Tuesday, June 28, 2005

63] யூதர்களை ஆதரிக்கும் காரணங்கள்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 63

பாலஸ்தீன் போராளிகளுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய பிரச்னை, ஆயுதங்கள். அதிநவீன ஆயுதங்களுடன் அவர்களுக்குப் பரிச்சயம் கிடையாது. கொடுத்தாலும் உபயோகிக்கத் தெரியாது. நாட்டுத் துப்பாக்கிகளும் கையெறிகுண்டுகளுமே அவர்களுக்குப் போதுமானவை. ஆனால் அவை கிடைப்பதில்தான் அதிக சிக்கல்கள் இருந்தன.

மற்ற விஷயங்களில் எப்படியோ. ஆயுதப் பதுக்கல், கடத்தல், தயாரித்தல் நடவடிக்கைகளைக் கண்டறிந்து ஒழிப்பதில் அப்போது பாலஸ்தீனில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம் மிகத் தீவிரமாக இருந்தது. போராளிகளின் செயல்பாடுகளை ஒடுக்குவதென்பது அவர்களை நிராயுதபாணிகளாக்குவதுதான் என்பது அவர்களின் சித்தாந்தம். ஆகவே, கிராமம் கிராமமாக தினசரி ரெய்டுக்குப் போவார்கள். பாழடைந்த கட்டடங்கள், பாலைவனப்பகுதிகள், குன்றுகள், குகைகள், மசூதிகள் என்று திட்டமிட்டுச் சென்று தேடி போராளிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து அழித்து வந்தார்கள்.

ஆகவே, பாலஸ்தீன் போராளிகள் தமக்கான ஆயுதங்களை உள்ளூரில் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சிரியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் ஜோர்டனிலிருந்தும் சற்றுத் தள்ளி ஈராக்கிலிருந்தும் அவர்கள் ஆயுதங்களை ரகசியமாகத் தருவித்துக்கொண்டிருந்தார்கள். பேரீச்சம்பழ மூட்டைகளின் அடியில் பதுக்கி, துப்பாக்கிகளை அவர்கள் கடத்தி வந்தார்கள். பயணிகள் வாகனங்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தி, அதன்மூலமும் ஆயுதங்கள் கடத்தினார்கள். எல்லையோர கிராமவாசிகள், ஆடுகள் மேய்ப்போர், நாடோடிக் கூட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கருவிகளாகப் பயன்படுத்தி அவர்கள் மூலமும் ஆயுதம் கடத்தினார்கள்.

இப்படி, பாலஸ்தீனுக்கு ஆயுதம் அனுப்ப ஒவ்வொரு நாட்டிலும் சில குழுக்கள் இருந்தன. எல்லைவரை ஆயுதங்களைக் கொண்டுவந்து உரியவர்களிடம் சேர்ப்பித்துவிட்டுச் செல்வது அவர்களது பணி.

அப்படியான ஒரு குழுவின் தொடர்புதான் அராஃபத்துக்கு முதன் முதலில் ஏற்பட்டது. பாலஸ்தீன் விடுதலைக்காகத் தன்னாலான எதையாவது செய்யவேண்டும் என்று கருதிய அராஃபத், ஆயுதங்களை எல்லை வரை கடத்திச் சென்று கொடுத்துவரும் பணியை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். இந்தப் பணி, தன் படிப்பை பாதித்தாலும் பரவாயில்லை என்பதே அவரது கருத்தாக இருந்தது. ஆனாலும் பள்ளிப் படிப்பில் அவர் சுமாரான மதிப்பெண்களைப் பெறவே செய்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் அராஃபத், கெய்ரோவில் உள்ள ஃபாத் (Faud) பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பட்டப்படிப்பைத் தொடங்கினார். பின்னாளில் இதுதான் கெய்ரோ பல்கலைக் கழகம் என்று அறியப்பட்டது. இந்தப் பல்கலைக் கழகத்தில் அராஃபத் படிக்கத் தொடங்கியது, கட்டுமானப் பொறியியல் படிப்பு. இந்தப் படிப்பில் சேர்வதன்மூலம் பாலைவனங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் நிறைய பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருக்கும் என்று அவர் கருதினார். கல்லூரி மூலமாகவே பாலஸ்தீன் செல்லவும் சந்தர்ப்பம் கிடைக்கலாம் என்று நினைத்தார். ஏனெனில் அன்றைக்குப் பல்வேறு மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும் பொறியியல் மாணவர்கள், கட்டடங்களை ஆய்வு செய்ய, புராதன கட்டுமானங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஜெருசலேத்துக்கு வந்துகொண்டிருந்தார்கள். அப்படியரு சந்தர்ப்பம் தனக்கும் கிடைத்தால் அடிக்கடி ஜெருசலேத்துக்குச் செல்ல முடியுமே என்று அவர் கருதியிருக்கலாம்.

ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் போய்விட்டது. 1948-ம் வருடம். இஸ்ரேல் உருவாகி, அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் யுத்தம் மூண்டிருந்த தருணம். அராஃபத்துக்கு அப்போது பத்தொன்பது வயது. (ஆகஸ்ட் 24, 1929 அன்று அவர் பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்த முடியாத தகவல். அவர் ஆகஸ்ட் 4-ம் தேதி ஜெருசலேத்தில் பிறந்தார் என்று ஒரு சாரார் இன்றும் தீவிரமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அராஃபத்தின் பிறப்புச் சான்றிதழைக் கண்டுபிடிக்க முடியாத காரணத்தாலும் கெய்ரோ பல்கலைக் கழகத்தில் அவரைப் பற்றிய ஆவணங்களைத் தேடிப்பெற இயலாத காரணத்தாலும் அவரது பிறப்பு விவரங்கள் இன்றளவும் சந்தேகத்துக்கு இடமானதுதான். ஆலன் ஹார்ட் என்கிற அராஃபத்தின் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்றாசிரியர்கூட அவர் கெய்ரோவில் பிறந்ததைத் தான் உறுதிப்படுத்துகிறாரே தவிர, பிறந்த தேதி, ஆண்டு உள்ளிட்ட விவரங்களை அல்ல.)

ஏற்கெனவே பாலஸ்தீன் போராளிகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்த அராஃபத்துக்கு, யுத்தத்தில் அரபு முஸ்லிம்கள் பட்டுக்கொண்டிருந்த காயமும் அவமானமும் ஆறாத வடுவாகிப்போனது. வழிகாட்ட ஒரு நாதியில்லாமல் இப்படி நிலத்தை இழந்து தவிக்கிறார்களே என்று கண்ணீர் விட்டார். ஏதாவது செய்யமாட்டோமா என்று அவர் மனம் ஏங்கியது. இஸ்ரேலியர்கள் அத்தனை பேரையும் நிற்க வைத்துச் சுடவேண்டும் என்கிற வெறி மேலோங்கியது. இதற்குமேல் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியுமா என்று சந்தேகப்பட்டார். உடனடியாகச் சில தோழர்களுடன் எகிப்து எல்லையைக் கடந்து காஸா பகுதிக்குள் புகுந்தார். யுத்தத்தில் பங்கெடுக்கத் தொடங்கினார்.

கவனிக்கவும். அராஃபத்துக்கு அப்போது பெரிய போர்ப்பயிற்சிகள் கிடையாது. முதல் முறையாக ஆயுதங்களைப் பயன்படுத்தினார். எப்படிச் சுடவேண்டும் என்பதுகூடத் தெரியாது. இலக்கு சரியாகப் பட்டால் அதிர்ஷ்டம் என்கிற நிலையில்தான் இருந்தார். தனக்கு மட்டுமல்ல; பெரும்பாலான பாலஸ்தீனப் போராளிகளும் தன்னைப் போலத்தான் இருக்கிறார்கள் என்பதையும் கவனித்தார்.

யுத்தத்தில் அரேபியர்கள் அடைந்த வீழ்ச்சி அராஃபத்தை மிகவும் பாதித்தது. உதவிக்கு வந்த சகோதர அரபு தேசங்கள் அனைத்தும் அமைதி ஒப்பந்தம் என்கிற பெயரில் ஆளுக்குக் கொஞ்சம் லாபம் பார்த்துவிட்டு ஊர் திரும்பியதும் அவரை வருத்தமுறச் செய்தது. விரக்தியில், என்ன செய்வதென்று புரியாமல் சில காலம் பிரமை கொண்டு திரிந்தார். தன்னால் மேற்கொண்டு கெய்ரோவில் படித்துக்கொண்டிருக்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை.

ஒரு கட்டத்தில் அந்தப் பிராந்தியத்தை விட்டே விலகி எங்காவது போய்த் தனியாக வசித்தால் உருப்படியாகத் தன்னால் யோசிக்க முடியும் என்று அவருக்குத் தோன்றியது. தனிமையில்தான் திட்டம் தீட்ட முடியும். தனிமையில்தான் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். தனிமைதான் காயப்பட்ட மனத்தைப் புடம் போடும். மேலும் தனிமை தரும் அனுபவங்களும் முக்கியமானவை.

ஆகவே அராஃபத் சில காலம் அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து, விசாவுக்கு விண்ணப்பித்தார். அங்கே டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் அவருக்கு இடம் கிடைத்தது.

அந்த ஒருசில வருட அமெரிக்க வாழ்க்கைதான் அராஃபத்தின் கண்ணைத் திறந்தது என்று சொல்லவேண்டும். தனக்குக் கிடைத்த தனிமையை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, பாலஸ்தீன் மக்களைக் குறித்து அவர் சிந்திக்கத் தொடங்கினார். அமெரிக்காவின் இஸ்ரேலிய ஆதரவு நிலையை மிக நெருக்கமாக ஆராய்ந்தார். யூதர்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? அமெரிக்கா போன்ற பெரும் முதலாளித்துவ தேசங்கள் அவர்களை ஏன் ஆதரிக்கிறார்கள்? யூதர்களை விரட்டியடித்த ஐரோப்பா ஏன் அவர்களுக்கு ஆதரவாக இப்போது நிற்கிறது? அரேபியர்களின் நியாயம் என்ன? அது ஏன் மற்றவர்களுக்குப் புரிவதில்லை? அரேபியர்களின் நியாயத்தைக் காட்டிலும் யூதர்களின் நியாயம் ஏன் பொருட்படுத்தத் தகுந்ததாக மற்றவர்களுக்குத் தோன்றுகிறது?

எந்தச் சார்பும் இல்லாமல் மிகவும் ஆழமாக அராஃபத் யோசித்தார். இறுதியில் அவருக்குக் கிடைத்த விடைகளை இப்படிப் பட்டியலிடலாம்:

1. சரித்திர நியாயங்களை மேலை நாடுகள் பொருட்படுத்துவதில்லை.

2. அரேபியர்கள் ஏமாற்றப்படுவது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனெனில் இஸ்லாத்தையே ஏற்க விரும்பாதவர்கள் அவர்கள். இது அரசியல் காரணங்களைத் தாண்டி மதக் காரணங்களை உள்ளடக்கியது. கிறிஸ்துவர்கள் யூதர்களை ஏற்றாலும் ஏற்பார்களே தவிர, முஸ்லிம்களை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

3. அரேபியர்களிடம் ஒற்றுமை இல்லை. இதுதான் ஐரோப்பிய தேசங்களுக்கும் இஸ்ரேலுக்கும் முக்கியமான தற்காப்புச் சாதனமாக இருக்கிறது.

4. அரேபியர்களுக்குக் கல்வி இல்லை. பொருளாதார வசதிகள் இல்லை. ஆகவே சிந்திக்க மறுக்கிறார்கள். அவர்களது கோபத்தை சரியான வழியில் வெளிப்படுத்தத் தெரியாததால் முரடர்கள் என்று பெயரெடுத்துவிடுகிறார்கள்.

5. இஸ்ரேல் செய்வது முழு அயோக்கியத்தனம். இதைப் பொறுமையுடன் சகித்துக்கொண்டிருப்பது எந்த ஒரு அரேபியனாலும் இயலாத காரியம். இஸ்ரேலுக்கு அமைதியின் மொழி புரியாது. ஆயுதம்தான் ஒரே வழி. அதற்கு அரேபியர்களுக்கு முறையான பயிற்சி வேண்டும்.

6. இவற்றைக் கல்லூரி மட்டத்திலிருந்து தொடங்குவதே சரியான காரியமாக இருக்கும்.

இவ்வாறு முடிவு செய்தார் அராஃபத். என்ன செய்யவேண்டும் என்று தெளிவு கிடைத்ததும் எப்படிச் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார். அதற்குள் அவரது பட்டப்படிப்பு முடிந்திருந்தது. மீண்டும் கெய்ரோவுக்கு வந்து, கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்புக்காகப் பதிவு செய்துகொண்டார்.

அது ஒரு சாக்குதான். உண்மையில் அரபு மாணவர்களை ஒருங்கிணைத்து, பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண்பதுதான் அவரது முக்கியமான நோக்கமாக இருந்தது.

கெய்ரோ பல்கலைக் கழகத்து மாணவர்களிடம் அவர் தொடர்ந்து, இடைவிடாது பாலஸ்தீன் பிரச்னை குறித்து பேசத் தொடங்கினார். ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்தபடியால், பிற பல்கலைக் கழக மாணவர்களுடன் தொடர்பு கொள்வதும் அவருக்கு எளிதாக இருந்தது.

அதுவரை ஏட்டளவில் இருந்த அரேபிய சகோதரத்துவம் என்கிற கருத்தாக்கத்தை நடைமுறையில் சாத்தியமாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. நிறைய பயணங்கள் மேற்கொண்டார். எல்லா தேசங்களின் மாணவர்களையும் சந்தித்து, இஸ்ரேலின் அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார். அரேபிய மாணவர்கள் இணைந்து போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்தக் காலகட்டத்தில் அராஃபத் பலமுறை ரகசியமாக பாலஸ்தீனுக்குப் போய்வந்திருப்பதாகத் தெரிகிறது. ஜெருசலேம், காஸா, மேற்குக்கரைப் பகுதிகளில் வசித்துவந்த அரேபிய இளைஞர்களைத் திரட்டி, போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது பற்றியெல்லாம் அவர் பேசியிருப்பதாகத் தெரிகிறது. பாலஸ்தீன் மாணவர் பேரவை என்றொரு அமைப்பைத் தோற்றுவித்து, அதன் தலைவராகவும் நான்கு வருடங்கள் பணியாற்றினார். (1952 முதல் 56 வரை)

அராஃபத், பாலஸ்தீன் மாணவர் பேரவையின் சார்பில் தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தபோதுதான் கெய்ரோவில் அவரது தந்தை காலமானார். தகவல் வந்து சேர்ந்தபோது அராஃபத், ஒரு மாணவர் கூட்டத்தில் பேசுவதற்காகத் தயார் செய்து, நண்பர்களிடம் பேசிக்காட்டிக்கொண்டிருந்தார். செய்தியைச் சொன்னவர்கள், அராஃபத் உடனடியாகக் கெய்ரோவுக்குப் புறப்பட என்னவழி என்றும் வழிச்செலவுக்குப் பணத்துக்கு என்ன செய்வதென்றும் கவலைப்பட, அராஃபத், 'எதற்கு தண்டச் செலவு? அவர் இறந்துவிட்டார். அவ்வளவுதானே? எப்படியும் யாராவது எடுத்துப் போய் புதைப்பார்கள். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்' என்று சொல்லிவிட்டாராம்.

எக்காரணம் கொண்டும் தன் கவனம் போராட்டத்திலிருந்து திசை திரும்பிவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார் அவர்.

1956-ல் அராஃபத் தன் உயர்நிலை பட்டப்படிப்பை முடிவு செய்தார். அவருக்கு உடனே எகிப்து ராணுவத்தில் பொறியாளராக வேலை கிடைத்தது. சிலகாலம் சூயஸ் கால்வாய்த் திட்டத்தில் பணியாற்றியபடியே ஓய்வு நேரத்தில் தனது ரகசிய நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு வருடம் கூட இருக்காது. குவைத்தில் பொதுப்பணித்துறையில் அவருக்குப் பொறியாளர் வேலை கிடைத்தது. எகிப்தில் இருப்பதைக் காட்டிலும் சற்றுத் தள்ளி குவைத்துக்குப் போய் வாழ முடியுமானால், தனது நடவடிக்கைகளுக்குச் சிரமம் இல்லாமல் இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. ஆகவே, எகிப்து ராணுவப் பணியை ராஜினாமா செய்துவிட்டு குவைத்துக்குப் போனார்.

இது நடந்தது 1957-ம் ஆண்டு வாக்கில். முதலில் பொதுப் பணித்துறை. பிறகு அங்கேயே தனக்கென்று சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கி, ஒரு போர்டு மாட்டினார். இது போதும் என்று முடிவு செய்தார்.

கட்டுமான நிறுவன போர்டின் பாதுகாப்பில் அவர் பாலஸ்தீன விடுதலைக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30 ஜூன், 2005

Saturday, June 25, 2005

62] யாசர் அராஃபத்தின் மறக்க முடியாத..

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 62

நல்ல, குளிர் மிகுந்த இரவு. வீட்டில் அத்தனை பேரும் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். துளி சப்தம் இல்லாத சாலையில் எங்கோ தொலைவில் ஒரே ஒரு நாய் மட்டும் ஒரு முறை குரைத்தது. குரைக்கத் தொடங்கிய அந்த நாயின் குரல், ஆரம்பத்திலேயே அடங்கிப்போனது, அரை உறக்கத்தில் இருந்த அந்தச் சிறுவனுக்கு வியப்பளித்தது. நாய் குரைக்கத் தொடங்கினால் ஒரு நிமிடமாவது நீடிக்காதோ? இதென்ன, ஆரம்பத்திலேயே ஓய்ந்துவிட்டது?

அவன் ஒருமுறை புரண்டு படுத்தான். வீதியில் யாரோ நடப்பது போல் இருந்தது. ஒருவரா? இரண்டு பேரா? இல்லை. நிறைய காலடிச் சப்தங்கள் கேட்கின்றன. எப்படியும் பத்துப் பேராவது இருக்கலாம். அவன் நேரம் பார்த்தான். மணி நள்ளிரவைத் தாண்டி நாற்பது நிமிடங்கள் கடந்திருந்தன.

இந்த இரவில், இத்தனை குளிரில் வீதியில் யார் போகிறார்கள்? ஒரே மாதிரி பூட்ஸ் சத்தம். அதுவும் இந்த பூட்ஸ் சத்தம் சாதாரண மக்கள் அணிந்து நடக்கும்போது கேட்கும் சத்தமல்ல. இது ராணுவப்படை பூட்ஸ். அப்படியென்றால்?

கடவுளே! இன்றைக்கு எந்த வீட்டைக் குறி வைத்திருக்கிறார்கள்?

அந்த ஐந்து வயதுச் சிறுவனுக்கு அச்சம் மிகுந்தது. போர்வைக்குள் மேலும் ஒடுங்கிப் படுத்து இழுத்து தலை வரை போர்த்திக்கொண்டான். சில விநாடிகள் கழித்து, பூட்ஸ் சத்தம் நின்றுவிட்டது. மிகவும் அமைதியாக இருந்தது.

இல்லையே, இப்படி இருக்கக்கூடாதே? பூட்ஸ் சத்தம் நின்ற கணத்தில் அழுகைச் சத்தமும் ஓலச் சத்தமும் அல்லவா கேட்கும்? அதானே வழக்கம்? என்ன நடக்கிறது இன்றைக்கு?

அதற்குமேல் அவனால் படுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. பூனை போல் சத்தமின்றி எழுந்து பின்புறப் படிக்கட்டுக் கதவைத் திறந்து, வீட்டின் மேல்கட்டுக்குப் போனான். ஓசைப்படாமல் ஜன்னலைப் பாதி திறந்து வெளியே பார்த்தான். முதலில் தவறாக ஏதும் தெரியவில்லை. இருளில் சாலையும் உறங்கித்தான் கிடந்தது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தபோது, வீதியின் முனையில், நடுச்சாலையில் ஒரு நாய் விநோதமாகக் கால்களைப் பரப்பிக் கிடப்பதைக் கண்டான். சற்றுமுன் குரைக்கத் தொடங்கிய நாய். இன்னும் கவனித்துப் பார்த்ததில் அந்த நாயைச் சுற்றிலும் ஈரம் படர்ந்திருந்ததும் அவனுக்குப் புலப்பட்டது.

அப்படியென்றால்? நாய் குரைக்கத் தொடங்கியதும் கொன்றுவிட்டார்களா?

அதிர்ச்சியில் அவனுக்குத் தொண்டை உலர்ந்துவிட்டது. அப்படியே பார்வையை நகர்த்தி வீதி முழுவதையும் பார்த்தான். ஒரு கணம்தான். அவனுக்கு உயிரே போய்விடும்போலிருந்தது.

ராணுவப் படையினர் அன்றைக்கு அவனது வீட்டைத்தான் தேர்ந்தெடுத்திருந்தனர். வீட்டு வாசலில் சுவரோடு சுவராக அணிவகுத்திருந்த கால்களைப் பார்த்துத் திடுக்கிட்டான் அந்தச் சிறுவன். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அப்படியே சுவரோடு சரிந்து விழுந்தான்.

சில விநாடிகளில் ராணுவத்தினரின் வேட்டை தொடங்கிவிட்டது.

முதலில் கதவை இடித்தார்கள். திறக்கப்படாத கதவைப் பிறகு துப்பாக்கிகளின் பின்பகுதியால் தட்டி உடைத்து உள்ளே நுழைந்தார்கள். விளக்கைக்கூட அவர்கள் போடவில்லை. படுத்துக் கிடந்தவர்களைக் காலால் எட்டி உதைத்து எழுப்பினார்கள். அலறிக்கொண்டு எழுந்தவர்களை அறைந்து வீழ்த்தினார்கள். டேபிள் கவிழ்க்கப்பட்டது. கண்ணாடிச் சாமான்கள் தூக்கி எறியப்பட்டன. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. அந்த வீட்டில் நூற்று நாற்பது வருடப் பழைய கடிகாரம் ஒன்று இருந்தது. சுவருக்கு அழகு தரும் மிகப்பெரிய கடிகாரம். அதை ஒரு வீரன் பார்த்தான். உடனே பிடுங்கி எடுத்து வீதியில் வீசி உடைத்தான். பாத்திரங்களைத் தூக்கி அடித்தார்கள். தடுக்க வந்த பெண்களையும் தூக்கி வீதியில் வீசினார்கள். பெட்டிகள், படுக்கைகள், அனைத்தையும் உடைத்துக் கிழித்து வீசியெறிந்தார்கள்.

மாடி அறையில் பதுங்கியிருந்த சிறுவன் சத்தங்கள் மூலமே இவை அனைத்தையும் உணர்ந்தான். உரக்க அழக்கூட முடியவில்லை அவனால். அவர்கள் தம் வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது வீட்டில் எத்தனை உயிர்கள் மிச்சம் இருக்கும் என்பதே அவனது கவலையாக இருந்தது. மாமாவை விட்டு வைப்பார்களா? அத்தை உயிர் பிழைப்பாளா? அவர்களது குழந்தைகள்?

ம்ஹும். எதுவும் நிச்சயமில்லை. இன்றைக்கு இந்த வீடு என்று குறி வைத்தவர்கள், முழுக்க அழித்தொழிக்காமல் திரும்பமாட்டார்கள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் அவசியம் கண்விழித்திருப்பார்கள். ஆனால் எழுந்து வந்து உதவி செய்ய யாருக்கும் துணிச்சல் இல்லை. துப்பாக்கி வைத்திருக்கும் ராணுவத்தினர். அவர்களிடம் என்ன செய்துவிட முடியும்?

முக்கால் மணி நேரம் அந்தக் கலவரம் அங்கே நடந்தேறியது. வீட்டில் இருந்த அத்தனை பேரும் - அந்த ஒரு சிறுவனைத் தவிர தாக்கப்பட்டிருந்தார்கள். உயிர் இருக்கிறதா, இல்லையா என்பது கூடத் தெரியவில்லை. இறந்திருப்பார்கள் என்று நினைத்து, வந்த படை ஒரு வழியாகத் திரும்பிப் போனதும் அவன் மெல்ல படியிறங்கிக் கீழே வந்தான்.

மாமாவின் மூக்கருகே கை வைத்துப் பார்த்தான். நல்ல வேளை. சுவாசம் இருக்கிறது. அவனுக்கு நிம்மதி பிறந்தது. திரும்பி வீட்டைப் பார்த்தான். அது சீரடைய எப்படியும் பல மாதங்கள் பிடிக்கும் என்று தோன்றியது. உட்கார்ந்து ஓவென்று அழத் தொடங்கினான்.

பாலஸ்தீனிய விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத், தன் ஞாபகத்தில் இருக்கும் முதல் சம்பவமாக வருணித்த காட்சிதான் மேலே சொன்னது. அந்தச் சிறுவன் அவர்தான். அது, ஜெருசலேத்தில் உள்ள அவரது மாமா வீடு. நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியவர்கள், அப்போது பாலஸ்தீனைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷ் படையினர். அராஃபத்துக்கு அப்போது வயது ஐந்து.

அந்த ஐந்தாவது வயது தொடங்கி, தம் வாழ்நாள் முழுவதும் அவர் சுமார் பத்தாயிரம் கலவரங்களைக் கண்ணெதிரே பார்த்திருக்கிறார். பல லட்சம் உயிர்கள் பலியாவதைக் கண்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறார். ஆயிரமாயிரம் மக்கள் அகதிகளாக, இருக்க இடமின்றிப் பாலைவனங்களில் அலைந்து திரிந்ததைக் கண்டு ரத்தக்கண்ணீர் விட்டிருக்கிறார். ஒரு துண்டு ரொட்டிக்காகத் தம் இனத்து மக்கள் பல மைல்கள் நடந்து, பிச்சைக்காரர்கள் போல் நடத்தப்பட்ட காட்சிகளைப் பார்த்திருக்கிறார். பாடப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடங்களுக்குப் போகவேண்டிய குழந்தைகள், நாட்டுத்துப்பாக்கி ஏந்தி போர்க்களம் காணவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதன் ஆதாரக் காரணம் என்னவென்று சிந்திக்க ஆரம்பித்தபோதுதான் அராஃபத்துக்குள் இருந்த போராளி கண் விழித்தான். அவருக்குள் இருந்த தலைவன் சீற்றம் கொண்டான்.

வேறு வழியே இல்லாமல்தான் அராஃபத் துப்பாக்கி ஏந்தினார். இறக்கும்வரை ஏந்திய துப்பாக்கியை அவரால் இறக்கி வைக்கவே முடியவில்லை.

பாலஸ்தீனப் போராட்டத்தின் மிக முக்கிய அத்தியாயம், யாசர் அராஃபத். அவரைப் பற்றிப் பார்க்கும்போது முதலில் நாம் கவனித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டிய விஷயம், அராஃபத் பாலஸ்தீனில் பிறந்தவர் இல்லை என்பது!

அராஃபத், எகிப்தில் கெய்ரோவில் பிறந்தவர். அவரது தந்தை அங்கே ஒரு சுமாரான துணி வியாபாரி. தாய் வழியில்தான் பாலஸ்தீனத் தொடர்பு அவருக்கு வருகிறது. அராஃபத்தின் அம்மாவின் பூர்வீகம் ஜெருசலேம். இதை ஒரு முக்கியக் குறையாகச் சுட்டிக்காட்டி, அராஃபத்துக்கு பாலஸ்தீனம் மீது உண்மையிலேயே அக்கறை கிடையாது; சம்பாதிப்பதற்காகத்தான் அவர் போராளியானார் என்று குற்றம்சாட்டுவோர் உண்டு. பின்னாளில் அவரது சொத்துகள் என்று கணக்கெடுக்கப்பட்டவற்றைச் சுட்டிக்காட்டி, 'அப்போதே சொன்னோமே கேட்டீர்களா' என்று கேலி செய்தோரும் உண்டு.

ஆனால், இஸ்லாத்தில் தந்தையைக் காட்டிலும் தாய்வழி உறவுக்குத்தான் மதிப்பு அதிகம். தாய்வழிப் பூர்வீகம்தான் அந்தக் காலத்தில் பாலஸ்தீனில் முக்கிய உறவுத் தொடர்புச் சங்கிலியாக அறியப்பட்டது. அந்த வகையில் அராஃபத்தின் பூர்வீகம் ஜெருசலேம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஜெருசலேத்தில் பிறந்தவர் அல்லர்; எகிப்தில்தான் பிறந்தார் என்பதிலும் சந்தேகமும் இல்லை.

அராஃபத்துக்கு ஐந்து வயதானபோது அவரது தாய் இறந்துவிட்டார். ஆகவே குழந்தை தாய்மாமன் வீட்டில் வளர்வது நல்லது என்று உறவினர்கள் முடிவு செய்து அவரை ஜெருசலேத்துக்குக் கொண்டுவந்து விட்டார்கள். அப்படி வந்தபோதுதான் முன்னர் நாம் பார்த்த அந்த நள்ளிரவுக் கலவரச் சம்பவம் நடந்தது.

சுமார் நான்கு வருடங்கள்வரை அராஃபத், மாமா வீட்டில், ஜெருசலேத்தில் இருந்தார். அதாவது ஒன்பது வயது வரை. அந்த நான்கு வருட காலமும் அவருக்கு ஜெருசலேம் நகரம் ஒரு வினோதமான பிராந்தியமாகவே தெரிந்தது. திடீர் திடீரென்று குண்டுகள் வெடிக்கும். திடீர் திடீரென்று கடையடைப்பு நடக்கும். எதிர்பாராத நேரங்களில் ராணுவ அட்டகாசம் ஆரம்பமாகும்.

ஒரு பக்கம், புனித பூமி என்று கண்மூடி, கையேந்தித் தொழுதுகொண்டு, இன்னொரு பக்கம் அச்சத்துடன்தான் அங்கே வாழமுடியும் என்கிற நிலைமை, சிறுவன் அராஃபத்துக்குப் புரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. வாழ்க்கை என்பது போராட்டம். உணவுக்காக, உறைவிடத்துக்காக, ஊருக்காக என்று மட்டுமில்லை. வாழ்வதென்பதே போராட்டம்தான் என்று அவருக்குத் தோன்றியது. தன்னால் முழு அக்கறை செலுத்திப் பள்ளிப் பாடங்களைப் படிக்க முடியாது என்றும் நினைத்தார். பாதுகாப்புக்கு ஒரு குறுவாளாவது இல்லாமல் வெளியே போகமுடியாது என்கிற நிலைமையில், பாடங்கள் எப்படி ஏறும்?

மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார் அராஃபத். எப்போதாவது கெய்ரோவில் உள்ள தமது மூத்த சகோதரிக்குக் கடிதங்கள் எழுதுவார். ஜெருசலேத்தில் தன்னால் சமநிலையுடன் வாழமுடியவில்லை என்று அக்கடிதங்களில் மிகவும் வருத்தப்படுவார். இங்கே மக்கள் படும் பாடுகளைப் பார்த்தால் நாளெல்லாம் உட்கார்ந்து கதறித் தீர்க்கலாம் போலிருக்கிறது என்று ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

இதனை முற்றிலும் தவறாகப் புரிந்துகொண்ட அராஃபத்தின் சகோதரி, தன் தந்தையிடம் சொல்லி, அராஃபத்தை கெய்ரோவுக்கே அழைத்துக்கொண்டுவர ஏற்பாடு செய்துவிட்டார். அராஃபத்துக்கு உண்மையில் ஜெருசலேத்தை விட்டுப் போவதில் விருப்பம் இல்லை. வாழ்வது சிரமம் என்று நினைத்தாரே தவிர, ஓடிவிட நினைக்கவில்லை. ஆனால், அவரது தந்தை திடீரென்று ஒருநாள் வந்து அவரை மீண்டும் கெய்ரோவுக்கே அழைத்துப் போய்விட்டார்.

கெய்ரோவில் அராஃபத் தன் மூத்த சகோதரியின் பராமரிப்பில் வளரத் தொடங்கினார். ஏனோ அவருக்குத் தன் சகோதரியைப் பிடித்த அளவுக்கு அப்பாவைப் பிடிக்கவில்லை. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

யாசர் அராஃபத்தின் தந்தை ஒரு சரியான வியாபாரி. வியாபாரம் ஒன்றைத்தவிர அவருக்கு வேறு எதிலும் நாட்டம் கிடையாது. மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றெல்லாம் அவர் எண்ணிக் கவலைப்படுகிறவர் இல்லை. தன் தொழில், தன் பணம், தன் சந்தோஷம் என்று மட்டுமே நினைக்கக் கூடியவர் என்பதால்தான் அராஃபத்துக்கு அவரைப் பிடிக்காமல் போனது என்று சிலர் சொல்கிறார்கள்.

வேறொரு சாரார் கருத்துப்படி அராஃபத்தின் தந்தைக்குப் பல வீடுகள் உண்டு. அதாவது பல மனைவிகள். இதுவும் சிறுவன் அராஃபத்தின் மனத்தை மிகவும் பாதித்தது; அதனால்தான் அவர் தன் தந்தையை வெறுத்தார் என்போரும் உண்டு. தன்னுடைய அம்மா இறந்தது பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல், அப்பா பல பெண்களுடன் வாழ்கிறாரே என்கிற வெறுப்பு அவருக்கு அந்த வயதில் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

மூன்றாவது காரணம், அவரது அப்பா ஒரு முசுடு என்பது. குழந்தை என்று அன்பாகத் தூக்கி ஒரு முறை கூடக் கொஞ்சாதவர் என்பதால் பிறந்ததிலிருந்தே அராஃபத்துக்குத் தந்தைப் பாசம் இல்லாமலேயே போய்விட்டது என்று சொல்கிறார்கள்.

என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் 1952-ல் அராஃபத்தின் தந்தை இறந்தபோது, இறுதிச் சடங்குக்குக்கூட அராஃபத் போகவில்லை. அந்தளவுக்கு அவருக்குத் தமது தந்தையுடன் உறவு நிலை சரியாக இருந்ததில்லை என்பது மட்டும் தெரிகிறது.

அராஃபத் முதல் முதலாகத் தமது பதினாறாவது வயதில் ஒரு துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்தார். அப்போது அவர் கெய்ரோவில் படித்துக்கொண்டிருந்தார். மனம் முழுக்க ஜெருசலேத்திலும் உடல் மட்டும் கெய்ரோவிலுமாக வாழ்ந்துகொண்டிருந்த அராஃபத்துக்கு அப்போது ஒரு சுமாரான உள்ளூர் புரட்சிக் குழுவுடன் தொடர்பு ஏற்பட்டது. பாலஸ்தீனில் பிரிட்டிஷ் ராணுவத்தை விரட்டுவதற்காகப் போராடிக்கொண்டிருந்த அரேபியர்களுக்கு ஆயுத உதவி செய்வதற்கென்று உருவான குழு அது.

எகிப்திலிருந்த ஆயுத வியாபாரிகளிடமிருந்து கழித்துக் கட்டப்பட்ட துப்பாக்கிகளை வாங்கி, அவற்றைச் சரிசெய்து, பழுதுபார்த்து, ஜெருசலேத்துக்குக் கடத்துவது அவர்கள் வேலை.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26 ஜூன், 2005

Tuesday, June 21, 2005

61] அரபுக்களின் ஒற்றுமையின்மை

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 61

இஸ்ரேல் உருவான மறுதினமே யுத்தமும் ஆரம்பமாகிவிட்டபடியால், இஸ்ரேலின் அரசியல் அமைப்பு, ஆட்சி முறை போன்ற விவரங்களை உடனடியாக நம்மால் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் மிக முக்கியமான விஷயம் இது. மத்தியக்கிழக்கு என்று சொல்லப்படும் மாபெரும் நிலப்பரப்பின் 99.9 சதவிகிதத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை வேறு; 0.1 சதவிகித நிலப்பரப்பே கொண்ட இஸ்ரேலின் அரசியல் அமைப்பு முற்றிலும் வேறு.

இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடு. தோன்றிய தினத்திலிருந்தே அப்படித்தான். ஆனால் நம்முடையதைப் போன்ற ஜனநாயகம் அல்ல அது. வரையறுக்கப்பட்ட ஜனநாயகம். கிட்டத்தட்ட அமெரிக்க ஜனநாயகத்துடன் நெருக்கமாக அதை ஒப்பிடமுடியும். ஒரே ஒரு வித்தியாசம், அமெரிக்காவில் அதிபருக்குத்தான் அதிகாரங்கள். இஸ்ரேலில் பிரதமருக்கு. அந்த ஒரு விஷயத்தில் இந்திய ஜனநாயகம் மாதிரிதான். ஆனால் மற்ற அம்சங்கள் எல்லாம் பெரும்பாலும் அமெரிக்காவைப் போலவேதான்.

1948-ம் வருடம் மே மாதம் 14-ம் தேதிதான் இஸ்ரேல் பிறந்தது என்றபோதும் அந்த வருடம் மார்ச்சிலேயே ஆட்சி எப்படி இருக்கவேண்டும், என்ன மாதிரியான நிர்வாக அமைப்பை நிறுவவேண்டும் என்று யூதர்களின் சமூகத் தலைவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்திருந்தார்கள். அரபு தேசங்களுக்கு நடுவில் அமையும் தேசமாக இருந்தபோதும், அந்த தேசங்களின் அரசியல் அமைப்புச் சாயல் ஏதும் தன்னிடம் இருந்துவிடக் கூடாதென்பதில் இஸ்ரேல் ஆரம்பம் முதலே மிகத் தெளிவாக இருந்தது.

மார்ச் மாதம் முதல் தேதி முதன்முதலில் மக்கள் மன்றம் என்றொரு அதிகாரபூர்வ அமைப்பை நிறுவினார்கள். யூதர்களின் தேசியக் கமிட்டியிலிருந்து இந்த மக்கள் மன்றத்துக்குப் பிரதிநிதிகளை நியமித்தார்கள்.

இந்த மக்கள் மன்றம்தான், இஸ்ரேல் உருவானதும் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தளித்தது.

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தை 'நெஸட்' (Knesset) என்று குறிப்பிடுவார்கள். ஹீப்ரு மொழியில் 'நெஸட்' என்றால் சட்டம் இயற்றும் இடம் என்று பொருள். இதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும்.

ஆரம்பகாலத்தில் நாடாளுமன்றத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தன. கிட்டத்தட்ட மன்னராட்சி போலவே தோற்றமளிக்கும்படியான அதிகாரங்கள். பிறகு இந்த அதிகாரங்களில் கொஞ்சம் நீதிமன்றத்துக்குப் போனது. எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் பிரதம மந்திரியின் வசம் தஞ்சம் புகுந்தது.

ஒரு சம்பிரதாயத்துக்காக அதிபர் என்றொருவரை இஸ்ரேல் வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் எந்த அதிகாரமும் அவருக்குக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைப்பது தவிர!

இஸ்ரேலில் ஒரு கட்சி ஆட்சி என்கிற வழக்கம் என்றைக்குமே இருந்ததில்லை. எப்போதும் ஜேஜே என்று குறைந்தது பதினைந்து இருபது கட்சிகளாவது சேர்ந்துதான் நாடாளுமன்றத்தை வழி நடத்தும். ஒரு கட்சி நாடாளுமன்றத்துக்குள் நுழையவேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு நிபந்தனை உண்டு. தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 1.5 சதவிகிதமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.

கூட்டணி அரசு என்றாலும் உறுதிமிக்க கூட்டணியாகத்தான் எப்போதும் இருக்கும். ஏனெனில் கட்சி வேறுபாடுகள் இருப்பினும் யூத இனம் என்கிற ஓரம்சத்தால் அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்படுவார்கள். இது அரசியலுக்கும் அப்பாற்பட்ட பிணைப்பு!

நம் ஊரில் செய்வதுபோல நினைத்துக்கொண்டாற்போல் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பிரதமரைக் கவிழ்ப்பதெல்லாம் இஸ்ரேலில் முடியாது. குடியரசுத் தலைவர் மாளிகை முன்னால் தர்ணா நடத்தினாலும் நடக்காது. அதிபரே விரும்பினாலும் பிரதமரை மாற்ற முடியாது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பிரதமரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்று நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கலாம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடுகள் ஏதுமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து இந்தக் காரியத்தை ஆத்மசுத்தியுடன் செய்தால், பிரதமர் தனியாக நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கப் போரடித்து தானாகவே ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்!

இஸ்ரேலின் இந்த ஐம்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இப்படி நடந்திருக்கிறது. 2000-வது வருடம் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக் (Ehud Barak) பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டிருக்கிறார்.

மற்றபடி இஸ்ரேலில் ஒரு பிரதமரை மாற்றுவது என்பது, அமெரிக்காவில் அதிபரை மாற்றுவது எத்தனை சிரமமோ அத்தனை சிரமம்.

இம்மாதிரியான ஏற்பாடு எதற்காக என்றால், சர்வதேச அளவில் தன்னை யாரும் சரிவர அங்கீகரிக்காத நிலையில், உள்நாட்டிலும் எப்போதும் குழப்பம் சூழ்ந்தவண்ணமே இருந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான். என்னதான் அமெரிக்கா ஆதரிக்கிறது என்றாலும் அக்கம்பக்கத்தில் தோழமையுடன் ஒரு புன்னகை செய்யக்கூட இஸ்ரேலுக்கு யாரும் கிடையாது. பெரும்பாலான ஆசிய தேசங்களும் இஸ்ரேலின் பாலஸ்தீன விரோத நடவடிக்கைகளை முன்னிட்டுத் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தபடியே தான் இருக்கின்றன. தனித்து நின்று போராடி வாழ்ந்தாக வேண்டிய இருப்பியல் நெருக்கடி இஸ்ரேலுக்குத் தொடக்ககாலம் முதலே இருந்து வருவதால், ஆட்சிமுறையில் இப்படியான சில இரும்புத்தனங்களைச் செய்துகொண்டார்கள்.

ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்துவிட்டால், என்ன ஆனாலும் அவர் சொல்பேச்சு கேட்பது என்பதுதான் இஸ்ரேலியர்களின் இயல்பு. தவறு செய்கிறாரென்று தெரிந்தாலும் தமக்குள் பேசிக்கொள்வார்களே தவிர, பொதுவில் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்.

அரசாங்கம் அங்கே மீடியாவை மிகவும் போஷாக்குடன் வைத்துக்கொள்வது வழக்கம். குறிப்பாகப் பத்திரிகைகள், நாளிதழ்கள். யூதப் பத்திரிகைகள் அங்கே இழுத்து மூடப்பட்டதாகச் சரித்திரமே கிடையாது. ஓடாத பத்திரிகைகள்கூட நூலக ஆர்டரின் பேரில் உயிர்வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். சுமார் 25 தினசரிப் பத்திரிகைகள் இஸ்ரேலில் இருக்கின்றன. அவற்றுள் 11 ஹீப்ரு மொழிப் பத்திரிகைகள். நான்கு அரபுமொழிப் பத்திரிகைகள். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹங்கேரியன், ருமேனியன், ரஷ்யன், ஜெர்மன் மொழிப் பத்திரிகைகள் தலா ஒன்று.

பெரும்பாலும் ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து இஸ்ரேலில் வாழத் தொடங்கிய யூதர்கள்தான் என்பதால், அந்தந்த தேசத்து மொழிகளில் ஒரு பத்திரிகையாவது இருக்கவேண்டுமென்று திட்டமிட்டு, இஸ்ரேல் அரசாங்கமே உதவி செய்து ஆரம்பித்துவைத்த பத்திரிகைகள் இவை. ஹீப்ரு மொழியின் சிதைந்த பேச்சு வழக்கு மொழியான இட்டிஷ் மொழியிலும் ஒரு தினசரிப் பத்திரிகை உண்டு.

தேசம் உருவான தினம் முதல் இன்றுவரை இஸ்ரேலில், அரசுக்கும் பத்திரிகைகளுக்குமான உறவு மிக அற்புதமான நிலையிலேயே இருந்துவருவது ஓர் உலக ஆச்சர்யம். எந்த ஒரு இஸ்ரேல் தினசரியும் அரசைக் கடுமையாக விமர்சிக்காது. அதே சமயம் கட்சிப் பத்திரிகை போலத் துதி பாடுவதும் கிடையாது. செய்தியை, செய்தியாக மட்டுமே வழங்குவது என்பது இஸ்ரேல் பத்திரிகைகளின் பாணி. தன் விமர்சனம் என்று எதையும் அவை முன்வைப்பதே இல்லை பெரும்பாலும்!

Yedioth Aharonoth என்கிற ஹீப்ரு மொழி செய்தித்தாள்தான் இஸ்ரேலில் மிக அதிகம் விற்பனையாகும் பத்திரிகை. மொத்தம் மூன்று லட்சம் பிரதிகள்.

பத்திரிகைகளுக்கும் அரசுக்கும் மட்டுமல்ல; பத்திரிகைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் கூட அங்கே மிக நல்ல உறவு உண்டு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று இதுவரை எந்தப் பத்திரிகை மீதும் எந்தக் காலத்திலும் யாரும் தொடுத்ததில்லை.

இஸ்ரேல் நீதிமன்றங்கள் பற்றிச் சொல்லவேண்டும். அங்கே இருவிதமான நீதி அமைப்புகள் செயல்படுகின்றன. ஒன்று சிவில் நீதிமன்றங்கள். இன்னொன்று, மத நீதிமன்றங்கள். சிவில் நீதிமன்றங்களில் வழக்கமான வழக்குகள் மட்டும் ஏற்கப்படும். திருமணம், திருமண முறிவு உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள், மதம் தொடர்பான பிரச்னைகளைக் கையாளும். குடும்ப கோர்ட் என்று இங்கே சொல்லப்படுவது போலத்தான். ஆனால் இஸ்ரேலில் குடும்பப் பிரச்னைகள் நீதிமன்றங்களுக்கு வருமானால் மிகவும் அக்கறையெடுத்து கவனிக்கப்படும். இஸ்ரேலில் வாழ்பவர்கள் மட்டும்தான் என்றில்லை. உலகெங்கும் வசிக்கும் யூதர்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் இஸ்ரேலில் இயங்கும் நீதிமன்றங்களை அணுக முடியும்.

அடுத்தபடியாக இஸ்ரேல் ராணுவம். ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் கொண்ட முதல்நிலைப் படை. நான்கு லட்சத்து முப்பதாயிரம் பேர் கொண்ட ரிசர்வ் ராணுவப்படை. விமானப்படையில் முப்பத்திரண்டாயிரம் பேர். கப்பல் படையில் பத்தாயிரம் பேர்.

இன்றைய தேதியில் வெளியில் தெரிந்த இஸ்ரேல் ராணுவத்தின் பலம் இதுதான். ஆனால் சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் 1957 முதலே அவர்களிடம் இதே பலம்தான் இருந்து வந்திருக்கிறது என்பது புலப்படும்.

ஆள்பலம் குறைவானாலும் இஸ்ரேல் தன் வீரர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் பிரும்மாண்டமானவை. உலகெங்கும் எங்கெல்லாம் மிகச்சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறதோ, அங்கெல்லாம் தனது படையினரை அனுப்பி, தொடக்க காலத்தில் போர்ப்பயிற்சி அளித்திருக்கிறார்கள். பின்னால் இஸ்ரேலே பல தேசங்களுக்குப் பயிற்சியளிக்கும் அளவுக்கு ராணுவத் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற தேசமாகிவிட்டது. இது விஷயத்தில் அமெரிக்காவின் உதவி மிகவும் குறிப்பிடப்படவேண்டியதொரு அம்சமாகும்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை மட்டும் வழங்கவில்லை. மாறாக அவற்றைப் பயன்படுத்துவதில் பயிற்சி, போர்க்காலங்களைச் சமாளிக்கும் நிர்வாகத் திறன் பயிற்சி, ஒற்றறியும் கலையில் பயிற்சி, உளவு நிறுவனங்களை அமைத்து, கட்டிக்காத்து, வழிநடத்துவதற்கான பயிற்சி என்று பார்த்துப் பார்த்துச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. இஸ்ரேல் தன் பங்குக்குத் தொழில் நுட்பத்துறையில் அடைந்த அபரிமிதமான வளர்ச்சி, அத்தேசத்தின் ஆயுத பலத்தை மிகவும் நவீனப்படுத்தியது.


அமெரிக்காவுக்கு ஒரு சி.ஐ.ஏ. மாதிரி இஸ்ரேலுக்கு ஒரு மொஸாட். உலகின் மூன்றாவது மிகப்பெரிய உளவு நிறுவனம் என்று சொல்லப்படும் மொஸாட், இஸ்ரேலின் இரண்டாவது அரசாங்கம். நிழல் அரசாங்கம்.

இத்தனை வலுவான பின்னணியை வைத்துக்கொண்டிருந்தாலும் இஸ்ரேலின் பலம் இவை எதுவுமே இல்லை.

மாறாக, யூதர்கள் என்று இனத்தால் தாங்கள் ஒன்றுபட்டவர்கள் என்கிற பெருமித நினைவுதான் இஸ்ரேலை இன்றளவும் உயிர்பிழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இன்றுவரை ஆதரிக்கும் அமெரிக்கா, நாளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உலகமே திரண்டு இஸ்ரேலை எதிர்க்கலாம். மீண்டும் அவர்கள் ஊர் ஊராக ஓட வேண்டி நேரலாம். என்ன ஆனாலும் இஸ்ரேல் மக்களை முற்றிலுமாக அழித்துவிடவே முடியாது. இன்னும் ஆயிரம் ஹிட்லர்கள் தோன்றினாலும் முடியாது.

காரணம், யூதர்களின் ஒற்றுமை அப்படிப்பட்டது. எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொண்டு சந்தர்ப்பம் பார்த்துத் திருப்பியடிக்கத் தெரியும் அவர்களுக்கு. இதுதான், இது ஒன்றுதான்.

இந்த ஒற்றுமை அரேபியர்களிடம் இல்லாததுதான் பாலஸ்தீனின் அவலநிலைக்கு ஆதாரக் காரணம்.

பாலஸ்தீன் அரேபியர்களுக்காகப் பரிதாபப்படலாம், கண்ணீர் சிந்தலாம். கவலை தெரிவிக்கலாமே தவிர, யாராலும் உருப்படியாக எந்த உதவியும் செய்யமுடியாமல் இருப்பதற்குக் காரணம் இதுதான். அரபுக்களிடையே ஒற்றுமை கிடையாது.

இது இஸ்ரேலுக்கு மிக நன்றாகத் தெரியும். அவர்களின் ஒற்றுமைக் குறைபாடு உயிருடன் இருக்கும்வரை தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை யூதர்கள் அறிவார்கள்.

யூதர்களின் இந்த மனோபாவத்தை, அரேபியர்களின் இந்த இழிநிலையை உணர்வுபூர்வமாக அறிந்து, அறிவுபூர்வமாகச் சிந்தித்து, உருப்படியான ஒரு வழியைக் காட்ட 1948-ல் ஒரே ஒரு நபர்தான் இருந்தார். அவர் அப்போது தலைவரெல்லாம் இல்லை. பதினெட்டு, பத்தொன்பது வயது இளைஞர். எகிப்தில் பிறந்த பாலஸ்தீன்காரர். கெய்ரோவில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்.

அவர் பெயர் முகம்மது அப்துல் ரெஹ்மான் அப்துல் ரவூஃப் அரஃபாத் அல் குதா அல் ஹுஸைனி. (Mohammed Abdel Rahman Abdel Raouf Arafat Al Qudua Al Husseini).

சுருக்கமாக அரஃபாத். பின்னால் ஒரு நட்சத்திரமானபோது யாசிர் அரஃபாத் என்று அழைக்கப்பட்டவர்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 23 ஜூன், 2005

Friday, June 17, 2005

60] பாலஸ்தீன் அகதி

நிலமெல்லாம் ரத்தம் _ பா. ராகவன் 60

ஜெருசலேம் நகரில் வசிக்கும் அரேபியர்களை ஏதாவது செய்து வெளியேற்றுவது. யுத்த சமயத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ, வேறு ஏதாவது காரணங்களை முன்னிட்டோ நகரை விட்டு வெளியேறிய அரபுகள் திரும்பி ஊருக்குள் வராமல் தடுத்து நிறுத்துவது. இந்த இரண்டு காரியங்களை ஒழுங்காகச் செய்தாலே அரேபியர்களின் அடிவயிற்றில் அடித்தது மாதிரிதான் என்று முடிவு செய்தது இஸ்ரேல்.

ஐ.நா. போட்டுக்கொடுத்த சட்டதிட்டங்களெல்லாம் என்ன ஆயின, எங்கே போயின? என்று யாரும் கேட்கக்கூடத் தயாராக இல்லை. யுத்தத்தின் இறுதியில் மேற்கு ஜெருசலேம் பகுதியை ஆக்கிரமித்துத் தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டுவிட்டது இஸ்ரேல். கேட்டால், 'கிழக்குப் பகுதியை ஜோர்டன் எடுத்துக்கொள்ளவில்லையா' என்கிற பதில் அவர்களிடம் தயாராக இருந்தது. ஜெருசலேம் நகரின் நிர்வாகம் ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட ஒரு சிறப்புக் குழுவிடம் இருக்கும் என்கிற முன் தீர்மானங்களெல்லாம் காற்றோடு போயின.

கொஞ்சநாள் எல்லோரும் அடித்துக்கொள்வார்கள்; கிடைக்கிற இடங்களிலெல்லாம் போய் முறையிடுவர்கள்; சண்டைக்கு வருவார்கள்தான். ஆனால் காலப்போக்கில் அவரவர் தத்தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள்; தனக்குச் சிக்கல் ஏதும் இருக்காது என்று நினைத்தது இஸ்ரேல். இன்னொரு கணக்கும் அவர்களிடம் இருந்தது. எப்படியும் அமெரிக்காவின் தீவிர ஆதரவு தனக்கு உண்டு என்று அப்போதே தீர்மானமாக இருந்த இஸ்ரேல் அரசு, அமெரிக்க பலத்துடன் அக்கம்பக்கத்து தேசங்களை மிரட்டுவதோ, அவர்கள் மிரட்டினால் எதிர்ப்பதோ தனக்குச் சுலபம்தான் என்று கருதியது.

இந்த இடத்தில், பாலஸ்தீனைச் சுற்றியுள்ள பிற அரபு தேசங்களின் நிலைப்பாட்டை சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். என்னதான் 1948_யுத்தத்தில் அரேபியர்கள் சமரசம் செய்துகொண்டு போகவேண்டி நேர்ந்தாலும், பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான வெஸ்ட்பேங்க் மற்றும் காஸா பகுதிகளை முறையே ஜோர்டனும் எகிப்தும் தன்னுடையதாக்கிக்கொண்டாலும், யூதர்கள் மீதான அவர்களது வெறுப்பில் துளி மாறுதலும் ஏற்படவில்லை.

சொந்தச் சகோதரன் ஏமாற்றப்பட்டதில் தமக்கும் பங்குண்டு என்கிற குற்ற உணர்ச்சியெல்லாம் அவர்களுக்கு இல்லை என்பது உண்மையே. அதே சமயம், சகோதரனின் எதிரி தமக்கும் எதிரி என்கிற நிலைப்பாட்டிலும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை!

இது என்ன விசித்திரம் என்றால், இதற்குப் பெயர்தான் அரசியல். யுத்தத்தின் இறுதியில் தனக்குக் கிடைத்த காஸா பகுதியை ஏன் எகிப்து பாலஸ்தீனியர்களுக்குத் திருப்பித்தரவில்லை? ஏன் வெஸ்ட் பேங்கை ஜோர்டன், பாலஸ்தீனிய அரேபியர்கள் வசம் ஒப்படைக்கவில்லை? அப்புறம் என்ன சகோதரத்துவம் வாழ்கிறது என்கிற கேள்வி எழலாம். அவசியம் எழவேண்டும்.

எகிப்தும் ஜோர்டனும் மனம் வைத்திருந்தால், பாலஸ்தீனியர்களுக்கு ஐ.நா. பகுத்து அளித்திருந்த அதே நிலப்பரப்பை மீண்டும் அவர்கள் வசமே தந்து ஆளச் செய்திருக்கமுடியும். இஸ்ரேலுடன்தான் அவர்கள் மோதினார்கள் என்றாலும் போரின் இறுதியில் பாலஸ்தீனியர்களின் நிலப்பரப்பு முழுவதும் யாரிடம் இருந்தது என்றால், இந்த இரு சகோதர அரபு தேசங்களிடம்தான்! இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதி அப்போது சொற்பமே. ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜெருசலேமைத்தான் அவர்களால் ஆக்கிரமிக்க முடிந்ததே தவிர, வெஸ்ட் பேங்க்கையோ, காஸாவையோ அல்ல. அவை இரண்டுமே பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பு, ஐ.நா.வின் திட்டப்படி.

ஆக, 1948_யுத்தத்தைப் பொறுத்தவரை பாலஸ்தீனியர்களை அகதிகளாக்கி அழகுபார்த்தது இஸ்ரேல் அல்ல; சகோதர அரபு தேசங்களான எகிப்தும் ஜோர்டனும்தான் என்றாகிறது!

இஸ்ரேலுடன்தான் மோதினார்கள்; இஸ்ரேல்தான் எதிரி. இதில் சந்தேகமில்லை. ஆனாலும் யுத்தத்தின் இறுதியில் நிஜ எதிரியாக மறைமுகமாக அடையாளம் காணப்பட்டவை எகிப்தும் ஜோர்டனும்தான். அரபு தேசங்களின் சகோதரத்துவ மனப்பான்மை எத்தனை 'உன்னதமானது' என்பதற்கு இது முதல் உதாரணம்.

இதுதான். இந்த ஒரு அம்சம்தான் இஸ்ரேல் தன்னம்பிக்கை கொள்ள ஆதிமூலக் காரணமாகவும் அமைந்தது. என்ன செய்தாலும் தான் தப்பித்துவிடலாம் என்று அவர்கள் கருதியதன் காரணம் இதுதான். அரபு தேசங்கள் எல்லாம் எலும்புக்கு வாலாட்டும் நாய்கள்தான் என்று அவர்களைக் கருதச் செய்ததும் இதுதான். இந்த அம்சத்தை மனத்தில் கொண்டுதான், அரபு மண்ணில் காலூன்ற வழிதேடியது அமெரிக்கா. இதே விஷயத்தை மனத்தில் கொண்டுதான் ஏனைய ஐரோப்பிய நாடுகளும், சோவியத் யூனியனும் கூட அன்றைக்கு அரபு மண்ணின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட வழிதேடிக்கொண்டிருந்தன.

அரேபியர்களின் சகோதரத்துவம் என்பது முற்றிலும் மதம் சார்ந்ததே தவிர, அரசியல் சார்ந்ததல்ல. இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியுமானால் பாலஸ்தீன் பிரச்னையின் சிடுக்குகள் மிக்க குழப்பங்களைப் புரிந்துகொள்வதில் பெரிய பிரச்னை இராது.

அதனால்தான் அவர்கள் பாலஸ்தீனியர்களின் சுயராஜ்ஜியக் கனவு பறிபோனது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தமது யூத வெறுப்பை மட்டும் தீவிரமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். ஜோர்டனைத் தொடர்ந்து அத்தனை அரபு தேசங்களுமே யூதர்களை நிர்தாட்சண்யமாக வெளியேற்ற ஆரம்பித்தன. ஒவ்வொரு அரபு தேசமுமே தமது தேச எல்லைக்குள் வசிக்கும் அனைத்து யூதர்களும் தமது எதிரிகள் என்று பகிரங்கமாகச் சொல்லத் தொடங்கின.

யூதர்கள் முடிந்தவரை இஸ்ரேலுக்கு இடம்பெயர்ந்தார்கள். முடியாதவர்கள் எங்கெங்கு தஞ்சம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் போகத் தொடங்கினார்கள். சிரியா, தனது எல்லைக்குள் குடியேற்றமே கிடையாது என்று அறிவித்துவிட்டது. மொராக்கோ, யூதர்களை அனுமதித்தது. ஆனால் மதமாற்ற நிர்ப்பந்தங்கள் அங்கே மிக அதிகம் இருந்தன.

1948 _ யுத்தத்தில் இஸ்ரேல் அபகரித்த பகுதிகள் திருப்பித்தரப்பட்டால் ஒருவேளை நிலைமை கொஞ்சம் சீராகலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஆனால் ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட ஒரு துண்டு நிலத்தையும் விட்டுத்தர முடியாது என்று சொல்லிவிட்டார் பென்குரியன். அதே சமயம் எதற்கும் இருக்கட்டும் என்று, தனது கட்டுப்பாட்டு நிலப்பரப்புக்குள் வசிக்கும் அரேபியர்கள் தொடர்ந்து நிம்மதியாக வசிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றும் சொன்னார். இதன் நடைமுறை சாத்தியங்கள் பற்றிய கேள்விகள் இருந்தாலும் இஸ்ரேலின் இத்தகைய அறிவிப்பே மற்ற அரபு தேசங்களுக்குக் கொஞ்சம் தர்மசங்கடத்தைத் தந்தது.

காரணம், பாலஸ்தீனைச் சுற்றியுள்ள பிற தேசங்களுக்கு யுத்தத்தின் இறுதியில் அகதிகளாகப் போய்ச் சேர்ந்த பாலஸ்தீனிய அரேபியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களை என்ன செய்யலாம்; எப்படி வைத்துக் காப்பாற்றலாம் என்று அவர்களுக்குப் புரியவில்லை. ஒவ்வொரு அரபு தேசத்தின் எல்லைகளிலும் பாலஸ்தீனிய அகதிகள் முகாம்கள் இருந்தன. ஒவ்வொரு முகாமும் மைல் கணக்கில் நீளமானது. ஒவ்வொரு முகாமிலும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தங்க இடம், உண்ண உணவு, வாழ வழி செய்து தரும் தார்மீகக் கடமை அந்தந்த தேசங்களுக்கு இருப்பினும் நடைமுறைச் சிக்கல்களில் அவை சிக்கித்தவித்தன. பொருளாதாரப் பிரச்னை முதலாவது. இட நெருக்கடி இரண்டாவது.

அரபு தேசங்கள் எல்லாம் பரப்பளவில் மிகவும் சிறியவை. சிரியா, ஜோர்டன், லெபனான் எல்லாம் மிக மிகச் சிறிய தேசங்கள். நமது வடகிழக்கு மாநிலங்களின் அளவே ஆனவை. இருக்கிற மக்களுக்கே இடம் காணாத அத்தகைய தேசங்கள் அகதிகளை வைத்துக்கொண்டு எப்படிச் சமாளிக்கும்?

எகிப்து, லெபனான், ஈராக் ஆகிய மூன்று தேசங்களும் முதன் முதலாக, பாலஸ்தீனிய அகதிகளைத் தமது மக்களுடன் கலந்து வாழ அனுமதிக்க முடியாது என்று அறிவித்தன. அதாவது அகதி நிலையிலேயே அவர்கள் முகாம்களில் தொடரலாம். ஏதாவது தீர்வு யோசித்து பின்னால் ஒரு வழி காணலாம் என்று இதற்கு அர்த்தம். சகோதர முஸ்லிம்கள்!

இதில் சில கேவலமான பேரங்கள் எல்லாம் கூட நடந்தன. சிரியாவின் அப்போதைய சர்வாதிகாரியாக இருந்தவர் பெயர் ஹஸ்னி ஸாயிம் (பிusஸீவீ ஞீணீ'வீனீ). இவர் நேரடியாக இஸ்ரேல் அரசிடமே ஒரு பேரத்துக்குப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதாவது, அகதிகளாக இஸ்ரேல் எல்லையிலும் சிரியாவின் எல்லையிலும் உலவிக்கொண்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் பாலஸ்தீனியர்களை சிரியா தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்ளும். அதற்குப் பிரதி உபகாரமாக கலீலீ கடல் பகுதியின் சரிபாதியை ஆண்டுகொள்ளும் உரிமையைத் தனக்கு இஸ்ரேல் விட்டுக்கொடுக்குமா? என்று கேட்டார்.

இதைப்போன்ற மட்டரகமான பேரங்களுக்கு இஸ்ரேல் சம்மதிக்காததுதான் அதன் மிகப்பெரிய பலம். பென்குரியன் மிகத்தெளிவாகச் சொன்னார். 'எப்படி நாங்கள் உலகெங்கிலுமிருந்து வரும் யூதர்களை ஏற்றுக்கொள்கிறோமோ, எப்படி உலகெங்கிலுமிருந்து வந்து குடியேறும் அனைத்துத் தரப்பினரையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறதோ, அதேபோல அந்தந்த அரபு தேசங்களுக்கு அகதிகளாக வருவோரையும் குடியேற விரும்பி வருவோரையும் அந்தந்த தேசம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று அவர் சொன்னார்.

இதில் கவனித்துப் பார்க்கவேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இஸ்ரேல் தன்னைப் பற்றி மட்டும் இந்த வரிகளில் சொல்லிக்கொள்ளவில்லை. மாறாக தனது ஆதர்சம் அமெரிக்காதான் என்பதையும் மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறது. தமது இனத்தவர்கள் எங்கிருந்து வந்தாலும் தாங்கள் ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அமெரிக்காவில் குடியேற வந்தால் அமெரிக்கா ஏற்றுக்கொள்கிறது பார் என்று சுட்டிக்காட்டுவதன் மூலம், அமெரிக்காவையும் மறைமுகமாகப் புகழ்ந்து, அந்தப் பக்கம் கொஞ்சம் சுகமாகச் சாய்ந்துகொண்டது.

இது, இருப்பியல் சிக்கல்கள் மிக்க அரபு தேசங்களுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்தது.

சுதந்திர தேசமாக ஆன தினம் முதலே இஸ்ரேல் தனது தீவிர அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் வெளிப்படுத்தத் தவறியதில்லை. அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இஸ்ரேல் என்கிற தேசத்தை உருவாக்கியதுடன் முடிந்துவிடுவதில்லை அல்லவா? ஒரு தேசத்தின் நிர்மாணம் என்பது பெரிதும் பொருளாதாரம் மற்றும் ராணுவக் கட்டுமானத்தைச் சார்ந்தது. மத்தியகிழக்கைப் பொறுத்தவரை ராணுவக் கட்டுமானம் என்பது பொருளாதாரக் கட்டுமானத்தைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக எதிரிகளைத் தவிர சுற்றிலும் வேறு யாருமே இல்லாத இஸ்ரேலுக்கு..

இந்நிலையில் கணக்கு வழக்கில்லாமல் தனக்கு உதவக்கூடிய தேசம் அமெரிக்கா மட்டும்தான் என்று இஸ்ரேல் கருதியதில் வியப்பில்லை. பதிலுக்கு அமெரிக்காவுக்குத் தான் எந்தெந்த வகைகளிளெல்லாம் உதவி செய்யவேண்டிவரும் என்பது பற்றி அத்தனை துல்லியமாக அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை என்பது உண்மையே. ஆனாலும், காரணமில்லாமல் அமெரிக்கா தன்னை ஆதரிக்காது என்கிற அளவிலாவது அவர்கள் அறிந்தே இருந்தார்கள்.

இது ஒருபுறம் இருக்க, அகதிகளைச் சமாளிக்க முடியாத பிற அரபு தேசங்கள் கூடி என்ன செய்யலாம் என்று விவாதித்தன. இறுதியில் காஸாவும் வெஸ்ட் பேங்க்கும் யார் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த மண்ணின் மக்கள் மீண்டும் அந்த இடத்துக்கே திரும்பிவிடலாமே என்று நினைத்தார்கள். அகதி நிலைமையில் அந்நிய தேசத்தில் வாழ்வதைக் காட்டிலும், சொந்த மண்ணில் அடுத்த நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டு வாழ்வதில் அவர்களுக்குப் பெரிய மனச்சிக்கல் ஏதும் இராது என்று தீர்மானித்து அழைப்பு விடுத்தார்கள்.

இதனிடையில் 'பாலஸ்தீன் அகதி' என்கிற தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கை மத்தியக் கிழக்கு முழுவதிலும் ஏராளமாகப் பரவிவிட்டிருந்தது. ஐரோப்பிய எல்லை வரை அவர்கள் பரவிவிட்டிருந்தார்கள். சொந்த தேசத்தில் வாழமுடியாமல் துரத்தப்பட்ட அந்த அப்பாவி முஸ்லிம்களை வைத்துக்கொண்டு பராமரிக்க யாராலுமே முடியாத நிலையில், மிகவும் திண்டாடித் தெருவில் நின்றார்கள் அவர்கள்.

மீண்டும் நீங்கள் பாலஸ்தீனுக்கு வரலாம் என்று பிற அரபு தேசங்கள் சேர்ந்து குரல் கொடுத்தபோது, எங்கே பாலஸ்தீனியர்கள் அல்லாத பிற அரபு முஸ்லிம்களும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே வந்து சிக்கல் உண்டாக்கிவிடுவார்களோ என்று ஐ.நா. கவலைப்பட்டது. ஆகவே யார் பாலஸ்தீனிய அகதி என்பதற்கு ஒரு விளக்கம் அளித்தார்கள். 'குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் அவர்கள் பாலஸ்தீனில் வாழ்ந்திருக்க வேண்டும்.'

அவர்கள் திரும்ப ஆரம்பித்தார்கள்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 19 ஜூன், 2005

Tuesday, June 14, 2005

59] ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடி

நிலமெல்லாம் ரத்தம் _ பா. ராகவன் 59

ஐ.நா. தலையீடு. அமைதி ஒப்பந்தம். போர் நிறுத்தம். இஸ்ரேலுக்கு இதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஏனெனில் யுத்தம் அவர்களது நோக்கமில்லை. யுத்தத்தைத் தொடங்கியவர்கள் அரேபியர்கள். அதாவது பாலஸ்தீன் போராளிகளுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்த ஏனைய அரபு தேசங்கள். அவர்களுக்குச் சம்மதமெனில் போரை நிறுத்திக்கொள்ள இஸ்ரேலுக்கு எந்தத் தடையும் இல்லை.

பாலஸ்தீன் போராளிகளுக்கு ஆதரவாகப் போரில் இறங்கிய பிற அரபு தேசங்களுக்கோ, ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடி இருந்தது. போரை நிறுத்துங்கள் என்று பக்குவமாக வெளியில் கேட்டுக்கொள்ளப்பட்டாலும், உள்ளுக்குள் அது சந்தேகமில்லாமல் மிரட்டல். தவிரவும், யுத்தத்தில் அவர்கள் நிறையவே இழந்தும் இருந்தார்கள். அதைத்தவிரவும் ஒரு காரணம் சொல்லுவதென்றால், போர் நிறுத்தத்தின் மூலம் கிடைக்கக்கூடிய சில நேர்முக நிறைய மறைமுக லாபங்கள். எல்லாம், அரசியல் சாத்தியமாக்கக்கூடிய லாபங்கள்.

முதல் முதலாக இஸ்ரேல் பிப்ரவரி 24, 1949 அன்று எகிப்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. எகிப்து யுத்தத்தில் முன்னேறி வந்த காஸா பகுதி எகிப்துக்கே சொந்தம். பிறகு லெபனானுடன் மார்ச் 23 அன்று ஒப்பந்தம் ஆனது. ஏப்ரல் 3_ம் தேதி டிரான்ஸ்ஜோர்டனுடனும் ஜூலை 20_ம் தேதி சிரியாவுடனும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதுவரையிலுமேகூட தாக்குப்பிடிக்க முடியாத ஈராக், தானாக முன்வந்து தன் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு, தான் கைப்பற்றியிருந்த பகுதிகள் சிலவற்றை ஜோர்டனுக்குத் தாரை வார்த்துவிட்டு வந்த வழியே போய்விட்டது.

ஒரு வரியில் இதைப் புரியும்படி சொல்வதென்றால், பாலஸ்தீன் அரேபியர்களுக்கு உதவி செய்வதற்கென்று வந்த பிற அரபு தேசங்கள் அனைத்தும் நடு வழியில் அவர்களைக் கைவிட்டுவிட்டு, தமக்குக் கிடைத்த லாபங்களுடன் திருப்தியடைந்து, திரும்பிப் போய்விட்டார்கள்.

இதனைக் காட்டிலும் கேவலமான, இதனைக் காட்டிலும் அருவருப்பூட்டக்கூடிய, இதைவிட மோசமான நம்பிக்கைத் துரோகம் என்பது வேறில்லை. ஐ.நா.வின் தலையீட்டால்தான் அப்படிச் செய்யவேண்டியதானது என்று அரபு தேசங்கள் சமாதானம் சொன்னாலும், மத்தியக்கிழக்கு தேசங்களின் ஒற்றுமை என்பது எந்த லட்சணத்தில் இருந்தது என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

ஆனால் இதற்கான அரசியல் நியாயங்கள் ஏராளம் இருக்கின்றன. மேலோட்டமாகவாவது அவற்றைப் புரிந்துகொள்வது அவசியம்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், உலக அரங்கில் ஒரு மிகப்பெரிய பிரச்னை ரகசியமாக உருவாகியிருந்தது. அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் உருவாகியிருந்த பலப்பரீட்சைதான் அது. இருவரில் யார் வல்லரசு என்கிற கேள்வி மிகப்பெரிதாக இருந்தது அப்போது. உலகப்போரில் இரு தேசங்களுமே மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்திருந்தன. இரண்டுமே தவிர்க்க முடியாத மாபெரும் சக்திகள் என்பது உலகம் முழுவதற்கும் தெரிந்துவிட்டது.

இப்போது யார், எந்தக் கட்சி என்கிற கேள்வி எழுந்தது. அதாவது, அமெரிக்காவை ஆதரிக்கும் தேசங்கள் எவை, ரஷ்யாவை ஆதரிக்கும் தேசங்கள் எவை என்கிற கேள்வி. அமெரிக்காவை ஆதரிப்பதென்றால், அமெரிக்கா ஆதரிக்கும் அனைத்து அம்சங்களையும் சேர்த்து ஆதரிப்பது என்றாகும். ரஷ்யாவை ஆதரிப்பதென்றாலும் அப்படியே.

இஸ்ரேல் விஷயத்தில் அன்றைக்கு அமெரிக்காவுக்கும் சரி; ரஷ்யாவுக்கும் சரி, ஒரே நிலைப்பாடுதான். அவர்கள் இருவருமே இஸ்ரேலை ஆதரித்தார்கள். யூதர்கள் மீதான அனுதாபம் என்பது தவிர, மத்தியக்கிழக்கில் வலுவாகத் தன் கால்களை ஊன்றிக்கொள்ள இரு தேசங்களுமே சரியான இடம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மத்தியக்கிழக்கின் எண்ணெய் வளத்தைக் கொண்டு அடையக்கூடிய லாபங்கள் குறித்து அன்றைக்கு அரபு தேசங்களுக்கே அத்தனை முழுமையாக விவரம் தெரியாது. ஆனால் அமெரிக்காவுக்குத் தெரியும். ரஷ்யாவுக்குத் தெரியும்.

எண்ணெய் இருக்கிறது என்று அரபு தேசங்களுக்குத் தெரிந்தாலும் அமெரிக்கா அளவுக்கு, சோவியத் யூனியன் அளவுக்கு அவர்களிடம் தொழில்நுட்பத் தேர்ச்சி கிடையாது. இதென்ன வடை சுட்டுச் சாப்பிடும் எண்ணெய்யா? பெட்ரோலியம். எல்லாவற்றுக்குமே மூலாதாரம். எடுக்கும் ஒவ்வொரு சொட்டும் பணம். ஆகவே, இந்த இரு தேசங்களை எக்காரணம் கொண்டும் யாரும் பகைத்துக்கொண்டுவிடத் தயாராக இல்லை.

இரண்டாவது காரணம், பாலஸ்தீனை ஆதரிப்பதால் தமக்கு ஏதாவது லாபம் உண்டா என்று அனைத்து அரபு தேசங்களும் யோசித்தன. இஸ்ரேலை ஆதரிக்காமல், கண்டுகொள்ளாமல் விட்டால் கூடப் பிரச்னை ஏதுமிராது. ஆனால் பாலஸ்தீனை ஆதரிப்பதன் மூலம் அமெரிக்க, ஐரோப்பிய, சோவியத் யூனியனின் ஒட்டுமொத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டிவருமோ என்கிற அச்சம் அவர்களுக்கு இருந்தது.

தவிரவும் அனைத்து அரபு தேசங்களுமே கொஞ்ச நாள் இடைவெளிகளில்தான் சுதந்திரம் பெற்றிருந்தன. எதுவும் அப்போது தன்னிறைவு கண்ட தேசமல்ல. உணர்ச்சிவசப்பட்டு சகோதர அரேபியர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, வேண்டாத வம்புகளில் சிக்கிக்கொள்ள நேரிடுமோ என்றும் கவலைப்பட்டார்கள். நடந்து முடிந்த யுத்தத்தில் கிடைத்தவரை லாபம் என்று திரும்பிப் போவதுதான் தனக்கும் நல்லது; தன் தேசத்துக்கும் நல்லது என்று ஒவ்வொரு தேசமும் நினைத்தன.

ஆகவே, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஆத்மசுத்தியுடன் கையெழுத்திட்டுவிட்டார்கள். பாலஸ்தீன அரேபியர்கள் அந்தக் கணம் முதல் நடுத்தெருவுக்கு வந்தார்கள்.

பாலஸ்தீன் போராளிகளைப் பொறுத்தவரை போர் முடிந்துவிட்டதாக அவர்கள் நினைக்கவே இல்லை. உதவிக்கு வந்தவர்கள்தான் ஓடிவிட்டார்களே தவிர, யுத்தம் முடியவில்லை என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.

ஆனால், இதனை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லை. சுற்றியிருக்கும் அரபு தேசங்களுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்படியே விஸ்தரித்து, நல்லுறவு கொள்ளவே அது விரும்பியது. இந்த விஷயத்தில் பென்குரியன் மிகத் தெளிவாக இருந்தார். என்றைக்கு இருந்தாலும் அரேபியர்கள் பாலஸ்தீன் போராளிகளை திரும்ப ஆதரிக்கவோ, அவர்களுக்காக யுத்தம் செய்யவோ முன்வரக்கூடும். அப்படியொரு சூழ்நிலை ஏற்படாத வண்ணம், நிரந்தரமாக அந்தத் தேசங்களுடன் நல்லுறவுப் பாலம் அமைத்துவிட அவர் மிகவும் விரும்பினார். அவர்களைச் சரிப்படுத்திவிட்டால், பாலஸ்தீன் போராளிகளைச் சமாளிப்பது பெரிய விஷயமல்ல என்பது அவர்களது சித்தாந்தம்.

யுத்தத்தின் இறுதியில் வெஸ்ட் பேங்க் என்று அழைக்கப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரைப் பகுதி முழுவதையும் ஜோர்டன் பெற்றிருந்தது. அவர்களுக்குக் கிடைத்த நிலப்பரப்பின் ஓர் எல்லை, ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதி வரை நீண்டிருந்தது. எஞ்சிய மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியிருந்தது.

ஆகவே, யதார்த்தமாகவே ஜெருசலேம் நகரம் இரண்டாகப் பிளக்கப்பட்டது. ஏற்கெனவே ஊருக்கு நடுவே ஓர் உடைந்த பெருஞ்சுவர் உண்டு. அது தவிரவும் ஒரு மானசீகப் பெருஞ்சுவரை இரு தேசங்களும் ஏற்படுத்திக்கொண்டிருந்தன.

ஆனால் அமைதி ஒப்பந்தத்தில், ஜெருசலேம் பற்றிய குறிப்பில் இஸ்ரேல் மிகத் தெளிவாக, வழிபாட்டுச் சுதந்திரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தது. இரு தரப்பு மக்களும் ஜெருசலேமுக்கு வருகை தருவதிலோ, கோயில்களில் வழிபாடு நடத்துவதிலோ, எந்த அரசும் எந்தப் பிரச்னையும் செய்யக்கூடாது என்று அதில் குறிப்பிட்டிருந்தது. ஜோர்டனும் அதற்கு ஒப்புக்கொண்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

என்னதான் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டாலும் இஸ்ரேல் ஒரு யூத தேசம். பாலஸ்தீன் அரேபியர்களை நட்டாற்றில் விட்டாலும் ஜோர்டன் ஓர் இஸ்லாமிய தேசம். ஆகவே, சிக்கல் அங்கிருந்து ஆரம்பித்தது.

ஜோர்டன் வசமிருந்த ஜெருசலேம் நகரின் பகுதிவாழ் யூதர்கள் யாரும் 'சினகா'க்களுக்குச் (கோயில்களுக்கு) செல்ல அனுமதிக்கப்படவில்லை. யூதர்களின் புனிதச் சுவரான அந்த உடைந்த பெருஞ்சுவர் அருகே நின்று அவர்கள் பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. ஜெருசலேம் நகரில் ஒரு புராதனக் கல்லறை ஒன்று உண்டு. ஒரு சிறு குன்றை ஒட்டிய பகுதியில் அமைந்த கல்லறை.

இந்தக் கல்லறைப் பகுதி, யூதர்களுக்கு ஒரு வழிபாட்டிடம். சுற்றிப்பார்க்கவும் வருவார்கள். நின்று பிரார்த்தனையும் செய்வார்கள். ஆயிரமாண்டு கால சரித்திரம் புதைந்த நிலம் அல்லவா? தொட்ட இடங்களெல்லாம் புனிதம்தான். வழிபாட்டிடம்தான்.

ஜோர்டன் என்ன செய்ததென்றால் இந்தக் கல்லறைக்கு வரும் யூதர்களைத் தடுப்பதற்காகவே அந்த வழியில் ஒரு பெரிய நெடுஞ்சாலைத் திட்டத்தை அறிவித்து, உடனடியாக சாலை போடும் வேலையில் இறங்கிவிட்டது.

சாலை என்றால் கல்லறைப் பகுதிக்குப் பக்கத்தில் அல்ல! அதன் மேலேயே. அப்படியொரு கல்லறை அங்கே இருந்தது என்று எதிர்காலம் சொல்லிக்கொள்ளலாமே தவிர, நின்று பார்க்க முடியாது. அமர்ந்து பிரார்த்தனை செய்யவும் முடியாது.

அது மட்டுமல்லாமல், சாலை போடும் பணியில் ஈடுபட்ட ஜோர்டன் தேசத்துப் பணியாளர்கள் சில அத்துமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். உதாரணமாக, நூற்றுக்கணக்கான புராதன கல்லறைகள் நிறைந்த அந்தப் பகுதியில் சில கல்லறைகளின் மேலே சிறிய கோபுரங்கள், அல்லது சாளரம் மாதிரியான வடிவமைப்பைச் செய்திருந்தார்கள். அந்த இடங்களையெல்லாம் பணியாளர்கள் பாத்ரூமாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

யூதர்கள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பைத்தான் இப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இதெல்லாம் யூதர்களை எத்தனை தூரம் பாதித்திருக்கும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். அந்தக் கணத்தில் அவர்கள், 'செய்வது ஜோர்டானியர்கள்தானே' என்றெல்லாம் நினைத்துப் பார்க்கமாட்டார்கள். மாறாக, 'முஸ்லிம்கள் அல்லவா இப்படிச் செய்கிறார்கள்' என்றுதான் விரோதம் வளர்த்தார்கள்.

இந்த விரோதமெல்லாம்தான் பின்னால் பாலஸ்தீனிய அரேபியர்கள் மீது மொத்தமாக விடிந்தது.

இதனோடாவது ஜோர்டன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய், தன் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் வசிக்கும் அத்தனை யூதர்களும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆகவே அத்தனை பேரும் இடம் பெயர்ந்து இஸ்ரேலுக்குள் வந்தார்கள்.

ஜோர்டன் மட்டும் என்றில்லை. இஸ்ரேலைச் சுற்றியிருந்த அத்தனை அரபு தேசங்களுமே யுத்தத்துக்கும் அமைதி ஒப்பந்தங்களுக்கும் பிறகு இப்படித்தான் நடந்துகொண்டன. பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு நியாயம் கிடைக்க வழி ஏதும் செய்யாமல் தமது யூத வெறுப்பை மட்டும் அவை இவ்வாறு வெளிப்படுத்திக்கொண்டிருந்தன. முடிந்த வரை யூதர்கள் இடம் பெயர்ந்து இஸ்ரேலுக்குள் தஞ்சமாக வந்து சேர்ந்தார்கள். கொள்ளளவு என்று ஒன்று இருக்கிறதல்லவா? முடியாத யூதர்கள் மொராக்கோவுக்குப் போனார்கள். ஈரானுக்குப் போனார்கள். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் போனார்கள். இடம் பெயர்வது அவர்களுக்கொன்றும் புதிதல்ல' அல்லவா?

ஆனாலும் இஸ்ரேல் அரசு இதையெல்லாம் மௌனமாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு வரியைக் கூட எந்த அரபு தேசமும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கவில்லை என்பதை கவனித்துக்கொண்டே இருந்தது. இதை வசமான சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் ஐ.நா.வின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது பற்றி அமைச்சர்கள் கூடி விவாதித்தார்கள்.

அதற்குமுன் உடனடி எதிர்வினையாக ஏதேனும் செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? என்ன செய்யலாம்?

இஸ்ரேல் எல்லைக்குள் வசிக்கும் அரேபியர்களின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பியது. உள்ளூர் ஆட்சிமன்றக் குழுக்களின் மூலம் ஏற்பாடு செய்து அவர்களுக்குப் பிரச்னைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இஸ்ரேல் எல்லைக்குள் இருக்கும் அரேபியர்களை விரட்டியடிப்பது. வெளியிலிருந்து ஒரே ஒரு அரேபியக் கொசு கூட இஸ்ரேலுக்குள் நுழையமுடியாமல் பார்த்துக்கொள்வது.

இஸ்ரேலுக்குள் என்றால் ஜெருசலேத்துக்குள் என்றும் அர்த்தம். இஸ்ரேலின் ஆளுகையின் கீழ் இருக்கும் ஜெருசலேம். முஸ்லிம்களுக்கும் புனிதமான ஜெருசலேம்.

யூதர்களாவது வாழ நெருக்கடி என்றால் தாற்காலிகமாக ஜெருசலேத்தை விட்டு ஓடிவிடத் தயங்கமாட்டார்கள். ஆனால் அரேபியர்களோ, உயிரே போனாலும் ஜெருசலேமில் போகட்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்.

ஆகவே, அந்த இடத்தில் அடிக்கலாம் என்று முடிவு செய்தது இஸ்ரேல் அரசு.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16 ஜூன், 2005

Friday, June 10, 2005

58] யுத்தம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 58

இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அரபு தேசங்கள் என்று தனித்தனியே நாடுகள் கிடையாது. சுமார் 1350 வருடங்கள் ஒட்டாமான், துருக்கியப் பேரரசின் அங்கங்களாகவே இன்றைய அரபு தேசங்கள் அனைத்தும் இருந்தன. அதாவது, அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம். பாலஸ்தீன், ஈராக், ஈரான், லெபனான், சிரியா என்று துண்டு தேசங்கள் உருவானதெல்லாம் இரண்டாம் உலகப்போருக்கும் பிரிட்டன் விடை பெற்றதற்கும் பிறகுதான். அதற்கு முன் ஒரே பேரரசு. அதன்கீழ் பல சிற்றரசுகள். அவ்வளவுதான்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களை ஒட்டி பல்வேறு அரேபிய தேசங்கள், ஒட்டாமான் சாம்ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து சுதந்திர தேசங்களாயின. பாலஸ்தீனும் அப்படியரு சுதந்திர தேசமாக ஆகியிருக்க வேண்டியதுதான். ஆகமுடியாமல் போனதன் காரணம், பிரிட்டன் உதவியுடன் யூதர்கள் அங்கே ஊடுருவி இடத்தை நிரப்பியதுதான்.

இந்தக் கோபம்தான் அரேபியர்களுக்கு. நியாயமான கோபமே என்றாலும் வேறு வழி இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கமிட்டியின் பரிந்துரையின் பேரில் ஐ.நா அறிவித்த பாலஸ்தீன், இஸ்ரேல் எல்லைப் பிரிவு நடவடிக்கையை மனத்துக்குள் ஒருவாறு ஏற்றுக்கொள்ளத் தயாராகித்தான் இருந்தார்கள். தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய யுத்தத்தைத் தொடங்குவது, முடிவு எப்படியானாலும் ஐ.நா. பிரித்துக்கொடுத்த நிலம் எப்படியும் இருக்கத்தானே போகிறது என்று அப்பாவி அரேபியர்கள் நினைத்தார்கள்.

கவனிக்கவும். இவர்கள் புரட்சிக்காரர்கள் அல்லர். கலகக்காரர்கள் அல்லர். அக்கம்பக்கத்து அரபு தேசங்களின் துணையுடன் யுத்தத்தில் பங்குபெறக் களம் சென்றவர்கள் அல்லர். மாறாக, படிப்பறிவோ, அரசியல் எண்ணமோ, வாழ வழியோகூட இல்லாத அடித்தட்டு வர்க்கத்து அரேபியர்கள். இவர்கள்தான் பெரும்பான்மையினர். இவர்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லவோ, வழிநடத்தவோ, அறிவுரைகள் கூறவோ அன்றைக்கு யாரும் இருக்கவில்லை. அரபு இனத்தலைவர்கள் என்று அறியப்பட்ட ஒரு சிலர் யுத்தம் குறித்துச் சிந்திக்கப் போய்விட்டார்கள். இளையவர்கள் எல்லாரும் கிடைத்த ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு, ‘யூதர்களை ஒழிக்காமல் வரமாட்டேன்’ என்று டெல் அவிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டார்கள். நோயாளிகள், வயதானோர், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்தப் பெரும்பான்மை அரபுக்கள், தாம் வசித்து வந்த மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளில் வீட்டுக்குள் பதுங்கியபடியே என்ன ஆகுமோ என்று தமக்குள் எண்ணியெண்ணிப் பயந்துகொண்டிருந்தார்கள்.

பாலஸ்தீன் - இஸ்ரேல் பிரச்னையின் நவீனகால வரலாறு என்பது இந்த இடத்தி¢ல்தான் தொடங்குகிறது.

ஒரு பக்கம் அரபுகள் என்னவாகுமோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம், இதே அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இஸ்ரேல் யூதர்களும் இதே போலத்தான் அஞ்சிக்கொண்டிருந்தார்கள். என்ன ஆகுமோ?

பெரும்பான்மை மக்களின் இந்த அச்சத்துக்கும் சிறுபான்மை வீரர்கள் மற்றும் புரட்சிக்காரர்களின் கோபம் மற்றும் துவேஷத்துக்கும் நிறைய இடைவெளி இருந்தது. எப்படி அரேபியப் புரட்சிக்காரர்கள், தமது பெரும்பான்மை மக்களின் மனநிலை என்ன என்பதைக் கேட்டறிந்துகொள்ள விரும்பவில்லையோ, அதே போலத்தான் பெரும்பான்மை யூத மக்களின் கருத்தையும் இஸ்ரேலிய அரசோ, இஸ்ரேல் ராணுவமோ அந்தத் தருணத்தில் பொருட்படுத்தவில்லை.

யுத்தம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அவ்வளவுதான்.

எகிப்து, லெபனான், ஜோர்டன், ஈராக் மற்றும் சிரியாவின் படைகள் ஒரு பக்கம் பாலஸ்தீனப் போராளிகளுக்கு ஆதரவாக நின்றன. எதிர்ப்பக்கம் இஸ்ரேல். அன்று பிறந்த இஸ்ரேல். அதற்கு முன் அவர்கள் தனியொரு தேசத்தைக் கண்டதில்லை. தனியொரு ராணுவத்தை வைத்துப் பயிற்சியளித்துப் பெரும் யுத்தங்களைச் சந்தித்ததுமில்லை. போர்க்கால நடவடிக்கைகள் என்றால் என்ன என்பதையே அந்தப் போரின் இறுதியில்தான் அவர்கள் அறியப்போகிறார்கள்.

யோசித்துப் பாருங்கள். மே 14, 1948 அன்று இஸ்ரேல் பிறந்தது. மறுநாள் அதாவது மே 15-ம் தேதி இந்த யுத்தம் ஆரம்பிக்கிறது. அதுவும் ஒரு நாள், ஒருவார, ஒரு மாத கால யுத்தமல்ல. ஒரு முழு வருடத்தை விழுங்கப்போகிற யுத்தம்.

இத்தனை தேசங்கள் தம்மை ஆதரிப்பதால் எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை, பாலஸ்தீன் போராளிகளுக்கு இருந்தது. தமது குறைந்த போர்த்திறமை, சரியான தலைமை இல்லாமை, வியூகம் வகுக்கத் தெரியாதது போன்ற அத்தனை குறைகளுமே ஒரு பொருட்டில்லாமல் போகும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஒட்டுமொத்த அரபு சமுதாயமும் இஸ்ரேலுக்கு எதிராகத் திரண்டு நிற்கும்போது நேற்று முளைத்த சுண்டைக்காய் தேசத்தால் என்ன செய்துவிட முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். எப்படியாவது இஸ்ரேலை யுத்தத்தில் தோற்கடிப்பது, ஒரு யூதர் விடாமல் அத்தனை பேரையும் பாலஸ்தீனை விட்டு ஓட ஓட விரட்டுவது. இதுதான் அரேபியர்களின் திட்டம்.

யூதர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தமது ஆண்டாண்டு காலக் கனவான தனிநாடு என்பதை அடைந்துவிட்டிருந்த மகிழ்ச்சி மேலோங்கியிருந்ததால், யுத்தம் குறித்த பயம் அவர்களிடையே பெரிதாக இல்லை. ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. தமது தேசம் தமக்கு உண்டு என்கிற எண்ணம்தான் அவர்களிடம் இருந்தது. ஒருவேளை யுத்தத்தில் தோற்க நேரிட்டால் இஸ்ரேலின் சில பகுதிகளை இழக்க நேரிடலாம். இருக்கவே இருக்கிறது ஐ.நா. சபை. ‘நீங்கள் வகுத்தளித்த நிலத்தை அபகரித்துவிட்டார்கள்; திரும்ப வாங்கிக்கொடுங்கள்’ என்று கேட்கவும் அவர்கள் சித்தமாக இருந்தார்கள்.

இதென்ன குழந்தைத்தனமாக இருக்கிறதே என்று தோன்றலாம். உண்மை அதுதான். இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற டேவிட் பென் குரியனிடம் அவரது அமைச்சரவை சகா ஒருத்தர் இந்த மாதிரியே சொல்லியிருக்கிறார்.

ஆயிற்று. மே 15-ம் தேதி யுத்தம் தொடங்கிவிட்டது. முதல் குண்டு டெல் அவிவ் நகரில் வந்து விழும்போது மணி காலை 9.15. வீசியது ஒரு பாலஸ்தீனப் போராளி. எங்கிருந்து அவர்கள் ஊருக்குள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதே முதலில் இஸ்ரேல் ராணுவத்துக்குப் புரியவில்லை. தெற்கிலிருந்து எகிப்துப் படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்தன. வடக்கிலிருந்து லெபனான் மற்றும் சிரியாவின் படைகள். மேற்கில் டிரான்ஸ்ஜோர்டன் ராணுவம். வடமேற்கிலிருந்து ஈராக் ராணுவம். கிழக்குப் பக்கம் பற்றிக் கவலையே இல்லை. மத்திய தரைக்கடலைக் காட்டிலும் எந்த ராணுவத்தின் பலம் அதிகமாக இருந்துவிட முடியும்?

இஸ்ரேல் முதலில் தற்காப்பு நடவடிக்கைகளாகத்தான் மேற்கொண்டது. முதலில் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் மிகத்தீவிரமாக கவனம் செலுத்தினார்கள். ராணுவத்தின் ஒரு பகுதியைப் பிரித்து எல்லைக் காவலுக்கு அனுப்பிவிட்டு, இன்னொரு பகுதியை டெல் அவிவிலேயே வைத்துக்கொண்டார்கள். மூன்றாவதாக ஒரு பிரிவைத்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தினார்கள்.

இந்த யுத்தத்தில் இஸ்ரேல் எப்படிச் செயல்படுகிறது என்பது மிக முக்கியமான விஷயம். அமெரிக்கா முதல் பிரிட்டன் வரை, பிரான்ஸ் முதல் பெல்ஜியம் வரை அத்தனை தேசங்களும் அதைத்தான் கவனித்துக்கொண்டிருந்தன. எந்தச் சமயத்திலும் யார் வேண்டுமானாலும் உதவிக்கு வரலாம் அல்லது மௌன சாமியாராகவே இறுதிவரை கூட இருந்துவிடலாம்.

ஆனால் இஸ்ரேல் யுத்தத்தில் வெற்றி பெற்றுவிடுமானால் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் இஸ்ரேல் விஷயத்தில் சற்று அக்கறையுடன் நடந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை அவசியம் வரும். பொருட்படுத்தத்தக்க தேசமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள இந்த யுத்தம் ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்தார் பென் குரியன். இஸ்ரேல் ராணுவத்தின் வியூகம், அவரது இந்த எண்ணத்தைத்தான் பிரதிபலித்தது.

யுத்தம் சூடுபிடித்தது. இரு புறங்களிலும் மிகக் கடுமையாக தாக்கத் தொடங்கினார்கள். பாலஸ்தீன் போராளிகளைப் பொறுத்தவரை அது வாழ்வா சாவா யுத்தம். ஆகவே தமக்கு ஓரளவு நன்கு தெரிந்த கெரில்லா போர்ப்பயிற்சி முறையையே அவர்கள் அதிகமாகக் கையாண்டார்கள். எதிர்பாராத நேரத்தில், இடத்தில் தாக்குதல் நடத்துவது. கையில் இருப்பது ஒரேயொரு நாட்டு வெடிகுண்டேயானாலும் குறைந்தது ஐம்பது பேரையாவது கொல்லும் வகையில்தான் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியுடன் இருந்தார்கள்.

உதவிக்கு வந்த படைகளைப் பொறுத்தவரை எகிப்தின் ராணுவம் இருந்தவற்றுக்குள்ளேயே சற்று கட்டுக்கோப்பான ராணுவம் என்று சொல்லவேண்டும். இஸ்ரேல் பயந்ததும் அதற்குத்தான்.

குண்டுகளை வீணாக்காமல் மிகவும் சாமர்த்தியமாக அவர்கள் யுத்தம் செய்தார்கள். அரசுக் கட்டடங்களைத் தாக்குவது, காவல் நிலையங்கள், ராணுவ முகாம்கள், மருத்துவமனைகள் கண்ணில் பட்டால் உடனே அவற்றைத் தாக்கி அழிப்பது என்பதே எகிப்து ராணுவத்தின் முதல் இலக்காக இருந்தது.

ஈராக் படையினர் கண்மூடித்தனமாக முன்னேறிக்கொண்டிருந்தார்கள். ஒரு பயிற்சி பெற்ற ராணுவம் போல் அல்லாமல், கலவரக்காரர்கள் போல் அவர்கள் தாக்குதலில் ஈடுபட விரும்பினார்கள். சிரியா, லெபனான், ஜோர்டன் படைகள் எப்படியாவது டெல் அவிவ் நகருக்குள் புகுந்து கைப்பற்றிவிட மிகவும் விரும்பி, அதனை ஒட்டியே தமது வியூகத்தை வகுத்திருந்தன.

மறுபுறம், இஸ்ரேல் ராணுவத்தின் ஆள்பலம் குறைவாக இருந்தாலும் யுத்த நேர்த்தி அவர்களுக்கு மிக இயல்பாக வாய்த்திருந்தது. யுத்தங்களைக் கையாளும் முறை, வியூகம் வகுப்பது, ஒற்றறிதல் போன்றவற்றில் இஸ்ரேலியர்கள் இயல்பான திறமை பெற்றிருந்தார்கள். இழப்புகள் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். இதனைத் தற்காப்பு யுத்தம் என்று சொல்வார்கள். ஓரெல்லை வரை தற்காப்பு யுத்தம் செய்வது, சந்தர்ப்பம் கிடைக்குமானால் புகுந்து புறப்பட்டுவிடுவது.

வானம் புகை மண்டலமாகவும் பூமி செந்நிறமாகவும் ஆனது. யுத்தம் அதன் முழு உக்கிரத்தை அடைந்திருந்தது. நடுக்கடலில் கப்பல்களை குண்டுவீசி அழித்தார்கள். போர் விமானங்கள் தாக்கி வீழ்த்தப்பட்டன. ராணுவ முகாம்களில் எறிகுண்டுகள் வீசி திகுதிகுவென்று எரியச் செய்தார்கள். கொலைவெறி ஒன்று மட்டுமே மேலோங்கியிருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேலுக்கு இருந்த பயம் விலகிவிட்டது. அவர்கள், தலைநகரை அரவணைத்து நின்று போரிடுவதை விட்டுவிட்டு வெளியேறி, முன்னேறி வந்து படைகளை அடித்து நொறுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஐ.நா. போட்டுக்கொடுத்த எல்லைக் கோடுகளெல்லாம் புழுதிக்கோடுகளாகி, மறைந்தே போயின. எங்கு பார்த்தாலும் குண்டுகள் வெடித்தன. எங்கு பார்த்தாலும் பீரங்கிகள் முழங்கின. எங்கெங்கும் மனிதர்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள்.

இஸ்ரேலிடம் இத்தனை வீரத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அரபு தேசங்கள் சற்று பயந்துபோயின என்றே சொல்லவேண்டும். எங்கிருந்து அவர்களுக்கு ஆயுதங்கள் வருகின்றன, யார் போர் யுக்திகளை வகுத்துத் தருகிறார்கள் என்பது புரியவில்லை. நேற்று உருவான இஸ்ரேலிய ராணுவத்துக்கே இத்தனை திறமை இயல்பாக இருக்கும் என்று யாரும் நம்பத்தயாராக இல்லை.

ஏதோ ஒரு பெரிய கை உதவுகிறது என்பது மட்டும் புரிந்தது. அது எந்தக் கை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

யுத்தம் அதன் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது ஐ.நா. தலையிட்டது. திரைப்படங்களின் இறுதியில், எல்லாம் முடிந்தபிறகு வரும் போலீஸ்காரர் மாதிரி. போர் நிறுத்தம். அமைதி ஒப்பந்தம். இத்தியாதிகள்.

அந்த அமைதி ஒப்பந்தத்தில்தான் இருக்கிறது விஷயம்.

போர் நிறுத்தம் சரி. ஆனால் எங்கே நிறுத்துவது? நவீன உலகில், எந்த தேசத்தில் எப்போது யுத்தம் நடந்தாலும் இந்த விஷயத்தை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

போர் நிறுத்தம் என்று வந்து, அதை இரு தரப்பினரும் ஒப்புக்கொள்வார்களேயானால், அந்த வினாடி வரை அவர்கள் எதுவரை முன்னேறி வந்திருக்கிறார்களோ, அந்த இடம் வரை சம்பந்தப்பட்ட தேசத்துக்குச் சொந்தம் என்பதுதான் விதி. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் யுத்தத்தின்போது இதன் அடிப்படையில்தான் முஸஃபராபாத் உள்ளிட்ட கில்கிட்டைச் சுற்றிய வடபகுதி முழுவதும் பாகிஸ்தான் வசம் போனது. இன்றுவரை நாம் அதை பாகிஸ்தான் அபகரித்த காஷ்மீர் என்றும் அவர்கள் அதனை சுதந்திர காஷ்மீர் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இதே மாதிரிதான் அரபு - இஸ்ரேல் முதல் யுத்தத்தின் போதும் ஓர் ஏற்பாடு ஆனது. யுத்தத்தில் முன்னேறி வந்த எகிப்து, அப்போது காஸா பகுதியில் இருந்தது. ஆகவே, காஸா எகிப்துக்கு என்றானது. டிரான்ஸ்ஜோர்டன் ராணுவம், மேற்குக் கரை முழுவதும் வியாபித்திருந்தது. ஆகவே வெஸ்ட்பேங்க் பகுதி ஜோர்டனுக்குச் சொந்தம். இஸ்ரேல் ராணுவமும் ஐ.நா. தனக்கு வகுத்தளித்த பூமிக்கு வெளியே பல இடங்களில் வியாபித்திருந்ததால், அந்தப் பகுதிகளெல்லாம் இஸ்ரேலுடையதாகிவிட்டது.

ஆக, காஸா போயிற்று. மேற்குக் கரையும் போயிற்று. மிச்சமிருந்த கொஞ்சநஞ்சப் பகுதிகளை இஸ்ரேல் விழுங்கிவிட்டது. எனில், பாலஸ்தீன் என்பது என்ன?

அப்படியொரு தேசமே இல்லை என்று ஆனது இப்படித்தான்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 12 ஜூன், 2005

Tuesday, June 07, 2005

57] இஸ்ரேல் உதயம்

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 57
பாலஸ்தீன் அரேபியர்கள், யூதர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த அதே சமயத்தில், பிரிட்டன் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. மே மாதம் 15-ம் தேதி (1948-ம் வருடம்), பாலஸ்தீனிலிருக்கும் தனது துருப்புகளை முழுவதுமாக வாபஸ் பெற்றுக்கொள்ளும் என்பதே அந்த அறிவிப்பு.

அதாவது மே மாதம் 15-ம் தேதியுடன் பாலஸ்தீனுக்கும் பிரிட்டனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இரண்டாம் உலகப்போர் காலம் தொடங்கி பிரிட்டனின் காலனியாக இருந்துவரும் பாலஸ்தீன், அன்று முதல் சுதந்திர நாடு என்பதே இந்த அறிவிப்பின் பொருள்.

இந்த அறிவிப்பு வெளியானதும் அரேபியர்களின் கோபம் உச்சகட்டத்தைத் தொட்டுவிட்டது. கண்மண் தெரியாமல் அவர்கள் யூதர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். அக்கம்பக்கத்து தேசங்களில் இருந்தெல்லாம் கடனுக்கு ஆயுதங்களை வாங்கிவந்து குவித்தார்கள். பழக்கமே இல்லாதவர்கள் கூட துப்பாக்கி ஏந்தி கண்ணில் பட்டவர்களைச் சுட்டுத்தள்ளத் தொடங்கினார்கள்.

இதற்கு ஆறு வாரங்கள் முன்னதாகவே, பாலஸ்தீனின் பிற பகுதிகளிலிருந்து யூதர்கள் யாரும் ஜெருசலேத்தை நெருங்க முடியாதபடி மிகக் கடுமையான பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி வைத்துவிட்டார்கள். ஜெருசலேத்திலிருந்து வெளியே யாரும் கடிதம் அனுப்பமுடியாது. யாரிடமாவது தகவல் சொல்லி அனுப்பலாம் என்றால் அதுவும் முடியாது. எப்படி வெளியிலிருந்து யாரும் உள்ளே போக முடியாதோ, அதேமாதிரி நகருக்கு உள்ளே இருக்கும் யாரும் வெளியே போகவும் முடியாது. மீறி யாராவது நகர எல்லையைத் தாண்டுவார்களேயானால் உடனடியாகச் சுட்டுக்கொல்லப்படுவார்கள்.

என்னதான் பிரிட்டிஷ் காவலர்கள் பாதுகாப்புக்கு இருந்தாலும் அரேபியர்கள் மிகவும் சாமர்த்தியமாக அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, தமக்கான மறைவிடங்களைப் பாலைவனங்களிலும் முள்புதர்க் காடுகளிலும் அடர்ந்த மரங்களின் கிளைகளிலும், இடிந்த கட்டடங்களில் சுரங்கம் தோண்டியும் அமைத்துக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே ஒற்றர்களை நிறுத்தி, யாராவது நகருக்குப் புதிதாக வருகிறார்களா, அல்லது நகரிலிருந்து யாராவது, எந்த வாகனமாவது வெளியேறுகிறதா என்று கவனித்து உடனடியாகப் போய்த் தாக்குவார்கள்.

தாக்கும் கணத்தில் மட்டும்தான் கண்ணில் படுவார்கள். அடுத்த வினாடி அவர்கள் எங்கே போனார்கள் என்பதே தெரியாது. அரேபியர்களின் மனத்தில் இருந்த கோபமும் வேகமும் அவர்களை அத்தனை விரைவாகச் செயல்படவைத்தது!

இத்தகைய காரியங்களைச் செய்தவர்கள் பாலஸ்தீனத்து அரேபியர்கள் மட்டும் அல்லர்; சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்கிய அக்கம்பக்கத்து நாடுகளைச் சேர்ந்த அரேபியர்களும் அவர்களின் உதவிக்கு அப்போது வந்திருந்தார்கள். குறிப்பாக, சிரியாவிலிருந்து சில ஆயிரம் பேர் வந்திருந்தார்கள். ஈராக்கிலிருந்து எழுநூறு பேர் கொண்ட ஒரு குழுவே தனியாக வந்திருந்தது. எகிப்திலிருந்தும் நூற்றைம்பது பேர் பாலஸ்தீன் அரேபியர்களுக்கு உதவி செய்வதற்காக ஆயுதங்களுடன் வந்திருந்தார்கள்.

இஸ்ரேல் உருவாகும் தினம் நெருங்க நெருங்க, பாலஸ்தீன் முழுவதும் பதற்றம் அதிகரித்தது. மார்ச் இறுதி, ஏப்ரல் மாதங்களில் பாலஸ்தீனிலிருந்த ஒவ்வொரு யூத கிராமமும் முறை வைத்துக்கொண்டு தாக்கப்பட்டன.

அரேபியர்கள் முதலில் காவல் நிலையங்களைத்தான் தாக்குவார்கள். அங்குள்ள தொலைத்தொடர்பு சௌகரியங்களை அழித்துவிட்டு, காவலர்களைக் கட்டிப்போட்டுவிடுவார்கள். அதன்பின் கிராமத்துக்குள் நுழைந்து யூதர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுக் காணாமல் போய்விடுவார்கள். இதுதான் அவர்கள் மேற்கொண்ட நடைமுறை.

ஏப்ரல் 13-ம் தேதி ஆன்ர் ஈஜன் (Kfaretzion) என்கிற யூத கிராமத்தை ஒரு அரபுப்படை சூழ்ந்துகொண்டது. பெத்லஹெமுக்குத் தெற்கே இருக்கும் கிராமம் இது. சுற்றி வளைத்த அரேபியக் கலகக்காரர்கள் மொத்தம் 400 பேர். ஆனாலும் கிராமத்துவாசிகள் தயாராக இருந்ததால், அவர்களை உடனே அடித்துத் துரத்திவிட்டார்கள். வன்மத்துடன் மீண்டும் மோதிய அரேபியர்கள் ஒரே இரவில் நூற்றுப்பத்து யூதர்களை அங்கே கொலை செய்தார்கள். தவிர, சரணடைந்த சுமார் நூறு யூதர்களையும் வரிசையில் நிற்கவைத்து இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள். இந்தக் காட்சியைப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்!

பொதுவாக, இம்மாதிரியான தாக்குதல்கள் வேகமடையும்போது, இருப்பிடத்தை விட்டு நகர்ந்து, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுவதுதான் யூதர்களின் இயல்பு. அதை மனத்தில் கொண்டுதான் அரபுகள், யூத கிராமங்களுக்குள் புகுந்து தாக்கிக்கொண்டிருந்தார்கள். எப்படியாவது பாலஸ்தீனிலிருந்து யூதர்களை ஓட்டிவிடவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல்தானே ஐரோப்பாவிலிருந்து ஓடிவந்தார்கள்? அதே தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீனில் இருந்தும் அவர்களை விரட்டிவிடலாம் என்று நினைத்தார்கள் அவர்கள்.

ஆனால் யூதர்கள் விஷயத்தில் இது மிகப்பெரிய தப்புக்கணக்கு என்பது அரேபியர்களுக்கு அப்போது புரியவில்லை. அவர்கள் எங்கிருந்து துரத்தினாலும் பாலஸ்தீனுக்கு ஓடிவருவார்களே தவிர, பாலஸ்தீனிலிருந்து இன்னொரு இடத்துக்கு ஓடுவதற்குத் தயாராக இல்லை! அடித்தால் திருப்பி அடிப்பது. முடியாவிட்டால் தற்காத்துக்கொள்வது. அதுவும் முடியாவிட்டால் அடிபடுவது, உயிர் போகிறதா? அதுவும் பாலஸ்தீனிலேயே போகட்டும்.

அப்படியொரு மனப்பக்குவத்துக்கு வந்துவிட்டிருந்தார்கள். ஆயிரமாண்டு காலமாக ஓடிக் களைத்தவர்கள் அல்லவா? இன்னொரு ஓட்டத்துக்கு அவர்கள் தயாராக இல்லை. தவிர, அரேபியர்களின் தாக்குதல்களெல்லாம் தாற்காலிக எதிர்ப்புதான் என்று யூதர்கள் நினைத்தார்கள்.

காரணம், எப்படியிருந்தாலும் இன்னும் சில தினங்களில் சுதந்திரம் வந்துவிடப்போகிறது; இஸ்ரேல் என்கிற தனிநாடு உருவாகிவிடப் போகிறது. தனி அரசாங்கம், தனி ராணுவம், தனி போலீஸ் என்று சகல சௌகரியங்களுடன் வாழப்போகிறார்கள். அப்போது சேர்த்துவைத்து பதிலடி கொடுத்தால் போயிற்று என்றுதான் அவர்கள் நினைத்தார்கள்.

தங்கள் தாக்குதலுக்கு அவர்கள் பயந்து ஓடவில்லை என்பதுதான் அரேபியர்களுக்கு விழுந்த முதல் அடி. அவர்களால் நம்பவே முடியவில்லை. யூதர்களா எதிர்த்து நிற்கிறார்கள்? யூதர்களா அடிவாங்கிக்கொண்டு விழுகிறார்கள்? யூதர்களா ஓடாமல் இருக்கிறார்கள்? எனில், சரித்திரம் சுட்டிக்காட்டிய உண்மைகள் எல்லாம் பொய்யா? ஓடப்பிறந்தவர்கள் அல்லவா அவர்கள்? ஏன் ஓடாமல் இருக்கிறார்கள்?

அவர்களுக்குப் புரியவில்லை. ஆகவே, இன்னும் கோபம் தலைக்கேறி, இன்னும் உக்கிரமாகத் தாக்க ஆரம்பித்தார்கள். பல கிராமங்களில் இருந்த யூதர்களை விரட்டி விரட்டிக் கொன்றார்கள். அதேசமயம், தைபெரியஸ், ஹைஃபா, ஏக்ர், ஜாஃபா, ஸஃபேத் போன்ற அரேபியர்களின் கோட்டை போன்ற நகரங்களை யூதர்களும் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டார்கள்.

நாள் நெருங்க நெருங்க அரேபியர்களின் ஜுரம் அதிகமானது. இன்னும் ஆள் பலம் வேண்டும் என்று கருதி, ஜெருசலேத்தைக் காப்பதற்காக நிறுத்திவைத்திருந்த சில ஆயிரம் பேரையும் யூதர்களின் குடியிருப்புகளைத் தாக்கும் பணியில் இறக்கினார்கள். 1947 நவம்பர் தொடங்கி, இஸ்ரேல் பிறந்த தினம் வரை மொத்தம் ஆறாயிரம் யூதர்கள் பாலஸ்தீனில் படுகொலை செய்யப்பட்டார்கள். இது மொத்த யூத மக்கள் தொகையில் (பாலஸ்தீனில் மட்டும்) ஒரு சதவிகிதம்!

மே மாதம் பிறந்தது. ஒட்டுமொத்த பாலஸ்தீனும் பதறிக்கொண்டிருந்தது. ஒரு பக்கம், பாலஸ்தீனை விட்டு நகர்வதற்காக பிரிட்டிஷ் துருப்புகள் தயாராகிக்கொண்டிருந்தன. மறுபக்கம், அவர்கள் எப்போது நகர்கிறார்களோ, உடனடியாக உள்ளே புகுந்து யூதர்களை கபளீகரம் செய்துவிடும் வெறியுடன் அரேபியர்களின் நட்புக்கு வந்த எகிப்து, டிரான்ஸ்ஜோர்டன், சிரியா, லெபனான் ஆகிய தேசங்களின் ராணுவங்கள் எல்லையில் அணிவகுத்து நின்றன. அவர்களுக்கு உதவியாக, உள்ளூர் பாலஸ்தீனிய தனியார் ராணுவங்கள் ஆயத்தமாகிக்கொண்டிருந்தன.

பத்து நாள். ஒன்பது நாள். எட்டு நாள். ஏழுநாள். ஆறுநாள்.

திடீரென்று பிரிட்டன், தன் துருப்புகளை விலக்கிக்கொள்ளும் தினம் மே 15 அல்ல; மே மாதம் 14-ம் தேதியே வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டது.

முழு இருபத்து நான்கு மணி நேரத்துக்கு முன்னதாகச் சுதந்திரம்! இஸ்ரேல் உதயமாகும் தினம் ஒரு நாள் முன்கூட்டியே வந்துவிடுகிறது! அரேபியர்களின் அவல வாழ்க்கை ஒருநாள் முன்கூட்டியே ஆரம்பமாகிவிடுகிறது.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. சுதந்திரத்துக்கு என்று ஒரு நாள் குறித்துவிட்டு, அதை ஒருநாள் முன்னதாக மாற்றி அமைக்கும் வழக்கம் அதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. பிரிட்டன் ஏன் அப்படியொரு முடிவை எடுத்தது; ஒருநாள் முன்னதாக அதனைச் செய்வதன் மூலம் என்ன சாதிக்க நினைத்தது என்பது அப்போது யாருக்குமே தெரியாது.

யூதர்களின் அரசியல் தலைவர்களும் ராணுவத் தளபதிகளும் அவசர அவசரமாகக் கூடிப் பேசினார்கள். இனியும் பிரிட்டனை நம்பிக்கொண்டோ, எதிர்பார்த்துக்கொண்டோ இருக்க முடியாது. சுதந்திர தேசம் கிடைத்துவிடும். அதில் சந்தேகமில்லை. ஆனால் இஸ்ரேல் யூதர்களின் பாதுகாப்புக்கு முதலில் வழி செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? எம்மாதிரியான வியூகம் வகுக்கலாம்?

இகேல் யாதின் (Yigael Yadin) என்பவர் அப்போது இஸ்ரேலிய ராணுவத்தின் முதன்மைத் தளபதியாக இருந்தார். அவர் பென்குரியனிடம் சொன்னார்: ‘இது சவால். நம்மிடம் போதிய ஆயுதபலம் கிடையாது. எதிரிப் படைகள் முழு பலத்துடன் இருக்கின்றன. நமது வீரர்கள் மனபலத்தை மட்டுமே வைத்துப் போரிட்டாக வேண்டும்.’

உண்மையில், மிகவும் உணர்ச்சிமயமான சூழ்நிலை அது. சுமார் ஆயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன்னர் ரோமானியப் படையை எதிர்த்து யூதத் தளபதி பார் கொச்பா நடத்திய யுத்தம்தான், அதற்கு முன் யூதர்கள் தம் தேசத்தைக் காப்பதற்காக நடத்திய யுத்தம். அத்தனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் யூதர்கள் தமது தேசம் என்கிற பெருமிதத்துடன், அதைக் காப்பதற்காக ஒரு யுத்தம் செய்யவிருந்தார்கள்!

மே மாதம் 13-ம் தேதி, 1948-ம் வருடம். பெரும்பாலான பிரிட்டிஷ் துருப்புகள் பாலஸ்தீனை விட்டுப் போய்விட்டிருந்தன. நகரங்கள் பேயடித்தமாதிரி அமைதியில் இருந்தன. பொழுது விடிந்தால் சுதந்திரம். பொழுது விடியும்போது இஸ்ரேலும் பிறக்கும்! அதே பொழுது விடியும்போது அரேபியர்கள் தாக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள்!

இஸ்ரேல் பிறக்கும் சந்தோஷத்தை அனுபவிப்பதா? எதிர்வரும் யுத்தத்தை நினைத்துக் கவலைப்படுவதா? யுத்தத்தில் என்ன ஆகப்போகிறது. இஸ்ரேலிய ராணுவம் ஜெயிக்குமா? அல்லது நான்கு தேசங்களின் துணையுடன் தாக்கப்போகிற பாலஸ்தீனிய அரேபியர்கள் வெற்றி பெறுவார்களா?

யாருக்கும் தெரியாது. என்னவும் நடக்கலாம். எப்படியும் நடக்கலாம்.

மே 14, 1948. விடிந்துவிட்டது அன்றைய தினம்.

முந்தைய நாள் இரவுடன் அத்தனை பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும் போய்விட்டிருக்க, அன்று காலை கட்டக்கடைசியாக பாலஸ்தீனுக்கான பிரிட்டிஷ் ஹை கமிஷனர் மட்டும் ஜெருசலேத்தில் இருந்தார். தன் அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு, ஒப்படைக்க வேண்டிய தஸ்தாவேஜ்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கடைசிக் கையெழுத்துகளைப் போட்டுவிட்டு, பெட்டியைத் தூக்கிக்கொண்டு கையாட்டிவிட்டு வண்டியேறினார்.

பிரிட்டனின் முப்பது வருட ஆட்சி அந்த வினாடியுடன் ஒரு முடிவுக்கு வந்தது. இனி பாலஸ்தீன் என்று ஒரு தேசம் இல்லை. இஸ்ரேல் - பாலஸ்தீன் என்று இரு தேசங்கள். இந்தியா - பாகிஸ்தான் மாதிரி அவையும் அண்டை தேசங்களாக இருக்கும்.

உணர்ச்சி உடைந்து பெருக்கெடுக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த சமயம். ஹை கமிஷனரை வழியனுப்பிவிட்டு, அவசரஅவசரமாக டெல் அவிவ் நகருக்குப் போய்ச் சேர்ந்தார் இஸ்ரேலின் அரசியல் தலைவர் பென்குரியன்.

நேரம் பிற்பகல் ஒன்று ஆகியிருந்தது. அறிவிப்புக்கான சமயம் நெருங்கிக்கொண்டிருந்தது. இறுதிக்கட்ட நடவடிக்கைகள் வேகமாக நடந்தன. குரியன் தன் சகாக்களுடன் கலந்து பேசினார். ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாரா?’ என்று ராணுவத் தளபதிகளைக் கேட்டுக்கொண்டார்.

எல்லாம் தயார் என்று ஆனதும் சர்வதேச மீடியாவுக்கும் பாலஸ்தீனின் யூதர்களுக்கும் அந்த அறிவிப்பை வெளியிட்டார்: "இன்று முதல் இஸ்ரேல் பிறக்கிறது. யூதர்களின் தேசம்."

அந்தக் கணத்துக்காகக் காத்திருந்த யூதர்கள், பரவசத்தில் ஓவென்று அழுது கண்ணீர் விட்டார்கள். குதித்து, ஆனந்தக் கூத்தாடினார்கள். ஒருவரையருவர் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள்.

மறுபுறம் பாலஸ்தீனின் அனைத்து எல்லைகளிலிருந்தும் அரபுப் படைகள் உள்ளே நுழைய இறுதிக்கட்ட ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தன.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 9 ஜூன், 2005