Tuesday, May 31, 2005

55] யூதர்களின் நம்பிக்கை துரோகம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 55

பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி, 1947-ம் வருடம். பிரிட்டன் அரசு ஒரு முடிவெடுத்தது. 1917-ம் வருடத்திலிருந்து தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீன் விஷயத்தில் உருப்படியான ஒரு தீர்வைக் கண்டறிந்து செயல்படுத்தும் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு கமிட்டியிடம் அன்றைய தினம் ஒப்படைத்துவிட்டார்கள்.

என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும், ஏன் செய்யவேண்டும் என்பதெல்லாம் ஏற்கெனவே பிரிட்டன் தீர்மானித்துவிட்ட விஷயம்தான். ஆனால் ஒரு நடுநிலை அமைப்பின் மூலம் அவற்றைச் செயல்படுத்துவது என்பது சற்றே பாதுகாப்பானதொரு ஏற்பாடு. இதை மரபு என்றும் சொல்லலாம். ஜாக்கிரதை உணர்வு என்றும் சொல்லலாம்.

எப்படியாயினும் பாலஸ்தீனைப் பிரிப்பது என்பது முடிவாகிவிட்ட விஷயம். அதை பிரிட்டன் செய்தால் என்ன, பிரிட்டன் சொல்வதைக் கேட்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கமிட்டி செய்தால் என்ன? விஷயம் அதுவல்ல.

ஒரு தேசம் என்று உருவாக்குவதற்குப் போதுமான அளவுக்கு அங்கே யூதர்கள் இருக்கிறார்களா என்கிற கேள்விதான் முதலில் வரும். ஆகவே அது சரியாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்துக்கொண்டார்கள். எங்கிருந்து யார் வந்தாலும் இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்காத குறையாக யூதர்களை இழுத்து இழுத்து உள்ளே போட்டுக்கொண்டிருந்தார்கள். போதுமான அளவு யூதர்கள் தேறிவிட்டார்கள் என்பது தெரிந்ததும் ஐ.நா. கமிட்டி தனது அறிவிப்பை வெளியிட்டது.

1. பாலஸ்தீன் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று யூதர்களின் தேசம். அதன் பெயர் இஸ்ரேல். இன்னொன்று அரேபியர்களின் பூர்வீக தேசம். அது பாலஸ்தீன் என்றே வழங்கப்படும்.

2. இப்படிப் பிரிக்கப்படும் இரண்டு நிலப்பரப்பிலும் இருசாராரும் வசிப்பார்கள். யூதர்களின் தேசமாக உருவாக்கப்படும் இஸ்ரேலில், மொத்தம் 4,07,000 அரேபியர்கள் வசிப்பார்கள். (மொத்த யூதர்களின் எண்ணிக்கை 4,98,000.) அதே மாதிரி அரேபியர்களின் பாலஸ்தீனில் 10,000 யூதர்கள் வசிப்பார்கள். (இங்கே மொத்த அரேபியர்களின் எண்ணிக்கை 7,25,000.) ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்காக மட்டுமல்லாமல், புவியியல் ரீதியிலும் இந்த ஏற்பாடே சரியாக வரும்.

3. ஜெருசலேத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பாக பெத்லஹெம், பெயித் ஜல்லா போன்ற இடங்களிலும் பெரும்பாலும் அரேபிய கிறிஸ்துவர்கள் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனபோதிலும் அங்கே 1,05,000 அரேபிய முஸ்லிம்களும் ஒரு லட்சம் யூதர்களும் கூட வசிப்பார்கள். ஆனால் இந்தப் பகுதி இஸ்ரேலின் வசமோ, பாலஸ்தீனின் வசமோ தரப்படமாட்டாது. பிரச்னைக்குரிய இடம் என்பதால் இப்பகுதியின் நிர்வாகக் கட்டுப்பாடு முழுவதுமாக ஐக்கிய நாடுகள் சபையின் வசமே இருக்கும்.

4. நெகவ் பாலைவனப்பகுதி, யூத தேசத்தின் வசத்தில் இருக்கும்.

5. கலிலீ மலைப்பகுதியின் மேற்குப் பகுதி முழுவதும் பயிரிடுவதற்கு ஏற்ற பகுதிகளாகும். இப்பகுதி அரேபிய தேசத்தின் வசம் இருக்கும்.

இந்த ஐந்து தீர்மானங்களை மிக கவனமாகக் குறித்துக்கொள்ளுங்கள். பாலஸ்தீனைப் பிரிக்கும் விஷயத்தில் முதல் முதலாக அதிகாரபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலாக வெளியிடப்பட்ட திட்ட வரைவு இது.

இந்த அறிவிப்பு வெளியான மறுகணமே பாலஸ்தீன் அரேபியர்கள் ஆயுதம் ஏந்த ஆரம்பித்துவிட்டார்கள். நாட்டுத் துப்பாக்கிகள் வெடித்தன. கண்ணிவெடிகள் பூமியைப் பிளந்தன. கத்திகள் வானில் உயர்ந்தன. புழுதி வாரிக் கொட்ட, கூட்டம் கூட்டமாகத் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள். ஐயோ, ஐயோ என்று கதறினார்கள். தேசம் துண்டாடப்படுகிறதே என்று அலறினார்கள். அநியாயமாகப் பாலஸ்தீனை இப்படி யாரோ பங்குபோடுகிறார்களே என்று அழுது புலம்பினார்கள்.

யார் கேட்பது?

அங்கே யூதர்களின் முகத்தில் நிம்மதிப் புன்னகை முழுநிலவு போலத் ததும்பியது. கண்ணை மூடிக் கடவுளுக்கு நன்றி சொன்னார்கள். பிரிட்டன் இருந்த திசை நோக்கி வணக்கம் தெரிவித்தார்கள். ஐ.நா. சபையை ஆராதனை செய்தார்கள். இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. பூக்களால் அலங்கரித்து, வீடுகளில் பண்டிகை அறிவித்தார்கள். உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தங்கள் உடன்பிறவாத யூத சகோதரர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். கண்ணீர் மல்க கூடிக் கூடிப் பேசிக் களித்தார்கள்.

செப்டம்பர் மாதம் கூடிய அரேபியர்களின் அரசியல் உயர்மட்டக் குழு, ஐக்கிய நாடுகள் சபையின் இந்தத் தீர்மானத்தை முற்றிலுமாக நிராகரித்தது. தேசம் துண்டாடப்படுவதில் தங்களுக்குத் துளிகூடச் சம்மதமில்லை என்று தெரிவித்தார்கள். இதன் பின்விளைவுகள் என்னமாதிரி இருக்கும் என்று தங்களால் யூகிக்கக்கூட முடியவில்லை என்று மறைமுகமாக எச்சரித்தார்கள்.

அதையும் யாரும் பொருட்படுத்தவில்லை. ஒரு முடிவுடன்தான் இருந்தார்கள். 29 நவம்பர், 1947 அன்று ஐ.நாவின் பொதுக்குழு கூடியது. சிறப்பு கமிட்டியின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முப்பத்து மூன்று ஆதரவு ஓட்டுகள். போதாது?

ஆறு அண்டை அரேபிய தேசங்களும் க்யூபா, ஆப்கானிஸ்தான், ஈரான், க்ரீஸ், துருக்கி போன்ற தேசங்களும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. அப்போதுதான் சுதந்திரம் பெற்ற தேசங்களான இந்தியாவும் பாகிஸ்தானும் கூட பாலஸ்தீன் துண்டாடப்படுவதை எதிர்த்தன.

ஆனால் ஆதரித்த தேசங்கள் எவை என்று பார்க்கவேண்டும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சோவியத் யூனியன், பிரான்ஸ், நெதர்லாண்ட், நியூசிலாந்து, ஸ்வீடன் மற்றும் போலந்து.

இவற்றுள் அன்றைய சூழ்நிலையில் நெதர்லாந்து, நியூசிலாந்து, போலந்து தவிர மற்ற அனைத்து தேசங்களுமே மத்தியக்கிழக்கின் எண்ணெய் வாசனையை மோப்பம் பிடித்துக்கொண்டிருந்தவை. எண்ணெயே இல்லாவிட்டாலும் இந்த தேசங்களுக்கு மத்தியக் கிழக்கில் ஏதோ ஒரு விதத்தில் தமது ஈடுபாட்டை உறுதிப்படுத்திக் காட்டிக்கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாகக் கருதினார்கள்.

மேலும் அமெரிக்கா அந்த அணியில் இருந்தது. பிரான்ஸ் இருந்தது. மேற்கின் தவிர்க்கமுடியாத சக்திகள் என்று வருணிக்கப்பட்ட தேசங்கள் அவை. அத்தகைய தேசங்கள் நிற்கும் அணியில் நிற்பது தங்களுக்கு எந்த வகையிலாவது லாபம் தரலாம் என்று இவை கருதியிருக்கலாம். மற்றபடி பாலஸ்தீனைப் பிரிப்பதில் நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வேறு என்ன அக்கறை இருந்துவிட முடியும்? இத்தனைக்கும் ஐரோப்பிய தேசங்களில் இருந்த அளவுக்கெல்லாம் அங்கே யூதர்கள் கூட அவ்வளவாகக் கிடையாது.

இது இவ்வாறு இருக்க, யூத தேசம் உருவாவதற்கு ஆதரவாக ஓட்டளித்த தேசங்களுக்கெல்லாம் பாலஸ்தீனிய யூதர்கள் மறக்காமல் நன்றி சொல்லிக் கடிதம் எழுதினார்கள். முடிந்த இடங்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளையே நேரில் அனுப்பி நன்றி சொன்னார்கள். இஸ்ரேல் உருவான பிறகு, அந்த தேசங்களுடன் நிரந்தரமாக அரசியல் உறவுகொள்ளத் தாங்கள் விரும்புவதாக முன்னதாகவே சொல்லியனுப்பினார்கள். பரஸ்பரம் உதவிகள் செய்துகொள்ளவும் ஆதரவுக்கரம் கொடுக்கவும் எப்போதும் தாங்கள் தயார் என்று தெரிவித்தார்கள்.

அரேபியர்களுக்கு அடி வயிறு பற்றிக்கொண்டு எரிந்தது. யாருடைய பூமியை யார் பங்கிட்டு, யாருக்குக் கொடுப்பது? அவர்களது அலறலையோ, கதறலையோ கேட்பதற்கு ஒரு நாதி இல்லாமல் போய்விட்டதுதான் துரதிருஷ்டம். எதிர்த்து வாக்களித்த பிற அரேபிய தேசங்கள் கூட மல்லுக்கட்டி நிற்கத் தயங்கின. காரணம், அந்த நிமிடம் வரை பாலஸ்தீன் பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தேசம். ஒரு சௌகரியத்துக்காகத்தான் ஐ.நா.வின் சிறப்பு கமிட்டியிடம் பொறுப்பை ஒப்படைத்து, பிரிக்கும் விஷயத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.

அப்படியிருக்க, பிரிட்டன், தனக்குச் சொந்தமான ஒரு காலனியை என்னவேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பிரிக்கலாம்; யார் கேட்பது?

தார்மீக நியாயங்களும் சரித்திர நியாயங்களும் பத்திரமாகச் சுருட்டிப் பரண்மீது போடப்பட்டன. அத்தனை வருஷம் கஷ்டப்பட்ட யூதர்கள் இனியேனும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதுதான் அந்தக் காலகட்டத்தின் ஒரே நியாயமாக இருந்தது. தவிரவும் ஐ.நாவின் சிறப்பு கமிட்டி வரைந்தளித்த திட்டத்தின்படி பாலஸ்தீனைப் பிரிப்பதால் அரேபியர்களுக்கு எந்தக் கஷ்டமும் வந்துவிடாது; அவர்களுக்குப் போதுமான நிலப்பரப்பு இருக்கவே செய்யும் என்றும் சொல்லப்பட்டது. இஸ்ரேலை உருவாக்கியபின் தேவைப்பட்டால் எல்லை விஷயத்தில் கொஞ்சம் மறு ஆய்வு செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்களே தவிர, தேசத்தைப் பிரிக்கும் விஷயத்தில் மிகவும் தீர்மானமாகவே இருந்தார்கள்.

நடுநிலைமையோடு பார்ப்பதென்றால், ஐ.நா. அன்று எடுத்த முடிவு சரியானதே. எப்படி அரேபியர்களுக்கு அது தாய்மண்ணோ, அதேபோலத்தான் யூதர்களுக்கும். இடையில் அவர்கள் மண்ணை விட்டு பல ஆயிரம் வருடங்களாக எங்கோ போய்விட்டவர்கள்தானே என்கிற ஒரு குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஓட ஓட விரட்டப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கில் உயிரிழப்பை சந்தித்த இனம் அது. ஒதுங்க ஒரு நிழலில்லாமல் வாழ்நாளெல்லாம் சுற்றிக்கொண்டே இருந்தவர்கள்.

என்னவோ செய்து, எப்படியெப்படியோ யார் யாரையோ பிடித்து தங்கள் கனவை நனவாக்கிக்கொள்ளவிருந்தார்கள். நல்லதுதான். அவர்களும் நன்றாக இருக்கட்டும்.

பிரச்னை அதுவே அல்ல! ஏன், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரியவில்லையா? இதே இனப்பிரச்னைதானே காரணம்? பிரிவினை சமயத்தில் கலவரங்கள் இங்கும் நடக்கத்தான் செய்தன. ஏராளமான உயிர்ப்பலிக்குப் பிறகுதான் அமைதி திரும்பியது. இதெல்லாம் எங்குதான் இல்லை? எந்தெந்த தேசம் இரண்டாகப் பிரிகிறதோ, அங்கெல்லாம் ரத்தம் இருக்கத்தான் செய்யும். இது என்ன புதுசு?

கேள்வி வரலாம். நியாயம்தான். விஷயம், அதுவும் அல்ல!

ஐ.நா.வின் சிறப்பு கமிட்டி வகுத்தளித்தபடி பிரிக்கப்பட்ட இரு தேசங்களும் முட்டிக்கொள்ளாமல் ஆண்டிருக்குமானால் எந்தப் பிரச்னையுமே இருந்திருக்காது என்பது உண்மைதான். ஆனால் நடந்தது என்ன?

'யூதர்களை நம்பாதீர்கள், அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள்; சதிகாரர்கள்! தங்களுக்கென்று ஒரு தேசம் உருவாகும் வரைதான் அவர்கள் அமைதியுடன் இருப்பார்கள். அப்படியொரு தேசம் உதித்துவிட்டால், மறுகணமே அரேபியர்களின் மீது படையெடுத்து, எங்களின் நிலப்பரப்பை அபகரித்துக்கொண்டுவிடுவார்கள்!'' என்று அன்றைக்குக் கத்திக் கதறித்தீர்த்தார்கள் பாலஸ்தீனிய அரேபிய முஸ்லிம்கள்.

இது வெறும் கற்பனை என்றும் பயத்தில் உளறுகிறார்கள் என்றும் யூதர்கள் சொன்னார்கள்.

ஆனால் அதுதானே நடந்தது? சந்தேகமே இல்லாமல் யூதர்கள் நம்பிக்கை துரோகம் செய்தார்கள். தலைமையின்றித் தத்தளித்துக்கொண்டிருந்த அரேபியர்களை ஓட ஓட விரட்டி அவர்களின் தேசத்தையும் அபகரித்துக்கொண்டார்கள். எந்த அரபு தேசங்கள் ஒன்றுதிரண்டு பாலஸ்தீனுக்கு ஆதரவாகப் போரில் நிற்கும் என்று சொல்லப்பட்டதோ, அதே முஸ்லிம் தேசங்களை சூழ்ச்சியில் வளைத்துப் போட்டு, சொந்த சகோதர தேசமான பாலஸ்தீனுக்கு எதிராகவே அவர்களை அணி திரட்டினார்கள். நாய்க்கு எலும்பு வீசுவதுபோல், அபகரித்த நிலத்தில் ஆளாளுக்குக் கொஞ்சம் பங்குபோட்டுக் கொடுத்து, அந்த சமயத்துக்குத் திருப்திப்படுத்தினார்கள். அப்புறம் அவர்கள் மீதும் படையெடுத்து, கொடுத்த இடங்களைத் திரும்ப அபகரித்தார்கள் யூதர்கள்.

ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? எந்தச் சக்தி இவர்களை இப்படி ஓயாமல் குயுக்தியாக மட்டும் சிந்திக்கச் செய்கிறது? எது இவர்களுக்கு மட்டும் இடைவிடாமல் வெற்றியை மட்டுமே பெற்றுத்தருகிறது? சரித்திரத்தால் மிகவும் தாக்கப்பட்ட இனம் அது. அந்த வெறுப்பில்தான் சரித்திரத்தைத் திருப்பித் தாக்குகிறார்களா?

அதற்கு அப்பாவி பாலஸ்தீன் அரேபியர்கள்தான் கிடைத்தார்களா? யூதகுலத்தை வேரறுக்க முடிவு செய்த ஜெர்மனியை ஏன் விட்டுவிட்டார்கள்? ஆயிரக்கணக்கான யூதர்களை எரித்தே கொன்ற சோவியத் யூனியன் மீது ஏன் அவர்களுக்குப் பகையில்லை? இதர ஐரோப்பிய தேசங்கள் அனைத்தையும் ஏன் மன்னித்தார்கள்? விட்டுவிட்டு ஓடிப்போன தேசத்துக்குத் திரும்ப வாழவந்தபோதும் இருகரம் நீட்டி அரவணைத்த பழைய சகோதர இனமான அரேபியர்களை மட்டும் ஏன் இப்படி நடத்தினார்கள்?

அதுதான் கதை. அதுதான் சுவாரசியம். அதுதான் சோகத்தின் உச்சமும் கூட.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 2 ஜூன், 2005

Friday, May 27, 2005

54] பிரிட்டனின் திட்டம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 54

பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு தரப்பினரும் சம அளவினராகவும், நவீன காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோராகவும் அங்கே இருந்திருக்கிறார்கள்.

இதனை இந்தத் தொடரின் பல்வேறு அத்தியாயங்களில் இடையிடையே பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. காரணம், இந்தக் குழப்பத்தால்தான் பாலஸ்தீனை எப்படிப் பிரிப்பது என்று பிரிட்டன் யோசித்துக்கொண்டிருந்தது.

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பாலஸ்தீனில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சம். இவர்கள் அத்தனைபேரும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலிருந்து பாலஸ்தீன் வந்து சேர்ந்தவர்கள். அவர்களது மூதாதையர்களுக்கு பாலஸ்தீன் சொந்த ஊராக இருக்கலாம். அவர்களுக்குக் கண்டிப்பாக அது புதிய தேசம். அதாவது சொந்த தேசமே என்றாலும் வந்தேறிகள். அவர்களைத் தவிர உள்ளூர் யூதர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படியாக சுமார் இருபதாயிரம் பேர் இருந்தால் அதிகம்.

ஆனால் அங்கே இருந்த அரேபியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை மிகவும் சொற்பம். குறைந்தது நாலரை மடங்கு அதிகமான எண்ணிக்கையில் அரேபியர்கள் அப்போது அங்கே இருந்தார்கள்.

ஆகவே, அநியாயமாகவே நிலப்பரப்பைப் பிரிப்பதென்றாலும் அரேபியர்களுக்குச் சற்றுக் கூடுதலான நிலம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். அப்படிச் செய்வதென்றால் இஸ்ரேல் என்கிற தேசத்தை உருவாக்க நினைப்பதன் அடிப்படைக் காரணமே தவிடுபொடியாகிவிடும்.

இது முதல் பிரச்னை. இரண்டாவது பிரச்னை ஜெருசலேம் தொடர்பானது. பாலஸ்தீனின் மிக முக்கியமான நகரம். முஸ்லிம்கள், யூதர்கள் என்று இருதரப்பினருக்குமே அது ஒரு புனித நகரம். இந்த இரு தரப்பினர் மட்டுமல்லாமல் பாலஸ்தீனின் அப்போதைய மிகச் சிறுபான்மையினரான கிறிஸ்துவர்களுக்கும் அது புனிதத்தலம். ஒட்டுமொத்த பாலஸ்தீனில் யார் எத்தனைபேர் வாழ்கிறார்கள் என்று கணக்கெடுக்கும்போதே ஜெருசலேத்தில் எத்தனைபேர் என்று உடன் சேர்த்துப் பார்ப்பதுதான் வழக்கம்.

பாலஸ்தீனின் மற்ற பகுதிகளைப் பிரிப்பதில் ஏதாவது குளறுபடி நேர்ந்தால்கூடப் பின்னால் சரிசெய்துகொண்டுவிட முடியும். ஆனால், ஜெருசலேத்தைப் பிரிப்பதில் ஒரு சிறு பிரச்னை வந்தாலும் மூன்று மிகப்பெரிய சமயத்தவரும் பிரிட்டனை துவம்சம் செய்துவிடும் அபாயம் இருப்பதை பிரிட்டிஷ் பிரதமர் உணர்ந்தார். ஆகவே ஒரு சிறு சிக்கல் கூட வராமல் விஷயத்தை முடிக்கவேண்டும் என்பதால்தான் இஸ்ரேல் விஷயத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிக்காமல் முதலில் இந்தியப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லிவிட்டு, அடுத்தபடியாக இஸ்ரேலுக்கு வரலாம் என்று நினைத்தது பிரிட்டன்.

இவற்றையெல்லாம் தாண்டி பிரிட்டனுக்கு இன்னொரு hidden agenda இருக்கவே செய்தது. இரண்டு தரப்பினருக்கும் அதிருப்தி ஏற்படாமல் தேசத்தை இரண்டாகப் பிரித்து ஒரு தேசத்துக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டு பிரச்னையைத் தீர்ப்பது என்பது மேல்பார்வைக்குத் தெரிந்த செயல்திட்டம். பிரிட்டனின் உண்மையான திட்டம், ஓரளவுக்காவது பாலஸ்தீனை முழுமையாக யூதர்களின் தேசமாக்கிவிடுவதுதான். அதாவது பெரும்பான்மை நிலப்பரப்பு யூதர்களுடையதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் யூதர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். யூதர்களின் வசிப்பிடம் இன்னும் பரவலாக, எல்லா சந்துபொந்துகளிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு எல்லைக்கோடு என்று கிழிக்கும்போது அதிக இடத்தை யூதர்கள் பெறும்படி செய்யலாம்.

ஆனால் யதார்த்தம் வேறு விதமாகத்தான் இருந்தது. பாலஸ்தீன் முழுவதும் அரேபியர்களே நிறைந்திருந்தார்கள். நிலங்களை இழந்த அரேபியர்கள் கூட, வேறிடம் தேடிச்செல்லாமல் பாலைவனங்களில் கூடாரம் அடித்தே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். பாறைகள் மிக்க மலைப்பகுதிகளிலும் அவர்கள் வசித்துக்கொண்டிருந்தார்கள். ஜோர்டன் நதியின் மேற்குக் கரையில் ஏராளமாக வசித்தார்கள். கிழக்கு கடற்கரைப் பகுதியான காஸா உள்ளிட்ட எல்லையோர நகரங்களிலும் அவர்கள் ஏராளமாக இருந்தார்கள். ஒரு வரியில் சொல்லுவதென்றால், எல்லைப்புறங்கள் முழுவதிலும் அரேபியர்கள் நாலா திசைகளிலும் இருந்தார்கள். நாட்டின் நடுப்பகுதிகளிலும் அவர்கள் பரவலாக வசித்துவந்தார்கள். மிகச் சில இடங்களில் மட்டுமே யூதக்குடியிருப்புகள் இருந்தன.

ஒரு தேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு இது மிகவும் சிக்கல்தரக்கூடிய விஷயம். எங்கே போடுவது எல்லைக் கோட்டை? பாலஸ்தீனுக்கு நடுவே ஒரு வட்டம் போட்டா இஸ்ரேல் என்று சொல்லமுடியும்? அப்படியென்றால் இஸ்ரேலின் நான்குபுறமும் பாலஸ்தீன் இருக்கும். பாலஸ்தீனின் கிழக்கு எல்லையில் வசிப்பவர்கள், மேற்குப் பகுதி நகர் ஒன்றுக்குப் போவதென்றால் விசா எடுத்துக்கொண்டு போகவேண்டி வரும். இதெல்லாம் மிகப்பெரிய சிக்கல்கள்.

நமக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற தேசத்தை உருவாக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அதன்படி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்தார்கள். ராட்க்ளிஃப் என்கிற பிரிட்டிஷ் சர்வேயர் ஒருவர் வரைபடத்தை வைத்துக்கொண்டு அதில் கோடு கிழித்தார். மேற்கே ஒரு பரந்த நிலப்பரப்பு. கிழக்கே இந்தியாவின் ஜாடையில் பிறந்த இன்னொரு குழந்தை மாதிரி இன்னொரு சிறு நிலப்பரப்பு. மேற்குப் பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று அடையாளம் கூறப்பட்டது.

எத்தனை சிக்கல்கள் வந்துவிட்டன! ஆட்சி நிர்வாகம் முழுவதும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து நடைபெறும். எதற்குமே சம்பந்தமில்லாமல் இடையில் இந்தியாவின் இருபெரும் எல்லைகள் தாண்டி கிழக்கு பாகிஸ்தான் அம்போவென்று தனியே கிடக்கும்.

இதனால்தான் அம்மக்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டது போல உணர்ந்தார்கள். அரசுக்கு எதிராகக் கலவரங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். முக்திபாஹினி என்கிற தனியார் ராணுவம் ஒன்றையே அமைத்து சொந்த தேச ராணுவத்துக்கு எதிராகப் போரிட்டார்கள்.

அதன்பிறகு 1971-ல் யுத்தம், பங்களாதேஷ் பிறப்பு என்று ஒருவாறு பிரச்னை தீரும்வரை அங்கே சிக்கல், சிக்கல் மட்டும்தான்.

இந்த பாகிஸ்தான் பிரிவினை விவகாரம், அங்குள்ள முஸ்லிம்களுக்கு எத்தனை சிக்கல் தரக்கூடியது என்பதை அவர்கள் உணர்வதற்குச் சில காலம் ஆனது உண்மை. ஆனால் பிரித்துக்கொடுத்த பிரிட்டனுக்கு அன்றே புரிந்துவிட்டது. இஸ்ரேல் - பாலஸ்தீன் அளவுக்கெல்லாம் மிகப்பெரிய பிரச்னைகள் இல்லாத தேசத்திலேயே இத்தனை சிக்கல் என்றால், பாலஸ்தீனைப் பிரிக்கிற விஷயத்தில் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கவே வேண்டாம்.

பிரிட்டனின் மிகப்பெரிய சிறப்பு அதுதான். அவர்களால் நிறைய பிரச்னைகளை உருவாக்க முடியும். பிரச்னை வரும் என்று தெரிந்தே செய்வார்கள். சிறு தேசங்களில் பிரச்னை இருந்தால்தான் வளர்ந்த நாடுகளின் பிழைப்பு நடக்கும் என்பது ஓர் அரசியல் சித்தாந்தம்.

ஆனால் பாலஸ்தீன் விஷயத்தில் பிரிட்டனின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. இஸ்ரேலை உருவாக்கவேண்டும். அவ்வளவுதான். பாலஸ்தீன் என்கிற நிலப்பரப்பின் பெரும்பகுதியை அந்தப் புதிய தேசத்துடன் இணைக்கவேண்டும். கடமைக்காக, முஸ்லிம்களுக்கென்றும் கொஞ்சம் நிலம் ஒதுக்கியாக வேண்டும். அப்படி ஒதுக்கும் நிலம் அதிகமாக இருந்துவிடக்கூடாது!

இந்தப் பாசம் யூதர்களுக்குப் புரிந்ததைக் காட்டிலும் முஸ்லிம்களுக்கு மிக நன்றாகப் புரிந்தது. எப்படியிருந்தாலும் இனி தாங்கள் கஷ்டப்பட்டுத்தான் தீரவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பயமும் பதற்றமும் கவலையும் அவர்களைப் பீடித்தன. யார் தங்களுக்கு உதவுவார்கள் என்று உலகெங்கும் தேட ஆரம்பித்தார்கள்.

துரதிருஷ்டவசமாக அன்றைய தேதியில் பாலஸ்தீன் அரேபியர்களுக்கு உதவி செய்ய யாருமே தயாராக இல்லை. அவர்கள் சார்பில் வெறுமனே குரல் கொடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை. காரணம், உலகப்போரில் அவர்கள் ஹிட்லரை ஆதரித்தவர்கள் என்பதுதான். ஓர் அழிவு சக்திக்குத் துணைபோனவர்கள் என்கிற அழிக்கமுடியாத கறை அன்று முஸ்லிம்களின் மீது படிந்திருந்தது.

உண்மையில் அழிவுக்குத் துணைபோவதா அவர்களின் எண்ணமாக இருந்தது?

மிகவும் கவனமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய விஷயம். உயிர்போகிற கடைசி வினாடியில் தப்பிக்க ஒரு சிறு சந்து கிடைக்கும் என்று தோன்றினால் நம்மில் எத்தனைபேர் அதைப் பயன்படுத்த விரும்பாமல் இருப்போம்?

அன்றைய நிலைமையில் பாலஸ்தீனில் யூதர்களின் ஊடுருவலைத் தடுக்கவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. அனைத்து மேற்கத்திய நாடுகளும் எப்படியாவது யூதர்களைக் கொண்டுபோய் பாலஸ்தீனில் திணித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது ஹிட்லர் ஒருவர்தான் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தவர். அந்த ஒரு காரணத்தால்தான் முஸ்லிம்கள் அவரை ஆதரித்தார்கள்.

இதை நியாயப்படுத்த முடியாது; நியாயப்படுத்தவும் கூடாது. அதே சமயம், அத்தனை அர்த்தம், அனர்த்தங்களுடனும் இதனைப் புரிந்துகொள்ளவும் வேண்டும். கண்ணெதிரே சொந்த தேசம் களவாடப்படுகிறது என்பது தெரியும்போது ஏதாவது செய்து காப்பாற்றவேண்டும் என்று விரும்பினார்கள். விரும்பியதில் தவறில்லை. ஆனால் தேர்ந்தெடுத்த வழிதான் தவறாகப்போய்விட்டது.

மிகவும் யோசித்து, திட்டமிட்டுத்தான் பிரிட்டன் பாலஸ்தீனைப் பிரிக்க திட்டம் தீட்டியது. திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால் தேசத்தின் நடுப்பகுதிகளில் வசித்துக்கொண்டிருந்த முஸ்லிம்களை, குறிப்பாக கிராமப்பகுதி முஸ்லிம்களை மேற்கு எல்லைக்கு விரட்டுவதற்கான ஏற்பாடுகள் மறுபுறம் மிகத்தீவிரமாக நடக்க ஆரம்பித்தன.

யூத நிலவங்கிகளுக்காக மிரட்டல் மூலம் நிலங்களை அபகரித்துக்கொடுத்த முன்னாள் குண்டர்படைகளின் வம்சாவழிகள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்தார்கள். அவர்கள், ஆயுதங்களுடன் முஸ்லிம் கிராமங்களுக்குள் நுழைந்து, இரவு வேளைகளில் வீடுகளுக்குத் தீவைத்து மக்களை வெளியேற்ற ஆரம்பித்தார்கள். அப்படி அலறி வெளியே ஓடிவரும் முஸ்லிம்களைக் கொல்லாமல், வெறுமனே துரத்திக்கொண்டே போய் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை வரை சென்று விட்டுவிட்டு வந்தார்கள்.

நல்லவேளை, இந்தச் செயல்கள் அதிகமாக நடைபெறவில்லை. சில ஆயிரம் பேரை மட்டும்தான் அவர்களால் இப்படித் துரத்த முடிந்தது. அதற்குள் முஸ்லிம்கள் தரப்பிலும் சில தாற்காலிக ஆயுதப்படை வீரர்கள் முளைத்து தத்தம் கிராமங்களைப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆனால் இதெல்லாமே கொஞ்சநாள்தான். சட்டப்படி என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்துமுடித்துவிட்டு, அமைதியாக பிரிட்டன் தன் தீர்மானத்தை அறிவித்தபோது, முஸ்லிம்கள் இறுதியாக நொறுங்கித் தூள்தூளாகிப் போனார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 29 மே, 2005

Tuesday, May 24, 2005

53] ஹிட்லரின் தற்கொலை

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 53

ஜெர்மனியில் ஹிட்லரின் ராஜாங்கம் ஆரம்பமானதிலிருந்து, அவரது மறைவை ஒட்டி ஒரு முடிவுக்கு வந்த இரண்டாம் உலக யுத்தம் வரை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளவேண்டுமானால், அதற்கு ஏராளமான சுவாரசியமான புத்தகங்கள் இருக்கின்றன. வில்லியம் ஷிரரின் The Rise and Fall of the Third Riech படித்துப் பாருங்கள். ஒரு திரைப்படம் பார்ப்பது போலவே இருக்கும். ஹிட்லரின் யூதப் படுகொலைகள், அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் யூதர்கள் பிரிட்டனின் கூட்டணிப் படைகளுக்கு அளித்த ஆதரவு, என்ன செய்தாவது தங்கள் தேசத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பதைப்பில் பாலஸ்தீனிய முஸ்லிம்கள் ஹிட்லருக்கு ஆதரவு தெரிவித்தது... இந்த மூன்று விஷயங்கள்தான் இங்கே முக்கியம்.

இதில், முஸ்லிம்களின் இந்த முடிவு மிகவும் அபத்தமானது; துரதிருஷ்டவசமானது. யுத்தத்தில் அவர்கள் எந்தப்பக்கமும் சாயாமல் இருந்திருந்தால் கூடக் கொஞ்சம் அனுதாபம் மிச்சம் இருந்திருக்கும். எப்போது அவர்கள் ஹிட்லரை நம்பினார்களோ, அப்போதே அவர்களின் விதி எழுதப்பட்டுவிட்டது.

உலக யுத்தம் தொடங்கிய முதல் ஒன்று, ஒன்றரை ஆண்டுகள் வரை ஹிட்லரின் கைதான் பெரிதும் மேலோங்கியிருந்தது. ஆனால் பின்னால் நிலைமை அப்படியே தலைகீழாகி, ஜெர்மன் இத்தாலி ஜப்பான் ராணுவங்களை பிரிட்டனும் அமெரிக்காவும் பிரான்ஸும் பார்த்த இடங்களிலெல்லாம் உதைக்கத் தொடங்கின. பர்ல் துறைமுகத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜப்பான் மீது அமெரிக்கா கொண்ட வெறி, ஜெர்மனிக்கும் மிகப்பெரிய எமனாக விடிந்தது. அமெரிக்கா என்பது எத்தகைய சக்திகளைக் கொண்ட தேசம் என்பதும் முதல் முதலில் அப்போதுதான் முழுமையாகத் தெரியவந்தது.

1944-ம் ஆண்டின் இறுதியில் பிரிட்டன் கூட்டணிப் படைகளின் வெற்றியை எல்லோரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரிட்டனில் அவ்வப்போது கூடிய தொழிற்கட்சிக் கூட்டங்களில் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேலை உருவாக்கித் தருவது பற்றி நிறையவே விவாதித்தார்கள். பாலஸ்தீனிய முஸ்லிம்களின் ஜெர்மானிய ஆதரவு நிலை அவர்களை மிகவும் வெறுப்பேற்றியிருந்ததை மறுக்க முடியாது. அது மட்டும்தான் காரணம் என்றில்லாவிட்டாலும், அதுவும் ஒரு முக்கியக் காரணம்.

அரேபியர்களைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் ‘அரேபியர்களுக்கு இடமா இல்லை? மத்தியக் கிழக்கின் எல்லா நிலப்பரப்பும் அவர்களது மூதாதையர்களின் இடங்கள்தானே? பாலஸ்தீனிய அரேபியர்கள் எங்குவேண்டுமானாலும் போய் வசிக்கலாமே? பெருந்தன்மையுடன் அவர்கள் பாலஸ்தீனை யூதர்களுக்கு காலி பண்ணிக்கொடுத்தால்தான் என்ன? யூதர்கள்தான் பாவம் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்’ என்று பேசினார்கள்.

யுத்தம் முடிந்த சூட்டில் பிரிட்டனிலும் தேர்தல் ஜுரம் வந்துவிடப்போகிறது என்கிற சூழ்நிலை. ஆகவே பேசுகிற ஒவ்வொரு பேச்சையும் ஓட்டாக மாற்றிப் பேசியாக வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருந்தது. அப்போதைய தொழிற்கட்சி உறுப்பினர்களுள் மிகவும் பிரபலமானவர்கள், க்ளெமண்ட் அட்லி, ஹெர்பர்ட் மாரிசன், எர்னெஸ்ட் பெவின் ஆகியோர். இவர்கள், அப்போதைய பிரிட்டன் பிரதமரான சர்ச்சிலின் யுத்த ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகித்தார்கள்.

ஆலோசனைக் கூட்டங்களில் என்ன பேசினாலும் உடனே அதை மக்கள் மத்தியிலும் வந்து ஒப்பித்துவிடுவார்கள். தங்கள் கட்சி, யூதர்கள் விஷயத்தில் மிகவும் வெளிப்படையான நிலையையே எடுக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ளவே இந்த ஏற்பாடு. இஸ்ரேலை உருவாக்கும்போது, ‘தற்போதுள்ள பாலஸ்தீனிய எல்லைகளைச் சற்று மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருந்தால் அதையும் பரிசீலிப்போம்’ என்று பேசினார்கள். அதாவது, தேவையிருப்பின் எகிப்து, சிரியா, ஜோர்டன் (அன்றைக்கு அதன் பெயர் டிரான்ஸ்ஜோர்டன்) ஆகிய பாலஸ்தீனின் அண்டை நாடுகளுடன் கலந்து பேசி, எல்லைகளைச் சற்று விஸ்தரித்து அமைக்கலாம் என்பது தொழிற்கட்சியின் திட்டமாக இருந்தது. எப்படி இருந்தாலும் மேற்சொன்ன தேசங்கள் எல்லாமே யுத்தத்தின் முடிவில் பிரிட்டன் கூட்டணி தேசங்கள் எதாவது ஒன்றின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் இருக்கும்; பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்பது அவர்கள் யோசனை.

என்ன செய்தும் தாக்குப்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு ஏப்ரல் 30, 1945-ல் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். சரியாக எட்டு தினங்கள் கழித்து இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஐரோப்பாவையும் யூதர்களையும் பிடித்த சனி அன்றுடன் விலகிக்கொண்டது. யுத்தத்தில் மொத்தம் அறுபது லட்சம் பேர் இறந்தார்கள். அதில் மூன்றில் ஒரு பங்கு யூதர்கள் என்று ஒரு கணக்கு இருக்கிறது. இது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கணக்கு என்று எடுத்துக்கொண்டாலும் குறைந்தது இருபது லட்சம் யூதர்களாவது ஹிட்லர் என்கிற தனிமனிதனின் வெறியாட்டத்துக்கு பலியானது உண்மையே.

பாலஸ்தீன் என்கிற தேசம் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் சமமான அளவு பாத்தியதை உள்ளதுதான் என்கிற சரித்திர உண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஒட்டுமொத்த மேலை தேசங்களும் இஸ்ரேல் உருவாவதற்கு ஆதரவு தெரிவித்ததற்கும் இதுதான் காரணம். யூதர்கள் மீதான அனுதாபம். மிச்சமிருக்கும் யூதர்களாவது இனி நிம்மதியாக வாழட்டுமே என்கிற இரக்கம்.

அந்த வகையில் இஸ்ரேல் உருவானதற்கு பிரிட்டனைக் காட்டிலும் ஹிட்லர்தான் மூலகாரணம் என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது!

அனுதாபம் வரலாம், தவறில்லை; ஆனால் ஏன் பாலஸ்தீனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? வேறு இடமா இல்லை என்கிற புராதனமான கேள்வி இங்கே மீண்டும் வரலாம். வேறு வழியே இல்லை. இதெல்லாம் நடக்கும், இப்படித்தான் நடக்கமுடியும் என்று எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே யோசித்து பாலஸ்தீனில் நில வங்கிகளைத் தொடங்கி, பெரும்பாலான இடங்களை வளைத்துப் போட்டுக் காத்திருந்த யூதர்கள், இன்னொரு இடம் என்கிற சிந்தனைக்கு இடம் தருவார்களா? யூதகுலம் சந்தித்த மாபெரும் இழப்புகளுக்கெல்லாம், அவல வாழ்வுக்கெல்லாம் ஓர் அர்த்தம் உண்டென்றால் அது பாலஸ்தீனை அடைவதாகத்தான் இருக்க முடியும் என்று பெரும்பாலான ஐரோப்பிய தேசங்கள் அப்போது நினைக்கத் தொடங்கிவிட்டன. அங்குள்ள அரேபியர்கள் என்ன ஆவார்கள்? இவர்கள் சுகமாக வாழ்வதற்காக அவர்கள் அவதிப்படவேண்டுமா என்றெல்லாம் அவர்கள் யோசிக்கத் தயாராக இல்லை.

யார் எக்கேடு கெட்டால் என்ன? யுத்தம் முடிந்துவிட்டது. இனி கொஞ்சம் ஓய்வெடுத்தாக வேண்டும். யூதர்களுக்கு இஸ்ரேலைத் தந்துவிடலாம். அவர்களும் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்.

இதனிடையில் சுமார் ஆறு லட்சம் யூதர்கள் பாலஸ்தீனில் நன்றாக வேர் விட்டுக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டிருந்தார்கள். சுத்தமாகத் துடைத்துவிடப்பட்டு ஒரு யூதர் கூட இல்லாதிருந்த பாலஸ்தீன்! சலாவுதீன் மன்னன் காலத்தில் புறப்பட்டுப் போய்விட்டார்கள் அவர்கள். எத்தனை தலைமுறைகள்! எங்கெங்கோ சுற்றி, என்னென்னவோ கஷ்டப்பட்டவர்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பத்துப் பத்துப் பேராக, நூறு நூறு பேராக உள்ளே நுழையத் தொடங்கியவர்கள்தான் யுத்தத்தின் முடிவில் ஆறு லட்சம் பேராகப் பெருகியிருந்தார்கள்.

1917-ல் உருவான பால்ஃபர் பிரகடனம் 1939-ம் ஆண்டு யுத்தம் தொடங்குவதற்கு முன்பு வரை அப்படியே உயிருடன் தான் இருந்தது. ‘இஸ்ரேலை உருவாக்கித் தருவோம்.’ பிரிட்டனின் வாக்குறுதி அது. யுத்தம் தொடங்கியதிலிருந்து கவனம் திசை மாறிவிடவே, மீண்டும் அதை எடுத்து தூசிதட்டி உடனடியாக முடித்துத்தரக் கேட்டார்கள் யூதர்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், எங்கே பிரிட்டன் தங்களை ஏமாற்றிவிடுமோ என்று அஞ்சிய சில யூதர்கள், ரகசியமாக புரட்சிப் படைகளையெல்லாம் அவசர அவசரமாக உருவாக்கி, பாலஸ்தீனின் பாலைவனப்பகுதிகளில் போர்ப்பயிற்சிகளெல்லாம் செய்துகொண்டிருந்தார்கள்.

யுத்தத்துக்குப் பிறகு உடனடியாக அறிவிக்கப்பட்ட பிரிட்டனின் செயல் திட்டங்களுள் இஸ்ரேல் உருவாவது பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லாததே இதற்குக் காரணம்.

இத்தகைய புரட்சிகர அமைப்புகள் ஆங்காங்கே சில சில்லறை வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. ‘பாலஸ்தீனிலிருந்து பிரிட்டன் ராணுவத்தினரை வெளியேற்றுவோம்’ என்று சொல்லிக்கொண்டு இவர்கள் போராடத் தொடங்கினார்கள். இதில் பிரிட்டனுக்கு மிகவும் இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இஸ்ரேல் உருவாவதற்குத்தான் அவர்கள் பாடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இடையில் யூதர்களே வில்லன்களாக ஏதாவது குட்டையைக் குழப்பிவிடப்போகிறார்களோ என்று பயந்தார்கள்.

‘இன்னும் கொஞ்ச நாளைக்கு பாலஸ்தீனில் பிரிட்டிஷ் ராணுவம் இருக்கத்தான் செய்யும்’ என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டு, கலவரக்காரர்களை அடக்கச்சொல்லி ராணுவத்துக்கு உத்தரவிட்டது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம்.

அரேபியர்களுக்கு அச்சம் மிகுந்திருந்தது அப்போது. ஏதோ சதி நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. எப்படியும் பாலஸ்தீனை உடைத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. ஓர் உச்சகட்ட காட்சியை மிகுந்த உணர்ச்சிமயமாகத் தயாரிக்கும் பொருட்டுத்தான் இப்படி அவர்கள் தமக்குள் ‘அடிப்பது மாதிரி அடி; அழுவது மாதிரி அழுகிறேன்’ என்று நாடகம் போடுகிறார்களோ என்று சந்தேகப்பட்டார்கள்.

‘என்ன ஆனாலும் பாலஸ்தீனைப் பிரிக்க விடமாட்டோம், யூதக் குடியேற்றங்களை இறுதி மூச்சு உள்ளவரை தடுக்கவே செய்வோம்’ என்று அரேபியர்கள் கோஷமிட்டார்கள்.

ஆனால், அவர்களது கோஷத்தை யார் பொருட்படுத்தினார்கள்?

தினசரி லாரி லாரியாக யூதர்கள் வந்து பாலஸ்தீன் எல்லையில் இறங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். (ரயில்களிலும் டிரக்குகளிலும் கூட வந்தார்கள்.) அப்படி வந்த யூதர்களுக்கு உடனடியாக பாலஸ்தீனில் வீடுகள் கிடைத்தன. குடியேற்ற அலுவலகத்திலேயே வீட்டுச்சாவிகளை வாங்கிக்கொண்டுதான் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

அரேபியர்கள் தாங்கள் மெல்ல மெல்ல தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்தார்கள். யாரிடம் உதவி கேட்கலாம் என்றும் அவர்களுக்குப் புரியவில்லை. யுத்தத்தில் ஜெர்மனியை ஆதரித்தவர்களுக்கு, யுத்தம் முடிந்தபிறகு உதவுவதற்கு ஒரு நாதியில்லாமல் போய்விட்டது.

தவிர, இன்னொரு மிக முக்கியமான பிரச்னையும் அப்போது இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில்தான் மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளம் குறித்த முழுமையான ‘ஞானம்’ அனைத்து மேற்கத்திய தேசங்களுக்கும் உண்டாகியிருந்தது. பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏராளமான தேசங்கள் ஏதாவது வகையில் மத்தியக் கிழக்கில் வலுவாகக் காலூன்ற முகூர்த்தம் பார்த்துக்கொண்டிருந்தன. யுத்தத்தின் சாக்கில் கைப்பற்றப்பட்ட மத்தியக்கிழக்கு தேசங்களை எப்படிப் பங்கிடலாம், எப்படி நிரந்தரமாகப் பயனடையலாம் என்றே அவர்கள் யோசித்துக்கொண்டிருந்தார்கள். தமக்குச் சாதகமான அரசுகள் அங்கே உருவாவதற்கு உதவி செய்வதன்மூலம், எண்ணெய்ப் பொருளாதாரத்தில் தாங்கள் லாபம் பார்க்கலாம் என்பதே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற தேசங்களின் சிந்தனையாக இருந்தது.

அமெரிக்காவின் வல்லமை முழுவதுமாக வெளிப்பட்டிருந்த சமயம் அது. எப்படியும் ஒரு மாபெரும் வல்லரசாக அத்தேசம் உருவாவது நிச்சயம் என்று யாருக்குத் தெரிந்ததோ இல்லையோ, பிரிட்டனுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவே, அமெரிக்கா யூதர்களை வலுவாக ஆதரிப்பதை பிரிட்டன் அரசு கணக்கில் எடுத்துக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது.

பாலஸ்தீன் என்றில்லை. எந்த அரேபிய தேசமும் அமெரிக்காவை மனத்தளவில் ஆதரிக்காது. ஆகவே, மத்தியக்கிழக்கில் ஒரு யூத தேசம் உருவாவது தனக்கு மிகவும் சாதகமானது என்றே அமெரிக்கா கருதியது. இதனால்தான் வரிந்துகட்டிக்கொண்டு அன்றுமுதல் இன்றுவரை இஸ்ரேலை ஆதரித்து வருகிறது அமெரிக்கா.

சக்திமிக்க தேசங்கள் என்கிற அளவில் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் அப்போது சம பலத்தில் இருந்தன. ஒரே வித்தியாசம் என்னவெனில், அமெரிக்கா ஒரு முதலாளித்துவ தேசம். சோவியத் யூனியன், கம்யூனிச தேசம். பிரிட்டனால் அமெரிக்காவைச் சகித்துக்கொள்ள முடிந்தாலும் முடியுமே தவிர, கம்யூனிஸ்டுகளின் அரசை ஒருக்காலும் சகிக்க முடியாது. இந்தக் காரணத்தாலும் இஸ்ரேல் விஷயத்தில் அமெரிக்காவின் விருப்பமும் நிலைப்பாடும் பிரிட்டன் பொருட்படுத்தத்தக்கவையாக இருந்தன.

இதையெல்லாம் ஏனைய ஐரோப்பிய, ஆசிய தேசங்கள் மிகவும் கூர்மையுடன் கவனித்துக் கொண்டிருந்தன. என்னதான் நடக்கப்போகிறது பாலஸ்தீனில்?

யுத்தம் முடிந்தவுடனேயே பிரிட்டன் பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு முடிவு சொல்லிவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது உண்மை. ஆனால் யுத்தத்தின் முடிவில் உடனடியாகத் தீர்ந்தது பாலஸ்தீன் பிரச்னையல்ல; இந்தியப் பிரச்னை!

ஆகஸ்ட் 15, 1947-ம் ஆண்டு பிரிட்டன், இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டது. இந்தியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து குதூகலித்ததை பாலஸ்தீனிய யூதர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அதே பிரிட்டன் தான் அவர்களுக்கும் ஒரு நல்லது செய்தாகவேண்டும். ஆனால் எப்போதுசெய்யப்போகிறது?

பிரிட்டன் தயாராகத்தான் இருந்தது. ஒரே ஒரு பிரச்னைதான். கொஞ்சம் சிக்கல் மிக்க பிரச்னை. அது தீர்ந்தால் இஸ்ரேல் விஷயத்தைத் தீர்த்துவிடலாம். ஆனால் எப்படித் தீர்ப்பது?

அதைத்தான் யோசித்துக்கொண்டிருந்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26 மே, 2005

52] இரண்டாவது மிகப்பெரிய தவறு

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 52

இரண்டாம் உலகப்போரின் சூடு, ஒட்டுமொத்த உலகத்தையும் தாக்கிக்கொண்டிருந்த நேரம். ஐரோப்பா தொடங்கி ஆப்பிரிக்கா வரை யுத்தத்தின் சத்தம் மிகப் பயங்கரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததால், ஹிட்லரின் யூத இனப்படுகொலைகள் அந்த நேரத்தில் சற்று மெதுவாகவே மக்களுக்குத் தெரியவந்தன. யூதர்கள் மட்டும் தாம் வாழும் தேசங்களில் ஹிட்லருக்கு எதிரான போராட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டம் என்று அமர்க்களப்படுத்தி விஷயத்தை அவ்வப்போது தெரியப்படுத்திக்கொண்டிராவிட்டால், ஒருவேளை இன்றைக்குக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச விவரங்கள்கூட கிடைக்காமலே போயிருக்கக்கூடும்.

என்ன செய்து ஹிட்லரிடமிருந்து தப்பிக்கலாம் என்பதுதான் அன்றைக்கு ஒட்டுமொத்த யூதகுலத்தின் ஒரே கவலையாக இருந்தது. யாராலுமே நெருங்கமுடியாத, யாருமே எதிர்க்கமுடியாத ஒரு ராட்சஸ சக்தியாக அவர் இருந்தார். குரூரம் மட்டும் அவரது குறைபாடல்ல. மாறாக, அவர் ஒரு முழு முட்டாளாகவும் இருக்க நேர்ந்தது துரதிருஷ்டம்தான். எடுத்துச் சொல்லப்படும் எந்த விஷயமும் ஹிட்லரின் சிந்தனையைப் பாதிக்காது என்பது தெரிந்தபிறகு அவரிடம் பேசுவதற்குக்கூட யாரும் முன்வரவில்லை. ஹிட்லர் ஆதரவுத் தலைவர்கள், ஹிட்லர் எதிர்ப்புத் தலைவர்கள் என்றுதான் இருந்தார்களே தவிர, நல்லவிதமாகப் பேசி அவரைச் சரிப்படுத்தும் நிலையில் யாருமே இல்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாகும்.

இது அன்றைக்கு மற்ற யாரையும்விட, பாலஸ்தீன் மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.

ஏற்கெனவே உலகெங்கிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனை நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். கட்டுப்படுத்தவே முடியாத ஒரு மாபெரும் இனப்பெயர்ச்சியாக இருந்தது அது. ஹிட்லர் ஒருவேளை தன் திட்டப்படி ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் கபளீகரம் செய்துவிட்டால் வேறு வழியே இல்லை. அத்தனை லட்சம் ஐரோப்பிய யூதர்களும் தப்பி ஓடிவரக்கூடிய ஒரே இடம் பாலஸ்தீனாகத்தான் இருக்கும்.

சட்டபூர்வமாக அதை ஒரு யூத தேசமாக ஆக்க முயற்சி செய்துகொண்டிருந்த யூதர்களுக்கு, விஷயம் மிகவும் சுலபமாகிப்போகும். ஒரு வாக்கெடுப்பு நடத்தினால்கூட பெரும்பான்மை யூதர்களாகவே அப்போது இருப்பார்கள்.

என்ன செய்யலாம் என்று முஸ்லிம் தலைவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். ஹிட்லரின் யூதப் படுகொலைகளை ஆதரிக்கவோ எதிர்க்கவோ அவர்களுக்கு விருப்பமில்லை. மாறாக, ஹிட்லராவது தங்களுக்கு உதவமாட்டாரா என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்!

அதாவது ஹிட்லர் கொன்றதுபோக, அடித்துத் துரத்தப்படும் யூதர்கள் பாலஸ்தீனுக்கு வந்துவிடாமல் இருக்க ஏதாவது ஒரு வழி வேண்டும் அவர்களுக்கு. பிரிட்டனிடம் இதற்காக உதவி கேட்கமுடியாது. ஏற்கெனவே இஸ்ரேலை உருவாக்குவதற்காக வரிந்துகட்டிக்கொண்டிருக்கும் தேசம் அது. உலகப்போர் தொடங்கிய சமயம் பிரிட்டனின் பிரதமராகப் பொறுப்பேற்ற வின்ஸ்டன் சர்ச்சில், தொடக்கத்திலிருந்தே யூதர்கள் மீது அனுதாபம் கொண்டவராகவே தன்னைக் காட்டிக்கொண்டு வந்தவர். அமெரிக்காவிடம் போகலாமென்றால், அவர்களும் ஜெர்மானிய யூதர்களின் மீது ஏற்பட்ட அனுதாபம் காரணமாக, முழு யூத ஆதரவு நிலை எடுக்கும் கட்டத்தில் இருந்தார்கள். சரித்திர நியாயங்கள் யாருக்கும் அப்போது முக்கியமாகப் படவில்லை. ஹிட்லர் என்கிற தனிமனிதனின் வெறியாட்டத்தால் ஓர் இனமே அழிந்துகொண்டிருக்கிறது; எப்படியாவது, ஏதாவது செய்து யூதர்களைக் காப்பாற்றவேண்டும் என்றுதான் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் சிந்தித்தன.

விசித்திரம் பாருங்கள். அத்தனை தேசங்களுமே ஒவ்வொரு காலகட்டத்தில் யூதப் படுகொலைகளை நிகழ்த்தியவைதான். ஆனால் ஹிட்லர் செய்தவற்றோடு ஒப்பிட்டால், எதுவுமே சாதாரணம்தான் என்று நினைக்கத்தக்க அளவில் நடந்துகொண்டிருந்தது ஜெர்மானிய நாஜிக்கட்சி.

என்ன செய்யலாம்? உட்கார்ந்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள், பாலஸ்தீன் அரேபியர்கள். எப்படியும் போரின் இறுதியில் பிரிட்டன் கூட்டணிப் படைகள் வெற்றி பெற்றுவிட்டால் இஸ்ரேலை உருவாக்காமல் விடமாட்டார்கள் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. போரில் பிரிட்டன் தோற்கவேண்டும் என்று கடவுளையா வேண்டிக்கொள்ளமுடியும்? பிரிட்டன் தோற்பதென்றால் ஹிட்லர் ஜெயித்தாகவேண்டும். ஹிட்லர் ஜெயித்தால் யூதர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் நாசமாவது தவிர, வேறு வழியே இல்லை.

ஆனாலும் முஸ்லிம்களுக்குக் கொஞ்சம் நிம்மதி கிடைக்கலாமென்று அவர்கள் நினைத்தார்கள். குறைந்தபட்சம், யூதர்களுக்கு எதிரான ஒரு காரியம் செய்கிறோம் என்கிற சந்தோஷத்திலாவது ஹிட்லர் தமக்கு உதவலாம் என்பது அவர்கள் எண்ணம்.

மறுபுறம், உலகப்போரில் பிரிட்டனை மிகப் பலமாக ஆதரித்த யூதகுலத்தவர்கள், ஆயிரமாயிரம் பேராக, சுயமாக பிரிட்டனை அணுகி, படையில் தம்மைச் சேர்த்துக்கொள்ளக் கேட்டு நிற்கத் தொடங்கினார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது வாழ்வா, சாவா யுத்தம். ஹிட்லருக்கு எதிராக யார் திரண்டாலும் தமது ஆதரவு அவர்களுக்கு உண்டு என்பது மட்டும்தான் யூதர்களின் நிலைப்பாடு.

யூத தேசிய காங்கிரஸின் அப்போதைய தலைவராக இருந்தவர் டேவிட் பென்குரியன். பிரிட்டனுடன் மிக நெருக்கமான அரசியல் உறவு கொண்டவர். பல உரசல்களைத் தாண்டியும் நெருக்கம் குலையாத உறவு அது. பிரிட்டன் மிகவும் வெளிப்படையாக இஸ்ரேல் உருவாக்கப்படும் என்பதை அறிவிக்க வேண்டுமென்று அப்போது வற்புறுத்திவந்தவர் குரியன். சர்ச்சிலோ, ‘யுத்தம் முடிந்தபிறகு அதைப் பற்றிப் பேசலாம்; இப்போது வேண்டாம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

எப்படியும் சர்ச்சில் செய்துவிடுவார் என்பது குரியனுக்குத் தெரியும். ஆனாலும் போரின் தன்மை எப்படி மாறும் என்று கணிக்கமுடியாமல் இருந்தது. உண்மையில், அமெரிக்கா யுத்தத்தில் இறங்கும்வரை, ஹிட்லரின் கைதான் மேலோங்கியிருந்தது. இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினியுடன் சேர்ந்துகொண்டு, இன்னொரு பக்கம் ஜப்பான் உதவிக்கு இருக்கிற தைரியத்தில் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தது அவரது ராணுவம். ஜெர்மனியின் உண்மையான பலம் இவை மட்டுமல்ல. பொறியியல் துறையில் அந்தக் காலத்தில் கிட்டத்தட்ட தன்னிறைவு கண்டிருந்த தேசம் அது. ஆயுதங்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பிலும் பிரயோகத்திலும் மற்ற தேசங்கள் எதுவும் நெருங்கமுடியாத தரத்தைத் தொட்டுவிட்டிருந்தது ஜெர்மனி.

இந்த தைரியம்தான் ஹிட்லரை எதைக் கண்டும் பயப்படாத மனநிலைக்குக் கொண்டுசேர்த்திருந்தது. ஜெர்மனியின் ஒவ்வொரு குடிமகனும் தனது படைவீரன்தான் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். கட்டாய ராணுவ சேவை அமலில் இருந்தது பெரிய விஷயமல்ல. முதியோர், பெண்கள் உள்பட ஜெர்மானியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஏதாவது விதத்தில் யுத்தத்தில் பங்கெடுக்கவேண்டுமென்பதை அவர் மிகவும் வற்புறுத்தினார். ஆள்பலமும் ஆயுதபலமும் அவரைக் கிரக்கம் கொள்ளச் செய்தன. இயல்பான முரட்டுத்தனமும் வெறியும் அவரைச் செலுத்திக்கொண்டிருந்தன.

இதுதான் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஓரளவு நம்பிக்கையளித்த விஷயம். பிரிட்டன், அமெரிக்க, பிரான்ஸ் கூட்டணி நாடுகள் ஒருபோதும் தம்மை ஆதரிக்கப்போவதில்லை என்பது தெளிவானதுமே பாலஸ்தீன் அரேபியர்கள் ஹிட்லரை ஆதரித்துவிடலாமென்று முடிவு செய்தார்கள்.

அரேபியர்கள் தமது சரித்திரத்தில் செய்த இரண்டாவது மிகப்பெரிய தவறு இது. அவர்கள் செய்த முதல் தவறு, யூத நில வங்கிகளின் நோக்கம் தெரியாமல் தங்கள் நிலங்களை இழந்தது. இரண்டாவது இது.

பிரிட்டனின் காலனிகளுள் ஒன்றாக இருந்த பாலஸ்தீனில் அப்போது முஸ்லிம்களுக்கென்று பிரமாதமான அமைப்பு பலமோ, நட்பு பலமோ கிடையாது. அவர்கள் சிதறிய பட்டாணிகளாகத்தான் இருந்தார்கள். எல்லோருக்கும் பொதுவான ஒரே விஷயம் எல்லோருமே யூதர்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதுதான்.

முகம்மது அமீன் அல் ஹுஸைனி என்பவர் அன்றைக்கு பாலஸ்தீன முஸ்லிம்கள் சமூகத்தின் தலைவராக இருந்தார். 1893-ம் வருடம் ஜெருசலேமில் பிறந்தவர் இவர். மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பணக்காரர் என்றால் ஒட்டாமான் சாம்ராஜ்ஜியத்திலேயே மிகப்பெரிய பணக்காரக் குடும்பம் என்று பெயர்பெற்ற அளவுக்குப் பணக்காரர்.

தமது சொத்து சுகங்கள் முழுவதையும் கொடுத்தாவது பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிம்மதியைத் தேடித்தரமுடியுமா? என்று பாடுபட்டுக்கொண்டிருந்தவர் அவர். இந்தக் குணங்களால் அவரை மக்கள் ‘கிராண்ட் முஃப்தி’ என்று அழைத்தார்கள். அவர் சொன்ன பேச்சைக் கேட்டார்கள்.

புத்திசாலி; திறமைசாலி; பொதுநல நோக்குக் கொண்டவர், அரசியலில் தெளிவான பார்வை உள்ளவர் என்று எத்தனையோ விதமாகப் பாராட்டப்பட்ட ஹுசைனிதான் அந்தத் தவறைச் செய்தார்.

உலகப்போரில் ஹிட்லருக்கு ஆதரவு!

மனித மனங்களின் விசித்திரங்களைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவேண்டும். ஹிட்லர் எத்தனை ஆபத்தான மனிதர் என்று பாலஸ்தீன் அரேபியர்களுக்குத் தெரியாதா? நிச்சயம் தெரியும். ஆனாலும் அந்த நேரத்தில் தங்களுக்கு உதவ அவரைவிட்டால் வேறு ஆள் இல்லை என்று அவர்கள் நினைத்ததற்குக் காரணம், ஹிட்லருக்கு யூதர்களைப் பிடிக்காது என்பது மட்டும்தான்!

ஹுஸைனி, ஜெர்மனிக்குப் போய் ஹிட்லரைச் சந்தித்துப் பேசினார். யுத்தத்தில் பாலஸ்தீன் முஸ்லிம் சமூகத்தினர் முழு மனத்துடன் அவரை ஆதரிப்பார்கள் என்று வாக்குக் கொடுத்தார். சிறிய அளவிலாவது ஒரு ராணுவத்தைத் திரட்டித் தர தம்மால் முடியும் என்றும் சொன்னார்.

யுத்தம் மிகத்தீவிர முகம் கொள்ளத்தொடங்கியது. முஸ்லிம்கள் தம் தலையில் தாமே மண்ணை வாரிக்கொட்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 22 மே, 2005

Monday, May 16, 2005

51] ஹிட்லரின் விஷவாயு கொலைக்கூடங்கள்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 51

முதன்முதலில் ஹிட்லரை சந்தோஷப்படுத்துவதற்காகத்தான் நாஜிகள், யூதர்களைக் கொல்ல ஆரம்பித்தார்கள். பிறகு, யூத ஒழிப்பு என்பது ஜெர்மானிய அரசின் தலையாய செயல்திட்டங்களுள் ஒன்றானபோது, பார்க்கும் இடங்களில் தென்படும் அத்தனை யூதர்களையும் கொன்றார்கள். ஒரு கட்டத்தில், ஹிட்லரின் சந்தோஷம், தேசிய செயல்திட்டம் என்பதையெல்லாம் தாண்டி, யூதர்களைக் கொல்வதென்பது, ஜெர்மானிய நாஜிகளுக்கு ஒரு நோய் போலவே ஆகிவிட்டது. ரத்தத்தில் கலந்துவிட்ட தொற்றுநோய். பொழுது விடிந்து பொழுதுபோனால், இன்றைக்கு எத்தனை பேரைக் கொல்வது என்று கவலையுடன் சிந்திக்கத் தொடங்கிவிடுகிற அளவுக்குக் கொலைவெறி அவர்களைத் தின்றுகொண்டிருந்தது.

இந்த வெறியின் உச்சகட்ட வெளிப்பாடு, ஹிட்லரின் போலந்து படையெடுப்பைத் தொடர்ந்து தலைவிரித்து ஆடத்தொடங்கியது.

ஆங்காங்கே சில நூறு பேர், ஆயிரம் பேர் என்று நிற்கவைத்துச் சுட்டுக்கொல்வது, நாஜிகளுக்கு அலுத்துவிட்டது. கொல்லத்தான் போகிறோம்; ஏதாவது புதுமையாக யோசித்து அதையும் கலாபூர்வமாகச் செய்யலாமே என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.

8 டிசம்பர், 1941-ம் ஆண்டு அது நடந்தது. ஜெர்மன் ராணுவம் கைப்பற்றிய போலந்தின் எல்லையோர கிராமம் ஒன்றில் இருந்த மக்களை வெளியேற்றிவிட்டு வீடுகளையெல்லாம் இடித்துத் தள்ளி, ஒரு பெரிய மரக் கூடாரத்தைக் கட்டினார்கள். ஒரே சமயத்தில் சுமார் ஆறாயிரம் பேர் வரை அந்த மர வீட்டில் வசிக்கலாம். அத்தனை பெரிய கட்டடம்.

கட்டுமானப்பணி நான்கு தினங்களுக்குள் நடந்துமுடிந்துவிட்டது. எல்லாம் தயார் என்று ஆனதும், சுற்றி இருந்த சுமார் எட்டு கிராமங்களுக்குப் போய் அங்கெல்லாம் வசித்துக்கொண்டிருந்த சுமார் நான்காயிரத்து ஐந்நூறு யூதர்களைக் கைது செய்து அழைத்து வந்து அந்த மர வீட்டினுள் அடைத்தார்கள்.

மூச்சுவிடக்கூட காற்று நுழையமுடியாதபடி கட்டப்பட்டிருந்த கொலைக்களம் அது. நான்கு புறங்களிலும் தலா ஒரே ஒரு வட்ட வடிவ ஓட்டை மட்டுமே இருந்தது. அந்த ஓட்டைகளின் வழியே பெரிய பைப்லைன் ஒன்று உள்ளே செல்லும்படி அமைக்கப்பட்டது. தப்பிக்க வழியேதும் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, அந்தக் குழாய்களின் வழியே விஷவாயுவை உள்ளே செலுத்தத் தொடங்கினார்கள்.

அத்தனை பெரிய கொலைக்களம் முழுவதும் இண்டு இடுக்கு விடாமல் விஷவாயு நிறைவதற்குச் சரியாக நான்கு தினங்கள் பிடித்தன.

உள்ளே குழுமியிருந்த நான்காயிரத்து ஐந்நூறு யூதர்களும் ஒவ்வொருவராக மூச்சுத் திணறி, ஓலக்குரல் எழுப்பி, செத்து விழுவதை வெளியிலிருந்து ரசித்துக் கேட்டபடி ஜெர்மானியக் காவல்துறையினர் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். உள்ளே அடைக்கப்பட்டவர்களுள் ஒருவர்கூட உயிருடன் இல்லை என்பது தெரிந்தபிறகுதான் அவர்கள் கதவைத் திறந்தார்கள். (கதவு திறக்கப்பட்டபோது வெளியேறிய விஷப்புகையில் யூதரல்லாத சில போலந்து கிராமவாசிகளும் மடிந்துபோனார்கள்.)

இப்படி அடைத்துவைத்து அணு அணுவாகக் கொல்வது மிகவும் சுலபமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறதே என்று எண்ணிய ஜெர்மானிய காவல்துறையினர், இன்னும் நாலாயிரம் பேரைப் பிடித்துவா என்று ஒரு தனிப்படையை வேறு நான்கு கிராமங்களுக்கு உடனே அனுப்பினார்கள்.

அந்தக் கொலைக்கூடத்துக்கு செம்னோ (Chelmno) என்று பெயர். முதல் நாலாயிரம் பேர் அங்கே மரணமடைந்த ஒரு வார காலத்துக்குள் அடுத்து பத்தாயிரம் யூதர்கள் அதனுள்ளே அடைக்கப்பட்டு விஷப்புகைக்கு பலியானார்கள். ஒரு சிறு பிசிறு கூட இல்லாமல் யூதர்களை இந்த முறையில் கொல்லமுடிகிறது என்கிற தகவலை, ஜெர்மனியின் அத்தனை காவல் அதிகாரிகளுக்கும் உடனடியாகத் தெரிவிப்பதற்காக ஒரு மாநாடு கூட்டினார்கள். பெர்லினில் நடைபெற்ற அந்த மாநாட்டின் இறுதியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, எங்கெல்லாம் ஹிட்லரின் ராணுவம் வெற்றி வாகை சூடியபடி போய்க்கொண்டிருக்கிறதோ, அங்கெல்லாம் உடனடியாக ஒரு கேஸ் சேம்பர் கட்டிவிடுவது. புதுக்குடித்தனம் போவதற்குமுன் வீட்டைப் பெருக்கி, வெள்ளையடித்து சுத்தம் செய்வது போல, ஒவ்வொரு தேசத்திலும் உள்ள அத்தனை யூதர்களையும் அந்தக் கொலைக்களத்துக்குக் கொண்டுபோய் கொத்தாகக் கொன்றுவிடுவது.

இந்தத் திட்டம் மட்டும் ஒழுங்காக நடந்துவிடுகிற பட்சத்தில் ஓரிரு வருடங்களில் ஐரோப்பாவில் ஒரு யூதர்கூட உயிருடன் இருக்கமுடியாது என்று கணக்குப் போட்டு வேலையை ஆரம்பித்தார்கள். அதற்கு முன்னால் ஒவ்வொரு ஐரோப்பிய தேசத்திலும் எத்தனை யூதர்கள் இருக்கிறார்கள், எந்தெந்தப் பகுதிகளில் அவர்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்கிற பட்டியல் வேண்டும் என்று காவல்துறை மேலிடம் கேட்டது.

இதற்கென்று ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, ரகசியமாக ஒவ்வொரு ஐரோப்பிய தேசத்திலும் வசிக்கும் யூதர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க அனுப்பினார்கள். குடியேற்றத்துறை, சுங்கத்துறை, நகரசபைகளில் ஆங்காங்கே ஆட்களைப் பிடித்து லஞ்சம் கொடுத்து, முன்னதாக அந்தந்த நாடு, நகரங்களில் வசிக்கும் யூதர்கள் குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டன. நன்றாக கவனிக்க வேண்டும். இதெல்லாம் ஜெர்மனிக்குள் நடந்த விஷயங்கள் அல்ல. ஒட்டுமொத்த ஐரோப்பிய தேசங்களிலும் ஆள் வைத்து தகவல் சேகரித்துக்கொண்டிருந்தது, ஜெர்மானியக் காவல்துறை.

‘யூதர்கள் விஷயத்தில் இறுதித்தீர்வு’ என்று ஒரு தலைப்பே இதற்கு வைத்து, தனியே ஒரு ஃபைல் போட்டு, கவனிப்பதற்கு அதிகாரிகளை நியமித்து ஒரு அரசாங்கத் திட்டமாகவே இது செயல்படுத்தப்பட்டது. பிரிட்டன் உள்பட எந்த தேசத்தையும் ஹிட்லர் விட்டுவைக்க விரும்பவில்லை. கிழக்கே சோவியத் யூனியனிலிருந்து மேற்கே அமெரிக்கா வரை அத்தனை தேசங்களிலும் வசிக்கும் அத்தனை யூதர்களையும் கொன்றுவிட்டு, உலகம் முழுவதும் ஆரியக்கொடியை பறக்கவிடுவேன் என்று வீர சபதம் செய்திருந்தார் அவர்.

1942-ம் ஆண்டு போலந்தில் ஹிட்லரின் படை கட்டிய ‘செம்னோ’ கொலைக்களம் மேலும் விரிவு படுத்தப்பட்டது. ஒரு தாற்காலிகக் கூடாரமாக முன்னர் கட்டப்பட்ட அந்த கேஸ் சேம்பர், நன்கு திட்டமிடப்பட்டு மிகவும் உறுதிமிக்க கட்டடமாக, இன்னும் பெரிய அளவில் இன்னும் நிறைய வசதிகளுடன் (உள்ளே அனுப்பப்படுபவர்களுக்கல்ல; அனுப்புகிறவர்களுக்கு!) அதிநவீன கொலைக்களமாக திருத்திக் கட்டப்பட்டது. கூடவே மேலும் மூன்று கொலைக் களங்கள் மிக அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டன. (இவை, ஜெர்மனி - போலந்து எல்லைப் பகுதியில் உள்ள Belzec, Sobibor, Treblink ஆகிய நகரங்களில் கட்டப்பட்டன.)

உலகப்போரில் ஜெர்மன் ராணுவத்தினர் வெற்றி கண்டு, போகும் வழியெல்லாம் வசிக்கும் யூதர்களை உடனடியாகக் கைதுசெய்து மிகப்பெரிய டிரக்குகளிலும் கூட்ஸ் வண்டிகளிலும் ஏற்றி, இந்தக் கொலைக்களங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். வாகனங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டபோது மாமிசங்களையும் கால்நடைகளையும் ஏற்றிப்போகும் கார்கோ பெட்டிகளில் அடைத்தும் கூட்ஸ் வண்டிகளில் இணைத்து அனுப்பிவிடுவார்கள். வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டால், அது அவர்களின் நல்லகாலம். இல்லாவிட்டால் விஷப்புகை மரணம். வேறு வழியே இல்லை.

இப்படிக்கூட நடக்குமா என்று நினைத்துப் பார்த்தாலே ரத்தக்கண்ணீர் வரத்தக்க கொடூரத்தின் விஸ்வரூபம் அது. செய்யும் கொலைகள் குறித்த குற்ற உணர்ச்சி ஹிட்லருக்கு வேண்டுமானால் இல்லாதிருந்திருக்கலாம். அவரது ஆட்கள் அத்தனை பேருமா ஈவிரக்கமற்றவர்களாக இருந்திருப்பார்கள்?

இதுவும் விசித்திரம்தான். ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்தக் காட்சிகள் ஓரளவு நினைவிருக்கலாம். ஹிட்லரின் ராணுவத்தில் பணியாற்றிய ஷிண்ட்லர் என்கிற ஒரு தனிநபர், யூதர்கள் விஷயத்தில் சற்றே மனிதாபிமானமுடன் நடந்துகொண்டதைச் சித்திரித்து, ஆஸ்கர் விருது பெற்ற படம் அது. இன்னும் ஓரிரு ஷிண்ட்லர்கள் இருந்திருக்கக்கூடும். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வெறும் காட்டுமிராண்டிகளின் கூட்டம் என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. முன்பே சொன்னதுபோல, இது ஒரு கடமை என்பதைத் தாண்டி ஒரு நோயாக அவர்கள் மனமெங்கும் பரவிவிட்டிருந்ததுதான் மிக முக்கியக் காரணமாகப் படுகிறது.

மார்ச் 1942-ம் வருடம் ஹிட்லர் தனது ஐந்தாவது கொலைக்களத்தைக் கட்டுவித்தார். இதற்கு ‘ஆஸ்விச்’ (Auschwitz) என்று பெயர்.

முந்தைய நான்கு கேஸ் சேம்பர்களுக்கும் இந்த ஆஸ்விச் சேம்பருக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் இங்கே அனுப்பப்படும் யூதர்கள் உடனடியாகக் கொல்லப்படமாட்டார்கள்.

மாறாக, சில காலம் அந்தச் சிறைக்கூடத்தில் தினசரி ஒரே ஒரு ரொட்டித்துண்டை உண்டு உயிர்வாழ அவர்களுக்கு அனுமதி உண்டு.

எதற்காக இந்தச் ‘சலுகை’ என்றால், இங்கே கொண்டுவரப்படும் யூதர்கள் அத்தனைபேரும் பார்ப்பதற்கு திடகாத்திரமாக இருப்பார்கள். நோயாளிகள், நோஞ்சான்களை மற்ற நான்கு முகாம்களுக்கு அனுப்பிவிட்டு, திடகாத்திர யூதர்களை மட்டும் இங்கே கொண்டுவந்து தங்கவைத்து, அவர்களின் உடல் உறுதியைப் பரிசோதிப்பார்கள். உணவில்லாமல், நீரில்லாமல் அவர்களால் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடிகிறது என்று பார்ப்பார்கள்.

பதினைந்து நாட்களுக்கு மேல் ஒரு மனிதன் அந்த ஒரே ஒரு ரொட்டித்துண்டை உண்டு, ஓரளவு ஆரோக்கியமாகவே இருந்துவிட்டால், அவனது உயிர் போகாது. மாறாக, ஜெர்மானிய அதிகாரிகளுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அடிமைகளாகப் பணியாற்றவேண்டும்.

யூதர்கள் அத்தனை பேரையும் கொன்றுவிடவேண்டும் என்று செயல்திட்டம் வகுத்துவிட்டு, அவர்களை அடிமைகளாக வைத்துக்கொள்வது எப்படி? இதற்கு ஒரு ஜெர்மானிய காவல்துறை அதிகாரி சொன்ன பதில் : “விநாடிப்பொழுதில் கொன்றுவிடலாம். ஆனால் துளித்துளியாக் கொல்வதில் உள்ள சுகம் அதில் இல்லை. அதனால்தான் அவர்களை அடிமைகளாக்குகிறோம்.”

இதனிடையில் ‘ஆஸ்விச்’ முகாமுக்கு அனுப்பப்படும் யூதர்களைக் கொல்வதில்லை என்கிற செய்தி ஏனைய அப்பாவி யூதர்களுக்குப் போய்ச்சேர்ந்திருந்தது. கைது செய்யப்படும் யூதர்கள், எப்படியாவது தங்களை ஆஸ்விச் முகாமுக்கு அனுப்பவேண்டும் என்பதற்காக ஜெர்மானியக் காவல்துறையினருக்கு ஏராளமாக லஞ்சம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாக மரணமில்லை என்கிற உத்தரவாதமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது அப்போது!

இந்த வகையில் சில நூறு யூதப் பெண்கள், இரண்டாயிரத்தைந்நூறு குழந்தைகள், எண்பது கிழவர்கள் ஆகியோர் ஆஸ்விச்சுக்கு வந்து சேர்ந்தார்கள். இது நடந்தது 1942-ம் ஆண்டு மே மாதத்தில்.

முகாம் அதிகாரிகளுக்கு மிகவும் குழப்பமாகிப்போனது. திடகாத்திரமானவர்களை மட்டும்தானே இங்கே அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்; எதற்காக பெண்களும் கிழவர்களும் குழந்தைகளும் வருகிறார்கள் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ஒருவேளை மற்ற முகாம்களில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ; உடனடியாகக் கொன்று ‘இடத்தை காலியாக்கி’ வைத்துக்கொள்வதற்காக இப்படியரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து, அந்தக்கணமே அந்த முகாமுக்கு வருகிறவர்களுக்கு ஒரு ரொட்டி கொடுக்கிற வழக்கத்தை நிறுத்திவிட்டார்கள்.

மாறாக, அந்த பேட்சில் வந்த பெண்கள், குழந்தைகள், கிழவர்களை உள்ளே அனுப்பி, பழையபடி விஷப்புகையைப் பரவவிடத் தொடங்கிவிட்டார்கள்.

இறப்பதற்கு லஞ்சம் கொடுத்துவிட்டு வந்து சேர்ந்த அந்த அப்பாவி யூதர்கள் அந்தக் கணமே காலமாகிப்போனார்கள்!

இவர்கள் கொஞ்சகாலமாவது உயிர்பிழைத்திருப்பதற்காக லஞ்சம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்கிற தகவலோ, வருபவர்களை மேலதிகாரிகள் யாரும் பார்த்து அனுப்பிவைக்கவில்லை; திருட்டுத்தனமாக அங்கே வந்திருக்கிறார்கள் என்பதோ அடுத்த இரண்டு வருடங்கள் வரை அங்கிருந்த அதிகாரிகளுக்குத் தெரியவே தெரியாது. யாரும் விசாரிக்கக்கூட இல்லை.

அடிமைகளை உருவாக்குவதற்காகவென்று கட்டப்பட்ட அந்த சிறைச்சாலை, மற்றவற்றைப் போலவே உடனடி கொலைக்களமாக மாறி, அடுத்த இரண்டு வருடங்களில் சுமார் பத்துலட்சம் பேருக்கு விஷவாயு மோட்சம் அளித்தது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 19 மே, 2005

Saturday, May 14, 2005

50] ஹிட்லரால் அழிக்கப்பட்ட யூதர்கள்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 50

ஹிட்லரின் யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம் எத்தகையது என்பதை எத்தனை பக்கங்கள் வருணித்தாலும், அதன் முழு வீரியத்துடன் புரிந்துகொள்வது கஷ்டம். ஹிட்லரின் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே அது புரியும். அதுகூட ஓரளவுக்குத்தான். ஹிட்லர் காலத்து ஜெர்மானிய யூதர்களுக்கு மட்டுமே தெரிந்த பேயாட்டம் அது. ஒரு யூதரை முதல் முறையாகப் பார்க்கும்போதே, அவர் பிணமாக இருந்தால் எப்படியிருப்பார் என்று சிந்திக்கத் தொடங்கிவிடுகிற கூட்டமாக இருந்தது நாஜிக்கட்சி. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், சாதனையாளர்கள் என்று எந்த விதமாகவும் அவர்கள் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. யூதர் என்கிற ஓர் அடையாளம் போதுமானதாக இருந்திருக்கிறது.

துப்பாக்கியால் சுடுவது, கத்தியால் அங்கம் அங்கமாக வெட்டியெடுத்துக் கொல்வது, ஆசை ஆசையாக பெட்ரோல் ஊற்றிப் பற்றவைத்து வேடிக்கை பார்ப்பது, கொதிக்கும் வெந்நீர்த் தொட்டிகளில் போட்டு, உடல் பொசுங்கிப்போவதை ரசிப்பது, விஷவாயு அறைகளில் கூட்டம் கூட்டமாக நிர்வாணப்படுத்தி நிற்கவைத்து, மூச்சுத்திணறி ஒவ்வொருவராக விழுவதைப் பார்த்து மகிழ்வது, சிறு பிளேடு அல்லது ரம்பம் கொண்டு மேல் தோல் முழுவதையும் அறுத்து, உரித்தெடுப்பது என்று எத்தனை விதமான குரூரங்கள் சாத்தியமோ, அத்தனையையும் அவர்கள் யூதர்களின்மீது பிரயோகித்தார்கள்.

எதுவுமே பதிவாகாத கொலைகள். கொன்றது அனைத்தும் காவல்துறையினர் என்பதால் நீதிமன்றங்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. அல்லது ‘இன்னார் காணவில்லை’ என்று காவல்துறையினர் ஒவ்வொரு யூதருக்கும் வழங்கும் இறுதிச் சான்றிதழுக்கு ஒப்புதல் தரும் வேலையை மட்டும் நீதிமன்றங்கள் செய்துவந்தன.

1939 செப்டம்பருக்கு முன்புவரை யூதப் படுகொலைகள் ஒரு சம்பிரதாயத்துக்காக, ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. அதாவது கைது செய்து சித்திரவதைக் கூடங்களுக்கு அழைத்துச் சென்று கொலை செய்தார்கள். ‘ஆமாம், கொன்றோம், அதற்கென்ன?’ என்று நேரடியாகக் கேட்காமல், காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். (அப்போது பல யூதர்கள் திருட்டுத்தனமாக தேசத்தை விட்டு வெளியேறி, அகதிகளாகப் பல நாடுகளுக்குப் போய்க்கொண்டிருந்ததால், தாங்கள் கொல்லும் யூதர்களை சுலபமாக அப்படிக் காணாமல் போனவர்களின் பட்டியலில் நாஜிகளால் சேர்க்க முடிந்தது.)

ஆனால் எப்போது ஜெர்மனி, போலந்தின் மீது படையெடுத்ததோ (செப்டம்பர் 1939), அப்போதிலிருந்து இந்த வழக்கம் அடியோடு மாறிவிட்டது. எப்படியும் ஹிட்லர்தான் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஆளப்போகிறவர் என்கிற தீர்மானத்தில், செய்கிற கொலைகளை பகிரங்கமாகவே செய்யலாம் என்று ஜெர்மானிய காவல்துறை முடிவு செய்துவிட்டது.

இதன்பிறகு அவர்கள் விசாரணைக்கு என்று எந்த யூதரையும் தனியே அழைத்துச் செல்வதை விட்டுவிட்டார்கள். பொழுது விடிந்ததும் நேரே ஏதாவது ஒரு யூதக் காலனிக்குப் போவார்கள். அல்லது யூத தேவாலயத்துக்குச் செல்வார்கள். கண்ணில் தென்படும் நபர்களிடம் ‘நீங்கள் யூதர்தானே?’ என்று கேட்பார்கள்.

எந்த யூதரும் தன்னை ஒரு யூதரல்லர் என்று சொல்லமாட்டார். உயிரே போனாலும் அவர் வாயிலிருந்து அப்படியரு வார்த்தை வராது.

ஆகவே, அவர் தலையாட்டுவார். அவ்வளவுதான். அப்படியே போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் நிற்கச் சொல்லிவிட்டு இரண்டடி பின்னால் போய் சுட்டுச் சாய்த்துவிட்டு அடுத்தவரிடம் போய்விடுவார்கள்.

இதில் ஒரு சொல்கூட மிகையே இல்லை. இப்படித்தான் நடந்ததாக அத்தனை மேற்கத்திய சரித்திர ஆசிரியர்களும் வருணித்திருக்கிறார்கள். வீடுகள், தேவாலயங்கள், வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள் என்று எங்கெல்லாம் யூதர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஹிட்லரின் கூலிப்படையினர் போல் செயல்பட்ட காவல்துறையினர் சென்று, கொத்துக்கொத்தாகக் கொன்று சாய்த்துக்கொண்டிருந்தார்கள்.

“என்னை ஏன் கொல்கிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்?” என்று இறப்பதற்கு முன் பெர்லின் நகரத்து யூதர் ஒருவர் கேட்டதற்கு, ஹிட்லரின் காவலர் ஒருவர் சொன்ன பதில்:

“நீங்கள் கொலைக்குற்றவாளியாக இருந்தால் கூட மன்னித்துவிடலாம். யூதராக அல்லவா இருக்கிறீர்கள்! வேறு வழியே இல்லை. இறந்துவிடுங்கள்.’’

ஹிட்லரின் போலந்துப் படையெடுப்பு நடந்துகொண்டிருந்த முதல் வாரத்தில் மட்டும் மொத்தம் பத்தாயிரம் யூதர்கள் ஜெர்மனியில் கொல்லப்பட்டார்கள். கொலை செய்யப்பட்ட அத்தனை பேரையும் ஆங்காங்கே சிறு சிறு குன்றுகள் போல் குவித்துவைத்து மொத்தமாக எரித்துவிட்டது காவல்துறை. இதில் சுமார் இரண்டாயிரம் பெண்களும் நானூற்றைம்பது குழந்தைகளும் அடக்கம்.

போலந்தை ஹிட்லர் தன்வசப்படுத்திவிட்ட செய்தி கிடைத்த மறுகணமே மேலும் முந்நூறு யூதர்கள் கொல்லப்பட்டார்கள். நம் ஊரில் ஏதாவது சந்தோஷமான காரியம் நடக்கிறதென்றால் பட்டாசு வெடிப்போம் அல்லவா? அந்த மாதிரி அங்கே மகிழ்ச்சியைக் கொண்டாடுவதென்றால் யூதர்களைக் கொல்லவேண்டும் என்பது ஒரு ‘கலாசாரமாக’ இருந்தது!

இத்தனைக்கும், உயிர்பிழைப்பதற்காக போலந்தின் மேற்கு எல்லையிலிருந்து (மேற்கு போலந்தைத்தான் அப்போது ஹிட்லர் வென்றிருந்தார்.) கிழக்கு எல்லைக்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய யூதர்கள் அவர்கள். அவர்கள் ஓடிய பாதையெங்கும் இருந்த கட்டடங்களின் மாடிகளில் காத்திருந்த நாஜிப்படை, கிட்டே நெருங்கும்போது சுட்டு வீழ்த்தினார்கள். போலந்தின் சாலைகளெங்கும் ரத்தக் குளங்கள் ஆயின. வேகத்தடைகள் போல ஆங்காங்கே மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. நெருங்குவதற்கு பயந்துகொண்டு நாய்களும் நரிகளும் வல்லூறுகளும்கூட அந்தப் பிரதேசத்துக்குள் நுழையவில்லை என்று எழுதுகிறார்கள் பல சரித்திர ஆசிரியர்கள்.

எப்படியாவது சோவியத் யூனியனுக்குள் நுழைந்துவிட வேண்டுமென்பதுதான் அப்போது போலந்துவாழ் யூதர்களுக்கு இருந்த ஒரே லட்சியம். ஒவ்வொரு அடியாக ரகசியமாக எடுத்துவைத்து அவர்கள் சோவியத் யூனியனை நோக்கித்தான் அப்போது முன்னேறிக்கொண்டிருந்தார்கள். ஹிட்லர், ரஷ்யாவுக்குள் காலெடுத்து வைப்பது கஷ்டம் என்பது அவர்களின் நம்பிக்கை. அத்தனை சீக்கிரம் அவரால் ரஷ்யாவின் மீதெல்லாம் படையெடுக்க முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ரஷ்யாவின் காலநிலை, ராணுவபலம் உள்ளிட்ட பல காரணங்கள் அதற்கு இருந்தன. ஆனால் போலந்து யூதர்களை ரஷ்யா மனமுவந்து ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

சட்டவிரோதமாகவாவது ரஷ்ய எல்லையை அடைந்துவிட்டால் பிரச்னையில்லை; ரஷ்யச் சிறைச்சாலைகளில் எஞ்சிய காலத்தைக் கழிக்க நேர்ந்தாலும் பரவாயில்லை; உயிர் பிழைத்திருந்தால் போதும் என்று நினைத்தார்கள். எல்லையைக் கடக்க சில ஏஜெண்டுகளின் உதவியைக் கோரிவிட்டு வீடுகளுக்குள் பதுங்கியிருந்தார்கள் போலந்து யூதர்கள்.

இதையறிந்த ஹிட்லரின் படை, உடனடியாக போலந்து முழுவதும் ஆங்காங்கே தாற்காலிக சித்திரவதைக் கூடங்களை நிறுவி, உள்ளே விஷக் கிருமிகளையும் விஷ வாயுவையும் பரப்பி வைத்துவிட்டு, அனைத்து யூதக் குடியிருப்புகளின் மீதும் தாக்குதலைத் தொடங்கியது. உயிர்தப்பி ஓடிவருவோர் அனைவரையும், காத்திருக்கும் ஹிட்லரின் படையினர் கைதுசெய்து உடனடியாக அந்தத் தாற்காலிகக் கூடங்களுக்குள் அடைத்துவிடுவார்கள்.

நூற்றுக்கணக்கானோர் இப்படி பலியாகியிருக்கிறார்கள். சில ஆயிரம்பேர் வாழ்நாள் முழுவதும் தீராத சரும, இருதய, நுரையீரல் நோயாளிகளாக மாறி அவஸ்தைகளுடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 1940-ல் ஹிட்லர், டென்மார்க்கையும் நார்வேவையும் கைப்பற்றினார். சரியாக ஒரு வருடத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்தை வசப்படுத்தினார். அதற்கடுத்த வருடம் கிரீஸையும் யூகோஸ்லாவியாவையும் விழுங்கினார்.

இப்படிக் கைப்பற்றப்பட்ட தேசங்களில் எல்லாம் ஹிட்லரின் பிரதிநிதிகள் உடனடியாக ஆளத் தொடங்கினார்கள். ஆட்சிக்கு வந்த முதல் வேலையாக அவர்கள் செய்தது, அந்தந்த தேசத்தில் இருந்த யூதர்கள் அத்தனைபேரையும் அள்ளிக்கொண்டுபோய் சித்திரவதைக் கூடங்களில் கொட்டுவது!

சித்திரவதைக் கூடங்களில், தமது ‘முறை’க்காகக் காத்திருக்கும் யூதர்களின் பாடுதான் மிகவும் பரிதாபம். விநாடிப் பொழுதில் கொன்று வீசிவிட்டால்கூட வலி இருக்காது. ஆனால், கொலைகார இயந்திரங்களின் எதிரே வரிசையில் தம் பெயரைச் சொல்லி அழைப்பதற்காக அவர்கள் பல வாரங்கள், மாதங்கள் காத்திருக்கவும் வேண்டியிருந்திருக்கிறது!

அப்படிக் காத்திருக்கும் தினங்களில் அவர்களுக்கு உணவு தரப்படமாட்டாது. குடிப்பதற்கு நீரும்கூட எப்போதாவது கிடைத்தால் உண்டு. இல்லாவிட்டால் அதுவும் இல்லை. முழு நிர்வாணமாக வாரக்கணக்கில் வரிசையில் நின்றுகொண்டே இருக்கவேண்டும். க்யூ நகர்ந்து படிப்படியாக முன்னேறி அவர்களின் முறை வரும்போது, இறப்பதை நினைத்து அவர்கள் ஓரளவு நிம்மதியே அடைவார்கள் அல்லவா!

எந்தக் காலத்திலும், எந்த விதத்திலும் நியாயமே சொல்லமுடியாத இனப்படுகொலை அது. ஒட்டுமொத்த மானுட குலத்தின் குரூரசுபாவம் விசுவரூபம் எடுத்து ஒன்றாகத் திரண்டு ஒரு உருவம் பெறுமானால், அந்த உருவத்துக்கு ஹிட்லர் என்று பெயர். இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்தானா என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. ஹிட்லரைப் பற்றியும், ஹிட்லர் காலத்துக் கொடுமைகள் குறித்தும் நாம் கேள்விப்படுகிற, நமக்குக் கிடைக்கிற தகவல்கள் அனைத்துமே ஓரெல்லைவரை குறைபாடுள்ளவைதான். இத்தனை லட்சம் படுகொலைகள் வெளியே தெரிந்திருக்கின்றனவென்றால், தெரியாத கொலைகள் இன்னும் உண்டு. அவர், ரகசியங்களின் பரமபிதா. வெறுப்பின் மூலக்கடவுள். குரூரத்தின் உச்சபட்சம்.

இன்றைக்குப் பத்து நாட்கள் முன்னர்கூட, ஹிட்லருக்குக் கடைசி தினங்களில், ரகசிய அறையில் மருத்துவம் பார்த்த நர்ஸ் என்று ஒரு தொண்ணூறு வயதுப் பெண்மணி முதல் முறையாக இப்போது வாய்திறந்திருப்பதைப் பார்த்தோம். புதைந்த நாகரிகம் மாதிரி, அது ஒரு புதைந்த அநாகரிகம். தோண்டத்தோண்ட வந்துகொண்டேதான் இருக்கும்.

இவை ஒரு புறம் இருக்க, 22 ஜூன் 1941-ம் ஆண்டு ஹிட்லரின் படை சோவியத் யூனியனுக்குள் நுழைந்தது. ராணுவம் ஒரு பக்கம் சோவியத் யூனியனுக்குள் நுழையும் போதே, யூதக் கொலைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்படையினர் ரஷ்யாவின் கிழக்குப் பக்கம் எல்லையோரம் இருந்த யூத முகாம்களுக்கும் காலனிகளுக்கும் படையெடுத்தன.

சரியாக மூன்று வாரங்கள். அந்த மூன்று வார காலத்துக்குள் மொத்தம் சுமார் ஐம்பத்தைந்தாயிரம் யூதர்களை அவர்கள் கொன்றுகுவித்தார்கள். அத்தனைபேரும் அகதிகளாக அங்கே வந்து தங்கியிருந்தவர்கள். உலக சரித்திரத்தில் ஏன், உலக யுத்தத்தில்கூட மூன்று வாரங்களில் இத்தனை பேரை ஒருபோதும் கொன்றதில்லை. யாரும் தப்பிக்க முடியாமல் சுற்றிவளைத்து, கண்ணை மூடிக்கொண்டு நாளெல்லாம் சுட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என்று பார்க்கவேயில்லை. கண்ணை மூடிக்கொண்டு என்றால், நிஜமாகவே கண்ணை மூடிக்கொண்டு! ஒருநாளைக்குக் குறைந்தது ஐயாயிரம் பேரைக் கொல்வது என்று செயல்திட்டம் போட்டுக்கொண்டு கொன்றார்கள். கொன்று குவித்த பிணங்களின் மீதே ஏறி நின்று மேலும் சுட்டார்கள். அதுவும் போதாமல், வீடுகளிலிருந்து மக்களைத் தரதரவென்று இழுத்துவந்து ஒரு பெரிய குழி வெட்டி உள்ளே மொத்தமாகத் தள்ளி, சுற்றி மேலே நின்று சுட்டார்கள். வெறியடங்காமல், மலைப்பாறைகளை டிரக்குகளில் ஏற்றி வந்து அந்தக் குழிகளில் வீசியெறிந்தும் கொன்றார்கள். குழந்தைகள் தனியாகக் கிடைத்தால் அவர்களுக்குக் குதூகலமாகிவிடும். தூக்கி உயரே விசிறியெறிந்து, கீழே விழுவதற்குள் ஏழெட்டு முறை சுட்டார்கள்.

மூன்றுவாரப் படுகொலை என்று சரித்திரம் வருணிக்கும் இந்தக் கோர தாண்டவம் நடந்துமுடிந்து சரியாக எட்டு தினங்கள்தான் அவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த ஒரு வாரத்தில் இன்னொரு ஒன்பதாயிரம் பேர்!

கொல்லக்கொல்ல யூதர்கள் முளைத்துக்கொண்டே இருக்கிறார்களே என்கிற கடுப்பு, ஜெர்மானிய காவல்துறையினருக்கு. ஒரு காவலர், ரஷ்ய எல்லையில் இருந்து, பெர்லினில் இருந்த தன் மகனுக்கு இப்படியரு கடிதம் எழுதியிருக்கிறார்:

‘மகனே, எத்தனை ஆயிரம் பேரைக் கொன்றாலும் யூதர்கள் குலத்தை முழுவதுமாக எங்களால் அழிக்கமுடியவில்லை. ஆகவே, ஜெர்மனியின் அடுத்த தலைமுறையினரின் ‘நலன்’ கருதி, யூதப் பெண்களை கவனிப்பதற்காக நமது மேதகு பிரசிடெண்ட் ஏதாவது சிறப்புத்திட்டம் அறிமுகப்படுத்தினால்தான் நல்லது.’

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 15 மே, 2005

Wednesday, May 11, 2005

49] ஹிட்லரின் யூத வெறுப்பு

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 49

இரண்டாம் உலக யுத்தம் தொடங்குவதற்குச் சரியாக ஆறு வருடங்கள் முன்பு ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தை ஹிட்லர் பிடித்தார். (ஹிட்லரின் போலந்து படையெடுப்புதான் இரண்டாம் உலக யுத்தத்தின் தொடக்கம். இது நடந்தது செப்டம்பர் 1, 1939. ஹிட்லர் பதவிக்கு வந்தது 1933-ம் வருட இறுதியில்.)

அன்று முதல் உலகுக்குச் சனி பிடித்தது ஒரு பக்கம் என்றால், ஜெர்மானிய யூதர்களுக்கு அதன் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்தது. பதவிக்கு வந்த முதல் சில தினங்களிலேயே ஹிட்லரின் நோக்கமும் தீர்மானமும் என்ன என்பது ஓரளவு தெளிவாகவே தெரியவந்துவிட்டது என்றபோதும், அவரது திட்டங்களின் முழுப்பரிமாணம் யூதர்களுக்குப் புரிய ஆறு மாதங்கள் பிடித்தன.

அந்த ஆறாவது மாதம் அது நடந்தது. அதுவரை பள்ளிகளில் யூதக்குழந்தைகள் மீதான வெறுப்பு வளர்ப்பதை ஒரு செயல்திட்டமாகச் செய்துகொண்டிருந்த நாஜிகள், அப்போதிலிருந்து யூதக்குழந்தைகள் யாரும் பள்ளிகளுக்குச் சென்று படிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்கள். இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு தினங்களிலேயே இது கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கூடப் பொருந்தும் என்று ஹிட்லர் அறிவித்தார்.

யூதர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. விதியை நொந்துகொண்டு, வீட்டிலேயே தங்கள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினார்கள்.

அவர்கள் மூச்சு விடுவதற்குக்கூட ஹிட்லர் அவகாசம் கொடுக்கவில்லை. அடுத்த அறிவிப்பு உடனே வந்தது. ஜெர்மனியின் எந்த அரசு அலுவலகத்திலும் யூதர்களுக்கு இனி வேலை இல்லை. தவிர, யூத மருத்துவர்கள், யூத வழக்கறிஞர்கள், யூத பொறியியல் வல்லுநர்கள் யாரையும் யாரும் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது.

இது மட்டுமல்ல. பொது நல அமைப்புகள், சங்கங்கள், கமிட்டிகள் எதுவானாலும் யூத உறுப்பினர்கள் கூடவே கூடாது. யூனியன் என்று அவர்கள் சிந்திக்கக்கூடக் கூடாது. நாலு யூதர்கள் கூடி ஒரு டீக்கடையில் பேசினால் கூடக் கைது செய்துவிடுவார்கள். இதையெல்லாம் விடக் கொடுமை, ஜெர்மனியில் இயங்கிவந்த உடல் ஊனமுற்றோருக்கான அமைப்புகளை அன்று பெரும்பாலும் யூதர்கள்தான் நடத்தி வந்தார்கள். கண்பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடங்கள், வாய்பேசமுடியாத காது கேட்காதோருக்கான பள்ளிகள், போலியோவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் என்று ஏராளமான அமைப்புகளை நிறுவி சேவையாற்றி வந்தார்கள்.

காரணம் ஏதும் சொல்லாமல் இந்த அமைப்புகள் அனைத்திலிருந்தும் யூதர்கள் உடனடியாக விலகவேண்டும் என்று அறிவித்தது ஹிட்லரின் அரசு.

1935-ம் வருடம் யூதர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை சட்டபூர்வமாகவே அறிவித்துவிட்டார் ஹிட்லர். நியூரெம்பெர்க் சட்டங்கள் (Nuremberg Laws) என்று அழைக்கப்பட்ட அந்தச் சட்டப்பிரதிகள் சொல்லுவதையெல்லாம் ஒரு வரியில் சுருக்கிச் சொல்வதென்றால், ஜெர்மனியில் யூதராக இருப்போர் அத்தனைபேரும் இரண்டாந்தரக் குடிமக்களே. அவர்கள் எத்தனை தலைமுறைகளாக அங்கே வாழ்ந்துவருபவர்களாக இருந்தாலும் சரி, எந்தவிதமான உரிமைகளும் அவர்களுக்குக் கிடையாது. தீண்டத்தகாதவர்களாக மட்டுமே அவர்கள் நடத்தப்படுவார்கள்.

இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், யார் யூதர் என்பதற்கும் ஹிட்லர் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். திடீரென்று கிறிஸ்துவத்துக்கு மதம் மாறிவிட்டவர்களையெல்லாம் அவர் மன்னிக்கத் தயாராக இல்லை. வம்சத்தில் யாராவது ஒரு கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா யூதராக இருந்தால் கூட, அவரது வழித்தோன்றல்கள் யூதராகத்தான் கருதப்படுவார்கள் என்று ஹிட்லர் சொன்னார்.

சட்ட வரைவுகளில் ஹிட்லர் தானே கையெழுத்திட்டார். காவல் துறையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. எந்த யூதரையும் காவலர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம். விசாரணைக்குப் பொறுமையில்லையா? கவலையே வேண்டாம். கொன்றுவிடலாம். கொலைகளுக்குக் கணக்குக் காட்டவேண்டுமென்கிற அவசியம் இல்லை. இறந்தவர்களை மட்டும் பத்திரமாக புதைத்து அல்லது எரித்துவிட வேண்டும். நாட்டில் அநாவசியமாக நோய்க்கிருமிகள் பரவிவிடக்கூடாது பாருங்கள்!

இப்படியொரு காட்டாட்சி ஆரம்பமானதும் ஜெர்மானியக் காவலர்கள் யோசித்தார்கள். ஹிட்லருக்கு சந்தோஷம் தரும்படி நடந்துகொள்வதென்றால், அவர் கவனத்துக்குப் போகும்விதத்தில் அவ்வப்போது யாராவது ஒரு முக்கியமான யூதரைக் கொன்றுவிடுவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தார்கள். பத்து ரூபாய் அலவன்ஸுக்காகவும் ஒரு நாள் விடுப்புக்காகவும் இரண்டு மணி நேரம் பர்மிஷனுக்காகவும் கூட அவர்கள் யூதர்களைக் கொன்றிருக்கிறார்கள். அப்படிக் கொல்லும்போது, கேட்பது கிடைக்கிறது என்பதுதான் இதற்கான ஒரே காரணம்.

ஆரம்பத்தில் ஒன்று இரண்டாக, பத்து இருபதாக ஆரம்பித்த இந்தப் படுகொலைகள், நாள் போகப்போக நூற்றுக்கணக்கில் பெருகத் தொடங்கியதும் யூதர்களைச் சிறை வைப்பதற்காகவும் அவர்களைக் கொடுமைப் படுத்துவதற்காகவுமென்றே யோசித்து சில பிரத்தியேகச் சிறைக்கூடங்களை ஹிட்லர் கட்டவைத்தார். இவற்றை concentration camps என்பார்கள்.

உலக சரித்திரத்தில் வேறு எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் நடந்திராத கொடுமைகள் யாவும் இந்தச் சிறைக்கூடங்களில் ஹிட்லர் காலத்தில் நடந்தேறின. கேள்விப்படும்போதே ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் கொடுமைகள் அவை.

முதலில் கம்யூனிஸ்டுகளை விசாரிப்பதற்காகக் கட்டப்பட்ட சிறைக்கூடங்கள் என்றுதான் இவை உலகுக்குத் தெரியவந்தன. ஹிட்லரின் கம்யூனிச வெறுப்பு அவரது யூத வெறுப்பைப் போன்றே பிரசித்தி பெற்றது. (கம்யூனிச ரஷ்யாவை ஒழித்துக்கட்டவேண்டுமென்பதுதான் அவரது வாழ்நாள் நோக்கமாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக உலகப்போர் சமயம் அவர் ரஷ்யாவிலிருந்து பின்வாங்கவேண்டி வரவே, சோவியத் யூனியன் தப்பியது.) ஆகவே ஜெர்மனியில் உள்ள கம்யூனிஸ்டுகள் அத்தனைபேரையும் ஒழித்துக்கட்டுவதற்காகத்தான் இந்த சிறப்புச் சிறைக்கூடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்று உலகம் நினைத்தது.

ஆனால் ஹிட்லர் யாரையெல்லாம் வெறுத்தாரோ, அவர்கள் அத்தனை பேரும் அந்தச் சிறைக்கூடங்களுக்கு வரவேண்டியிருந்தது. கம்யூனிஸ்டுகள், யூதர்கள், தொழிற்சங்கவாதிகள், சோஷலிஸ்டுகள், பாதிரியார்கள் என்று பார்த்துப்பார்த்து அங்கே கூட்டிக்கொண்டு போனார்கள்.

அந்தச் சிறப்புச் சிறைக்கூடங்களைப் பற்றிச் சொல்லவேண்டும். இருளைத்தவிர வேறொன்றுமில்லாத கான்க்ரீட் காடுகள் அவை. காற்று கிடையாது. தண்ணீர் கிடையாது. உணவு கிடையாது. விஷப் பூச்சிகளும் பூரான்களும் தேள்களும் பாம்புகளும் சுதந்திரமாக ஊர்ந்து செல்லும். விசாரணைக் கைதிகளைப் பெரும்பாலும் நிர்வாணமாகத்தான் வைத்திருப்பார்கள். கொதிக்கும் நீரில் தூக்கிப்போடுவது தொடங்கி, நிற்கவைத்துச் சுடுவது, உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டிப் போடுவது, ஊசி கொண்டு உடம்பெங்கும் குத்திக் குத்தி ரத்தம் சொட்டச்சொட்ட தீயில் இட்டு வாட்டுவது, விஷ ஊசிகள் போடுவது, மர்ம உறுப்புகளில் தாக்குவது, வன்புணர்ச்சி கொள்வது என்று குரூரத்தின் உச்சகட்ட வெளிப்பாடுகள் அரங்கேறிய பிராந்தியம் அது.

விசாரணைக் கைதிகளை வெளியிலிருந்து யாரும் வந்து பார்க்க முடியாது. அவர்களை எப்போது நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதையும் சொல்லமாட்டார்கள். திடீரென்று ஒரு நபர் ஒரு நாளுக்கு மேல் வீடு திரும்பாதிருந்தால், மனத்தைத் தேற்றிக்கொண்டு அவருக்குக் காரியம் செய்துவிடவேண்டியதுதான் என்று ஜெர்மானிய யூதர்கள் முடிவுக்கு வரும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டிருந்தது.

ஹிட்லர் ஆட்சியின் முதல் ஐந்தாண்டுகளில் இந்தச் சித்திரவதைக்கூடங்களில் சுமார் எண்ணூறு யூதர்களும் ஆயிரத்தி நானூறு கம்யூனிஸ்டுகளும் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு கணக்கு இருக்கிறது.

ஆனால் 1938 மார்ச் மாதம் அவர் ஆஸ்திரியாவை அபகரித்துக்கொண்ட பிறகு, ஹிட்லரின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பிராந்தியத்தில் வசிக்கும் யூதர்களின் எண்ணிக்கை குப்பென்று ஒரு லட்சத்து எண்பத்தைந்தாயிரமாக உயர்ந்துவிடவே, இன்னும் ஏராளமான சித்திரவதைக்கூடங்களை எழுப்பி, இன்னும் ஆயிரக்கணக்கில் யூதர்களைக் கைது செய்யவேண்டிய ‘அவசியம்’ நாஜிக்களுக்கு உருவாகிவிட்டது.

ஹிட்லரின் ஆஸ்திரியப் படையெடுப்பு நடந்து முடிந்த இருபதாவது நாளில் மட்டும் ஆஸ்திரியாவில் சுமார் ஐந்நூறு யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஒரே நாளில் நடந்த இச்சம்பவம் ஒட்டுமொத்த யூதகுலத்தையும் குலைநடுங்கச் செய்துவிட்டது. யூத குலத்தை மட்டுமல்ல. பல்வேறு உலகநாடுகளும் ஹிட்லரைப் பார்த்து பயப்படத் தொடங்கியதன் ஆதாரக் காரணம் இதுதான்.

அவரது நாடு பிடிக்கும் வேட்கையைக் காட்டிலும் இந்த யூத வெறுப்பு மிகத் தீவிரமாக இருப்பதைக் கண்டு வெறுப்புற்ற முதல் தேசம் பிரிட்டன்.

பரிதாபத்தின் பேரில் பிரிட்டன் சுமார் நாற்பதாயிரம் ஜெர்மானிய யூதர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. மேலும் சுமார் இருபதாயிரம் ஆஸ்திரிய யூதர்களும் இதன் மூலம் பிரிட்டனுக்கு உயிர்தப்பிப் போகமுடிந்தது. இந்த அறுபதாயிரம் யூதர்கள் தவிர, பத்தாயிரம் யூதக் குழந்தைகளையும் பிரத்தியேகமாக பிரிட்டன் தத்தெடுத்து, அவர்களின் எதிர்காலத்துக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்தது. (இப்படி அநாதைகளாக ஜெர்மனி - ஆஸ்திரியாவிலிருந்து பிரிட்டனுக்குப் போய்ச்சேர்ந்த பல்லாயிரக்கணக்கான யூதர்களுள் மார்க்கரெட் தாட்சரின் பெற்றோரும் அடக்கம். பின்னாளில் பிரிட்டனின் பிரதமராகவே ஆன தாட்சர்!)

இந்த இடப்பெயர்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பெற்றோர், தம் குழந்தைகளைப் பிரிந்து தனித்து வாழவேண்டியிருந்தது. குழந்தைகள் மட்டுமாவது பிழைக்கட்டுமே என்று அவர்களை பிரிட்டனுக்கு அனுப்பிய ஜெர்மானியப் பெற்றோர்களைப் பிறகு தனியே நாஜிகள் ‘கவனித்து’ அவர்களுக்கு மரணதண்டனை அளித்துவிட்டார்கள்!

ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் இருந்த இந்த இனப்படுகொலைகள், ஹிட்லரின் கணக்கில் ஒவ்வொரு நாடாகச் சேரச்சேர, ஆயிரங்களையும் லட்சங்களையும் தொடத்தொடங்கியது. ஹிட்லர் ஒரு தேசத்தின் மீது படையெடுத்தார் என்றால், அங்குள்ள அரசல்ல; யூதர்கள்தான் முதலில் அலறினார்கள். எப்பாடுபட்டாவது ஹிட்லர் எட்டிப்பார்க்க முடியாத ஏதாவது ஓரிடத்துக்குப் போய்விடமாட்டோமா என்று ஏங்கிக் கதறினார்கள்.

தினசரி நூற்றுக்கணக்கான யூதர்கள் திருட்டுத்தனமாகத் தம் தேசத்தைவிட்டு எல்லை தாண்டி வெளியே போவது வழக்கமாகிவிட்டது. இது மற்றபிற தேசங்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாகிப் போனது. அவர்களால், யூதர்களை வராதீர்கள் என்றும் சொல்லமுடியவில்லை; வருபவர்களை வைத்துக்கொண்டு பராமரிக்கவும் முடியவில்லை. ஏனெனில் அத்தனை ஐரோப்பிய தேசங்களுமே அன்றைக்கு யுத்தத்தின் ஓர் அங்கமாக விளங்கின. எல்லோரும் எல்லோரையும் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் ஹிட்லர் கட்சி. இன்னொரு பக்கம் பிரிட்டன் கட்சி.

பிரிட்டனின் அணியில் இருந்த தேசங்கள்கூட யூதர்கள் விஷயத்தில் முடிவெடுக்க மிகவும் திணறிக்கொண்டிருந்தன. சரித்திரத்தின் பழைய பக்கங்களில், அவர்களும் யூதர்களைக் கொடுமைப்படுத்தியவர்களாகவே இருந்ததுதான் காரணம். பரிதாபப்பட்டு யூதர்களை உள்ளே விட்டால், நாளைக்கு அவர்களால் நமக்கு என்னென்ன பிரச்னைகள் வருமோ என்கிற அச்சம் அத்தனை ஐரோப்பிய தேசங்களுக்கும் இருந்தது.

எப்படியாவது தப்பித்து பாலஸ்தீனுக்கு ஓடிவிடவேண்டும் என்பதுதான் அத்தனை யூதர்களின் எண்ணமும்.

ஆனால் எப்படித் தப்பிப்பது?

அவர்கள் எப்படி யோசிப்பார்கள் என்பதை முன்கூட்டியே ஹிட்லர் யோசித்துவைத்திருந்தார். ஆகவே அவர் ஒரு காரியம் செய்தார். எந்தெந்த தேசத்தைக் கைப்பற்றுகிறாரோ, அந்தந்த தேசங்களின் எல்லைகளை முதலில் மூடச் சொன்னார். ஜெர்மனியின் எல்லைகளும் மூடப்பட்டன. வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேசமெங்கும் செய்யப்பட்டது. யூதரல்ல; ஒரு கொசு கூட எல்லை தாண்டி வெளியே போகமுடியாதபடிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்திவிட்டு ஹிட்லர் சிரித்தார்.

அந்தச் சிரிப்புக்கு, கண்ணை மூடிக்கொண்டு கொல்லுங்கள் என்று அர்த்தம்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 12 மே, 2005

48] சிக்கலின் பெயர் ஹிட்லர்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 48

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், யூதர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தபோதிலும் ஒரு நாடகம் அல்லது திரைப்படம் போல, அடுத்தடுத்து வெற்றி மேல் வெற்றியாக அவர்களுக்கு வந்து குவிந்துவிடவில்லை. சாண் ஏறி முழம் சறுக்கும் விதமாகத்தான் விதி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது.

பாலஸ்தீனில் எப்படியும் ஒரு யூத தேசம் உருவாகிவிடும் என்கிற நம்பிக்கையை முதல் உலகப்போரின் இறுதியில் நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்தினாலும், அப்படி உருவாகும் தேசத்தில் எத்தனை யூதர்கள் இருப்பார்கள் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஏனெனில் ஐரோப்பிய யூதர்களில் சுமார் எழுபத்தெட்டு சதவீதம் பேர் பாலஸ்தீனுக்கு வந்துசேர என்ன வழி என்று அப்போதும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். அந்தந்த தேசங்களின் சட்டதிட்டங்கள், அவரவர் பொருளாதார நிலைமை, சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணம். தவிர, மொத்தம் இத்தனை லட்சம்பேர் என்று ஒரு கணக்குச் சொல்லிவிடமுடியாதபடி ஐரோப்பாவெங்கும் நீக்கமற நிறைந்து பரவியிருந்தார்கள் அவர்கள். பாலஸ்தீனில் அமையவிருக்கும் யூத தேசத்தின் ‘கொள்ளளவு’ எவ்வளவு என்பதும் அப்போது துல்லியமாகத் தெரியாதல்லவா?

அந்த வகையில், என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று பால்ஃபர் பிரகடனம் அறிவிக்கப்பட்டவுடனேயே பாலஸ்தீனுக்குக் கிளம்பி வந்த யூதர்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்லவேண்டும். வெறும் நம்பிக்கை ஒன்றை மட்டும் பற்றுக்கோலாகப் பிடித்துக்கொண்டு வந்தவர்கள் அவர்கள். புதிய தேசம், புதிய சூழ்நிலை, புதிய ஆட்சி என்றாலும் பழைய நம்பிக்கை ஒன்று அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்; அப்புறம் கிளம்பிப்போகலாம் என்று காத்திருந்த யூதர்களுக்குத்தான் சிக்கல் ஏற்பட்டுவிட்டது.

சிக்கலின் பெயர் ஹிட்லர். ஒரு விஷயத்தை முதலில் தெளிவுபடுத்திக் கொண்டுவிடவேண்டும். ஹிட்லரால் ஜெர்மானிய யூதர்களுக்கு மட்டும்தானே பிரச்னை ஏற்பட்டது என்று மேலோட்டமாகப் பார்க்கும்போது தோன்றலாம். ஆனால் ஹிட்லரின் நாடுபிடிக்கும் வேட்கையின் விளைவாக, அவர் பதவிக்கு வந்த சூட்டில் அக்கம்பக்கத்து ஐரோப்பிய நாடுகள் அத்தனையையும் கபளீகரம் செய்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.

முதலில் லேசாக ஆஸ்திரியா, செக்கஸ்லோவாக்கியா, போலந்து என்று ஆரம்பித்தவர் டென்மார்க், நார்வே, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸில் கொஞ்சம், ருமேனியாவில் கொஞ்சம் என்று கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட ஐரோப்பாவை தன்வசப்படுத்திவிட்டிருந்தார்.

ஹிட்லருக்கு இரண்டு லட்சியங்கள் இருந்தன. முதலாவது ஐரோப்பா முழுவதையும் ஆளவேண்டும் என்பது. இரண்டாவது, தன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் மட்டுமாவது ஒரு யூதரும் இருக்கக் கூடாது என்பது.

ஹிட்லரின் யூத வெறுப்புக்குப் பிரத்தியேகக் காரணங்கள் ஏதும் கிடையாது. அவர் ஒரு சரியான ஆரிய மனோபாவம் கொண்டவர். ஆரிய மனோபாவம் என்றால், ஆரியர்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்கிற மனோபாவம். அதுசரி, யார் ஆரியர்கள்?

ஹிட்லருக்கு இதில் சந்தேகமே இல்லை. அவர்தான் ஆரியர். ஜெர்மானியர்கள் அத்தனை பேரும் ஆரியர்கள். எனில் மற்றவர்கள் எல்லாம்?

ஆரியர்களுக்கு எதிரிகள். அவ்வளவுதான். தீர்ந்தது விஷயம்.

மிகச் சரியாகச் சொல்வதென்றால், 1933-ம் ஆண்டு ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்தை ஹிட்லர் கைப்பற்றியதிலிருந்தே ஐரோப்பிய யூதர்களுக்குச் சனிபிடித்தது. அந்த வருடம் ஜனவரி 30-ம் தேதி ஹிட்லர், ஜெர்மனியின் தலையெழுத்தாக ஆனார். அந்த தினமே ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

இதெல்லாம் ஆட்சிக்கு வந்தபின் திட்டமிட்டுச் செய்யப்பட்ட காரியங்கள் என்று பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருப்பார்கள். உண்மையில், ஹிட்லர், ஜெர்மனியின் ஆட்சி பீடத்தில் அமர்வதற்குச் சுமார் பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, இதையெல்லாம் செய்யவேண்டும், இப்படியெல்லாம்தான் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு வரைபடமே தயாரித்து வைத்துவிட்டிருந்தார் மனத்துக்குள். தனது திட்டங்களின் ஒரு பகுதியைத் தன் வாழ்க்கை வரலாறான ‘மெயின் காம்ஃப்’பிலும் அவர் எழுதியிருக்கிறார்.

ஆகவே, பதவியேற்ற மறுகணமே யூதர்களை ஒழியுங்கள் என்று உத்தரவிடுவதில் அவருக்கு எந்தவிதமான மனச்சங்கடமும் ஏற்படவில்லை.

ஹிட்லரின் கட்சிக்கு ‘National socialist German workers party’ என்று பெயர். சுருக்கமாக இதனை நாஜி என்பார்கள். பெயரில் சோஷலிசம் உண்டே தவிர, யதார்த்தத்தில் ஹிட்லருக்கு அதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்காது. ஒரு சம்பிரதாயம் கருதி சோஷலிஸ்ட் என்று பெயரில் சேர்த்துக்கொண்டார் போலிருக்கிறது.

கட்சி என்கிறோம். ஆட்சி என்கிறோம். உண்மையில் ஹிட்லரின் நாஜிக்கட்சியில் இருந்த அத்தனை பேரும் ஆயுதம் தாங்குவோராகத்தான் இருந்தார்கள். கட்சியாக உருவெடுத்து, ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே ஹிட்லருக்கு விசுவாசமாகப் பின்னால் வந்த அடியாள் படையின் பிரும்மாண்ட விஸ்தரிப்பு அது.

நியாய அநியாயங்கள், தர்மம், சட்டம் போன்றவற்றை அவர்கள் எப்போதும் ஒரு பொருட்டாகக் கருதியவர்கள் அல்லர். மாறாக, ஹிட்லர் ஓர் உத்தரவிட்டால் உடனடியாக அதைச் செயல்படுத்துவது ஒன்றுதான் அவர்களது பணி.

அத்தகைய நாஜிகள், ஹிட்லர் ‘யூதர்களை அழியுங்கள்’ என்று சொன்னதுமே அந்த முதல் நாளே வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.

இத்தனைக்கும் ஜெர்மானிய யூதர்கள், வந்தேறிகளாகவே இருந்தாலும் சுமார் 1600 வருடப் பாரம்பரியம் கொண்டவர்கள். யூதர்கள் ஐரோப்பாவுக்கு முதல் முதலில் இடம்பெயர்ந்து போன இடங்களுள் ஜெர்மனியும் ஒன்று. என்னதான் மனத்துக்குள் பாலஸ்தீன் தங்கள் சொந்தமண் என்கிற எண்ணம் இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக ஜெர்மனியிலேயே வாழ்ந்தவர்கள் அவர்கள். ஜெர்மன் கெய்சர் காலம் வரையிலுமே கூட பிரமாதமான பிரச்னைகள் ஏதுமின்றி அங்கே அவர்களால் வாழமுடிந்திருக்கிறது.

யூத எதிர்ப்பு என்பது எல்லா ஐரோப்பிய தேசங்களிலும் எல்லாக் காலங்களிலும் இருந்துவந்ததுதான். ஜெர்மனியிலும் அது இருக்கவே செய்தது என்றாலும் ஹிட்லர் காலத்தில் அது பெற்ற ‘பரிணாம வளர்ச்சி’ அதற்கு முன் வேறெங்கும் எப்போதும் நிகழ்ந்திராதது.

முதல் உலகப்போர் சமயம், ஜெர்மானிய ராணுவத்தில் யூதர்களுக்கான படைப்பிரிவே ஒன்று தனியாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான ஜெர்மானிய யூதர்கள் தம் தேசத்துக்காகப் போரில் பங்குபெற்றார்கள். அவர்களுள் சுமார் பன்னிரண்டாயிரம் யூதர்கள் யுத்தத்தில் இறந்துபோனவர்கள்.

இப்படியான பாரம்பரியம் கொண்ட ஜெர்மன் யூதர்கள், ஹிட்லரின் அதிரடி அறிவிப்பைக் கேட்டு மிகவும் பயந்துபோனார்கள். என்ன செய்யும் அரசு? சில ஆயிரம் பேரைக் கொல்லும். பல ஆயிரம் பேரை நாடு கடத்தும். இது ஒன்றும் புதிதல்ல. எத்தனையோ முறை சந்தித்த பிரச்னைதான் என்று இம்முறையும் அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை.

காரணம், ஹிட்லர் தமது யூத எதிர்ப்புப் பிரசாரத்தைக் குழந்தைகளிடமிருந்து தொடங்கியிருந்தார்.

பள்ளி மாணவர்களிடையே யூதக் குழந்தைகளை அருகே சேர்க்காதீர்கள் என்னும் பிரசாரம் முதன்முதலில் தூண்டிவிடப்பட்டது. ஜெர்மானியக் குழந்தைகளின் உடம்பில் ஓடுவது புனிதமான ரத்தம். அது ஆரிய ரத்தம். ஆனால் யூதக் குழந்தைகளின் உடலில் ஓடுவது கிட்டத்தட்ட சாக்கடைக்குச் சமானமான ரத்தம் என்று தன் ஆலாபனையைத் தொடங்கினார் ஹிட்லர்.

ஒரு யூதக் குழந்தையின் அருகே அமரும் ஜெர்மானியக் குழந்தைக்கு வியாதிகள் பீடிக்கும் என்று ஆசிரியர்களால் சொல்லித்தரப்பட்டது. ஒரு யூதக்குழந்தை கொண்டு வரும் உணவை ஜெர்மானியக் குழந்தை உண்ணுமானால் அதன் தேச விசுவாசம் கறைபடிந்துவிடும் என்று போதிக்கப்பட்டது.

பள்ளிகளில் யூதக்குழந்தைகளுக்கு தனி இருக்கைகள் போடப்பட்டன. அவர்களுக்கென்று தனியே ஒரு தண்ணீர் டிரம் வைக்கப்பட்டது. அந்த டிரம்மையோ, சங்கிலி போட்டுப் பிணைக்கப்பட்ட அந்தத் தம்ளரையோ, தவறியும் ஒரு ஜெர்மானியக் குழந்தை தொட்டுவிடக்கூடாது. தொட்டால் தீட்டு ஒட்டிக்கொண்டுவிடும் என்று சொல்லப்பட்டது.

இதெல்லாம் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த ஒரு வார காலத்துக்குள் அமலுக்கு வந்த சட்டங்கள். தொடர்ந்து, ஜெர்மானியக் குழந்தைகள் வகுப்பை முடித்துவிட்டுச் சென்றபிறகுதான் யூதக்குழந்தைகளுக்குப் பாடங்கள் தொடங்கும் என்று சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. யூதக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் பயிலும் ஜெர்மானியக் குழந்தைகள் தினசரி வீட்டுக்குப் போனதும் வாசலிலேயே தங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு உள்ளே போனதும் வேறு ஆடை அணியவேண்டும் என்று பெற்றோரிடம் சொல்லும் அளவுக்குப் பிஞ்சு உள்ளங்களில் பிரிவினை மிக ஆழமாக ஊன்றப்பட்டது.

உலகில் மூன்று இடங்களில்தான் இம்மாதிரியான ஆதிக்க ஜாதியினரின் அட்டகாசங்கள் சரித்திரத்தில் தலைவிரித்து ஆடியிருக்கின்றன. முதலாவது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை கருப்பர்களுக்கு எதிராக அமெரிக்கர்கள் நிகழ்த்திய கொடுமைகள். இரண்டாவது, இருபதாம் நூற்றாண்டிலும் தலித்துகளுக்கு எதிராக உயர்ஜாதி ஹிந்துக்கள் இந்தியாவில் நிகழ்த்திய காரியங்கள். மூன்றாவது ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் செய்தவை.

இவற்றுள் முதல் இரண்டு இடங்களிலும் படுகொலைகள் கிடையாது. அல்லது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மிகச் சொற்பம். ஜெர்மனியில் அது மிக அதிகம். அது ஒன்றுதான் வித்தியாசம்.

ஹிட்லர் ஆட்சியில் யூதர்களை ‘கவனிக்க’வென்றே இரண்டு சிறப்புப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒன்று, ‘Gestapo’ என்று அழைக்கப்பட்ட ரகசிய காவல்படை. இரண்டாவது, ‘SS’ என்று அழைக்கப்பட்ட, கருப்பு யூனிஃபார்ம் அணிந்த பாதுகாப்புப்படையினர்.

இந்த இரண்டு படைகளுக்கும் ஹிட்லர் சில சுதந்திரங்கள் வழங்கியிருந்தார். அவர்கள் யாரை வேண்டுமானாலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் எத்தனை காலம் வேண்டுமானாலும் சிறையில் அடைத்து வைத்திருக்கலாம். விசாரணையில் ‘உண்மை வரவழைப்பதன்பொருட்டு’ எந்தவிதமான தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். இறுதியாக யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லாமல், எந்த விசாரணைக் கைதியையும் கொலை செய்யலாம்.

இந்த இரு படையினருக்கும் இருந்த ஒரே ஒரு நிபந்தனை, அவர்கள் ஜெர்மானியர் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதுதான்!

ஹிட்லர் பதவிக்கு வந்து சரியாக ஐம்பத்தேழாவது நாள் இந்த இரு படைகளும் தம் பணியைத் தொடங்கின. கண்ணில் தென்பட்ட யூதர்கள் அத்தனை பேரையும் இவர்கள் கைது செய்ய ஆரம்பித்தார்கள். கைதுக்குக் காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காரணம் கேட்டால், அந்த இடத்திலேயே நிற்கவைத்துச் சுட்டுவிடுவார்கள். விசாரணைக்குப் போனால் உயிர் இன்னும் சில தினங்கள் பிழைக்கலாம், அவ்வளவுதான்.

அன்றைக்கு ஜெர்மனியில் வசித்து வந்த யூதர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் பத்து லட்சம் பேர். (ஹிட்லர் பின்னால் படையெடுத்துச் சேர்க்கும் தேசங்களில் வசித்து வந்த யூதர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் கோடியை நெருங்கும்.) அவர்களுள் சுமார் ஐந்து லட்சம் பேர் எப்படியோ தப்பிப்பிழைத்து விட்டார்கள். ஹிட்லர் பதவிக்கு வந்த மிகச் சில தினங்களிலேயே புத்திசாலித்தனமாக, அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேசத்தை விட்டு அகதிகளாக வெளியேறி மற்ற பல நாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

மிச்சமிருந்த ஐந்துலட்சம் பேர்தான் மாட்டிக்கொண்டார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 8 மே, 2005

Tuesday, May 03, 2005

47] இத்தனை அறியாமையிலா ஒரு கூட்டம்?

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 47

உலகப்போரை ஒரு சாக்காக வைத்து துருக்கிய ஒட்டாமான்களின் மீது தாக்குதல் நடத்தி, பாலஸ்தீனைக் கைப்பற்றிய பிரிட்டன், அங்கே முதன் முதலில் மேற்கொண்ட பணி என்னவெனில், ஜெருசலேத்தை ஆராய்வது.

யூத, கிறிஸ்துவ, இஸ்லாமியர்களின் ஜெருசலேம். புனித நகரம், புண்ணிய நகரம் என்கிற பிம்பங்களுக்கு அப்பாலும் பார்க்கும்போதே பரவசம் ஏற்படுத்தக்கூடிய ஜெருசலேம். இந்த ஒரு நகருக்காகத்தானே இத்தனை கலாட்டாக்கள் என்று சற்றே வியப்புற்றார் பிரிட்டிஷ் படைகளின் தளபதி ஜெனரல் ஆலன்பெ. ஆயினும் உடனே சுதாரித்துக்கொண்டு, ஜெருசலேம் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் வசிக்கும் மக்களை முழுவதுமாக பிரிட்டிஷ் பேரரசின் விசுவாசக் குடிமக்களாக மாற்றும் முயற்சியில் இறங்கினார்.

அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை, உணவுப்பிரச்னையைத் தீர்ப்பது. யுத்தகாலத்தில் ஏற்பட்ட பஞ்சம், யுத்தம் முடிவதற்கு முன்னதாகவே மறையும் விதத்தில் எகிப்திலிருந்து தேவையான உணவுப்பொருள்களை ஜெருசலேத்துக்கு வரவழைக்க ஏற்பாடு செய்தார். க்யூவில் நிற்காமல், முட்டி மோதாமல், அடிதடிக்கு ஆட்படாமல், கேட்கிற அனைவருக்கும் கேட்கிற அளவு உணவுப்பொருள் தரப்படவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தது பிரிட்டிஷ் படை.

அதே மாதிரி, டைஃபாய்ட், காலரா போன்ற நோய்க்கிருமிகள் அப்போது பாலஸ்தீன் முழுவதும் நீக்கமறப் பரவியிருந்தன. ஏராளமான மக்கள் இந்த நோய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தேவையான மருந்துப்பொருள்கள், தடையின்றிக் கிடைக்க பாலஸ்தீனுக்கும் லண்டனுக்கும் சிறப்பு விமான சர்வீஸ்கள் இயக்கப்பட்டன.

மூன்றாவது காரியம், ஊழல் ஒழிப்பு. அன்றைய பாலஸ்தீனில் காலராவைக் காட்டிலும் மோசமான கிருமியாகப் பரவியிருந்தது ஊழல். பெரும்பாலும் நீதிமன்றங்களில்தான் இது ஆரம்பித்தது. மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நீதிபதிகள், தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் வெளியே பேரம் பேசுவதென்பது சர்வசாதாரணமாக இருந்தது. இதனைக் கவனித்த பிரிட்டன், அதிகாரத்தைக் கையில் எடுத்த உடனேயே பாலஸ்தீன் முழுவதிலும் இயங்கிய நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளுக்கும் இதர ஊழியர்களுக்கும் அவர்களே நம்ப முடியாத அளவுக்கு சம்பளத்தை உயர்த்தியது. சம்பளத்தை உயர்த்துவதன் மூலம் லஞ்சத்தைத் தடுக்கலாம் என்பது பிரிட்டனின் கணக்கு. அது ஓரளவுக்கு உபயோகமாகவும் இருந்தது என்பதைச் சொல்லிவிடவேண்டும். பெரும்பாலும் நிலப் பிரச்னைகள் காரணமாகவே எழுந்த வழக்குகளில் அதன்பிறகு ஓரளவு நியாயமான தீர்ப்புகள் வெளிவரத் தொடங்கின.

இதெல்லாம் நடக்க ஆரம்பிக்கும்போதே முதல் உலகப்போர் ஒருமாதிரி முடிவுக்கு வந்துவிட்டிருந்தது. அடித்துக்கொண்டது போதும் என்று வெர்ஸெயில்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு எல்லாத் தேசங்களும் அவரவருக்கான லாபங்களுடன் ஊரைப் பார்க்கப் போய்விட்டன. இதில் பிரிட்டனுக்குக் கிடைத்த மிகப்பெரிய லாபம், பாலஸ்தீன்.

பாலஸ்தீனின் ஆட்சி அதிகாரம் பிரிட்டனைச் சேர்ந்தது என்று வெர்ஸெயில்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1919-ம் ஆண்டு ‘தேசங்களின் கூட்டமைப்பு’ (லிமீணீரீuமீ ஷீயீ ழிணீtவீஷீஸீs ஐநா உருவாவதற்கு முந்தைய கூட்டமைப்பு.) ஹெர்பர்ட் சாமுவேல் (பிமீக்ஷீதீமீக்ஷீt sணீனீuமீறீ) என்கிற ஓர் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலை பாலஸ்தீனுக்கான தனது ஹைகமிஷனராக நியமித்து அனுப்பிவைத்தது. இந்த ஹெர்பர்ட் சாமுவேல் சாதாரணமான மனிதர் அல்லர். பால்ஃபர் பிரகடனத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர். வெளியுறவுச் செயலாளர் பால்ஃபரின் பெயரால் அது அழைக்கப்பட்டாலும் அந்த நான்கு வரிப் பிரகடனத்துக்குள்ளே என்னென்ன இருக்கவேண்டும், ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானித்த மூளைகளுள் ஒன்று.

எல்லாம் நினைத்தபடியே நடக்கிற சந்தோஷத்தில் பிரிட்டன் ஒரு சுற்றுப் பெருத்திருந்தது. பாலஸ்தீனத்து அரேபியர்கள்தான் நடு ரோடுக்கு வந்துவிட்டிருந்தார்கள். ஒருபக்கம் பிரிட்டன், பால்ஃபர் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் மும்முரமாக இருந்தது. இன்னொரு பக்கம் உலகெங்கிலுமிருந்து யூதர்கள் பாலஸ்தீனை நோக்கி தினசரி ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துகொண்டிருந்தார்கள். ஏற்கெனவே யூத நிலவங்கி வாங்கிப்போட்டிருந்த இடங்களில் அவர்கள் தமக்கான குடியிருப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தார்கள். அதுதவிர, புதிதாகவும் நேரடியாகவும் நிலங்கள் வாங்கி, வீடு கட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

விசா பிரச்னைகள் கிடையாது, விசாரணைகள் கிடையாது, எதுவும் கிடையாது. யூதரா? வாருங்கள் பாலஸ்தீனுக்கு என்று கதவை அகலமாகத் திறந்துவைத்துவிட்டது பிரிட்டன். விசாவே இல்லாத யூதர்கள் கூட அப்போது ஆயிரக்கணக்கில் பாலஸ்தீனுக்கு வந்து சேரமுடிந்தது.

இதெப்படி என்று வியப்பாக இருக்கலாம். ஒரு உதாரணம் காட்டினால் புரியும். பல்வேறு ஐரோப்பிய தேசங்களிலிருந்து எப்படியாவது கட்டைவண்டி பிடித்தாவது பாலஸ்தீன் எல்லைக்கு வந்துவிடுவார்கள். அப்படி வந்து சேருபவர்கள் யூதர்கள்தானா என்று மட்டும் பார்ப்பார்கள். எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்ததும் ஒரே ஒரு ஏஜெண்டு உடன் வருவார். அவரிடம் ஒரு விசா மட்டும் இருக்கும். எல்லையில் உள்ள செக்போஸ்டில் அந்த ஒரு விசாவைக் காட்டிவிட்டு பத்து ‘டிக்கெட்’களை உள்ளே அழைத்துக்கொண்டு போய்விடுவார்.

எல்லையைக் கடந்து அவர்கள் போனதும் ஏஜெண்ட் திரும்பவும் எல்லைக்கு வந்து மீண்டும் அதே ஒரு விசாவைக் காட்டி இன்னும் பத்துப் பேரை அழைத்துப் போய்விடுவார். இப்படி ஆயிரக்கணக்கான ஏஜெண்டுகள். பல்லாயிரக்கணக்கான யூதர்கள்!

வளைப்பதற்கு சௌகரியமான விதிகளையே வைத்திருந்தார்கள். யூதர்களை வாழவைப்பது ஒன்றே நோக்கம். இதன்பின்னால் பல்லாயிரக்கணக்கான அரேபியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறதே என்பது பற்றி பிரிட்டனுக்கு எந்த அக்கறையும் இல்லை. ‘மனிதர்கள் வீடுகளில் வசிக்கட்டும்; நாய்கள் வீதிகளில் சுற்றட்டும்’ என்று ஒரு பிரிட்டன் ராணுவ அதிகாரி சொன்னாராம்!

அரேபிய முஸ்லிம்கள் மீது பிரிட்டன் அன்று காட்டிய வெறுப்புக்குக் காரணம் எதுவுமே இல்லை என்பதுதான் விசித்திரம். யூதர்களை சந்தோஷப்படுத்தவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக இப்படியொரு காரியத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

இத்தாலியில் உள்ள ஸான் ரெமோ (ஷிணீஸீ ஸிமீனீஷீ) என்கிற இடத்தில் நடைபெற்ற லீக் ஆஃப் நேஷன்ஸ் மாநாட்டில் எடுத்த முடிவின்படி இன்றைய இஸ்ரேலின் அத்தனை பகுதிகள் தவிர, காஸா, மேற்குக் கரை, கோலன் குன்றுப் பகுதிகளின் ஒரு பாகம், முழு ஜோர்டன் நிலப்பரப்பு ஆகியவை அன்றைக்கு பிரிட்டனுக்கு வழங்கப்பட்டிருந்தன. தோராயமாக அன்றைக்கு இந்தப் பகுதியில் வசித்துவந்த மக்கள் தொகை சுமார் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் பேர். இதில் பதினொரு சதவிகிதம் பேர் யூதர்கள். மற்ற அத்தனைபேரும் அரேபிய முஸ்லிம்கள்.

தேசத்தில் எங்கு திரும்பினாலும் முஸ்லிம்கள்தான். காதில் விழும் அத்தனை குரலுமே அரபிதான். குழுவாக வாழும் வழக்கமுள்ள யூதக்குடியிருப்புப் பகுதிகளிலாவது ஹீப்ரு சத்தம் கேட்கிறதா என்றால் கிடையாது. அவர்கள் அத்தனைபேரும் பல தலைமுறைகளாக ஐரோப்பிய தேசங்களில் வாழ்ந்தவர்கள். ஹீப்ருவின் சிதைந்த வடிவமான இட்டிஷ் என்கிற மொழிதான் ஐரோப்பிய யூதர்களுக்குத் தெரியும். மிகக் குறைந்த மக்களால் மட்டுமே பேசப்பட்டு, அழிந்துபோய்விட்ட ஒரு மொழி இது. ஐசக் பாஷ்விஸ் சிங்கர் என்கிற ஓர் எழுத்தாளர் மட்டும் இந்த இட்டிஷ் மொழியில் மட்டுமே எழுதிப் புகழ்பெற்றவர். (அவரது இட்டிஷ் மொழிப் படைப்புகள் ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து பரவலானபின் அவருக்கு நோபல் பரிசுகூடக் கிடைத்தது.) அவர்கள் அதைத்தான் பேசினார்கள்.

ஜூன் 1922-ம் ஆண்டு தேசங்களின் கூட்டமைப்பு (லிமீணீரீuமீ ஷீயீ ழிணீtவீஷீஸீs) பாலஸ்தீன் ஆட்சியதிகாரம் தொடர்பான தனது இறுதி திட்டவரைவை வெளியிட்டது. பிரிட்டனின் நீண்டநாள் கோரிக்கையான “பாலஸ்தீனுக்குள் ஒரு யூத தேசத்தை நிறுவுவது மற்றும் எஞ்சிய மக்களின் சிவில், மத உரிமைகளைப் பாதுகாப்பது’’ என்கிற திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

இந்தத் திட்டவரைவின் பல பின்னிணைப்புகள், பாலஸ்தீனுக்கு சாரிசாரியாக வந்துகொண்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த யூதர்களின் குடியுரிமைக்கு மிக ஜாக்கிரதையாக உத்தரவாதம் வழங்கும் பணியை கவனமாகச் செய்தன. விசா பிரச்னை தொடங்கி விசாரணைப் பிரச்னைகள் வரை, இருப்பிடப் பிரச்னைகள் தொடங்கி, உத்தியோகப் பிரச்னைகள் வரை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு மாற்று வழியை மறைமுகமாக சிபாரிசு செய்தன.

எல்லாமே கண்கட்டு விளையாட்டுகள். பிரிட்டன் ஒரு முடிவு செய்துவிட்டது என்றால் மற்றவர்கள் அப்போது என்ன செய்துவிட முடியும்? சட்டபூர்வமான, யாருக்கும் புரியாத மொழியில் தனது சம்மதத்தைத் தெரிவிப்பது தவிர, யாருக்கும் வேறு எந்த வழியும் இல்லை என்பதே உண்மை. அவர்களது நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது. எக்காரணம் கொண்டும், பாலஸ்தீனுக்கு வரும் யூதர்கள் தடுத்து நிறுத்தப்படக் கூடாது; அவர்கள் பாலஸ்தீன் குடியுரிமை பெறுவதிலோ, அங்கு வாழ்வதிலோ எந்தக் குறுக்கீடும் தவறிக்கூட வந்துவிடக்கூடாது. அவ்வளவுதான்.

பெரிய பெரிய தொழிற்சாலைகளின் வாசல்களில் காலை நேரங்களில் நின்று கொஞ்சநேரம் வேடிக்கை பாருங்கள். தினசரி கூலி வேலைகளுக்காக வாசலில் நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருப்பார்கள். திடீரென்று ஒரு மணியடிக்கும். கதவைத் திறப்பார்கள். காத்திருப்பவர்கள், கடினவேலைகள் செய்யக்கூடியவர்கள்தானா, அவர்களால் அந்தப் பணிகளைச் செய்யமுடியுமா, முடியாதா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். காத்திருக்கும் அத்தனை பேரையும் உள்ளே விட்டுக் கதவை மூடிவிடுவார்கள். குழுவாகச் சேர்ந்தாவது செய்துமுடித்துவிடுவார்கள் என்கிற கணக்கு.

கிட்டத்தட்ட அப்படித்தான் அன்றைக்கு பாலஸ்தீனுக்குள் யூதர்களை அனுமதித்துக்கொண்டிருந்தார்கள்.

லீக் ஆஃப் நேஷன்ஸின் திட்டவரைவில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உத்தரவாக அல்லாமல் ஒரு கோரிக்கையாக பிரிட்டனிடம் கேட்டிருந்தார்கள். அது, பிரிட்டனின் ஆட்சியதிகாரத்துக்கு உட்பட்ட பாலஸ்தீனிய நிலப்பரப்பில் ஜோர்டன் நதியின் கிழக்குப் பகுதிகளில் மட்டும் யூதக் குடியிருப்புகளை நிறுவுவதைக் கொஞ்சம் நிறுத்திவைக்க வேண்டுமென்பது.

ஜோர்டன் நதியின் மேற்குக் கரை நமக்குத் தெரியும். வெஸ்ட் பேங்க் என்றே குறிப்பிடப்படும் பாலஸ்தீனியப் பகுதி. கிழக்குக்கரை என்பது நதிக்கு அந்தப் பக்கம். இன்றைய ஜோர்டன். அன்றைக்கு அதற்கு டிரான்ஸ்ஜோர்டன் என்று பெயர். மன்னராட்சி நடந்துகொண்டிருந்த நாடு அது. உலகப்போரில் மன்னர்களெல்லாம் காணாமல் போய்விட, ராணுவம் ஒன்றே ராஜாவாகிவிட, ஜோர்டனும் பிரிட்டனின் அதிகார எல்லைக்குள் வந்துவிட்டிருந்தது.

ஆனால் நடுவில் சில அரசியல் காரணங்களை முன்னிட்டு ஜோர்டனைத் தனித்து இயங்கச் செய்யலாம் என்று முடிவு செய்ய, பிரிட்டனும் அதற்கு மௌனமாகச் சம்மதித்திருந்தது. அப்துல்லா என்கிற ஜோர்டானிய மன்னர் மீண்டும் தன் தலைக்குத் தானே முடிசூட்டிக்கொண்டு அங்கே ஆட்சியில் உட்கார்ந்தார். ஜோர்டனின் கிழக்குக்கரைப் பகுதியில் தான் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று பிரிட்டன் உத்தரவாதம் அளித்து, மேற்குக் கரை தன்னுடையதுதான் என்பதையும் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி, அதே ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

கிழக்கு ஜோர்டன், மேற்கு ஜோர்டன் என்று ஒரு சௌகரியத்துக்கு அப்போது சொல்லிக்கொண்டார்கள். இரண்டு பக்கங்களிலும் இருந்தவர்கள் என்னவோ அரேபிய முஸ்லிம்கள்தான். ஆனால் அந்தப் பக்கம் மன்னராட்சி. இந்தப் பக்கம் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி.

உண்மையில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே அரேபியர்களுக்கு முதலில் புரியவில்லை. அவர்களிடம் சரியான தலைவர்கள் அப்போது இல்லை. ஒரு அமைப்பாகத் திரண்டு பேசவோ, தமது குரலை வெளியிடவோ அவர்களுக்குத் தெரியவில்லை.

யோசித்துப் பார்த்தால் இத்தனை அறியாமையிலா ஒரு மக்கள் கூட்டம் இருந்திருக்கும் என்று வியக்காமல் இருக்கமுடியாது. அந்தளவுக்கு சரித்திரம் முழுவதும் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள், பாலஸ்தீனிய அரேபியர்கள்.

நிலம் அவர்களுடையது. பாத்தியதை அவர்களுடையது. மண்ணின் மைந்தர்கள் என்கிற பெயரும் அவர்களுடையது. மன்னர்கள் காலத்திலிருந்து பாலஸ்தீனைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அத்தனை யுத்தங்களிலும் அவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் தங்கள் கண்ணெதிரேயே, தங்களைக் கேட்காமலேயே தேசத்தின் இரண்டாந்தரப் பிரஜையாகத் தம்மை யாரோ அறிவிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்!

எந்த யூதர்கள் அங்கே மைனாரிடிகளாக இருக்கிறார்களோ, அதே யூதர்களின் தேசமாக பாலஸ்தீன் மாறி, மெஜாரிடிகளான அரேபியர்கள் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடந்தாக வேண்டிய சூழல்!

உலகில் வேறெந்த தேசமும் இப்படியொரு வினோத நெருக்கடிக்கு உள்ளானதில்லை. இப்படியொரு நெருக்கடி உருவானபோதும் செய்வதற்கு என்ன இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் யாரும் திண்டாடித் தெருவில் நின்றதில்லை!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 5 மே, 2005