வந்தார்கள்.

ஃபத்தா விஷயத்தில் இன்னொரு பிரச்னை என்னவென்றால், தொடக்கம் முதலே (அதாவது பி.எல்.ஓ.வில் இணைவதற்கு முன்பிலிருந்தே) அராஃபத் அதனை ஒரு மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் முன்னிறுத்தி வந்தார். இயக்கத்திலிருந்த அத்தனை பேருமே இஸ்லாமியர்கள்தான் என்றபோதும் இஸ்லாத்தை முன்வைத்து அவர்கள் ஒருபோதும் யுத்தம் மேற்கொண்டதில்லை. ஹமாஸ் அல்லது இன்றைய அல் கொய்தாவைப்போல் 'அல்லாவின் பெயரால்' அறிக்கை விடுத்ததில்லை. மாறாக, 'இஸ்ரேலிடமிருந்து இழந்த நிலத்தை மீட்பது' மட்டுமே ஃபத்தாவின் நோக்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனாலேயே சர்வதேச மீடியா ஃபத்தாவைக் குறித்து செய்தி சொல்லும்போதெல்லாம் அதனை ஓர் அரசியல் இயக்கமாகவே குறிப்பிட்டு வந்தது. பாலஸ்தீன் விவகாரம் அதிகம் எட்டியிராத தூரக்கிழக்கு தேசங்களிலெல்லாம் எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஃபத்தாவை ஓர் அரசியல் கட்சி போலவே சித்திரித்துச் செய்தி வெளிவரும்! சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துத் திண்டாடி நிற்கும் இஸ்ரேல் அரசு. 'ஃபத்தா ஓர் அரசியல் கட்சியல்ல, அது ஒரு தீவிரவாத இயக்கம்தான்' என்று லவுட் ஸ்பீக்கர் வைத்து அலறுவார்கள். அமெரிக்க ஊடகங்களின் துணையுடன் புகைப்படங்கள், வீடியோத் துணுக்குகளை வெளியிடக் கடும் முயற்சிகள் மேற்கொள்வார்கள். அப்போதுகூட எடுபடாமல் போய்விடும்.

இஸ்ரேலுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. ஏனெனில், இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தங்களுக்கு ஆபத்து என்றுதான் இஸ்ரேல் அரசு எப்போதும் ஐ.நா.வில் புலம்புவது வழக்கம். அராஃபத்தும் ஃபத்தாவும் பி.எல்.ஓ.வின் தலைமை நிலைக்கு வந்துவிட்டபோது, அவர்களால் அப்படி அழுது புலம்ப முடியாமல் போய்விட்டது. ஏனெனில் அராஃபத் எப்போதும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருந்தார். எப்போதும் போர் நிறுத்தத்துக்கான சாத்தியத்தை முதலில் வைத்துவிட்டுத்தான் யுத்தத்தையே தொடங்குவார். இது ஒரு ராஜதந்திரம். மாபெரும் அரசியல் தெளிவுள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமான யோசனை.

ஆகவே ஃபத்தாவின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்த வழி தேடிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, ஹமாஸின் திடீர் எழுச்சியும் அவர்களுக்கு இருந்த மக்கள் ஆதரவும் மேலும் கலவரமூட்டியது. ஒருகட்டத்தில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட், வேறு வழியே இல்லை என்று ஹமாஸை எப்படியாவது வளைத்து, இஸ்ரேல் அரசின் ரகசியத் தோழன் ஆக்கிக்கொண்டு, அவர்களைக் கொண்டே பி.எல்.ஓ.வை ஒழித்துக்கட்ட ஒரு திட்டம் தீட்டியது.

தேவையான பண உதவி, வேண்டிய அளவுக்கு ஆயுத உதவி. ஹமாஸ் இயக்கத்தினருக்கு அளவற்ற பாஸ்போர்ட்கள், ஒருவருக்கே நான்கைந்து பாஸ்போர்ட்கள் வேண்டுமென்றாலும் கிடைக்கும். எந்த நாட்டு பாஸ்போர்ட் வேண்டுமென்றாலும் கிடைக்கும்; இயக்கத்திலிருக்கும் அத்தனை பேருக்கும் வீடு, நிலங்கள் என்று நம்ப முடியாத அளவுக்குக் கொட்டிக்கொடுத்தாவது ஹமாஸை வளைக்க இஸ்ரேல் அரசு ஒரு திட்ட வரைவையே தயாரித்தது.

ஹமாஸின் மத உணர்வுகளைத் தாங்கள் மிகவும் மதிப்பதாகவும், நிதானமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்புக்கும் திருப்தியளிக்கும் விதத்தில் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணமுடியும் என்று தாம் நம்புவதாகவும், ஃபத்தாவும் அராஃபத்தும்தான் பிரச்னை என்றும் 'எடுத்துச் சொல்லி' ஹமாஸ் தலைவர்களை வளைக்க ஒரு செயல்திட்டம் தீட்டியது இஸ்ரேல் அரசு.

இதன் மறைமுக அர்த்தம் என்னவென்றால், ஹமாஸுக்கு இஸ்ரேல் அரசு உதவி செய்யும். பதிலுக்கு பி.எல்.ஓ.வை ஒழித்துக்கட்ட ஹமாஸ் உதவவேண்டும் என்பதுதான்.

இத்தகைய கேவலமான யோசனைகள் அமெரிக்காவுக்கும் அமெரிக்க அடிவருடிகளுக்கும் மட்டும்தான் சாத்தியம் என்று ஒற்றைவரியில் நிராகரித்துத் திருப்பிவிட்டார்கள், ஹமாஸின் உயர்மட்ட அரசியல் குழுவினர். அதோடு நிறுத்தாமல் மிகத் தீவிரமாக ஓர் ஊழல் ஒழிப்புப் போராட்டத்தையும் அவர்கள் உடனே தொடங்கினார்கள். பாலஸ்தீன் முழுவதும் யூத அதிகாரிகள் அப்போது கிடைத்த வழிகளிலெல்லாம் பணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஊழலில் உலகிலேயே முதல் இடத்தை இஸ்ரேல் பிடித்துவிடக்கூடிய சாத்தியம் இருக்குமளவுக்கு ஊழல் நாற்றம் இஸ்ரேல் முழுவதும் நாறடித்துக்கொண்டிருந்தது. ஏராளமான அறக்கட்டளைகள் அப்போது அங்கே இருந்தன. யாராவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தால், உடனே ஏதாவதொரு பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நிதி வசூலிக்க ஆரம்பித்துவிடுவார்கள். குறிப்பிடத்தக்க அளவில் பணம் சேர்ந்ததும் அறக்கட்டளை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அறங்காவலர்கள் வெளிநாடுகளுக்குப் போய்விடுவார்கள். எதற்காக அவர்கள் நிதி திரட்டினார்கள், திரட்டிய நிதி எங்கே போனது என்றெல்லாம் யாரும் கேட்கக்கூடாது.

உல்லாசமாக வெளிநாடுகளில் சுற்றித் திரிந்துவிட்டு, பணம் தீர்ந்ததும் மீண்டும் இஸ்ரேலுக்கு வந்து வேறொரு அறக்கட்டளை ஆரம்பிப்பார்கள். மீண்டும் வசூல் நடக்கும். மீண்டும் காணாமல் போய்விடுவார்கள்.

ஒருவர் இருவர் அல்ல. அநேகமாக அன்றைய இஸ்ரேலின் மிக முக்கியமானதொரு 'தொழிலாகவே' இது இருந்தது. எழுபதுகளில் இஸ்ரேலில் இம்மாதிரி திடீர் அறக்கட்டளைகள், டிரஸ்டுகள் மட்டும் லட்சக்கணக்கில் தோன்றி, காணாமல் போயிருக்கின்றன. இத்தகைய நூதன மோசடியில் அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் கூட நிறைய தொடர்புகள் இருந்திருக்கின்றன.

கோடிக்கணக்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பணம் திரட்டி, அறக்கட்டளைகளின் பெயரில் அவற்றைச் சில தனிநபர்கள் தின்று கொழுத்து வந்ததைக் கண்டு கோபம் கொண்ட ஹமாஸ், இத்தகைய அறக்கட்டளைகளையும் டிரஸ்டுகளையும் ஒழித்துக்கட்டுவதே தன் முதல் வேலை என்று தீர்மானம் செய்து பகிரங்கமாக அறிவித்துவிட்டு, கையோடு வேலையை ஆரம்பித்து விட்டது.

இதற்கு பயந்த ஊழல் முதலைகள், போர்டுகளைக் கழற்றிப் போட்டுவிட்டு, அறைக்கதவைச் சாத்திக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தன. ஆனால் ஹமாஸ் இயக்கத்தினர் இத்தகைய அறக்கட்டளைகளைக் கணக்கெடுத்து, பட்டியலிட்டு, ஒரு நாளைக்கு ஒன்று என்று முடிவு செய்து தேசம் முழுவதும் இவற்றின்மீது தினசரி யுத்தம் ஆரம்பித்துவிட்டார்கள்.

அறக்கட்டளைகளின் பெயரில் ஊழல் செய்வதைத் தடுக்கப் போன ஹமாஸுக்கு அரசுத்துறையிலும் ஊழல் மலிந்து கிடப்பது தெரியவர, பெரிய அளவில் ஒரு நாடு தழுவிய ஊழல் ஒழிப்புப் போராக நடத்தினாலொழிய இதற்கு விடிவு கிடையாது என்று தெரிந்தது.

ஆகவே, ஹமாஸில் உடனடியாகத் தனியொரு ஊழல் ஒழிப்புப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. எங்கெல்லாம் , யாரெல்லாம் ஊழலில் ஈடுபடுவதாகத் தெரிகிறதோ அங்கெல்லாம் இந்தப் படை போகும். ஒரு தோட்டா. ஒரே முயற்சி. ஆள் காலி அல்லது நிறுவனம் காலி. அங்கிருக்கும் பணம் முழுவதும் அடுத்த வினாடி ஹமாஸின் மக்கள் வங்கிக்கு வந்து சேர்ந்துவிடும். உடனே கணக்கு எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி எங்காவது மாட்டிவிடுவார்கள். இந்த இடத்தில் இத்தனை பணம் எடுத்துவரப்பட்டது. இந்தப் பணம் இந்த இந்த வகைகளில் செலவிடப்படவிருக்கிறது என்று எழுதியே போட்டுவிடுவார்கள்.

எழுதிப் போட்டபடி செயல்படுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காகவே ஒரு குழு இருக்கும். அவர்கள் வருடத்துக்கு மூன்றுமுறை இன்ஸ்பெக்ஷன் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அது ஓர் அரசாங்கமேதான். தனியார் அரசாங்கம்.

ஆரம்பத்தில் ஹமாஸின் இத்தகைய சமூகப்பணிகள்தான் இஸ்ரேல் அரசின் கவனத்தைக் கவர்ந்தன. ஹமாஸைத் தீவிரவாதச் செயல்களிலிருந்து பிரித்து இழுப்பது சுலபம் என்று அவர்கள் நினைத்ததும் இதனால்தான்.

ஆனால் யுத்தத்தை நிறுத்தினாலும் நிறுத்துவார்களே தவிர, அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள் என்பது ஏனோ அவர்களுக்கு உறைக்காமல் போய்விட்டது.

இதெல்லாம் எண்பதுகளின் தொடக்கம் வரைதான். அதுகாறும் அரசியல் சித்தாந்தவாதிகளால் வழிநடத்தப்பட்டுவந்த ஹமாஸுக்கு எண்பதாம் வருடம் ஒரு ராணுவத் தலைவர் வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பெயர் ஷேக் அகமது யாசின். (Sheikh Ahmed Yassin). அந்தக் கணமே ஹமாஸின் செயல்பாடுகள் முற்றிலும் வேறுமுகம் கொள்ளத் தொடங்கிவிட்டன.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 14 ஆகஸ்ட், 2005

Wednesday, August 10, 2005

75] ஹமாஸ் (Harakat Al Muqawamah AlIslamiyah)

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 75

ஹரக்கத் அல் முக்காவாமா அல் இஸ்லாமியா (Harakat Al Muqawamah AlIslamiyah) என்கிற நெடும்பெயரின் எளிய சுருக்கம்தான் ஹமாஸ் (Hamas).

பொதுவாக டெல் அவிவில் குண்டு வெடித்தது என்கிற செய்தி வரும்போதெல்லாம் ஹமாஸின் பெயர் அடிபடுவதைப் பார்த்திருப்பீர்கள். மற்றபடி அந்த இயக்கத்தைப் பற்றி மேலதிக விவரங்கள் பெரும்பாலும் வெளியே வராது. அதிகம் படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லத்தக்க மிகப்பெரிய பண்டிதர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்பு இது. இன்றல்ல; தொடக்கம் முதலே அப்படித்தான். ஆனால் அல் கொய்தா என்று சொன்னதுமே ஒசாமா பின்லேடனின் முகம் நினைவுக்கு வருவது மாதிரி, ஹமாஸ் என்றதும் யார் முகமும் பெயரும் அடையாளமும் நமது நினைவில் வருவதில்லை அல்லவா? அதுதான் ஹமாஸ். உண்மையில் அல் கொய்தாவைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது; அளவிலும் செயல்திறனிலும் பெரிய அமைப்பு இது.

ஆனால் அல் கொய்தா மாதிரி ஊரெல்லாம் குண்டு வைத்து, உலகெல்லாம் நாசம் செய்யும் அமைப்பு அல்ல இது. மாறாக, பாலஸ்தீனின் விடுதலைக்காக மட்டும், இஸ்ரேலுக்கு எதிராக மட்டும் செயல்படும் ஓர் அமைப்பு. பாலஸ்தீனுக்கு வெளியே ஹமாஸுக்குத் தீவிரவாத இயக்கம் என்று பெயர். ஆனால் பாலஸ்தீனுக்குள் அது ஒரு போராளி இயக்கம் மட்டும்தான். இன்றைக்கு பாலஸ்தீன் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாக விளங்கும் ஹமாஸ், ஏன் பி.எல்.ஓ.மாதிரி ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அரசியல் இயக்கமாக உருப்பெறவில்லை என்கிற கேள்விக்கு ஒரே பதில்தான்.

பி.எல்.ஓ.வுக்கு அரசியல் நோக்கம் மட்டுமே உண்டு. ஹமாஸின் அடிப்படை நோக்கம் மதம் சார்ந்தது. இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னையை இன்றுவரை யூத முஸ்லிம் பிரச்னையாக மட்டுமே பார்க்கிற அமைப்பு அது. அதனால்தான் பி.எல்.ஓ.வில் இணையாமல் தனியாகத் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு பி.எல்.ஓ.வுக்கு இணை அமைப்பு போலச் செயல்படத் தொடங்கியது ஹமாஸ்.

யூதர்களின் அராஜகங்கள் அனைத்துக்கும் ஒரு தடுப்புச் சக்தியாக விளங்கக்கூடியவர்கள் என்கிற அறைகூவலுடன் (ஹமாஸின் முழுப்பெயரின் நேரடியான அர்த்தமே இதுதான்) பாலஸ்தீன் விடுதலைப் போரில் ஹமாஸ் குதித்தபோது, ஏற்கெனவே அங்கே சுமார் இருபது போராளி இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால் எந்த இயக்கத்திலும் படித்தவர்கள் கிடையாது. அல்லது அரைகுறைப் படிப்பு. எந்த ஒரு விஷயத்தையும் உள்ளார்ந்து யோசித்து, அலசி ஆராய்ந்து செயல்படக் கூடியவர்களாக அப்போது யாரும் இல்லை.

ஹமாஸின் பலமே, படித்தவர்களால் வழிநடத்தப்படும் இயக்கம் என்பதுதான். இஸ்லாமிய மார்க்கக் கல்வியில் கரைகண்ட பலபேர் அதில் இருந்தார்கள். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டக்கூடிய பல மிகப்பெரிய கட்டுமான வல்லுநர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஆசிரியர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள், மதகுருக்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஹமாஸை வழி நடத்தத் தொடங்கினார்கள்.

இத்தனை பெரிய ஆட்களுக்கெல்லாம் துப்பாக்கி தூக்குவதைத் தவிர, வேறு யோசனையே வராதா என்று ஒரு கணம் தோன்றலாம். இந்தியா போன்ற பிரச்னைகள் அதிகமில்லாத தேசத்தில், அதிலும் குறிப்பாக ஜனநாயக தேசத்தில் அமர்ந்துகொண்டு, பாலஸ்தீன் பிரச்னையைப் பார்க்கும்போது, சில விஷயங்கள் இப்படித்தான் அந்நியமாகத் தோன்றும். ஆயுதப்போராட்டம் தவிர வேறு எதுவுமே உபயோகப்படாது என்று, அத்தனை பேருமே அங்கே முடிவு செய்து களத்தில் இறங்கியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுவது, ஒவ்வொரு கட்டத்திலும் இங்கே அவசியமாகிறது. ஏனெனில் பாலஸ்தீனிய அரேபியர்களின் எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் இஸ்ரேல் அரசோ, மற்ற தேசங்களின் அரசுகளோ, செவி சாய்க்கவே இல்லை என்பதுதான் சரித்திரம் சுட்டிக்காட்டும் உண்மை. என்றைக்கு பிரிட்டன், பாலஸ்தீன் மண்ணில் இஸ்ரேல் என்றொரு தேசத்தை உருவாக்குவது என்று முடிவு செய்ததோ, அன்றைக்கு ஆரம்பித்த சிக்கல் இது. பாலஸ்தீனியர்களுக்கென்று பிரித்துக்கொடுக்கப்பட்ட மேற்குக்கரையையும் காஸாவையும் கூட இஸ்ரேல் அபகரித்தபோது, அதன் தீவிரம் அதிகமானது. அந்தத் தீவிரக் கணத்தில் உதித்த இயக்கம்தான் ஹமாஸ்.

ஹமாஸ் தொடங்கப்பட்டபோது, அதன் நோக்கமாகச் சொல்லப்பட்டவை இவைதான்:

1. மேற்குக் கரை, காஸா உள்பட இஸ்ரேலின் வசம் இருக்கும் பாலஸ்தீனிய நிலப்பரப்பு முழுவதையும் வென்றெடுப்பது. இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிப்பது. (அதாவது இங்கே யூதர்களை என்று பொருள்.)

2. தப்பித்தவறி பாலஸ்தீன் என்றாவது ஒரு நாள் மதச்சார்பற்ற தனியொரு தேசமாக அறியப்படவேண்டி வருமானால், அதை எதிர்த்தும் போராடுவது; பாலஸ்தீனை ஒரு முழுமையான இஸ்லாமிய தேசமாக ஆக்குவது.

இந்த இரண்டு நோக்கங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று மிக வெளிப்படையாகச் சொல்லிவிட்டுத்தான், ஹமாஸ் இயக்கத்தினர் துப்பாக்கிகளை வாங்க ஆரம்பித்தார்கள்.

ஹமாஸ் தோன்றியபோது, பி.எல்.ஓ.வின் தனிப்பெரும் தலைவராக யாசர் அராஃபத் அடையாளம் காணப்பட்டு, மேற்குக் கரைப் பகுதி கிட்டத்தட்ட அவரது கோட்டை போலவே இருந்தது. யாசர் அராஃபத் அங்கே தலைவர் மட்டுமல்ல. ஒரு ரட்சகர். அவரைவிட்டால் பாலஸ்தீனிய முஸ்லிம்களுக்கு வேறு நாதி கிடையாது என்கிற நிலைமை.

ஆகவே, ஹமாஸின் வளர்ச்சியும் வேகமும் மேற்குக்கரை வாசிகளுக்கு முதலில் ஒருவிதமான பயத்தைத்தான் விளைவித்தது. ஹமாஸ் என்கிற இயக்கம், பி.எல்.ஓ.வுக்கு எதிராகத் திசை திரும்பிவிடுமோ என்கிற பயம். ஏன் ஹமாஸும் பி.எல்.ஓ.வில் இணையக்கூடாது என்று மக்கள் ஆற்றாமையுடன் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். ஆனால் ஹமாஸின் நிறுவனர்கள், அந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருந்தார்கள். இரு அமைப்புகளின் அடிப்படை நோக்கமும் ஒன்றுதான் என்றாலும் ஹமாஸுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இருந்ததால், வீணாகத் தன்னால் பி.எல்.ஓ.வும் யாசர் அராஃபத்தும் தர்மசங்கடத்துக்கு உள்ளாகக் கூடாது என்று நினைத்தார்கள். அதனாலேயே தனித்து இயங்கத் தீர்மானித்தார்கள்.

இதனால் மேற்குக்கரைப் பகுதியில், தொடக்ககாலத்தில் ஹமாஸுக்கு செல்வாக்கு என்று ஏதும் உண்டாகவில்லை. மாறாக, காஸாவில் ஹமாஸ் அபரிமிதமான வளர்ச்சி கண்டது. காஸா பகுதியில் வசித்துவந்த ஒவ்வொரு தாயும் தன் மகன் எந்த விதத்திலாவது ஹமாஸுக்கு சேவையாற்றவேண்டும் என்று விரும்பியதாகக் கூடச் சொல்லுவார்கள். அங்கே உள்ள ஆண்கள் அத்தனை பேரும் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹமாஸுக்கு நன்கொடையாக அனுப்பிவைப்பார்கள். இன்றைக்குப் பல தீவிரவாத இயக்கங்கள் கட்டாய வரிவசூல் செய்வது உலகறிந்த விஷயம். (நமது நாட்டில் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் உல்ஃபா போன்ற பல இயக்கங்கள், இப்பணியைக் கர்மசிரத்தையாக இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படியொரு சாத்தியம் இருக்கிறது என்கிற யோசனை அவர்களுக்கு வந்ததே, ஹமாஸுக்கு காஸா பகுதி மக்கள் மனமுவந்து நிதியளித்ததைப் பார்த்த பிறகுதான்! மனமுவந்து மக்கள் அளிக்காத இடங்களிலெல்லாம் கட்டாய வசூல் என்கிற கலாசாரம் தோன்றிவிட்டது!)

ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்தால், இந்தளவு மக்கள் செல்வாக்கு இருக்குமா? உண்மையில் ஹமாஸின் பணிகள் பிரமிப்பூட்டக்கூடியவை. ஹமாஸின் தற்கொலைப்படைகளும், கார் குண்டுத் தாக்குதல்களும் பிரபலமான அளவுக்கு அந்த அமைப்பின் சமூகப்பணிகள் வெளி உலகுக்குத் தெரியாமலேயே போய்விட்டன.

மேற்குக் கரையும் சரி, காஸாவும் சரி, பாலஸ்தீனிய அரேபியர்கள் வாழும் இஸ்ரேலின் எந்த மூலை முடுக்காயினும் சரி. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்காக ஹமாஸ் தனியொரு அரசமைப்பையே வைத்திருந்தது. சாலைகள் போடுதல், குடிநீர் வசதி செய்துதருதல், வீதிகளில் விளக்குகள் போட்டுத்தருதல், குப்பை லாரிகளை அனுப்பி, நகரசுத்திகரிப்புப் பணிகள் ஆற்றுதல் என்று ஹமாஸின் 'அரசாங்கம்' செய்த மக்கள் நலப்பணிகள் ஏராளம். (இன்று இதெல்லாம் இல்லை. சுத்தமாக இல்லை என்பதையும் சொல்லிவிட வேண்டும்.)

இந்தக் காரியங்களெல்லாம் ஒழுங்காக நடப்பதற்காகத் தனியொரு 'நாடாளுமன்றமே' ஹமாஸில் நடத்தப்பட்டது. முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத் தொகுதி தொகுதியாகப் பிரித்துத் தந்துவிடுவார்கள். மக்கள் பணிகளுக்கான செலவுக்குப் பணம்?

தயங்கவே மாட்டார்கள். இஸ்ரேலிய இலக்குகள் எது கண்ணில் பட்டாலும் உடனடியாகத் தாக்கப்படும். வங்கிகள், கருவூலங்கள், மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் என்று எதையும் எப்போதும் தாக்குவார்கள். சாக்குமூட்டையில் பணத்தைக் கட்டிக்கொண்டுபோய் ஹமாஸுக்கென்று தனியே இயங்கிய வங்கியொன்றில் சேகரித்து, கணக்கெழுதிவிடுவார்கள்.

அதன்பின் தொகுதி வாரியாக 'நிதி' பிரித்தளிக்கப்படும். இஸ்ரேலிய அரசு எதையெல்லாம் செய்யத் தவறுகிறதோ, அதையெல்லாம் அங்கே ஹமாஸ் செய்யும். இடிக்கப்பட்ட மசூதிகளைச் செப்பனிட்டு, புதுப்பொலிவுடன் மீண்டும் கட்டித்தருவது, மதப் பள்ளிக்கூடங்கள் நடத்துவது, மருத்துவமனைகள் கட்டுவது, மூலிகை மருந்துகளுக்காக மூலிகைத் தோட்டங்கள் அமைப்பது என்று எத்தனையோ பணிகளை ஹமாஸ் செய்திருக்கிறது.

இதற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல இன்னொரு பக்கம் சற்றும் இரக்கமில்லாமல், யூதர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றும் போடுவார்கள். பைக் வெடிகுண்டு, கார் வெடிகுண்டு, சூட்கேஸ் வெடிகுண்டு ஆகிய மூன்றையும் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்தியது ஹமாஸ்தான். இவற்றுள் கார்குண்டு வெடிப்பில் ஹமாஸ் இயக்கத்தினர் நிபுணர்கள். உலகின் எந்த மூலையிலும் எந்த யூத இலக்கின்மீது கார் வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு ஹமாஸ்தான் என்று கைகாட்டிவிட முடியும்.

இந்தக் காரணத்தால்தான், பாலஸ்தீனிய அரேபியர்கள் ஹமாஸை எந்தளவுக்குக் கொண்டாடுகிறார்களோ, அதே அளவுக்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ஹமாஸை அச்சமூட்டும் பயங்கரவாத இயக்கமாகத் தொடர்ந்து கண்டனம் செய்துவருகின்றன.

ஹமாஸின் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அடிக்கடி பரபரப்பூட்டுபவை. என்ன செய்தும் தடுத்துநிறுத்தப்பட முடியாதவை. இஸ்ரேல் அரசே எத்தனையோ முறை ஹமாஸுடன் சமரசப் பேச்சுக்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. ஆனால், ஹமாஸ் சம்மதித்ததில்லை.

'எங்களுக்கு இஸ்ரேலியப் பொதுமக்கள், இஸ்ரேலிய ராணுவம் என்கிற பாகுபாடு கிடையாது. ஒவ்வொரு இஸ்ரேலியக் குடிமகனும் கட்டாயமாக ஒரு வருடமாவது ராணுவச் சேவையாற்றவேண்டும் என்று அவர்கள் விதி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் சிவிலியன்களைத் தாக்குவதாகச் சொல்லுவது தவறு. அனைத்து யூதர்களுமே குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ராணுவத்தில் இருந்திருக்கிறார்கள் அல்லவா? அதனால், யாரை வேண்டுமானாலும் தாக்குவோம். அபகரிக்கப்பட்ட எங்கள் நிலம் மீண்டும் எங்கள் வசம் வந்து சேரும்வரை தாக்கிக்கொண்டேதான் இருப்போம்' என்பது ஹமாஸின் பிரசித்தி பெற்ற கோஷம்.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் இஸ்ரேலுக்கு ஹமாஸ் ஒரு நிரந்தரத் தலைவலி என்பது 1970-களின் மத்தியில் மிகவும் வெட்டவெளிச்சமாகத் தெரிய ஆரம்பித்தது. இஸ்ரேலுக்கு உதவி செய்யக்கூடிய அத்தனை நாடுகளுக்குமே என்றாவது ஒரு நாள் ஹமாஸால் பிரச்னை வரத்தான் செய்யும் என்று அமெரிக்கா எச்சரித்தது.

ஆகவே ஹமாஸின் செயல்பாட்டைக் குறைத்தாலொழிய, நமக்குத் தலைவலி குறையாது; என்ன செய்யலாம் என்று இஸ்ரேலிய அரசு தனது உளவு அமைப்பான மொஸாட்டிடம் யோசனை கேட்டது. ஹமாஸுக்கு நிதியளிப்பவர்கள் பாலஸ்தீனிய அரேபியர்கள். அவர்களின் ஆள்பலம் என்பதும் பாலஸ்தீனுக்குள் இருக்கும் அரபு இளைஞர்கள்தான். ஆகவே ஹமாஸின் மக்கள் செல்வாக்கைக் குறைத்தால்தான் எதுவுமே சாத்தியம். அந்த இடத்தில் அடித்தால் இந்த இடத்தில் வந்து சேரும் உதவிகள் நிறுத்தப்படும் என்று மொஸாட், இஸ்ரேல் அரசுக்கு யோசனை சொன்னது.

இஸ்ரேல் அரசு இதனை ஏற்றுக்கொண்டது. விளைவு? காஸா மற்றும் மேற்குக் கரை மக்களின் மீது திடீர் திடீரென்று வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஒவ்வொரு இரவிலும் ஏதாவது ஒரு குடிசைப் பகுதி பற்றிக்கொண்டு எரியும். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐம்பது அரேபியர்களாவது 'காணாமல்'போவார்கள். ஒவ்வொரு தினமும் எந்த அரபுக் குடியிருப்புப் பகுதியிலாவது இனக்கலவரம் மூளும். அடிதடிகள் நடந்து, கண்ணீர்ப்புகைகுண்டு வீச ராணுவம் வரும். கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கு பதில் அவர்கள் கையெறி குண்டுகளை வீசிச் சிலரைக் கொன்றுவிட்டுத் திருப்தியுடன் திரும்பிப் போவார்கள்.

இந்தச் சம்பவங்கள் ஒரு கட்டத்தில் தறிகெட்டுப் போகவே, கோபம் கொண்ட ஹமாஸ் ஒரு பகிரங்க அறிக்கை வெளியிட்டது. இஸ்ரேல் அரசுக்கு எதிராக, மிகத் துணிச்சலுடன், மிகக் கோபமாக, மிகக் கடுமையாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, இஸ்ரேலை மட்டுமல்லாமல் உலகம் முழுவதையுமே அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கச் செய்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 11 ஆகஸ்ட், 2005

Sunday, August 07, 2005

74] அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 74

1967 - இஸ்ரேலிய அரேபிய யுத்தத்தின் விளைவுகளுள் மிக மிக முக்கியமானது, பாலஸ்தீனிய அரேபியர்களின் மனமாற்றம். ஒரு வரியில் சொல்லுவதென்றால், அரபு அரசாங்கங்கள் எதையுமே இனி நம்பக்கூடாது என்று பாலஸ்தீன் மக்கள் தீர்மானமே செய்தார்கள். அத்தனைபேருமே கையாலாகாதவர்கள் என்று பகிரங்கமாகவே அவர்கள் குற்றம் சாட்டினார்கள். நேற்று முளைத்த தேசம் இஸ்ரேல். மூன்று அரபு தேசங்கள் இணைந்து போர் புரிந்தும் வெல்லமுடியவில்லை என்றால், அப்புறம் இந்த அரசாங்கங்களை நம்பி என்ன புண்ணியம்? ஆகவே, ஏதாவது ஒரு மாற்று வழி யோசித்தே தீரவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

மக்களுடைய இந்தச் சிந்தனைப் போக்கின் விளைவுதான், பாலஸ்தீனில் ஏராளமான விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயின. அத்தனை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, சரியான திட்டம் வகுத்து, கவனம் குவித்து, இஸ்ரேலுக்கெதிரான முழுநீள யுத்தத்தை வழி நடத்தும் பொறுப்பு, பி.எல்.ஓ.வின் தலையில் விழுவதற்குக் காரணமானது. அப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் இருப்பவர், மிகப்பெரிய ராஜதந்திரியாகவும் மாவீரராகவும் மனிதாபிமானியாகவும் இருக்கவேண்டுமென்றுதான் யாசர் அராஃபத்தை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார்கள். அதுவரை குவைத்தில் இருந்தபடி அல் ஃபத்தாவை வழிநடத்திக்கொண்டிருந்த அராஃபத். அரபு தேசங்களில் இருந்த எந்த ஒரு போராளி இயக்கத்துக்கும் அதுவரை பரிச்சயமில்லாமல் இருந்த 'கெரில்லா' தாக்குதல் முறையில் தன்னிகரற்ற திறமை கொண்டிருந்த அராஃபத்.

1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கெய்ரோவில் கூடிய பாலஸ்தீன் தேசிய காங்கிரஸின் சிறப்புக் கூட்டத்தில், யாசர் அராஃபாத் முறைப்படி பி.எல்.ஓ.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்தப் பொறுப்புக்கு வந்தபோது பி.எல்.ஓ.வில் உறுப்பினராக இருந்த விடுதலை இயக்கங்கள் இவை:

1. Fatah, 2. western Sector, 3. Force 17, 4. Popular Front for the Liberation of Palestine PFLP, 5. Democratic Front for the Liberation of Palestine DFLP), 6. Hawatmah Faction; 7. Abd Rabbu Faction; 8. Popular Front for Liberation of Palestine (General Command), 9. Palestine Liberation Front, (PLF) 10. Abu Abbas Faction, 11. Tal'at Yaqub Faction, 12. AlSaiqa Organization, 13. Arab Liberation Front (ALF), 14. Palestinian Arab Liberation Front , 15. Palestinian Democratic Union (Fida), 16. Palestine Islamic Jihad Movement, 17. Palestinian People's Party [Hizb Al Sha'ab], 18. Palestinian Popular Struggle Front.
இவற்றுள் ஃபத்தா மட்டும் அராஃபத்தின் சொந்த இயக்கம். மற்ற அனைத்தும் தோழமை இயக்கங்கள். இத்தனை இயக்கங்களையும் கட்டிக்காப்பதுடன் மட்டுமல்லாமல் சரியான, முறைப்படுத்தப்பட்ட போர்ப்பயிற்சி அளிப்பது, இஸ்ரேலை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கவனம் கவர வழி செய்வது என்று அராஃபத்துக்கு இருந்த பொறுப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.

வெற்றிகரமாக அவரால் அதனைச் செய்ய முடிந்ததற்கு மிகப்பெரிய காரணம், முன்பே பார்த்ததுபோல, அரசுகள் மீது மக்கள் இழந்துவிட்டிருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை அப்படியே அப்போது விடுதலை இயக்கங்களின்பக்கம் சாயத் தொடங்கியது.

இன்னும் புரியும்படி சொல்லுவதென்றால், பாலஸ்தீன் மக்கள், ஆளும் வர்க்கத்துக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைத்தார்கள். அதே சமயம், இந்தப் போராளி இயக்கங்கள்தான் தமக்கு விடுதலை பெற்றுத் தரப்போகிறவர்கள் என்றும் கருதினார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். போராளி இயக்கங்கள் பொதுவாக, தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களாகச் சித்திரிக்கப்படுவது சர்வதேச மரபு. இதை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா. அமெரிக்க அரசுக்குத் தலைவலி தரக்கூடிய எந்த ஓர் அமைப்பையும், பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதுதான் அத்தேசத்தின் வழக்கம். அமெரிக்கா தொடங்கி வைத்த இந்த வழக்கத்தை முதலில் இங்கிலாந்தும் பிறகு ஐரோப்பிய யூனியனில் உள்ள அத்தனை தேசங்களும் அப்படியே எவ்வித மாறுதலும் செய்யாமல் ஏற்றுக்கொண்டுவிட்டன.

சர்வதேச அளவில் எந்த ஒரு தேசத்தில் விடுதலைக் குரல் கேட்கிறதோ, அந்தக் குரலுக்கு உரியவர்களைத் தீவிரவாதிகள் என்று உடனே சொல்லிவிடும் வழக்கம், அப்போது ஆரம்பித்ததுதான்.

உண்மையில் விடுதலை இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அரசாங்கங்கள் கைவிட்டு, அரபு லீக்கும் கைவிட்டு, ஐ.நா.சபையும் கைவிட்டபிறகு, இழந்த தங்கள் நிலத்தைத் திரும்பப்பெற பாலஸ்தீன் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்றானது வரலாறு. அவர்களைப் போராளிகள் என்று சொல்லாமல் தீவிரவாதிகள் என்று வருணிப்பது எப்படிச் சரியாகும்?

ஆனால் இந்தப் போராளி இயக்கங்கள் சமயத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதுண்டு என்பதும், மறுக்கமுடியாத உண்மையே ஆகும். உதாரணமாக, யாசர் அராஃபத் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஐந்தாம் ஆண்டு, அதாவது 1974-ம் வருடம் பி.எல்.ஓ.வின் ஒரு குழுவினர் இஸ்ரேலில் உள்ள மா'லாட் (விணீ'ணீறீஷீt) என்கிற இடத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் புகுந்து, கையெறி குண்டுகளை வீசி 21 குழந்தைகளை ஈவிரக்கமில்லாமல் கொன்று வீசினார்கள். இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீவிரவாதம். இன்னும் சொல்லப்போனால் கொலைவெறியாட்டம். இஸ்ரேலிய அரசுக்கு எதிரான யுத்தத்துக்கும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? யூதர்களில் சிறுவர், பெரியவர் என்று பாராமல் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவிட்ட ஆரியக் கிறிஸ்துவரான ஹிட்லருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டது இஸ்ரேல்.

நியாயப்படுத்தவே முடியாத இத்தகைய செயல்களால்தான் போராளி இயக்கங்களுக்கு சர்வதேச ஆதரவோ, அனுதாபமோ பெரும்பாலும் கிடைக்காமல் போகிறது. போராளி இயக்கங்களின் நோக்கத்தில், செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய சறுக்கல்களால்தான் அவர்கள்மீது விழவேண்டிய நியாயமான கவனம், விழாமல் போகிறது.

அராஃபத் பொறுப்புக்கு வந்த ஆரம்ப வருடங்களில் மிகக் கவனமாக இஸ்ரேலிய ராணுவம், காவல்துறை போன்ற இலக்குகளின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இது, இஸ்ரேலுக்குள்ளாக. இஸ்ரேலுக்கு வெளியிலும் பல்வேறு தேசங்களில் பி.எல்.ஓ.வின் போராளிகள் கவன ஈர்ப்புக்காக ஏராளமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஆனால் மிகக் கவனமாக அத்தனை தாக்குதல்களுமே, யூத இலக்குகளின் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.

உலகம் முழுக்க பி.எல்.ஓ., பி.எல்.ஓ., என்று பேசிக்கொண்டிருந்த காலம் அது. யார், என்ன என்கிற விவரம் கூடத் தெரியாமல், அராஃபத்தைப் பற்றிப் பேசினார்கள். அணுகுண்டுகள் வைத்திருக்கும் இயக்கம் என்றெல்லாம் கதை பரப்பினார்கள். உண்மையில், நாட்டுவெடி குண்டுகளுக்கு அப்பால் பி.எல்.ஓ.வினரிடம் அப்போது வேறெந்த ஆயுதமும் கிடையாது. வாங்குவதற்குப் பணம் கிடையாது முதலில். பி.எல்.ஓ.வின் பிரசாரப் பிரிவினர் அரபு தேசங்களெங்கும் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி வசூல் செய்தே இயக்கத்தை வழி நடத்திக்கொண்டிருந்தனர். சவுதி அரேபியா போன்ற மிகச் சில தேசங்களின் அரசுகள் மட்டும் மறைமுகமாக பி.எல்.ஓ.வுக்கு நிதியுதவி செய்திருப்பதாகத் தெரிகிறது. 1973-ம் ஆண்டுவரை பி.எல்.ஓ.வுக்கு மிகப்பெரிய அளவில் நிதிப்பிரச்னை இருந்திருக்கிறது. இது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை.

ஒரு பக்கம் பி.எல்.ஓ.வில் இருந்த இயக்கங்கள், மிகத் தீவிரமாக இஸ்ரேலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதே காலகட்டத்தில், பாலஸ்தீனில் வேறு சில புதிய இயக்கங்களும் தோன்றத் தொடங்கின.

'இஸ்ரேல் என்கிற திடீர் தேசத்தை வேரோடு ஒழித்துவிட்டு, அகண்ட பாலஸ்தீனை மறுபடியும் ஸ்தாபிப்பதற்காக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. ஆயுதங்கள் மூலம் அச்சமூட்டுவோம். இன விருத்திமூலம் கலவரமூட்டுவோம். யூதர்களைத் தூங்கவிடமாட்டோம். ஜெருசலேம் உள்பட, இஸ்ரேல் எங்களிடமிருந்து அபகரித்த அத்தனையையும் திரும்பப் பெறாமல் ஓயமாட்டோம்' என்கிற யாசர் அராஃபத்தின் அன்றைய பிரகடனம் ஒரு வேத மந்திரம் போல, அத்தனைபேரின் செவிகளிலும் விழுந்து சிந்தனையைக் கிளறிவிட்டதன் விளைவே இது.

இப்படித் தோன்றிய இயக்கங்களில் சில திசைமாறிப் போயின என்றாலும், பெரும்பாலான இயக்கங்கள் பி.எல்.ஓ.வில் சேராவிட்டாலும் பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யத் தயங்கவில்லை. குறிப்பாக, ஆயுதங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது அன்றைக்கு பி.எல்.ஓ.வினரின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.

குறிப்பாக அரபு தேசங்களுக்கு வெளியே அவர்கள் திட்டமிட்ட ஒவ்வொரு கவன ஈர்ப்புச் செயலுக்கும் தேவையான ஆயுதங்களைக் கடத்தியோ, உருவாக்கியோ, வாங்கியோ தரும் பணியைச் செய்ய இத்தகைய இயக்கங்கள் மிகவும் உதவி செய்தன.

அப்படி 1967 யுத்தத்துக்குப் பிறகு உதித்த பாலஸ்தீன் இயக்கங்களுள் ஒன்றுதான் ஹமாஸ்.

'இஸ்ரேல் அரபுப் பிரச்னை என்பது அரசியல் சார்ந்ததல்ல. அது இஸ்லாத்துக்கும் யூதமதத்துக்குமான பல நூற்றாண்டு காலப் பிரச்னையின் நீட்சி. நடப்பது அரசியல் யுத்தமல்ல. அது இரு மதங்களின் மோதல் மட்டுமே' என்கிற பிரகடனத்துடன் உருவான இயக்கம் இது.

பிரச்னையை முற்றிலும் அரசியல் சார்ந்து மட்டுமே பார்க்கக்கூடியவராக அராஃபத் இருந்த நிலையில், ஹமாஸின் இந்த திடீர் பிரவேசம் உரிய கவன ஈர்ப்பைப் பெற்றதே தவிர, ஹமாஸால் இதன் காரணம் பற்றியே பி.எல்.ஓ.வில் இணைய முடியாமலும் போனது.

அது அவர்களுக்கு ஒரு பிரச்னையாகவே இல்லை என்பதையும் சொல்லவேண்டும். ஏனெனில் என்னென்ன பிரகடனங்கள் செய்துகொண்டாலும், எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். குறிக்கோள் ஒன்றுதான். கனவும் நினைவும் ஒன்றுதான். அது இஸ்ரேலை ஒழிப்பது. யூதர்களைப் பூண்டோடு அடித்துத் துரத்துவது. இழந்த தங்கள் நிலங்களை மீண்டும் அடைந்து, பாலஸ்தீனுக்குப் புத்துயிர் அளிப்பது.

ஆகவே, பி.எல்.ஓ.வுக்குள் இல்லாமலேயே ஹமாஸ் பாலஸ்தீன் விடுதலைக்காகத் தன்னாலான பணிகளைச் செய்ய ஆரம்பித்தது.

தொடர்ந்தும் தீவிரமாகவும் இஸ்ரேலிய ராணுவத்தை, காவல்துறையை, அரசு இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலம் அச்சுறுத்தி வருவதுதான், சரியான ஆரம்பமாக இருக்கும் என்பதில் இவர்கள் யாருக்குமே கருத்து வேறுபாடு இல்லை. தேவைப்பட்டால் ஆயுதப் போராட்டத்துக்காக அவர்கள் வகுத்து வைத்திருந்த வழிமுறைகளில் சில மாறுதல்கள், கூடுதல், குறைவுகள் செய்துகொள்ளலாமே தவிர, போராட்டத்தை வேறு எந்த விதமாகவும் தொடருவதற்கான வாய்ப்பில்லை என்றுதான் அத்தனை பேருமே கருதினார்கள்.

பி.எல்.ஓ.வின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த யாசர் அராஃபத்துக்கு அந்தத் தொடக்க காலத்திலேயே வெஸ்ட் பேங்க் பகுதியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அறிவிக்கப்படாததொரு மகாராஜாவாகத்தான், அவரை மக்கள் அங்கே கருதினார்கள்.

அதே போல, காஸா பகுதியில் தோன்றி, வேர்விட்டு, வளர்ந்து, நிலைபெற்ற ஹமாஸுக்கு அங்கே பி.எல்.ஓ.வைக்காட்டிலும் செல்வாக்கு அதிகம். இந்த வெஸ்ட் பேங்க் என்று சொல்லப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளை இணைத்துத்தான், சுதந்திர பாலஸ்தீனை உருவாக்க வேண்டும் என்று இன்றுவரை பேசிவருகிறார்கள்.

நமக்குப் புரியும் விதத்தில் சொல்லுவதென்றால், இந்தியா - பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது எப்படி மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று இரு வேறு துண்டுகளை இணைத்து ஒரே தேசத்தை உருவாக்கினார்களோ, அதுபோல.

இந்தமாதிரி நிலப்பரப்பு ரீதியில் பெரிய இடைவெளிகளுக்கு அப்பால் ஒரே தேசத்தின் வேறொரு பகுதி இருக்கும் இடங்களிலெல்லாம், எப்போதுமே பிரச்னைதான். காஸா விஷயத்தில் என்ன பிரச்னை என்பதைப் பிறகு பார்க்கலாம்.

இப்போது அங்கே ஹமாஸ் வளர்ந்த கதையை கவனிக்க வேண்டும்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 7 ஆகஸ்ட், 2005

Tuesday, August 02, 2005

73] இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad)

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 73

பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம்.

சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன? அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா? பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம் என்பது உலகுக்கே தெரியும். அத்தனை தேசங்களும் தத்தம் கண்டனத்தை எப்போதும் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் எந்த தைரியத்தில் இஸ்ரேல் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது? ஏன் யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை?

எகிப்து, சிரியா, ஜோர்டன் என்று மூன்று தேசங்கள் இணைந்துதான் 1967 யுத்தத்தில் இஸ்ரேலை எதிர்த்தன. இத்தனைக்கும் அவர்களுக்கு சோவியத் யூனியனின் மறைமுக ஆதரவு வேறு இருந்தது. ஆனாலும் யுத்தத்தில் இஸ்ரேல்தான் வெற்றி பெற்றது; தான் நினைத்ததைச் சாதித்தது. அதற்கு முன்னால் நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின் போதும் போர் நிறுத்தத்துக்கு முன்னதாகத் தனக்கு என்ன வேண்டுமோ அதை இஸ்ரேலால் அடைந்துவிட முடிந்தது. அதற்கும் முன்னால் நடைபெற்ற 1948 யுத்தத்திலும் இஸ்ரேலுக்குத்தான் வெற்றி.

எப்படி இது சாத்தியம்? அரேபியர்களின் வீரம் இஸ்ரேலிடம் எடுபடக்கூடிய தரத்தில் இல்லையா? அது இருக்கட்டும். ஆயிரம் எதிர்ப்புகள் வருகின்றன; ஐ.நா. சபையில் அடிக்கொருதரம் தீர்மானம் போடுகிறார்கள்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனபோதும் எல்லாம் அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருந்து மறைந்துவிடுவது ஏன்?

இவை எல்லாவற்றுக்கும் காரணம், இஸ்ரேலின் தனிப்பெரும் அடையாளமும் மிகப்பெரிய பலமுமான அதன் உளவு அமைப்பு. அதன் பெயர் HaMossad leModiin uleTafkidim Meyuhadim. சுருக்கமாக மொஸாட் (Mossad).

உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் தரத்தில் மொஸாட், சி.ஐ.ஏ., எம் 16 ஆகிய அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது. பொதுவாக உளவு அமைப்புகளுக்குரிய அதிகார வரம்புகளைக் காட்டிலும் சற்றே கூடுதல் அதிகாரங்கள் பெற்ற அமைப்பு இது. ஆனால் மொஸாடில் வெளிப்படையான ராணுவப் பிரிவு கிடையாது. சி.ஐ.ஏ.வில் அது உண்டு. எம்.16_ல் உண்டு. ரஷ்யாவின் கே.ஜி.பி.யில் கூட ஒரு துணை ராணுவப்பிரிவு உண்டு என்று சொல்லுவார்கள்.

மொஸாட்டின் பணிகள் மிகவும் எளிமையானவை. 1. ஆட்சிக்கு இடையூறு தரக்கூடியவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல். 2. தேவைப்பட்டால் சத்தமில்லாமல் அரசியல் கொலைகளைச் செய்தல், 3. யுத்தங்களுக்கான திட்டம் தீட்டி, வழி நடத்திக் கொடுத்தல் 4. அரபு தேசங்கள், உலகெங்கும் பரவியிருக்கும் அரபு அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.

இவற்றுள் முதலாவது மற்றும் மூன்றாவது, நான்காவது பணிகளை உலகின் அனைத்து தேசங்களின் உளவு அமைப்புகளும் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு அனுமதி பெற்ற ஒரே உளவு அமைப்பு மொஸாட் மட்டுமே. இஸ்ரேலில் மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொஸாட் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது உலகின் வேறெந்த நாட்டு உளவு அமைப்புக்கும் இல்லாத அதிகாரம். சி.ஐ.ஏ.வுக்குக் கூடக் கிடையாது. ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் மொஸாட் உளவாளிகள், எக்காரணம் கொண்டும் யூதர்களைக் கொல்லக்கூடாது! அவ்வளவுதான்.

இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியான டேவிட் பென் குரியன், 1951-ம் ஆண்டு மொஸாட்டைத் தோற்றுவித்தார். ஆரம்பத்தில் பாலஸ்தீன் போராளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக மட்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, தனது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக விரைவில் மிகப் பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. இன்றைய தேதியில் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2000. ஆனால் கண்ணுக்குப் புலப்படாத மொஸாட் ஏஜெண்டுகள் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கிலும் உண்டு.

மொஸாட்டின் இணையத்தளத்துக்கு முடிந்தால் போய்ப் பாருங்கள். அழகாக, சுத்தமாக, மிகவும் வெளிப்படையாக அப்ளிகேஷன் பாரம் கொடுத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் மொஸாட்டின் ஏஜெண்டாக விண்ணப்பிக்கலாம். உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டபிறகு, வேறு சில வினாக்களும் அங்கே கேட்கப்படும். உதாரணமாக நீங்கள் ஒரு யூதர் அல்லாதவர் என்றால் எதற்காக மொஸாட்டுக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள்? என்று கேட்பார்கள். இது தவிரவும் ஏராளமான கேள்விகள் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் விடை எழுதி அனுப்பினால், அந்த விடைகள் அவர்களுக்குத் திருப்தி தரக்கூடுமென்றால் ஒரு வேளை உங்களை யாராவது ஒரு மொஸாட் ஏஜெண்ட் கண்காணிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இன்னும் அதிகமோ, குறைவோ. நீங்கள் சரியான நபர்தான், தேவையான நபர்தான் என்று அவர்கள் தீர்மானித்தால் அடுத்தகட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகும். எத்தனை கட்டங்களாகப் பரிசோதிப்பார்கள், என்னென்ன பயிற்சிகள் அளிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள். மொஸாட்டின் விண்ணப்பப் படிவம் மட்டும்தான் வெளிப்படை. மற்றபடி அவர்களின் நடவடிக்கைகள் காற்றுக்கும் கடவுளுக்கும் கூடத் தெரியாது!

மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் மொத்தம் ஆறு துறைகள் இயங்குகின்றன. (ஆரம்ப காலத்தில் எட்டு துறைகளாக இருந்திருக்கிறது. பின்னால் அதனை ஆறாகச் சுருக்கி இருக்கிறார்கள்.)

1. தகவல் சேகரிப்புப் பிரிவு (Collections Department). இதுதான் அளவில் மிகப் பெரியது. உலகெங்கும் மொஸாட் உளவாளிகள் அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் இஸ்ரேல் அரசுக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகச் சேகரித்துத் தொகுத்து வைப்பார்கள். அரசுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை தருவது, ஆயத்தங்களுக்கு அறிவுறுத்துவது போன்றவை இந்தப் பிரிவின் தலையாய பணி.

2. அரசியல் மற்றும் நல்லுறவுப் பிரிவு (Political Action and Liaison Department). இது கிட்டத்தட்ட ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சகம் போன்றது. இஸ்ரேலின் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, தகவல் பரிமாற்றத்துக்கு வழி செய்து தமக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகப் பெற்றுத் தரவேண்டியது இந்தப் பிரிவின் பணி. எதிரி தேசங்கள் என்றால் அங்குள்ள அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை வளைக்க முடியுமா என்று பார்ப்பதும் இவர்களின் பணியே.

3. Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவு. இவர்கள்தான் அரசியல் கொலைகளைச் செய்பவர்கள். ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவது, வழிகாட்டுவது, தேவைப்பட்டால் தாங்களே களத்தில் இறங்குவது ஆகியவை இப்பிரிவின் பணிகள்.

4. Lohamah Psichlogit என்கிற மனோதத்துவப் பிரிவு. விசாரணைகள், ரகசிய ஆராய்ச்சிகள் செய்வது, தேவையான தகவல்களை மக்களிடையே பரப்புவது, மீடியாவைக் கண்காணிப்பது, இஸ்ரேல் குறித்து மீடியா வெளியிடும் தகவல்களைச் சரிபார்ப்பது, தேவைப்பட்டால் சர்வதேச மீடியாவுக்குள் ஊடுருவி, தமக்குச் சாதகமான செய்திகளை வரவைப்பது போன்றவை இப்பிரிவின் பணிகள்.

5. Research Department என்கிற ஆராய்ச்சிப் பிரிவு. மேற்சொன்ன அத்தனை பிரிவினரும் கொண்டுவந்து சேர்க்கும் தகவல்களை வைத்துக்கொண்டு ஆய்வு செய்து வேண்டிய விவரங்களைத் தேடித்தொகுப்பது இவர்கள் பணி.

6. இறுதியாகத் தொழில்நுட்பப் பிரிவு (Technology Department). மொஸாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து அல்லது கடன் வாங்கி, துறையை எப்போதும் நவீனமயமாக வைத்திருப்பது இவர்கள் வேலை.

இந்த ஆறு பிரிவினருள் உலகுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், மொஸாட்டின் Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவுதான்.

முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து குருஅக்ஷவ் பேசிய ஒரு சர்ச்சைக்கிடமான பேச்சைக் கண்டறிந்து வெளி உலகுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான்.

பாலஸ்தீன் பிரச்னை குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Black September என்கிற ஒரு தீவிரவாத அமைப்பு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் ஒரு மாபெரும் படுகொலைத் திட்டத்தைத் தீர்மானித்து நடத்தி, உலகையே உலுக்கிப் பார்த்தது. இந்தச் சம்பவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான இஸ்ரேல் அரசு, படுகொலைக்குக் காரணமானவர்களைக் கொல்லும்படி மொஸாட்டுக்குக் கட்டளையிட்டது.

கறுப்பு செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த அலி ஹாஸன் ஸல்மே (Ali Hassan Salameh) என்கிற தீவிரவாதிதான் அந்தக் கொலைக்குப் பொறுப்பாளி. ஆனால் மொஸாட்டின் மெட்ஸடா பிரிவு உளவாளிகள், சம்பந்தமே இல்லாமல் நார்வே நாட்டில் இருந்த அஹமத் பவுச்சிகி (Ahmed Bouchiki) என்கிற ஒரு வெயிட்டரைக் கொலை செய்துவிட்டார்கள். அதுவும் எப்படி? மொஸாட்டின் உளவாளிகள், போலியான கனடா தேசத்து பாஸ்போர்ட்களை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு நார்வேக்குச் சென்று இந்தக் கொலையைச் செய்தார்கள்! கனடா மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தால் மொஸாட்டுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லை! இஸ்ரேல் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ‘சரியான நபரை மீண்டும் தேடிக் கொலை செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டார்கள்!

இச்சம்பவம் மட்டுமல்ல; பல்வேறு பாலஸ்தீன் போராளிகளைக் கொலை செய்வதற்காக பிரிட்டன், சைனா, ஜோர்டன் தேசத்து பாஸ்போர்ட்களைப் போலியாக உருவாக்கிப் ‘புகழ்’ பெற்றவர்கள் இவர்கள்.

மொஸாட்டின் மிகப்பெரிய பலம், அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது டெல் அவிவ் நகரில் இருக்கும் அதன் தலைமையக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஒருபோதும் வெளியே வராது என்பதுதான். அத்தனை விசுவாசமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு அது. யுத்தங்களின்போது இஸ்ரேலிய ராணுவம் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்பதை போதிப்பதற்காக, மொஸாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருபத்து நான்கு மணி நேரமும் உலகெங்கும் நடக்கும் யுத்தங்களைக் கூர்மையாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டே இருக்கும். எதிரிப் படைகளின் இருப்பையும் நகர்வையும் கண்காணிப்பதற்குச் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்கள் அவர்கள். 1967 யுத்த சமயத்தில் ஒரு மொஸாட் உளவாளி யுத்தம் நடந்த ஆறு தினங்களும் கோலன் குன்றுப் பகுதிகளில் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு மரத்தடியில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தவன் போலக் கிடந்திருக்கிறான். சோறு தண்ணீர் கிடையாது! சுவாசிக்கக்கூட முடியாது! அசையாமல் அப்படியே இருந்து ரகசியமாகத் தகவல்களைக் கடத்தியிருக்கிறான்.

இஸ்ரேல் அரசு இன்றைக்கும் தனது ஆண்டு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மொஸாட்டுக்காக ஒதுக்குகிறது. இது வெளியே சொல்லப்படுவதில்லை. ஆனால் ஆயிரம் சிக்கல்கள் வந்தாலும் இஸ்ரேல் சமாளிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்த மொஸாட்தான்.

மொஸாட் உருவானதிலிருந்து இன்றுவரை மொத்தம் பதினொரு பேர் அதன் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். (தற்போதைய இயக்குநர் விமீ’வீக்ஷீ ஞிணீரீமீஸீ.) இவர்களில் பலபேர் ராணுவ அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றபோதும் மொஸாட்டில் ராணுவப் பதவிகள் ஏதும் கிடையாது. ஒரு சிவிலியன் அமைப்பாகத்தான் மொஸாட் செயல்படுகிறது.

இந்த உளவு பலத்தைக் கொண்டுதான் இஸ்ரேல் தொட்டதிலெல்லாம் வெற்றிவாகை சூடுகிறது என்பது பாலஸ்தீனப் போராளிகளுக்குப் புரிவதற்கு வெகுகாலம் ஆனது. பி.எல்.ஓ.விலும் ஒரு சரியான உளவுப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆறு நாள் யுத்தத்துக்குப் பிறகு முடிவு செய்தார்கள். அதற்கு முன் தலைவரை மாற்றினால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்துதான் யாசர் அராஃபத்தைப் பிடித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 4 ஆகஸ்ட், 2005